Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 9

குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

1. சட்டப்படி கல்யாணம் செய்வது ஏன் முக்கியம்?

யெகோவா எப்போதுமே சந்தோஷமாக இருக்கிற கடவுள். எல்லா குடும்பங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (1 தீமோத்தேயு 1:11) முதல் திருமணத்தை யெகோவாதான் செய்துவைத்தார். சட்டப்படி கல்யாணம் செய்யும்போது குடும்பத்தில் பிள்ளைகள் பாதுகாப்பான சூழ்நிலையில் வளர முடியும். கடவுள் சொல்கிறபடி நடக்க விரும்புகிறவர்கள் அந்தந்த நாட்டின் சட்டப்படி கல்யாணத்தை பதிவு செய்ய வேண்டும்.​—லூக்கா 2:1, 4, 5-ஐ வாசியுங்கள்.

கணவனும் மனைவியும் கடைசிவரை சேர்ந்து வாழ வேண்டும்; எப்போதும் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். (எபிரெயர் 13:4) விவாகரத்து செய்வதை அவர் வெறுக்கிறார். (மல்கியா 2:16) கணவன் தன்னுடைய மனைவிக்கோ அல்லது மனைவி தன்னுடைய கணவனுக்கோ துரோகம் செய்தால் மட்டும்தான் விவாகரத்து செய்துகொண்டு, வேறு ஒருவரை கல்யாணம் செய்யலாம் என்று பைபிள் சொல்கிறது.​—மத்தேயு 19:3-6, 9-ஐ வாசியுங்கள்.

2. கணவனும் மனைவியும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்கு ஆணையும் பெண்ணையும் கடவுள் படைத்தார். (ஆதியாகமம் 2:18) குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் கணவன்தான் முக்கியமாக கவனித்துக்கொள்ள வேண்டும். அதோடு, குடும்பத்தில் இருக்கிற எல்லாருக்கும் கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். மனைவியை உயிருக்கு உயிராக நேசிக்க வேண்டும். கணவனும் மனைவியும் அன்பாக, மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். நாம் எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். அதனால், கணவனோ மனைவியோ ஏதாவது தவறு செய்யும்போது ஒருவரை ஒருவர் மன்னிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். அப்படி செய்தால் அவர்கள் சந்தோஷமாக இருக்க முடியும்.​—எபேசியர் 4:31, 32; 5:22-25, 33-ஐயும் 1 பேதுரு 3:7-ஐயும் வாசியுங்கள்.

3. குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பிரிந்து போவது சரியா?

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் அன்பாக அதை தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். (1 கொரிந்தியர் 13:4, 5) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். அதற்காக பிரிந்து போக வேண்டும் என்று நினைக்கக்கூடாது. குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது பிரிந்து போகக்கூடாது என்று பைபிள் சொல்கிறது.​—1 கொரிந்தியர் 7:10-13-ஐ வாசியுங்கள்.

4. பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் ஆசைப்படுகிறார்?

அப்பா-அம்மாவுக்கு நிறைய அறிவும் அனுபவமும் இருப்பதால் அவர்கள் பேச்சைக் கேட்டு நீங்கள் நடக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (கொலோசெயர் 3:20) உங்கள் இளமையை சந்தோஷமாக அனுபவிக்க அருமையான ஆலோசனைகளை பைபிளில் அவர் சொல்லியிருக்கிறார். யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் புகழ் சேர்க்கிற விதத்தில் வாழ வேண்டும் என்றும் அவர் ஆசைப்படுகிறார். அப்படி நடந்துகொண்டால் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியும்.​—பிரசங்கி 11:912:1-ஐயும் மத்தேயு 19:13-15; 21:15, 16-ஐயும் வாசியுங்கள்.

5. பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க அப்பா-அம்மா என்ன செய்ய வேண்டும்?

பிள்ளைகளுக்கு சாப்பாடு, துணிமணி, தங்குவதற்கு இடம்... இதையெல்லாம் கொடுக்க அப்பா-அம்மா உழைக்க வேண்டும். (1 தீமோத்தேயு 5:8) முக்கியமாக, கடவுள்மீது அன்பு காட்டவும், அவர் சொல்வதைக் கேட்டு கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்போது பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பார்கள். (எபேசியர் 6:4) நீங்கள் கடவுள்மீது எந்தளவு அன்பு காட்டுகிறீர்கள் என்பதை பிள்ளைகள் பார்க்கும்போது அவர்களும் கடவுள்மீது அன்பு காட்டுவார்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் கடவுளுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்வார்கள்.​—உபாகமம் 6:4-7-ஐயும் நீதிமொழிகள் 22:6-ஐயும் வாசியுங்கள்.

பிள்ளைகளைப் பாராட்டி பேச வேண்டும், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். தேவையான சமயத்தில் கண்டித்து திருத்துவதும் முக்கியம். அப்படி செய்தால்தான் அநாவசியமாக பிரச்சினையில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். (நீதிமொழிகள் 22:15) அதற்காக, அவர்கள் மனதை காயப்படுத்தும் விதத்தில் பேசக் கூடாது, முரட்டுத்தனமாக அடிக்கவும் கூடாது.​—கொலோசெயர் 3:21-ஐ வாசியுங்கள்.

அப்பா-அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் உதவி செய்வதற்காகவே யெகோவாவின் சாட்சிகள் நிறையப் புத்தகங்களை தயாரித்திருக்கிறார்கள். அதிலிருக்கும் விஷயங்கள் எல்லாம் பைபிளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.​—சங்கீதம் 19:7, 11-ஐ வாசியுங்கள்.