Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

அப்பா-அம்மாவின் நம்பிக்கையை நான் எப்படிச் சம்பாதிக்கலாம்?

அப்பா-அம்மாவின் நம்பிக்கையை நான் எப்படிச் சம்பாதிக்கலாம்?

 நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

 நீங்கள் எந்தளவு நம்பகமானவர்களாக இருக்கிறீர்களோ அந்தளவு உங்கள் அப்பா-அம்மாவின் நம்பிக்கையைச் சம்பாதித்துக்கொள்வீர்கள். அப்பா-அம்மாவுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது வங்கிக் கடனைத் திருப்பி தருவது போன்றது. கீழ்ப்படிதல் என்ற ‘கடனை’ உங்கள் அப்பா-அம்மாவுக்குச் செலுத்த நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ‘கடனை’ செலுத்துவதில் நீங்கள் எந்தளவு நம்பகமானவர்களாக இருக்கிறீர்களோ அந்தளவு அவர்களிடமிருந்து ‘சலுகைகளை’ (அல்லது சுதந்திரத்தை) பெற்றுக்கொள்வீர்கள். ஆனால், நீங்கள் நம்பகமானவர்களாக இல்லையென்றால், உங்கள் அப்பா-அம்மா உங்களுக்குக் கொடுக்க வேண்டிய ‘சலுகைகளை’ குறைத்துவிடுவார்கள்.

 நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்குக் காலம் எடுக்கும். உங்கள் அப்பா-அம்மா உங்களுக்கு இன்னும் நிறைய சுதந்திரம் கொடுக்க வேண்டுமென்றால், நீங்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்காட்டுங்கள்.

 உண்மைக் கதை: “ஒரு டீனேஜரா, என் அப்பா-அம்மா என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்குறாங்கன்னு எனக்கு தெரியுங்கறதுனால, அவங்க எதிர்பார்க்குற விஷயங்கள செய்ற மாதிரி காட்டிக்குவேன்; ஆனா உண்மையிலேயே, நான் என்ன செய்யணும்னு நினைக்குறேனோ அதைத்தான் செய்வேன். அதனால, என் அப்பா-அம்மா என்னை நம்பாம போயிட்டாங்க. அவங்க நம்மள நம்பணும்னா நாம நம்பகமானவங்களா நடந்துக்கணும். இதுக்கு வேற எந்த குறுக்கு வழியும் கிடையாதுன்னு காலப்போக்குல புரிஞ்சுக்கிட்டேன்.”​—க்ரேக்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

 உண்மையாக இருங்கள்​—கஷ்டமாக இருந்தாலும்! எல்லாரும் தவறு செய்பவர்கள்தான்; ஆனால், செய்த தவறை மறைப்பதற்காகப் பொய் சொல்லும்போது, (அல்லது, உண்மை வெளிவராமல் இருப்பதற்காகச் சில தகவல்களை மறைக்கும்போது) அப்பா-அம்மாவுக்கு உங்கள்மேல் இருக்கும் நம்பிக்கை சுக்குநூறாகிவிடும். ஆனால், செய்த தவறை ஒத்துக்கொள்ளும்போது, நீங்கள் நேர்மையாக நடந்துகொள்கிறீர்கள் என்பதை அவர்கள் பார்ப்பார்கள். அப்போது, செய்த தவறை ஒத்துக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் முதிர்ச்சி அடைந்துவிட்டீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். செய்த தவறை ஒத்துக்கொள்கிற ஒருவர்தான் நம்பகமானவர்!

 “நீங்க தப்பு செய்றதுனால மத்தவங்களுக்கு உங்கமேல இருக்குற நம்பிக்கை போகாது, ஆனா செஞ்ச தப்ப மறைக்க முயற்சி செஞ்சீங்கன்னாதான் அவங்களுக்கு உங்கமேல இருக்குற நம்பிக்கை போயிடும்.”​—ஆன்னா.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “நாங்கள் எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”​—எபிரெயர் 13:18.

  •   யோசித்துப் பாருங்கள்: நீங்கள் எங்கே போகிறீர்கள், என்ன செய்யப்போகிறீர்கள் என்று உங்கள் அப்பா-அம்மா கேட்கும்போது, அவர்களிடம் எல்லா உண்மைகளையும் சொல்கிறீர்களா? அல்லது, நீங்கள் எங்கே போனீர்கள், என்ன செய்தீர்கள் என்று உங்கள் அப்பா-அம்மா கேட்கும்போது, சில விஷயங்களை மட்டும் சொல்லிவிட்டு மற்ற விஷயங்களை மறைத்துவிடுகிறீர்களா? அதுவும், அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை மறைத்துவிடுகிறீர்களா?

