Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

என்னைப் பற்றி யாராவது கிசுகிசுத்தால் என்ன செய்ய வேண்டும்?

என்னைப் பற்றி யாராவது கிசுகிசுத்தால் என்ன செய்ய வேண்டும்?

 அது ஏன் வலிக்கிறது?

 சில புரளிகள் ஆபத்தானது. அவற்றில் ஒன்று, வேண்டுமென்றே நம்முடைய பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சொல்கிற பொய்கள். ஆனால் எல்லா புரளிகளும் அவ்வளவு ஆபத்தானது கிடையாது. இருந்தாலும், சிலசமயம் அது நமக்கு வலிக்கும். அதுவும் நம்முடன் ரொம்ப நெருக்கமாக இருக்கிற ஒருவரே வதந்திகளைப் பரப்பும்போது நமக்கு ரொம்ப வேதனையாக இருக்கும்.​—சங்கீதம் 55:12-​14.

 ”மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையே இல்லை என்று என் ஃப்ரெண்ட் என்னைப் பற்றி முதுகுக்குப் பின்னாடி பேசினாள். மனதே நொறுங்கிவிட்டது. அவள் ஏன்தான் அப்படி சொன்னாள் என்று எனக்கு புரியவே இல்லை.“​—ஆஷ்லி.

 நிஜம்: உங்களைப் பற்றி புரளி பேசியது உங்கள் பெஸ்ட் ஃபிரெண்டாக இருந்தாலும் சரி வேற யாராக இருந்தாலும் சரி, அது பாகற்காய் போல் கசக்கத்தான் செய்யும்.

 மற்றவர்கள் வாயை உங்களால் அடைக்க முடியாது.

 மக்கள் நிறைய காரணங்களுக்காக கிசுகிசுப்பார்கள். சிலவற்றைப் இப்போது பார்க்கலாம்.

 உண்மையான அக்கறை. பொதுவாக மனிதர்களுக்கு எல்லாரிடமும் பேசி பழகுவது ரொம்ப பிடிக்கும். அதனால் மற்றவர்களிடம் பேசுவது, மற்றவர்களைப் பற்றி பேசுவது இயல்பான விஷயம்தான். சொல்லப்போனால், ஓரளவுக்கு ”மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்“ என்று பைபிளும் உற்சாகப்படுத்துகிறது.​—பிலிப்பியர் 2:4.

 ”மற்றவர்களைப் பற்றி பேசுவது என்றாலே லட்டு சாப்பிடுகிற மாதிரிதான்!“​—பியான்கா.

 ”இதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மற்றவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வது, அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் என்றெல்லாம் தெரியவில்லை, ஆனால் இது ஜாலியாக இருக்கிறது.“​—கேட்டி.

 டைம் பாஸ். பைபிள் காலங்களில் மக்கள் ”புதுப்புது விஷயங்களைப் பேசுவதிலும் கேட்பதிலும்தான் பொழுதைக் கழித்தார்கள்.“ (அப்போஸ்தலர் 17:21) இன்றைக்கும் மக்கள் அதைத்தான் செய்கிறார்கள்!

 ”சில சமயத்தில் சுவாரஸ்யமான செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்றால் மக்களே அதை உருவாக்கிவிடுவார்கள். அப்போது தானே பேசுவதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கும்.“​—ஜோவன்னா.

 தாழ்வு மனப்பான்மை. மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கிற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள கூடாது என்று பைபிள் சொல்வது நம் நன்மைக்காகத்தான். (கலாத்தியர் 6:4) ஏனென்றால் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது தாழ்வு மனப்பான்மை வரலாம். அப்படித் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிற சிலர் அவர்களிடம் இருக்கும் இந்த பிரச்சினையை மூடி மறைக்க, மற்றவர்களைப் பற்றி தப்பு தப்பாக புரளிகளைப் பரப்புகிறார்கள்.

 ”பொதுவாக ஒருவர் மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசும்போது கிசுகிசுக்கும் அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்துவிடுகிறது. நிறைய சமயங்களில் ஒருவரைப் பற்றி புரளி பேசுவதற்கான காரணமே மனதில் இருக்கிற பொறாமைதான். அப்படி மற்றவர்களைப் பற்றி தப்பாக பேசும்போது அந்த நபரைவிட தான் பெரிய ஆள் என்று தோன்றலாம். அது அவர்கள் மனதுக்கு இதமாக இருக்கலாம்.“​—ஃபில்.

 நிஜம்: மக்கள் கண்டிப்பாக மற்றவர்களைப் பற்றி பேசுவார்கள்​—உங்களைப் பற்றியும்தான்.

 அதைச் சமாளிப்பது எப்படி?

