Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் ஏன் எப்போதும் ‘தப்புத் தப்பாக’ பேசுகிறேன்?

நான் ஏன் எப்போதும் ‘தப்புத் தப்பாக’ பேசுகிறேன்?

 “சில சமயங்கள்ல என்னோட பேச்ச என்னால கட்டுப்படுத்த முடியுது, ஆனா மத்த சமயங்கள்ல என்னால அப்படி இருக்க முடியல.”​—ஜேம்ஸ்.

 “நான் பதட்டமா இருக்குறப்ப யோசிக்காம பேசிடுவேன், ரிலாக்ஸா இருக்குறப்ப அளவுக்கு அதிகமா பேசிடுவேன். ஆக மொத்ததுல நான் எப்பவுமே சொதப்பிடுவேன்.”​—மேரி.

 “நாக்கும் நெருப்புதான்” என்று பைபிள் சொல்கிறது. “சிறிதளவு நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது” என்றும் அது சொல்கிறது. (யாக்கோபு 3:5, 6) உங்கள் பேச்சு உங்களை அடிக்கடி பிரச்சினையில் மாட்டிவிடுகிறதா? அப்படியென்றால், இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

 நான் ஏன் ‘தப்புத் தப்பாக’ பேசுகிறேன்?

 தவறு செய்யும் இயல்பு. “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம். பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2) நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால், நடக்கும்போது நாம் எப்படி தடுமாறுகிறோமோ, அதேபோல் பேசும்போது தடம்மாறுகிறோம்.

 “நான் எல்லாத்தையும் சரியா செய்வேன்னு சொல்லவே முடியாது. அதனால, என்னோட யோசனையயும் பேச்சயும் என் கட்டுபாட்டுல வெச்சுக்க முடியும்னு சொன்னா அது முட்டாள்தனமாதான் இருக்கும்.”—ஆன்னா.

 அளவுக்கு அதிகமாகப் பேசுவது. “அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 10:19) அளவுக்கு அதிகமாகப் பேசும் ஒருவர் மற்றவர்களுடைய மனதை எளிதில் புண்படுத்திவிடுவார்.

 “புத்திசாலிங்க ரொம்ப பேச மாட்டாங்க. இந்த பூமியில வாழ்ந்தவங்கள்லயே புத்திசாலியானவர் இயேசுதான். அவரே சில சமயங்கள்ல அமைதியா இருந்தாரு.”​—ஜூலியா.

 நக்கலான பேச்சு. “யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 12:18) யோசிக்காமல் பேசுவதற்கு ஓர் உதாரணம்தான் நக்கலான பேச்சு. மற்றவர்களை மட்டம் தட்டும் விதத்திலும், புண்படுத்தும் விதத்திலும் பேசுவதுதான் நக்கலான பேச்சு. நக்கலாக பேசுபவர்கள், “நான் சும்மா ஜோக் அடிச்சேன்” என்று சொல்லலாம். ஆனால், ஒருவர் அவமானப்படுவதைப் பார்த்து நாம் சிரிப்பது சரி கிடையாது. “பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—எபேசியர் 4:31.

 “ஜாலியா கிண்டலடிச்சு பேசுறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, அப்படி பேச ஆரம்பிச்சா, கடைசில நக்கலான பேச்சாதான் போய் முடியும். இதனாலேயே அடிக்கடி நான் பிரச்சினையில மாட்டிக்குவேன்.”—ஆக்சானா.

எப்படி பேஸ்டைத் திரும்பவும் அதன் டியூபுக்குள் போட முடியாதோ, அதேபோல் நீங்கள் பேசிய வார்த்தைகளை திருப்பி எடுக்கவே முடியாது

 நாக்கை எப்படி அடக்கலாம்?

 நாக்கை அடக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், பைபிளிலிருக்கும் ஆலோசனைகள் நமக்கு உதவும். உதாரணத்துக்கு, கீழே கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைக் கவனியுங்கள்.

 “சொல்ல நினைப்பதை மனதிலேயே சொல்லிக்கொண்டு, அமைதியாக [இருங்கள்.]”—சங்கீதம் 4:4.

 சிலசமயங்களில் அமைதியாக இருப்பதே நல்லது. “பயங்கர கோபத்துல இருக்குறப்போ நான் கன்னாபின்னானு யோசிப்பேன். ஆனா, அதே கொஞ்ச நேரம் கழிச்சு அப்படி யோசிக்க மாட்டேன். கோபமெல்லாம் போனதுக்கு அப்புறம், வார்த்தைய விட்டுடாம இருந்தத நினைச்சு சந்தோஷப்படுவேன்” என்று லாரா என்ற பெண் சொல்கிறார். கோபம் வரும்போது, சில நொடிகள் நிதானமாக யோசிப்பதும்கூட ‘தப்புத் தப்பாக’ பேசிவிடாமல் இருக்க உதவும்.

 “சாப்பாட்டை நாக்கு ருசி பார்ப்பதில்லையா? அது போல, வார்த்தைகளைக் காது சோதித்துப் பார்ப்பதில்லையா?”—யோபு 12:11.

 எதையும் பேசுவதற்கு முன்பு, கீழே இருக்கிற கேள்விகளை யோசித்துப்பார்ப்பது, பேசிவிட்டு பின்னால் வருத்தப்படாமல் இருக்க உதவும்:

  •   ‘இது உண்மையா? இது அவங்கள காயப்படுத்துமா? இத சொல்லியே ஆகணுமா?’—ரோமர் 14:19.

  •   ‘இதே விஷயத்த வேற யாராவது என்கிட்ட சொன்னா எனக்கு எப்படி இருக்கும்?’—மத்தேயு 7:12.

  •   ‘இத சொன்னா மத்தவங்க சொல்றத நான் மதிக்கிறேன்னு காட்டுமா?’—ரோமர் 12:10.

  •   ‘இத இப்போ சொன்னா சரியா இருக்குமா?’—பிரசங்கி 3:7.

 “மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்.”—பிலிப்பியர் 2:3.

 இந்த ஆலோசனையின்படி நடந்தால், மற்றவர்களைப் பற்றி நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முடியும். இது, நம் நாக்கை கட்டுப்பாட்டில் வைக்கவும், யோசித்துப் பேசவும் நமக்கு உதவும். யாருடைய மனதையாவது நீங்கள் காயப்படுத்தும் விதத்தில் பேசியிருந்தால், ஒருவேளை இது நடந்து ரொம்ப நாள் ஆகியிருந்தாலும்கூட, அவர்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு மனத்தாழ்மை உங்களுக்கு உதவும். அதுவும் எவ்வளவு சீக்கிரம் கேட்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்க உதவும். (மத்தேயு 5:23, 24) நாக்கை அடக்குவதில் முன்னேற தீர்மானமாக இருங்கள்.