 பொறுப்புள்ளவர்களாக இருங்கள். அப்பா-அம்மா போடும் எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை உடனுக்குடன் செய்யுங்கள். நேரம் தவறாதீர்கள். பள்ளிப்பாடங்களைப் பொறுப்பாகச் செய்யுங்கள். வீட்டுக்கு நேரத்தோடு வந்துசேருங்கள்.

 “ஃபிரெண்ட்ஸோட வெளிய போயிட்டு நைட் 9:00 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடணும்னு உங்க அப்பா-அம்மா சொன்னா, நீங்க 10:30 மணிக்கு வீட்டுக்கு போகாதீங்க. ஒருவேளை அப்படி போனீங்கன்னா, அடுத்த தடவை ஃபிரெண்ட்ஸோட வெளிய போக அவங்க நிச்சயம் விட மாட்டாங்க!”​—ரையன்.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒவ்வொருவனும் அவனவன் [பொறுப்பு என்ற பாரத்தை, அடிக்குறிப்பு] பாரத்தை சுமப்பான்.”—கலாத்தியர் 6:5.

  •   யோசித்துப் பாருங்கள்: நேரம் தவறாமல் இருப்பது... வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பது... சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது, அதுவும் உங்களுக்குப் பிடிக்காத சட்டங்களுக்குக்கூட கீழ்ப்படிவது... ஆகிய விஷயங்களில் நீங்கள் இதுவரை எப்படி நடந்திருக்கிறீர்கள்?

 பொறுமையாக இருங்கள். அப்பா-அம்மா உங்கள்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்றால், அதை மறுபடியும் சம்பாதிப்பதற்குக் காலம் எடுக்கும். அதனால், பொறுமையாகக் காத்திருங்கள்.

 “ஒரு குறிப்பிட்ட வயச எட்டுனதுக்கு அப்புறமும் என் அப்பா-அம்மா எனக்கு நிறைய பொறுப்புகள தரல; அது எனக்கு ரொம்பவே ஏமாற்றமா இருந்துச்சு. பெரிய பிள்ளைங்களா ஆயிட்டோங்கறதுக்காக முதிர்ச்சி அடைஞ்சுட்டோம்னு அர்த்தம் கிடையாதுனு எனக்கு அப்போ தெரியல. நான் நம்பகனமானவனு நிரூபிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கன்னு என் அப்பா-அம்மாகிட்ட கேட்டேன். அப்படி நிரூபிக்குறதுக்கு எனக்கு கொஞ்சம் காலம் எடுத்தாலும், கடைசியில அவங்க என்னை நம்ப ஆரம்பிச்சாங்க. வயசாகுறதுனால அப்பா-அம்மாவோட நம்பிகைய சம்பாதிச்சுடலாம்னு நினைக்கக் கூடாது, அது நாம எப்படி நடந்துக்குறோங்குறத பொறுத்துதான் இருக்கு.”​—ரேச்சல்.

 பைபிள் இப்படிச் சொல்கிறது: “நீ எல்லாவற்றையும் உண்மை மனதோடு செய்கிறாய்.”—3 யோவான் 5.

  •   யோசித்துப் பாருங்கள்: உங்களுடைய அப்பா-அம்மாவின் நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்கு, (அல்லது, இழந்த நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்கு) நீங்கள் எல்லாவற்றையும் ‘உண்மை மனதோடு செய்கிறீர்கள்’ என்பதை என்னென்ன வழிகளில் நிரூபித்துக் காட்டலாம்?

 டிப்ஸ்: இலக்கு வையுங்கள்; நேரம் தவறாமல் இருப்பதற்கோ, வீட்டு வேலைகளை முடிப்பதற்கோ, தாமதமாக வீட்டுக்குப் போகாமல் இருப்பதற்கோ, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைச் செய்வதற்கோ இலக்கு வையுங்கள். நீங்கள் எடுத்திருக்கும் முடிவைப் பற்றி உங்கள் அப்பா-அம்மாவிடம் சொல்லுங்கள். நீங்கள் அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ‘உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றிக்கொள்ளுங்கள், பழைய சுபாவத்தைக் களைந்துபோடுங்கள்’ என்ற பைபிளின் அறிவுரையைப் பின்பற்றுவதற்குக் கடினமாக முயற்சி செய்யுங்கள். (எபேசியர் 4:22) காலப்போக்கில், உங்கள் அப்பா-அம்மா உங்களுடைய முன்னேற்றத்தைப் பார்ப்பார்கள்!