Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 5

கடவுள் ஏன் பூமியை படைத்தார்?

கடவுள் ஏன் பூமியை படைத்தார்?

1. பூமியை கடவுள் எதற்காக படைத்தார்?

மனிதர்கள் வாழ்வதற்காக யெகோவா இந்தப் பூமியை படைத்தார். ஆதாமையும் ஏவாளையும் பரலோகத்தில் இருப்பதற்காக கடவுள் படைக்கவில்லை. ஏனென்றால், அங்கு வாழ்வதற்கு ஏற்கெனவே தேவதூதர்களை படைத்திருந்தார். (யோபு 38:4, 7) ஆதாமை படைத்து ஏதேன் தோட்டத்தில் அவர் குடிவைத்தார். (ஆதியாகமம் 2:15-17) அவனும் அவனுடைய பிள்ளைகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வதற்காக இந்தப் பூமியை கொடுத்தார்.​—சங்கீதம் 37:29; 115:16-ஐ வாசியுங்கள்.

ஆரம்பத்தில், ஏதேன் தோட்டம் மட்டும்தான் அழகான இடமாக இருந்தது. ஆதாமும் ஏவாளும் பிள்ளைகளைப் பெற்றெடுத்து பெரிய குடும்பமாக வேண்டும், இந்த முழு பூமியையும் ஏதேன் தோட்டத்தைப் போல் அழகாக மாற்ற வேண்டும் என்று கடவுள் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 1:28) இந்தப் பூமி அழியவே அழியாது. மனிதர்கள் அதில் என்றென்றும் வாழ்வார்கள்.​—சங்கீதம் 104:5-ஐ வாசியுங்கள்.

கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.

2. பூமி ஏன் இன்று ஏதேன் தோட்டம் போல் இல்லை?

ஆதாமும் ஏவாளும் கடவுள் பேச்சைக் கேட்கவில்லை, அதனால் ஏதேன் தோட்டத்தில் இருந்து அவர்களை யெகோவா வெளியே அனுப்பிவிட்டார். அதற்குப் பிறகு, யாராலும் இந்தப் பூமியை ஏதேன் தோட்டத்தைப் போல் மாற்ற முடியவில்லை. ஏனென்றால், இந்த “பூமியைக் கெட்டவர்களின் கையில் அவர் விட்டுவிட்டார்” என்று பைபிள் சொல்கிறது.—யோபு 9:24.​—ஆதியாகமம் 3:23, 24-ஐ வாசியுங்கள்.

அப்படியென்றால், கடவுள் இந்தப் பூமியை திரும்பவும் ஒரு அழகான தோட்டமாக மாற்றவே மாட்டாரா? நிச்சயமாக மாற்றுவார்! ஏனென்றால், யெகோவாவுக்கு எல்லா சக்தியும் இருக்கிறது. அவர் சொன்னது நடக்காமல் போகாது. (ஏசாயா 45:18) அவர் நினைத்ததைப் போலவே எல்லாரையும் இந்தப் பூமியில் சந்தோஷமாக வாழ வைக்கப்போகிறார்.​—சங்கீதம் 37:11, 34-ஐ வாசியுங்கள்.

3. பூமி எப்போது ஏதேன் தோட்டத்தைப் போல் மாறும்?

இயேசு ஆட்சி செய்யும்போது இந்தப் பூமி ஏதேன் தோட்டத்தைப் போல் மாறும். அதற்கு முன்பு, ‘அர்மகெதோன்’ என்ற ஒரு போர் நடக்கும். அப்போது, கடவுள் பேச்சைக் கேட்காத எல்லாரையும் இயேசுவும் தேவதூதர்களும் அழிப்பார்கள். அதற்குப் பிறகு சாத்தானை 1,000 வருடங்களுக்கு இயேசு அடைத்து வைப்பார். கடவுள் பேச்சைக் கேட்கிற ஜனங்களை இயேசு காப்பாற்றுவார். அவர்கள் எல்லாரும் அழகான பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.​—வெளிப்படுத்துதல் 20:1-3; 21:3, 4-ஐ வாசியுங்கள்.

4. நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் எப்போது தீரும்?

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.​—மத்தேயு 24:3, 7-14, 21, 22-ஐ வாசியுங்கள்.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். (ஏசாயா 9:6, 7; 11:9) அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.​—ஏசாயா 25:8; 33:24-ஐ வாசியுங்கள்.

5. இயேசு ஆட்சி செய்யும்போது யாரெல்லாம் இந்தப் பூமியில் இருப்பார்கள்?

கடவுள்மீது அன்பு காட்டுகிறவர்களை... அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்களை... யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் பார்க்கலாம்

கடவுள் பேச்சைக் கேட்பவர்கள் மட்டும்தான் இந்தப் பூமியில் இருப்பார்கள். (1 யோவான் 2:17) அப்படிப்பட்ட நல்ல ஜனங்களை தேடி கண்டுபிடிக்கும்படி இயேசு அவருடைய சீடர்களிடம் சொன்னார். கடவுளுக்கு பிடித்த விதத்தில் எப்படி நடப்பது என்று அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும் சொன்னார். இயேசுவின் ஆட்சியில் வாழ்வதற்காக இன்று லட்சக்கணக்கான ஜனங்களுக்கு யெகோவா உதவி செய்கிறார். (செப்பனியா 2:3) யெகோவாவின் சாட்சிகள் நடத்துகிற கூட்டங்களுக்கு வருகிறவர்கள் நல்ல கணவனாக, மனைவியாக, அப்பாவாக, அம்மாவாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்கிறார்கள். அப்பா-அம்மா, பிள்ளைகள் என எல்லாருமே சேர்ந்து கடவுளை வணங்குகிறார்கள். கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தியிலிருந்து நன்மை அடைகிறார்கள்.​—மீகா 4:1-4-ஐ வாசியுங்கள்.