Skip to content

யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?

யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?

யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள், இயேசு கற்றுக்கொடுத்தபடியே வாழும் கிறிஸ்தவர்கள். இயேசுவின் அப்போஸ்தலர்கள் கடைப்பிடித்த வணக்கமுறையைப் பின்பற்றுகிறவர்கள். எங்களுடைய முக்கியமான நம்பிக்கைகளைப் பற்றி இந்தக் கட்டுரை சுருக்கமாகச் சொல்கிறது.

  1.   கடவுள். எல்லாவற்றையும் படைத்த ஒரே உண்மையான, சர்வவல்லமையுள்ள கடவுளை நாங்கள் வணங்குகிறோம். அவருடைய பெயர் யெகோவா. (சங்கீதம் 83:18; வெளிப்படுத்துதல் 4:11) இவரைத்தான் ஆபிரகாமும் மோசேயும் இயேசுவும் வணங்கினார்கள்.—யாத்திராகமம் 3:6; 32:11; யோவான் 20:17.

  2.   பைபிள். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட புத்தகம்தான் பைபிள் என்று நாங்கள் நம்புகிறோம். மனிதர்களுக்குக் கடவுள் சொல்லும் செய்தி அதில் இருக்கிறது. (யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16) அதிலுள்ள 66 புத்தகங்களையும், அதாவது “பழைய ஏற்பாடு,” “புதிய ஏற்பாடு” ஆகிய இரண்டையும், நாங்கள் நம்புகிறோம். பேராசிரியர் ஜேசன் டி. பெடூன் இப்படிச் சரியாக எழுதினார்: “[யெகோவாவின் சாட்சிகள்] பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறதோ அதைத்தான் நம்புகிறார்கள், அதைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்; பைபிள் இப்படித்தான் சொல்லியிருக்கும் என்று அவர்களாகவே முடிவுக்கு வந்துவிடுவதில்லை.” a

     நாங்கள் முழு பைபிளையும் ஏற்றுக்கொண்டாலும், அதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்துக்கொள்வதில்லை. பைபிளிலுள்ள சில பகுதிகள் அடையாள அர்த்தத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம்.—வெளிப்படுத்துதல் 1:1.

  3.   இயேசு. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக்கொள்கிறோம், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். அவர்தான் மீட்பர் என்பதையும் கடவுளுடைய மகன் என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம். (மத்தேயு 20:28; அப்போஸ்தலர் 5:31) அதனால், நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். (அப்போஸ்தலர் 11:26) ஆனாலும், பைபிளை ஆராய்ந்து பார்த்ததிலிருந்து, இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் கிடையாது என்றும், திரித்துவம் என்ற கோட்பாட்டிற்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிந்துகொண்டோம்.—யோவான் 14:28.

  4.   கடவுளுடைய அரசாங்கம். இது பரலோகத்தில் இருக்கும் ஒரு நிஜ அரசாங்கம், கிறிஸ்தவர்களின் இதயத்தில் இருக்கும் நிலைமை அல்ல. இது மனிதர்களுடைய அரசாங்கங்களை அழித்துவிட்டு, கடவுள் நினைத்தபடி இந்தப் பூமியை மாற்றும். (தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10) இதையெல்லாம் அது சீக்கிரத்தில் செய்யும். ஏனென்றால், நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்று பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-14.

    பரலோகத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு இருப்பார். அவர் 1914-ல் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.—வெளிப்படுத்துதல் 11:15.

  5.   மீட்பு. இயேசுவுடைய மீட்புப் பலியின் மூலமாகத்தான் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மக்களுக்கு மீட்பு கிடைக்கும். (மத்தேயு 20:28; அப்போஸ்தலர் 4:12) ஆனால், அதற்கு அவர்கள் இயேசுமேல் விசுவாசம் வைத்தால் மட்டும் போதாது, தங்களுடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு ஞானஸ்நானம் எடுக்கவும் வேண்டும். (மத்தேயு 28:19, 20; யோவான் 3:16; அப்போஸ்தலர் 3:19, 20) ஏனென்றால், உண்மையான விசுவாசம் செயலில் காட்டப்படும். (யாக்கோபு 2:24, 26) ஆனால், செயல்களால் மட்டுமே மீட்பைச் சம்பாதிக்க முடியாது, ‘கடவுளுடைய அளவற்ற கருணையால்தான்’ மீட்பைப் பெற முடியும்.—கலாத்தியர் 2:16, 21.