 உங்களைப் பற்றி பரவுகிற எல்லா வதந்திகளையும் உங்களால் தடுக்க முடியாது. ஆனால், அந்தச் சமயங்களில் நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு உங்கள் கைவசம் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

 ஆப்ஷன் 1: கண்டுக்காமல் விட்டுவிடுவது. ஒருவேளை புரளி ரொம்ப சாதாரணமாக இருந்தால், அதை அப்படியே கண்டுக்காமல் விட்டுவிடுவது ரொம்ப நல்லது. “சட்டென்று கோபப்படாதீர்கள்” என்று பைபிள் சொல்வதுபோல் நாம் நடக்கலாம்.​—பிரசங்கி 7:9.

 ”நான் ஒரு பையனோடு டேட்டிங் செய்கிறேன் என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டார்கள். இதற்கு முன்பு அந்தப் பையனை நான் பார்த்ததுகூட கிடையாது. கேட்பதற்கே ரொம்ப காமெடியாக இருந்தது. அதனால் நான் அதை அப்படியே கண்டுக்காமல் விட்டுவிட்டேன்.“​—எலீஸ்.

 ”புரளிகளை விரட்டியடிக்கிற ஒரு பெஸ்ட் ஆயுதம் நீங்கள் எடுக்கிற நல்ல பெயர்தான். உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும்போது உங்களைப் பற்றி தவறான ஒரு புரளி பரவினாலும், எல்லாரும் அதை நம்பிவிட மாட்டார்கள். கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும்.“​—அலிசன்.

 டிப்ஸ்: (1) உங்களைப் பற்றி என்ன புரளிகளைப் பரப்பினார்கள் (2) அதைக் கேட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது என்றெல்லாம் எழுதுங்கள். மனதில் இருப்பதையெல்லாம் நீங்கள் கொட்டிய பிறகு, உங்கள் பாரம் குறைந்த மாதிரி இருக்கும்.​—சங்கீதம் 4:4.

 ஆப்ஷன் 2: புரளியைப் பரப்ப ஆரம்பித்தவரிடமே பேசுங்கள். சிலசமயத்தில், உங்களைப் பற்றி ரொம்ப மோசமான ஒரு புரளி பரவியிருக்கிறது என்று தெரிய வந்தால், அதைப் பரப்ப ஆரம்பித்தவரிடம் கண்டிப்பாக போய் பேசுங்கள்.

 ”உங்களைப் பற்றி புரளி பேசுகிற நபரிடம் போய் பேசுங்கள். அப்போதுதான், யாரைப் பற்றி அவர் புரளி பேசினாரோ அது அந்த நபருடைய காதுக்கே போயிருக்கிறது என்று புரிந்துகொள்வார். அதோடு, உங்களால் அந்த பிரச்சினையையும் சரிசெய்துகொள்ள முடியும்.“​—எலீஸ்.

 உங்களைப் பற்றி வதந்திகளைப் பரப்பிய ஒருவரிடம் போய் பேசுவதற்கு முன்பு, சில பைபிள் நியமங்களை யோசித்துப் பாருங்கள். உங்களையே இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

  •   “ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம்.“(நீதிமொழிகள் 18:13) ‘எனக்கு எல்லா உண்மைகளும் தெரியுமா? இப்படியொரு புரளி பரவியிருக்கிறது என்று என்னிடம் வந்து சொன்ன நபர் அதைச் சரியாகத்தான் கேட்டாரா அல்லது, அதைத் தவறாகப் புரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?’

  •   “ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும், சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.” (யாக்கோபு 1:19) ‘புரளியைப் பரப்பியவரிடம் போய் பேசுவதற்கு இது சரியான நேரமாக இருக்குமா? அந்த விஷயத்தைப் பற்றி உணர்ச்சிவசப்படாமல் நியாயமாக என்னால் பேச முடியுமா? அல்லது, மனசு அமைதி ஆகும்வரை கொஞ்சம் நேரம் நான் காத்திருக்க வேண்டுமா?’

  •  மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.” (மத்தேயு 7:12) ‘ஒருவேளை புரளியைக் கிளப்பிய நபருடைய இடத்தில் நான் இருந்திருந்தால், மற்றவர்கள் என்னிடம் வந்து எப்படி பேச வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேன்? எந்த மாதிரியான சூழ்நிலையில் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்? என்ன சொன்னால் அல்லது, எப்படி நடந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்?’

 டிப்ஸ்: வதந்திகளைப் பரப்பிய ஒருவரிடம் போய் பேசுவதற்கு முன்பு அவரிடம் நீங்கள் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்கள் என்று எழுதுங்கள். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கழித்து நீங்கள் எழுதியதை மறுபடியும் படியுங்கள். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று பாருங்கள். இதைப் பற்றி உங்கள் அப்பா-அம்மாவிடம் இல்லையென்றால், முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடம் பேசுங்கள். அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.

 நிஜம்: வாழ்க்கையில் நடக்கிற நிறைய விஷயங்களைப் போலவே கிசுகிசுக்களையும் உங்களால் தடுக்க முடியாது. ஆனால் அதற்காக அதன் கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை!