Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

படைப்பா பரிணாமமா?—பாகம் 4: படைப்பைப் பற்றிய என்னுடைய நம்பிக்கையை எப்படி விளக்குவது?

படைப்பா பரிணாமமா?—பாகம் 4: படைப்பைப் பற்றிய என்னுடைய நம்பிக்கையை எப்படி விளக்குவது?

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று நீங்கள் நம்புகிறீர்கள், ஆனால் ஸ்கூலில் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குத் தயங்குகிறீர்கள். ‘பாடப் புத்தகங்கள் பரிணாமத்த பத்தி சொல்லுதே... டீச்சர்களும் கூடப் படிக்கிறவங்களும் கிண்டலடிப்பாங்களே...’ என்றெல்லாம் நினைத்து ஒருவேளை நீங்கள் கவலைப்படலாம். அப்படியானால், படைப்பைப் பற்றிய உங்களுடைய நம்பிக்கையைக் குறித்து எப்படி மற்றவர்களிடம் தைரியமாகப் பேசலாம்?

 உங்களால் முடியும்!

 நீங்கள் இப்படி யோசிக்கலாம்: ‘அறிவியல பத்தியும் பரிணாமத்த பத்தியும் பேசற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய புத்திசாலி இல்ல.’ ஒரு காலத்தில் டான்யெல்லா இப்படித்தான் யோசித்தாள். “என் டீச்சரையும் க்ளாஸ்ல இருக்கறவங்களையும் எதிர்த்து, அவங்களோட கருத்துக்கு நேர்மாறா பேசணும்னு நினைக்கும்போதே வெறுப்பா இருந்துச்சு” என்கிறாள் அவள். “அறிவியல் வார்த்தைகள சொல்லி அவங்க வாதாடுனப்போ, நான் குழம்பிப்போயிட்டேன்” என்று ஒத்துக்கொள்கிறாள் டையானா.

 ஆனால், ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்: விவாதங்களில் ஜெயிப்பது உங்கள் குறிக்கோள் அல்ல. நல்ல செய்தி என்னவென்றால், படைப்பை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்று விளக்குவதற்கு நீங்கள் ஒரு அறிவியல் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

 டிப்ஸ்: “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே” என்று எபிரெயர் 3:4-ல் உள்ள எளிமையான நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

 அந்த வசனத்திலுள்ள நியமத்தைப் பயன்படுத்தி கரோல் என்ற இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “ஒரு பெரிய காட்டுக்குள்ள நடந்து போயிட்டு இருக்கறதா கற்பனை செஞ்சுக்கங்க. பல மைல் தூரத்துக்கு அங்க ஆள் நடமாட்டமே இல்ல. அப்போ நீங்க கீழ பார்க்கறீங்க... பல்லு குத்துற குச்சி ஒண்ணு அங்க கிடக்குது. என்ன முடிவுக்கு வருவீங்க? ‘யாரோ அந்த இடத்துக்கு வந்திட்டுப் போயிருக்காங்க’ன்னுதான் நிறைய பேர் சொல்வாங்க. பல்குச்சி மாதிரி ரொம்ப ரொம்பச் சின்னப் பொருள்கூட புத்திக்கூர்மையுள்ள ஒருத்தர் இருந்திருக்கணும்-ங்கறதுக்கு அத்தாட்சி அளிக்கும்போது, இந்தப் பிரபஞ்சமும் அதில இருக்கற எல்லா விஷயங்களும் புத்திக்கூர்மையுள்ள ஒருத்தர் இருக்கணும்ங்கிறதுக்கு இன்னும் எந்தளவு அத்தாட்சி அளிக்குது!”

 யாராவது இப்படிச் சொன்னால்: “படைப்புதான் உண்மைன்னா, படைப்பாளர படைச்சது யாரு?”

 நீங்கள் இப்படிப் பதில் சொல்லலாம்: “படைப்பாளர பத்தின எல்லா விஷயங்களையும் நாம புரிஞ்சுக்க முடியாதுங்கறதுக்காக அப்படி ஒருத்தரு இல்லவே இல்லன்னு ஆகிடாது. உதாரணத்துக்கு, உங்க செல்ஃபோனை டிஸைன் செஞ்ச நபர பத்தின எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரியாம இருக்கலாம், ஆனாலும் அத யாரோ ஒருத்தர் டிஸைன் செஞ்சிருக்காருன்னு கண்டிப்பா நம்புவீங்கதான? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] படைப்பாளர பத்தி நிறைய விஷயங்கள நம்மளால தெரிஞ்சுக்க முடியும். உங்களுக்கு ஆர்வம் இருந்துச்சுன்னா, அவர பத்தி கத்துக்கிட்ட விஷயங்கள நான் உங்ககிட்ட சொல்றேன்.”

 தயாராக இருங்கள்

 “உங்கள் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:15) அதனால், என்ன சொல்கிறீர்கள், அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்ற இரண்டு விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்.

  1.   என்ன சொல்கிறீர்கள். கடவுள்மேல் நீங்கள் அன்பு வைத்திருப்பது முக்கியம், மற்றவர்களிடம் தைரியமாகப் பேச அது உங்களைத் தூண்டும். ஆனால், படைப்பை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்றால் கடவுள்மேல் நீங்கள் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. இயற்கையில் இருக்கும் உதாரணங்களையும் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

  2.   அதை எப்படிச் சொல்கிறீர்கள். தன்னம்பிக்கையோடு பேசுங்கள், ஆனால் கடுகடுப்பாகவோ மட்டம் தட்டியோ பேசிவிடாதீர்கள். மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி மரியாதையோடு பேசினால்... சொந்தமாக முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறதென்று ஒத்துக்கொண்டால்... நீங்கள் சொல்ல வருகிற கருத்துக்கு அவர்கள் கவனம் செலுத்தலாம்.

     “மத்தவங்ககிட்ட பேசும்போது அவமானப்படுத்தற மாதிரியோ... எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரியோ பேசாம இருக்கறது ரொம்ப முக்கியம். மட்டம் தட்டற மாதிரி பேசினா, அவங்களுக்குக் கோபம்தான் வரும்.”—ஈலைன்.

 உங்கள் நம்பிக்கையை விளக்க உதவும் கருவிகள்

உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசத் தயாராக இருப்பது, சீதோஷ்ண மாற்றத்துக்குத் தயாராக இருப்பது போன்றது

 “நாம தயாரா இல்லன்னா, எதுக்கு வீணா அசிங்கப்படணும்னு நெனச்சுகிட்டு வாயே திறக்காம இருந்துடுவோம்” என்கிறாள் அலிஸியா. இது உண்மைதான், வெற்றி வேண்டுமானால் தயாரிப்பது அவசியம். “ரொம்ப சிம்பிளான, அதேசமயம் பொருத்தமான ஒரு உதாரணத்த மனசில யோசிச்சு வெச்சிருந்தேன்னா, படைப்ப பத்தி எந்தப் பதட்டமும் இல்லாம என்னால பேச முடியும்” என்கிறாள் ஜென்னா.

 அதுபோன்ற உதாரணங்கள் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? பின்வரும் பிரசுரங்கள் நிறைய இளைஞர்களுக்கு உதவியிருக்கின்றன:

 “படைப்பா பரிணாமமா?” என்ற இந்தத் தொடர்க் கட்டுரைகளின் முந்தைய கட்டுரைகளை வாசித்துப் பார்ப்பதும் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

  1.  பாகம் 1: கடவுள் இருக்கிறார் என்று ஏன் நம்ப வேண்டும்?

  2.  பாகம் 2: பரிணாமத்தைப் பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்?

  3.  பாகம் 3: கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஏன் நம்ப வேண்டும்?

 டிப்ஸ்: படைப்பில், நீங்கள் நம்பிக்கை வைக்க உதவிய உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். அவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது சுலபம், உங்களால் தன்னம்பிக்கையோடும் பேச முடியும். உங்கள் நம்பிக்கையை மற்றவர்களிடம் எப்படி விளக்குவீர்கள் என்று ஒத்திகை பாருங்கள்.