Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

கவனம் செலுத்த கற்றுக்கொள்வது எப்படி?

கவனம் செலுத்த கற்றுக்கொள்வது எப்படி?

 என் மனம் ஏன் அலைபாய்கிறது?

 “முன்னாடியெல்லாம் நிறைய புக்ஸ் படிப்பேன். ஆனா இப்பெல்லாம் ஒரு பெரிய பாராவை பார்த்தாலே படிக்க தோணல.”—இலேன்.

 “ஒரு வீடியோ ரொம்ப இழுக்குற மாதிரி இருந்தா வேகமா ஓட்டி ஓட்டி பார்ப்பேன்.”—மிரான்டா.

 “முக்கியமான வேலை செஞ்சிட்டு இருந்தாலும், என் ஃபோன்ல மெசேஜ் சத்தம் கேட்டா போதும், ‘யார் அனுப்பியிருப்பாங்க?’னு யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்.”—ஜேன்.

 எலெக்ட்ரானிக் சாதனங்கள் நம் கவனத்தைச் சிதறடிப்பது உண்மையா? ஆம் என்று சிலர் சொல்கிறார்கள். “நாம் இன்டர்நெட்டை அதிகமாகப் பயன்படுத்தும்போது, ரொம்ப வேகமாகவும் திறமையாகவும் வேலை செய்ய நம் மூளை பழகிக்கொள்கிறது. ஆனால் அந்த வேலையில் நம்மால் முழு கவனம் செலுத்த முடிவதில்லை” என்று எழுத்தாளரும் நிர்வாக ஆலோசகருமான நிக்கலஸ் கார் என்பவர் எழுதினார். a

 எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூன்று வழிகளில் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கலாம். எப்படி?

  •   பேசும்போது. “மத்தவங்கள நேர்ல பார்த்து பேசுறப்போகூட நிறைய பேர் அவங்க சொல்றத கவனிக்காம ஃபோன்ல மெசேஜ் பண்ணிட்டோ கேம்ஸ் விளையாடிட்டோ சோஷியல் மீடியாவை பயன்படுத்திட்டோ இருக்காங்க” என்று சொல்கிறாள் மரியா என்ற இளம் பெண்.

  •   கிளாஸ்ரூமில் இருக்கும்போது. “கிளாஸ்ரூமில் இருக்கும்போது படிப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக மெசேஜ் பண்ணுவதும், இன்டர்நெட்டை அலசுவதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் வழக்கம் என்று முக்கால்வாசி மாணவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்” என்று சொல்கிறது டிஜிட்டல் கிட்ஸ் என்ற ஆங்கில புத்தகம்.

  •   வீட்டில் படிக்கும்போது. “ஃபோன் சத்தம் கேட்குறப்போ உடனே எடுத்து பார்க்கலனா என் தலையே வெடிச்சிடும் போல இருக்கும்” என்று சொல்கிறான் 22 வயது கிறிஸ். நீங்கள் பள்ளியில் படிக்கும் மாணவரா? அப்படியென்றால், இதை ஞாபகம் வையுங்கள்: எலெக்ட்ரானிக் சாதனங்கள் உங்கள் பக்கத்தில் இருந்தால், ஒரே மணிநேரத்தில் முடிய வேண்டிய ஹோம்வொர்க்-கூட மூணு மணிநேரத்துக்கு மேல் இழுக்கலாம்.

 சுருக்கமாகச் சொன்னால்: எலெக்ட்ரானிக் சாதனங்களின் பிடியில் சிக்கிக்கொண்டால் உங்களால் எதிலுமே கவனம் செலுத்த முடியாது.

மனம் ஒரு முரட்டுக் குதிரை, அதை நீங்கள் அடக்கவில்லை என்றால் அது உங்களை அடக்கிவிடும்

 மனதை அலைபாயவிடாமல் இருப்பது எப்படி?

  •   பேசும்போது. “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 2:4) மற்றவர்கள்மேல் அக்கறை காட்ட வேண்டுமென்றால், அவர்கள் பேசும்போது நன்றாகக் கவனியுங்கள். உங்கள் ஃபோனைப் பார்ப்பதற்குப் பதிலாக அவர்களுடைய முகத்தைப் பாருங்கள்.

     “ஒருத்தர் பேசுறப்போ நம்ம ஃபோனை எடுத்து பார்க்க கூடாது. அவர் சொல்றத நல்லா கவனிச்சு கேட்கணும், அப்பதான் அவருக்கு மரியாதை கொடுக்குற மாதிரி இருக்கும்.”—தாமஸ்.

     டிப்ஸ்: ஒருவரோடு பேசும்போது ஃபோனை உங்கள் கண்ணில் படாத மாதிரி வையுங்கள். இல்லையென்றால், அது உங்கள் மனதைக் காந்தம்போல் இழுத்துக்கொண்டே இருக்கும், உங்கள் கவனமும் சீக்கிரத்தில் சிதறிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

  •   கிளாஸ்ரூமில் இருக்கும்போது. “நீங்கள் கேட்கிற விதத்துக்குக் கவனம் செலுத்துங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 8:18) அதனால், கிளாஸ்ரூமில் இன்டர்நெட்டைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி இருந்தாலும், பாடம் நடத்தும்போது அதற்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். மெசேஜ்களை பார்ப்பதையும், கேம்ஸ் விளையாடுவதையும், ஆன்லைனில் அரட்டை அடிப்பதையும் மூட்டைகட்டி வைத்துவிடுங்கள்.

     “கிளாஸ்ல நல்லா கவனியுங்க. நோட்ஸ் எடுங்க. முடிஞ்சா, பின்னாடி பெஞ்சில் உட்காராம முன்னாடி உட்காருங்க, அப்பதான் நல்லா கவனிக்க முடியும்.”—கேரன்.

     டிப்ஸ்: ஏதாவது எலெக்ட்ரானிக் சாதனத்தில் நோட்ஸ் எடுப்பதற்குப் பதிலாக ஒரு நோட்புக்கில் கையாலேயே எழுதுங்கள். அப்போது, உங்கள் கவனமும் சிதறாது, குறிப்புகளும் மனதில் நிற்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

  •   வீட்டில் படிக்கும்போது. “ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 4:5) அப்படியென்றால், படிக்கும் விஷயங்களை நன்றாக யோசித்துப் பாருங்கள். பரீட்சையில் பாஸ் ஆவதற்காக மட்டும் அவசர அவசரமாகப் படிக்காதீர்கள்.

     “நான் படிக்கிறப்போ என்னோட டேப்லெட்டை ஏர்ப்ளேன் மோடுல வெச்சிட்டு படிப்புல மட்டும் கவனம் செலுத்துவேன். ஏதாவது மெசேஜ் வந்திருக்கானு எடுத்து பார்க்க மாட்டேன். ஞாபகம் வைச்சு செய்ய வேண்டிய விஷயங்கள எழுதி வெச்சுப்பேன்.”—கிறிஸ்.

     டிப்ஸ்: நீங்கள் படிக்கும் இடம் உங்கள் கவனத்தை சிதறடிக்காத விதத்தில் இருக்க வேண்டும். அதனால், சுற்றி நிறைய பொருள்கள் இல்லாத மாதிரி அதைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

a மேலோட்டமான அறிவு—இன்டர்நெட்டினால் நம் மூளைக்கு வரும் பாதிப்பு என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.