தானியேல் 2:1-49

2  நேபுகாத்நேச்சார் தன்னுடைய ஆட்சியின் இரண்டாம் வருஷத்தில் பல கனவுகளைப் பார்த்ததால் மிகவும் குழம்பிப்போனான்.+ அவனுக்குத் தூக்கம்கூட வரவில்லை.  அந்தக் கனவுகளைப் பற்றிக் கேட்பதற்காக, மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும் சூனியக்காரர்களையும் ஜோதிடர்களையும்* வரவழைக்கும்படி உத்தரவு கொடுத்தான். அவர்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.+  அப்போது ராஜா அவர்களிடம், “நான் ஒரு கனவைப் பார்த்து ரொம்பவே குழம்பிப்போய் இருக்கிறேன். அதன் அர்த்தத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றான்.  அதற்கு அந்த ஜோதிடர்கள் அரமேயிக் மொழியில்,*+ “ராஜாவே, நீங்கள் நீடூழி வாழ்க! என்ன கனவைப் பார்த்தீர்கள் என்று உங்கள் ஊழியர்களுக்குச் சொல்லுங்கள், அப்போது அதன் அர்த்தத்தைச் சொல்கிறோம்” என்றார்கள்.  அதற்கு ராஜா அந்த ஜோதிடர்களிடம், “நான் பார்த்த கனவையும் அதன் அர்த்தத்தையும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்; இல்லாவிட்டால், உங்களைக் கண்டந்துண்டமாக வெட்டிவிடுவேன், உங்கள் வீடுகளைப் பொதுக் கழிப்பிடமாக* மாற்றிவிடுவேன். இதுதான் என் முடிவு.  கனவையும் அதன் அர்த்தத்தையும் நீங்கள் சொன்னால், அன்பளிப்புகளையும் வெகுமானத்தையும் கொடுத்து, உங்களை மிகவும் கௌரவிப்பேன்.+ அதனால், கனவையும் அதன் அர்த்தத்தையும் இப்போது சொல்லுங்கள்” என்றான்.  அவர்கள் இரண்டாவது தடவையும், “ராஜாவே, அந்தக் கனவை உங்கள் ஊழியர்களுக்குச் சொல்லுங்கள், அப்போது அதன் அர்த்தத்தைச் சொல்கிறோம்” என்றார்கள்.  அதற்கு ராஜா, “நான் முடிவாகச் சொன்னதை நன்றாகத் தெரிந்திருந்தும் நீங்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறீர்கள்.  சூழ்நிலை மாறும்வரை ஏதாவது பொய்யும் புரட்டும் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு வந்திருக்கிறீர்கள். நான் பார்த்த கனவைச் சொல்லாவிட்டால் நீங்கள் யாருமே தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதனால் கனவை முதலில் சொல்லுங்கள், அப்போதுதான் அதன் அர்த்தத்தையும் உங்களால் சொல்ல முடியும் என்று நம்புவேன்” என்றான். 10  அதற்கு அந்த ஜோதிடர்கள், “ராஜா கேட்கும் விஷயத்தை இந்த உலகத்திலுள்ள எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. எந்த மகா ராஜாவும் ஆளுநரும் இப்படியொரு விஷயத்தை ஒரு மந்திரவாதியிடமோ மாயவித்தைக்காரனிடமோ ஜோதிடரிடமோ இதுவரை கேட்டதில்லை. 11  ராஜாவே, மிகவும் கஷ்டமான ஒன்றை நீங்கள் கேட்கிறீர்கள். தெய்வங்களைத் தவிர வேறு யாராலும் அதற்குப் பதில் சொல்ல முடியாது. ஆனால், அதைச் சொல்வதற்கு அந்தத் தெய்வங்கள் இங்கு இல்லையே” என்றார்கள். 12  அதைக் கேட்டதும் ராஜாவுக்குக் கோபம் தலைக்கேறியது. பாபிலோனில் இருந்த ஞானிகள் எல்லாரையும் கொல்லும்படி தன் ஆட்களுக்கு ஆணையிட்டான்.+ 13  அவர்கள் ராஜாவின் ஆணைப்படி எல்லா ஞானிகளையும் கொலை செய்யத் தேடிப்போனார்கள். அவர்கள் தானியேலையும் அவருடைய நண்பர்களையும்கூட தேடிப்போனார்கள். 