Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நட்பா, காதலா?—பகுதி 2: என்ன மாதிரியான சிக்னலை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்?

நட்பா, காதலா?—பகுதி 2: என்ன மாதிரியான சிக்னலை நான் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்?

 உங்களுக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கிறார். அவர் எப்போது பேசினாலும் கேட்பதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் நாளாக அவரிடம் மட்டும்தான் நீங்கள் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தோன்றுகிறது. இப்போது பிரச்சினை என்னவென்றால், நீங்கள் ஒரு பையன், அவர் ஒரு பெண். ‘நாங்கள் வெறும் ஃப்ரெண்ட்ஸ்தான்’ என்று நீங்கள் உங்களுக்குள்ளே சொல்கிறீர்கள். அவரும் அப்படித்தான் உங்களை பார்க்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

 என்ன நடக்கலாம்?

 நீங்கள் பையனாக இருந்தால், பெண்களோடு நட்பு வைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லைதான். அதேமாதிரி பெண்களும் பையன்களுடன் நட்பு வைத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், குறிப்பிட்ட ஒருவரிடம் மட்டும் நீங்கள் ரொம்ப நெருக்கமான ஒரு நட்பை வளர்த்துக்கொண்டால் என்ன ஆகலாம்? உங்களுக்கும் அவருக்கும் இடையில் நட்பையும் தாண்டி வேறு ஏதோ இருக்கிறது என்று அவர் நினைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

 ஆனால், உண்மையிலேயே இந்த மாதிரி ஒரு சிக்னலைத்தான் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களா? உங்களுக்கே தெரியாமல்கூட நீங்கள் அந்த மாதிரி சிக்னலை கொடுத்துவிடலாம். அது எப்படி நடக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

  •   ஒருவருக்கு மட்டும் அதிகமாக கவனம் கொடுப்பது.

     “மற்றவர்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை உங்களால் கட்டுப்படுத்த முடியாதுதான். ஆனால் அதற்காக, நாங்கள் வெறும் ஃப்ரெண்ட்ஸ்தான் என்று சொல்லிக்கொண்டு அவரிடம் மட்டுமே அடிக்கடி கால் பண்ணி பேசிக்கொண்டு இருந்தால் அவருடைய மனதில் இருக்கிற ஆசைக்கு தீனி போடுகிற மாதிரி ஆகிவிடும்.”​—சியாரா.

  •   இன்னொருவர் உங்கள்மேல் கவனம் கொடுக்கும்போது, நீங்கள் அதற்கு பதில் கொடுப்பது.

     “நான் மெசேஜ் பண்ண ஆரம்பிக்கவில்லை. ஆனால், ஒரு பெண் எனக்கு எக்கச்சக்கமாக மெசேஜ் அனுப்பினாள். அத்தனை மெசேஜுகளுக்கும் நான் பதில் அனுப்பினேன். கொஞ்சம் நாளுக்கு பிறகு, நான் அவளை வெறுமனே ஒரு ஃப்ரெண்டாகத்தான் பார்த்தேன் என்று சொல்லி புரியவைப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது.”​—ரிச்சர்ட்.

  •   இன்னொருவருடைய கவனம் உங்கள்மேல் இருக்கும்போது, அதை நீங்கள் தீனி போட்டு வளர்ப்பது.

     “சிலர் மற்றவர்களிடம் ரொம்ப குழைந்து குழைந்து பேசுவார்கள். கல்யாணம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வெறுமனே மற்றவர்களுடைய உணர்ச்சிகளோடு விளையாடுவார்கள். இந்த மாதிரி செய்கிற நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி செய்வதால் கண்டிப்பாக யாரோ ஒருவருடைய மனது ரொம்ப காயப்படும்.”​—தமாரா.

 மனதில் வைக்க வேண்டியவை: ஒருவரிடம் மட்டுமே அடிக்கடி பேசிக்கொண்டு, அவரையே ரொம்ப கவனித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு அவர்மேல் காதல் இருக்கிறது என்ற சிக்னலை நீங்கள் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 இதைப் பற்றி நீங்கள் யோசிப்பது ஏன் முக்கியம்?

  •   இது மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்தும்.

     பைபிள் சொல்கிறது: “எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும்.” (நீதிமொழிகள் 13:12) உங்கள்மேல் காதல் இருக்கிறது என்று ஒருவர் உங்களுக்கு சிக்னல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, உங்கள் மனதுக்கு எப்படி இருக்கும்?

     “‘தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீன் மாதிரி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஒரு மீன் தூண்டிலில் மாட்டிக்கொண்டது என்றால் அதை நாம் தூண்டிலிலிருந்து எடுக்க வேண்டும். அல்லது, அதை திரும்பவும் நீந்துவதற்கு விட்டுவிட வேண்டும். இரண்டுமே செய்யாமல் அந்த மீன் தூண்டிலிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டால், அது அந்த மீனுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்! இதே மாதிரி, உறவுகளுக்கு நடுவிலும் நடக்கலாம். கல்யாணம் பண்ண வேண்டும் அல்லது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், ஒருவரிடம் ரொம்ப நெருக்கமாக பழகிக்கொண்டு, காதலிப்பதைப் போல் சிக்னல் மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தால் அவர்களை அந்த தூண்டிலிலேயே மாட்டி வைத்திருப்பது போல் இருக்கும். அது கண்டிப்பாக அவர்களுக்கு ரொம்ப ரொம்ப வலிக்கும்.”​—ஜெஸிக்கா.

  •   இது உங்களுடைய நல்ல பெயரை கெடுத்துவிடும்.

     பைபிள் சொல்கிறது: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.” (பிலிப்பியர் 2:4) ஒருவர் ரொம்ப சுயநலமாக நடந்துகொள்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு எப்படிப்பட்ட பேர் இருக்கும்? அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்?

     “பொண்ணுங்களிடம் வழிகிற பையன்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால், இப்படிப்பட்ட பையன்கள், நாளைக்கு கல்யாணம் ஆனதற்கு பிறகு உண்மையாக இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது. இப்படி செய்கிறவர்கள் தங்களை பெரிய ஆளாக காட்டுவதற்காக மற்றவர்களை ‘யூஸ்’ பண்ணுகிறார்கள். இது எவ்வளவு சுயநலம்!”​—ஜூலியா.

 மனதில் வைக்க வேண்டியவை: காதலிக்கிற எண்ணம் இல்லாமல் காதலிக்கிற மாதிரியான சிக்னல் கொடுக்கிறவர்கள் மற்றவர்களையும் காயப்படுத்துகிறார்கள், தங்களையும் காயப்படுத்திக்கொள்கிறார்கள்.

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   “இளம் ஆண்களைத் தம்பிகள் போலவும், . . . இளம் பெண்களைச் சுத்தமான உள்ளத்தோடு தங்கைகள் போலவும்” நினைக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 5:1, 2) இந்த ஆலோசனைப்படி நீங்கள் செய்தால் பையன்களிடம் அல்லது பெண்களிடம் உங்களுக்கு இருக்கிற நட்பை நீங்கள் இழந்துவிடாமல் இருக்கலாம்.

     “எனக்கு கல்யாணம் ஆகிவிட்டால் இன்னொருவருடைய கணவரிடம் கண்டிப்பாக நான் வழிந்து பேச மாட்டேன். அதனால், கல்யாணம் ஆகாமல் இருக்கிற இந்த சமயத்திலேயே, பையன்களோடு பழகுகிற விஷயத்தில் நான் கொஞ்சம் அளவோடு இருந்துவிட்டால் கல்யாணத்துக்கு பின்பு எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.”​—லீயா.

  •   பைபிள் இப்படி சொல்கிறது: “அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.” (நீதிமொழிகள் 10:19) நாம் பேசும்போது மட்டுமல்ல மெசேஜ் அனுப்பும்போதுகூட இந்த ஆலோசனையின்படி செய்யலாம். எவ்வளவு அடிக்கடி மெசேஜ் பண்ணுகிறோம், என்ன மாதிரியான விஷயங்களை பேசுகிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்கலாம்.

     “காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லையென்றால் ஒரு பெண்ணிடம் நீங்கள் தினமும் மெசேஜ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.”​—ப்ரையன்.

  •   பைபிள் இப்படி சொல்கிறது: “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.” (யாக்கோபு 3:17) ஒருவரைக் கட்டிப்பிடிக்கும்போது எந்த தப்பான எண்ணமும் இல்லாமல் வெறுமனே நட்பாக கட்டிப்பிடிக்கலாம். இல்லையென்றால், மனதில் காதலை வைத்துக்கொண்டு காதல் உணர்வோடும் கட்டிப்பிடிக்கலாம். அதனால் யோசியுங்கள்!

     “நான் பையன்களிடம் நல்ல ஃப்ரெண்டாகத்தான் பழகுவேன். ஆனால், யாரிடமும் ரொம்ப ‘க்லோஸ்’ ஆகிவிட மாட்டேன். கொஞ்சம் தள்ளியேதான் இருப்பேன்.”​—மரியா.

 மனதில் வைக்க வேண்டியவை: நீங்கள் பெண்ணாக இருந்தால் பையன்களிடம் பழகுகிற விதத்தைப் பற்றியும், பையனாக இருந்தால் பெண்களிடம் பழகுகிற விதத்தைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள். ஜெனிஃபர் என்ற ஒரு டீனேஜ் பெண் இப்படி சொல்கிறார்: “நல்ல நண்பர்கள் கிடைப்பதே ரொம்ப கஷ்டம். அதனால் தப்பான சிக்னலை கொடுத்து அந்த நட்பை நாம் கெடுத்துவிடக்கூடாது.”

 டிப்ஸ்

  •    மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நன்றாக கவனியுங்கள். யாராவது ஒருவர் உங்களிடம், “நீங்கள் இரண்டு பேரும் காதலிக்கிறீர்கள் போல தெரிகிறதே!“ என்று சொன்னால் நீங்கள் இரண்டு பேரும் அளவுக்கு அதிகமாக நெருங்கி பழகுகிறீர்கள் என்று அர்த்தம்.

  •    ஒரு பெண்ணாக, உங்களுக்கு பையன்களில் சில ஃப்ரெண்ட்ஸ் இருந்தார்கள் என்றால் அல்லது ஒரு பையனாக, உங்களுக்கு பெண்களில் சில ஃப்ரெண்ட்ஸ் இருந்தார்கள் என்றால் எல்லாரிடமும் ஒரே மாதிரி பழகுங்கள். அதில் ஒருவரிடம் மட்டும் நிறைய பேசிக்கொண்டு நெருங்கி பழகிக்கொண்டு இருக்காதீர்கள்.

  •   மெசேஜ் பண்ணுகிற விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். அதுவும் நீங்கள் எவ்வளவு அடிக்கடி மெசேஜ் பண்ணுகிறீர்கள், எதை பற்றி பேசுகிறீர்கள், எந்த நேரத்தில் பேசுகிறீர்கள் என்பதில் எல்லாம் ரொம்ப கவனமாக இருங்கள். “ஒரு பெண் ஒரு பையனிடம் அல்லது ஒரு பையன் ஒரு பெண்ணிடம் நடுராத்திரி உட்கார்ந்து மெசேஜ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை” என்று அலீஸ்ஸா என்ற பெண் சொல்கிறாள்.