  6.   பரலோகம். யெகோவாவும், இயேசு கிறிஸ்துவும், உண்மையுள்ள தேவதூதர்களும் பரலோகத்தில் வாழ்கிறார்கள். b (சங்கீதம் 103:19-21; அப்போஸ்தலர் 7:55) மனிதர்களில் சிலர் மட்டும், அதாவது 1,44,000 பேர் மட்டும், பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள். அங்கே இயேசுவோடு சேர்ந்து அவர்கள் இந்தப் பூமியை ஆட்சி செய்வார்கள்.—தானியேல் 7:27; 2 தீமோத்தேயு 2:12; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3.

  7.   பூமி. மனிதர்கள் என்றென்றும் வாழ்வதற்குத்தான் கடவுள் இந்தப் பூமியைப் படைத்தார். (சங்கீதம் 104:5; 115:16; பிரசங்கி 1:4) அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர் பரிபூரணமான ஆரோக்கியத்தைத் தருவார். அதோடு, பூஞ்சோலை பூமியில் அவர்களை என்றென்றும் வாழ வைப்பார்.—சங்கீதம் 37:11, 34.

  8.   அக்கிரமங்களும் கஷ்டங்களும். ஒரு தேவதூதன் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்தபோது இவை ஆரம்பமாயின. (யோவான் 8:44) அந்தக் கலகத்துக்குப் பிறகு அவன் “சாத்தான்” என்றும் “பிசாசு” என்றும் அழைக்கப்பட்டான். முதல் மனித ஜோடியை அவன் தன்னுடைய வலையில் சிக்கவைத்தான். அதனால், மனித சந்ததி பாவத்தின் பிடியிலும் சாவின் பிடியிலும் சிக்கிக்கொண்டது. (ஆதியாகமம் 3:1-6; ரோமர் 5:12) சாத்தான் எழுப்பிய சவால்களுக்குப் பதில் தருவதற்காகக் கடவுள் அக்கிரமங்களையும் கஷ்டங்களையும் விட்டுவைத்திருக்கிறார். ஆனால், அவற்றை என்றைக்கும் இப்படியே விட்டுவைக்க மாட்டார்.

  9.   மரணம். இறந்துபோகிறவர்கள் வேறு எங்கும் வாழ்வதில்லை. (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5, 10) அவர்கள் நரகத்தில் வதைக்கப்படுவதும் இல்லை.

     இறந்துபோன கோடிக்கணக்கான நபர்களைக் கடவுள் மறுபடியும் உயிரோடு எழுப்புவார். (அப்போஸ்தலர் 24:15) ஆனால், மறுபடியும் உயிரோடு வருகிறவர்கள் கடவுளுடைய வழிகளைக் கற்றுக்கொள்ள மறுத்தால் அவர்கள் ஒரேயடியாக அழிக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் ஒருபோதும் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 20:14, 15.

  10.   குடும்பம். ஒருவனுக்கு ஒருத்தி என்று கடவுள் ஆரம்பித்துவைத்த திருமண ஏற்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். பாலியல் முறைகேடு என்ற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் விவாகரத்து செய்ய முடியும் என்று நம்புகிறோம். (மத்தேயு 19:4-9) பைபிளில் இருக்கும் அறிவுரைகள், குடும்பங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு உதவுகின்றன என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.—எபேசியர் 5:22–6:1.