14  ராஜாவுடைய மெய்க்காவலர்களின் தலைவனான ஆரியோகு பாபிலோனில் இருந்த ஞானிகளைக் கொலை செய்யப் புறப்பட்டுப் போனபோது தானியேல் அவனிடம் விவேகமாகவும் ஜாக்கிரதையாகவும் பேசினார். 15  “ராஜா ஏன் இப்படியொரு பயங்கரமான கட்டளையைப் போட்டிருக்கிறார்?” என்று அவனிடம் கேட்டார். அப்போது, ஆரியோகு விஷயத்தைச் சொன்னான்.+ 16  அதனால் தானியேல் ராஜாவிடம் போய், கனவை விளக்குவதற்கு அவகாசம் கேட்டார். 17  அதன்பின் வீட்டுக்குப் போய், தன் நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களிடம் விஷயத்தைச் சொன்னார். 18  அதோடு, “பரலோகத்தின் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டி அந்தக் கனவின் ரகசியத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபம் செய்யுங்கள். அப்போதுதான், பாபிலோனில் உள்ள மற்ற ஞானிகளோடு சேர்ந்து நாமும் அழிந்துபோக மாட்டோம்” என்றார். 19  இரவில் ஒரு தரிசனத்தின் மூலம் தானியேலுக்கு அந்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டது.+ உடனே அவர் பரலோகத்தின் கடவுளைப் புகழ்ந்து, 20  இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய பெயர் என்றென்றும் புகழப்படட்டும்,ஞானமும் வல்லமையும் உள்ளவர் அவர்தான்.+ 21  காலங்களையும் வேளைகளையும் மாற்றுபவர்+ அவர்தான்.ராஜாக்களை நீக்குபவரும் நியமிப்பவரும் அவர்தான்.+ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு* அறிவையும் தருகிறவர் அவர்தான்.+ 22  ஆழமான விஷயங்களையும் மறைவான விஷயங்களையும் அவர் வெளிப்படுத்துகிறார்.+இருளில் இருப்பவற்றை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.+அவரிடம் ஒளி குடிகொண்டிருக்கிறது.+ 23  என் முன்னோர்களின் கடவுளே, நன்றி சொல்லி உங்களைப் புகழ்கிறேன்.நீங்கள் எனக்கு ஞானத்தையும் பலத்தையும் தந்திருக்கிறீர்கள். நாங்கள் கேட்டுக்கொண்டதை எனக்கு வெளிப்படுத்தினீர்கள்.ராஜாவின் மனதைக் குழப்புகிற விஷயத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினீர்கள்.”+ 24  பின்பு தானியேல், பாபிலோனில் உள்ள ஞானிகளைக் கொல்வதற்கு ராஜா நியமித்திருந்த ஆரியோகுவிடம்+ போய், “பாபிலோனில் உள்ள எந்த ஞானியையும் கொலை செய்யாதீர்கள். என்னை ராஜாவிடம் கூட்டிக்கொண்டு போங்கள், அவருடைய கனவை நான் விளக்குகிறேன்” என்றார். 25  ஆரியோகு உடனடியாக தானியேலை ராஜாவிடம் கூட்டிக்கொண்டு போய், “இவன் யூதாவிலிருந்து பிடித்துவரப்பட்டவர்களில் ஒருவன்.+ இவனால் ராஜாவின் கனவை விளக்க முடியும்” என்றான். 26  அப்போது ராஜா, பெல்தெஷாத்சார்+ என்று அழைக்கப்பட்ட தானியேலிடம், “நான் பார்த்த கனவையும் அதன் அர்த்தத்தையும் உண்மையிலேயே உன்னால் சொல்ல முடியுமா?”+ என்று கேட்டான். 27  அதற்கு தானியேல், “ராஜா கேட்கும் ரகசியத்தை எந்த ஞானியாலும் மாயவித்தைக்காரனாலும் மந்திரவாதியாலும் ஜோதிடராலும் சொல்ல முடியாது.+ 28  ஆனால், ரகசியங்களை வெளிப்படுத்துகிற ஒரு கடவுள் பரலோகத்தில் இருக்கிறார்.+ கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று அவர் நேபுகாத்நேச்சார் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். நீங்கள் படுத்திருந்தபோது பார்த்த கனவும் தரிசனங்களும் இதுதான்: 29  ராஜாவே, நீங்கள் படுத்திருந்தபோது எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றிக் கனவு கண்டீர்கள்.* ரகசியங்களை வெளிப்படுத்துகிற கடவுள், இனி நடக்கப்போகும் சம்பவங்களை உங்களுக்குக் காட்டியிருக்கிறார். 30  மற்ற எல்லாரையும்விட நான் ஏதோ பெரிய ஞானி என்பதால் எனக்கு அவர் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை. உங்கள் உள்ளத்தில் வந்த யோசனைகளின் அர்த்தத்தை உங்களுக்குத் தெரிவிப்பதற்குத்தான் அதை வெளிப்படுத்தினார்.+ 31  ராஜாவே, நீங்கள் ஒரு பிரமாண்டமான சிலையைப் பார்த்தீர்கள். அந்த மாபெரும் சிலை கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தோடு உங்கள் முன்னால் நின்றுகொண்டிருந்தது. அது பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது. 32  அந்தச் சிலையின் தலை சொக்கத்தங்கத்தாலும்,+ மார்பும் கைகளும் வெள்ளியாலும்,+ வயிறும் தொடைகளும் செம்பாலும்,+ 33  கால்கள் இரும்பாலும்,+ பாதங்கள் பாதி இரும்பாலும் பாதி களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது.+ 34  நீங்கள் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, மனிதக் கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து வந்தது. அது அந்தச் சிலையின் இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களில் மோதி, அவற்றைச் சுக்குநூறாக்கியது.+ 35  அப்போது, இரும்பும் களிமண்ணும் செம்பும் வெள்ளியும் தங்கமும் ஒட்டுமொத்தமாக நொறுங்கி, கோடைக் காலத்தில் களத்துமேட்டிலிருந்து பறந்துபோகும் பதரைப் போலப் பறந்துபோயின. இருந்த இடமே தெரியாதபடி அவை காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், சிலையை மோதிய அந்தக் கல் ஒரு பெரிய மலையாகி, முழு பூமியையும் நிரப்பியது. 36  இதுதான் அந்தக் கனவு. அதன் அர்த்தத்தை இப்போது நாங்கள் ராஜாவுக்குச் சொல்கிறோம். 37  ராஜாதி ராஜாவாகிய உங்களுக்குப் பரலோகத்தின் கடவுள் ராஜ்யத்தையும் அதிகாரத்தையும் பலத்தையும் மகிமையையும் கொடுத்திருக்கிறார்.+ 38  எல்லா இடங்களிலும் வாழ்கிற மனிதர்களையும் காட்டில் திரிகிற மிருகங்களையும் வானத்தில் பறக்கிற பறவைகளையும் உங்கள் கையில் ஒப்படைத்து, அவை எல்லாவற்றுக்கும் உங்களை அரசராக்கியிருக்கிறார்.+ அதனால், தங்கத்தாலான அந்தத் தலை நீங்கள்தான்.+ 39  ஆனால், உங்களுக்குப் பின்பு உங்கள் ராஜ்யத்தைவிட பலம் குறைந்த இன்னொரு ராஜ்யம் வரும்.+ அதன்பின், செம்பு போன்ற மூன்றாம் ராஜ்யம் தோன்றும், அது பூமி முழுவதையுமே ஆளும்.+ 40  நான்காம் ராஜ்யம் இரும்புபோல் உறுதியாக இருக்கும்.+ இரும்பு எப்படி எல்லாவற்றையும் நொறுக்கிச் சுக்குநூறாக்குமோ, அப்படியே அது அவற்றையெல்லாம் நொறுக்கிச் சுக்குநூறாக்கிவிடும்.