Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

படைப்பா பரிணாமமா?—பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

படைப்பா பரிணாமமா?—பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

அலெக்ஸுக்கு ஒரே குழப்பம். கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று இத்தனை நாட்களாக அவன் நம்பிக்கொண்டு இருந்தான். ஆனால், இன்று அவனுடைய உயிரியல் ஆசிரியர் பரிணாமம்தான் உண்மை என்றும், அதை அறிவியல் நிரூபித்துவிட்டது என்றும் அடித்துச் சொல்கிறார். அலெக்ஸ் தன்னை ஒரு முட்டாளாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதனால், “பரிணாமம் உண்மைன்னு விஞ்ஞானிகள் நிரூபிச்சிருக்காங்கன்னா, அவங்கள கேள்வி கேட்கறதுக்கு நான் யாரு?” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு சும்மா இருந்துவிடுகிறான்.

 இதேபோன்ற சூழ்நிலைமையை நீங்களும் எதிர்ப்பட்டிருக்கிறீர்களா? நினைவு தெரிந்த நாளிலிருந்தே, ‘கடவுள்தான் வானத்தையும் பூமியையும் படைத்தார்’ என்று பைபிள் சொல்வதை நீங்கள் ஒருவேளை நம்பியிருக்கலாம். (ஆதியாகமம் 1:1) ஆனால், படைப்பு வெறும் கட்டுக்கதை, பரிணாமம்தான் உண்மை என்று உங்களை நம்ப வைக்க நிறைய பேர் சமீப காலமாக முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் நம்ப வேண்டுமா? பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

 பரிணாமத்தைப் பற்றிக் கேள்வி எழுப்ப இரண்டு காரணங்கள்

  1.   பரிணாமத்தைப் பற்றி விஞ்ஞானிகளுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. பரிணாமத்தைப் பற்றி பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகும்கூட, விஞ்ஞானிகளால் ஏக மனதுடன் அதற்கான விளக்கத்தைத் தர முடியவில்லை.

     சிந்தித்துப் பாருங்கள்: பரிணாமத்தைப் பற்றிய சில விஷயங்களில் விஞ்ஞானிகளே—நிபுணர்களாக இருக்கும் அவர்களே—ஒத்துப்போகவில்லை என்றால், அந்தக் கொள்கையைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்புவதில் தவறு ஏதாவது இருக்கிறதா?​—சங்கீதம் 10:4.

  2.   நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்பது முக்கியம். “உயிர் எதேச்சையாதான் வந்துச்சுன்னா, நம்ம வாழ்க்கைக்கே, ஏன் இந்தப் பிரபஞ்சத்தில இருக்கற எதுக்குமே அர்த்தமில்லாம போயிடும்” என்கிறான் ஸக்கரி என்ற பையன். அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. பரிணாமம்தான் உண்மை என்றால், வாழ்க்கைக்கு எந்தவொரு நிரந்தர நோக்கமும் இருக்காது. (1 கொரிந்தியர் 15:32) படைப்பு உண்மையாக இருந்தால், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்கும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கேள்விகளுக்கும் திருப்தியான பதில்களை நாம் கண்டுபிடிக்க முடியும்.​—எரேமியா 29:11.

     சிந்தித்துப் பாருங்கள்: பரிணாமத்தையும் படைப்பையும் பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வது உங்கள் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும்?​—எபிரெயர் 11:1.

 சிந்திக்க சில கேள்விகள்

 சிலரது கருத்து: ‘விண்வெளி திடீரென்று வெடித்துச் சிதறியதில் இந்த முழு பிரபஞ்சமே உருவானது.’

  •   அந்த வெடிப்பை யார் அல்லது எது உண்டாக்கியது?

  •   எதை ஒத்துக்கொள்ள முடிகிறது—ஒன்றுமே இல்லாததிலிருந்து எல்லாமே உருவானது என்பதையா? ஏதோ ஒன்றிலிருந்து அல்லது யாரோ ஒருவரிடமிருந்து எல்லாமே உருவானது என்பதையா?

 சிலரது கருத்து: ‘மிருகங்களிலிருந்து மனிதன் தோன்றினான்.’

  •   மிருகங்களிலிருந்து, உதாரணத்துக்கு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால், மனிதர்களுடைய அறிவுத்திறனுக்கும் குரங்குகளின் அறிவுத்திறனுக்கும் இடையே ஏன் இவ்வளவு வித்தியாசம்? a

  •   மிகமிக “சாதாரணமான” உயிர்களும்கூட, ஏன் இந்தளவு சிக்கலான வடிவமைப்புடன் இருக்கின்றன? b

 சிலரது கருத்து: ‘பரிணாமம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.’

  •   இப்படிச் சொல்கிற நபர், அது உண்மைதானா என்று தனிப்பட்ட விதத்தில் ஆராய்ந்து பார்த்தாரா?

  •   புத்திசாலிகள் எல்லாரும் பரிணாமத்தை நம்புகிறார்கள் என்று தங்களிடம் சொல்லப்பட்ட ஒரே காரணத்திற்காக, அதில் எத்தனை பேர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்?

a குரங்குகளுடைய மூளையைவிட மனிதர்களுடைய மூளை பெரியதாக இருப்பதால்தான், மனிதர்கள் அதிக அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்று சிலர் சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்வது ஏன் சரியல்ல என்பதைத் தெரிந்துகொள்ள உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேட்டில் பக்கம் 28-ஐப் பாருங்கள்.