  11.   எங்கள் வணக்கம். சிலுவையையோ மற்ற உருவங்களையோ நாங்கள் வணங்குவதில்லை. (உபாகமம் 4:15-19; 1 யோவான் 5:21) எங்களுடைய வணக்கத்தின் முக்கியமான அம்சங்கள் இவைதான்:

  12.   எங்கள் அமைப்பு. எங்களுக்கு நிறைய சபைகள் இருக்கின்றன. ஒவ்வொரு சபையையும் மூப்பர் குழு கண்காணிக்கிறது. ஆனால், மூப்பர் குழுவில் இருப்பவர்கள் பாதிரிமார்கள் கிடையாது, அவர்கள் சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை. (மத்தேயு 10:8; 23:8) நாங்கள் தசமபாகம் வாங்குவதில்லை. எங்கள் கூட்டங்களில் ஒருபோதும் காணிக்கைகள் வசூலிக்கப்படுவது இல்லை. (2 கொரிந்தியர் 9:7) மனப்பூர்வமாகக் கொடுக்கப்படும் நன்கொடைகளை வைத்துத்தான் எங்கள் வேலைகள் செய்யப்படுகின்றன. யார், எவ்வளவு நன்கொடை தருகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

     எங்களுடைய உலகத் தலைமையகத்தில் இருக்கும் ஆளும் குழு, அதாவது முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களின் சிறிய தொகுதி, உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகளை வழிநடத்துகிறார்கள்.—மத்தேயு 24:45.

  13.   ஒற்றுமை. உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒரே விஷயங்களைத்தான் நம்புகிறார்கள். (1 கொரிந்தியர் 1:10) சமூகம், இனம், அந்தஸ்து போன்ற பாகுபாடுகள் எங்களுக்குள் இல்லாதபடி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். (அப்போஸ்தலர் 10:34, 35; யாக்கோபு 2:4) நாங்கள் ஒற்றுமையாக இருந்தாலும், தனிப்பட்ட விஷயங்களில் அவரவருக்கு விருப்பமான தீர்மானங்களை எடுக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கிறோம்.—ரோமர் 14:1-4; எபிரெயர் 5:14.

  14.   எங்கள் நடத்தை. சுயநலம் இல்லாத அன்பைக் காட்ட நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம். (யோவான் 13:34, 35) கடவுளுக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களைத் தவிர்க்கிறோம். இரத்தத்துக்கு விலகியிருக்க வேண்டுமென்ற அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இரத்தம் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கிறோம். (அப்போஸ்தலர் 15:28, 29; கலாத்தியர் 5:19-21) நாங்கள் எல்லாரோடும் சமாதானமாக இருக்கிறோம், போர்களில் கலந்துகொள்வது கிடையாது. (மத்தேயு 5:9; ஏசாயா 2:4) அரசாங்கத்துக்கு நாங்கள் மதிப்பு காட்டுகிறோம். அதன் சட்டதிட்டங்கள் கடவுளுடைய சட்டதிட்டங்களோடு முரண்படாதவரை அவற்றுக்குக் கீழ்ப்படிகிறோம்.—மத்தேயு 22:21; அப்போஸ்தலர் 5:29.

  15.   மற்றவர்களோடு பழகுவது. ‘உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்’ என்று இயேசு கட்டளை கொடுத்தார்; கிறிஸ்தவர்கள் “இந்த உலகத்தின் பாகமாக இல்லை” என்றும் அவர் சொன்னார். (மத்தேயு 22:39; யோவான் 17:16) அதனால், “எல்லாருக்கும் நன்மை செய்ய” நாங்கள் முயற்சி செய்கிறோம்; அதேசமயத்தில், அரசியலிலிருந்தும் மற்ற மதங்களிலிருந்தும் முழுமையாக விலகியிருக்கிறோம். (கலாத்தியர் 6:10; 2 கொரிந்தியர் 6:14) ஆனால், இந்த விஷயங்களில் மற்றவர்கள் எடுக்கும் தீர்மானங்களை மதிக்கிறோம்.—ரோமர் 14:12.

 யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளைப் பற்றி உங்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களுடைய வெப்சைட்டில் படித்துப் பார்க்கலாம், எங்களுடைய அலுவலகங்களில் ஒன்றைத் தொடர்புகொள்ளலாம், உங்களுக்குப் பக்கத்திலுள்ள ஒரு ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டத்துக்கு வரலாம், அல்லது உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருடன் பேசலாம்.

a மொழிபெயர்ப்பில் உண்மை (Truth in Translation) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 165-ஐப் பாருங்கள்.

b கெட்ட தேவதூதர்கள் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இன்னமும் அவர்கள் பரலோகத்துக்குரிய உடலில்தான் இருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 12:7-9.