+ 41  சிலையின் பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும் பாதி இரும்புமாக இருந்ததை நீங்கள் பார்த்ததுபோல், அந்த ராஜ்யம் பிரிந்திருக்கும். ஆனால், ஈரமான களிமண்ணோடு இரும்பு கலந்திருந்ததால் இரும்பின் உறுதி ஓரளவு அதற்கு இருக்கும். 42  கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்ததுபோல் அந்த ராஜ்யம் கொஞ்சம் உறுதியானதாகவும் கொஞ்சம் உறுதியற்றதாகவும் இருக்கும். 43  ஈரமான களிமண்ணோடு இரும்பு கலந்திருந்ததை நீங்கள் பார்த்ததுபோல், ஜனங்களோடு அவர்கள்* கலந்திருப்பார்கள். ஆனால், இரும்பு எப்படி களிமண்ணோடு ஒட்டாதோ, அப்படியே அவர்களும் ஒருவரோடு ஒருவர் ஒட்டாமல் இருப்பார்கள். 44  அந்த ராஜாக்களின் காலத்தில், பரலோகத்தின் கடவுள் ஒரு ராஜ்யத்தை* ஏற்படுத்துவார்.+ அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது.+ அது எந்த ஜனத்தின் கையிலும் கொடுக்கப்படாது.+ அது மற்ற எல்லா ராஜ்யங்களையும் நொறுக்கி, அடியோடு அழித்துவிட்டு,+ அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 45  மனிதக் கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் மலையிலிருந்து பெயர்ந்து வந்து இரும்பையும் செம்பையும் களிமண்ணையும் வெள்ளியையும் தங்கத்தையும் நொறுக்கியதைப் பார்த்தீர்களே,+ அந்தக் கல்தான் அந்த ராஜ்யம். எதிர்காலத்தில் நடக்கப்போவதை மகத்தான கடவுள் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.+ அந்தக் கனவு நிச்சயமாக நடக்கும், அதன் அர்த்தத்தை முழுமையாக நம்பலாம்” என்றார். 46  நேபுகாத்நேச்சார் ராஜா உடனே தானியேலின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து மரியாதை செலுத்தினான். அதோடு, அவருக்குப் பரிசு கொடுக்கும்படியும் அவருக்காகத் தூபம் காட்டும்படியும் ஆணையிட்டான். 47  பின்பு தானியேலிடம், “உண்மையில் நீயும் உன் ஆட்களும் வணங்குகிற கடவுள்தான் தேவாதி தேவன், ராஜாக்களுக்கெல்லாம் ராஜா,* ரகசியங்களையெல்லாம் வெளிப்படுத்துகிறவர். அதனால்தான் இந்த ரகசியத்தை உன்னால் வெளிப்படுத்த முடிந்தது” என்றான்.+ 48  பின்பு, ராஜா தானியேலுக்கு விலைமதிப்புள்ள பல அன்பளிப்புகளைக் கொடுத்தான். அதோடு, அவருக்கு உயர்ந்த அந்தஸ்தைத் தந்து, பாபிலோன் மாகாணத்துக்கே அதிபதியாகவும்+ பாபிலோனில் உள்ள ஞானிகளுக்கெல்லாம் தலைமை அதிகாரியாகவும் நியமித்தான். 49  அதுமட்டுமல்ல, தானியேலுடைய வேண்டுகோளின்படி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுக்கு+ பாபிலோன் மாகாணத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தான். தானியேலோ அரசவையில் பணியாற்றினார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “கல்தேயர்களையும்.”
தானி 2:4ஆ முதல் 7:28 வரையான வசனங்கள் முதன்முதலாக அரமேயிக் மொழியில் எழுதப்பட்டன.
அல்லது, “குப்பைமேடாக; சாணம் கொட்டும் இடமாக.”
வே.வா., “பகுத்தறிவு உள்ளவர்களுக்கு.”
நே.மொ., “பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு வந்தன.”
இரும்புக்கு அடையாளமாக இருப்பவர்களைக் குறிப்பதாகத் தெரிகிறது.
அதாவது, “அரசாங்கத்தை.”
நே.மொ., “எஜமான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா