Skip to content

1914-ஐப் பற்றிய பைபிள் காலக்கணக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது?

1914-ஐப் பற்றிய பைபிள் காலக்கணக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது?

பைபிள் தரும் பதில்

 கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலே 1914-ல் நிறுவப்பட்டது என்பதை பைபிள் காலக்கணக்கு சுட்டிக்காட்டுகிறது. தானியேல் புத்தகத்தின் 4-ஆம் அதிகாரத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனம் அதை உறுதிப்படுத்துகிறது.

 அந்தத் தீர்க்கதரிசனத்தின் சுருக்கம். பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் தீர்க்கதரிசன அர்த்தம்கொண்ட ஒரு கனவைக் காணும்படி கடவுள் செய்கிறார். அந்தக் கனவில், மிகப் பெரிய மரம் ஒன்று வெட்டப்படுகிறது. ‘ஏழு காலங்களுக்கு’ வளராதபடி அதன் அடிமரத்துக்குக் காப்புப் போடப்படுகிறது; அதன்பிறகு, அந்த மரம் மறுபடியும் வளருமென்று சொல்லப்படுகிறது.—தானியேல் 4:1, 10-16.

 அந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம். பிரமாண்டமான அந்த மரம் நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு அடையாளமாக இருந்தது. (தானியேல் 4:20-22) அவர் ஏழு வருஷங்களுக்குப் புத்திசுவாதீனத்தையும் ஆட்சியுரிமையையும் இழந்தபோது, அடையாள அர்த்தத்தில் ‘வெட்டப்பட்டார்.’ கடவுள் அவருடைய புத்தியைத் தெளிய வைத்தபோது, திரும்பவும் ஆட்சி செய்ய ஆரம்பித்தார், அப்போது கடவுளுடைய ஆட்சியைப் போற்றிப் புகழ்ந்தார்.—தானியேல் 4:34-36.

 அந்தத் தீர்க்கதரிசனத்துக்குப் பெரிய நிறைவேற்றம் இருப்பதற்கான அத்தாட்சி. “உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா என்றும்... தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார் என்றும்... மிக அற்பமான மனிதனைக்கூட அரசனாக்குகிறார் என்றும்... உயிரோடுள்ள எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்பதுதான் அந்தத் தீர்க்கதரிசனத்தின் நோக்கம். (தானியேல் 4:17) அப்படியிருக்கும்போது, அந்த ஆட்சியை போயும்போயும் நேபுகாத்நேச்சாரிடம்... பெருமைபிடித்த அவனிடம்... கொடுக்க கடவுள் விரும்புவாரா? இல்லவே இல்லை. ஏனென்றால், அந்த ஆட்சியுரிமைக்குத் தகுதியானவன் அவனும் கிடையாது, வேறெந்த அரசியல் தலைவனும் கிடையாது என்பதை ஏற்கெனவே ஒரு தீர்க்கதரிசனக் கனவில் அவனுக்குக் காட்டியிருந்தார். மனிதர்களுக்குப் பதிலாகக் கடவுளே “ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துவார். அந்த ராஜ்யம் ஒருபோதும் அழியாது.”—தானியேல் 2:31-44.

 பூமியில் தன்னுடைய ஆட்சியைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக முன்பு கடவுள் ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்; அதுதான் பண்டைய இஸ்ரவேல் தேசம். அந்த ராஜ்யத்தை ஆட்சிசெய்த ராஜாக்கள் உண்மையற்றவர்களாக ஆனதால், அது ‘கவிழ்க்கப்படுவதற்கு’ கடவுள் அனுமதித்தார்; ஆனால், அதன் ஆட்சியுரிமையை அதன் ‘உரிமைக்காரரிடம்’ கொடுக்கப்போவதாக அவர் முன்னுரைத்தார். (எசேக்கியேல் 21:25-27) அழியாத ராஜ்யத்தைப் பெறுவதற்கான முழு உரிமையும் உள்ளவர் இயேசு கிறிஸ்துதான் என்பதை பைபிள் அடையாளம் காட்டுகிறது. (லூக்கா 1:30-33) இயேசு நேபுகாத்நேச்சாரைப் போல் இல்லாமல், தீர்க்கதரிசன வார்த்தைகளின்படியே ‘மனத்தாழ்மையுள்ளவராக’ இருக்கிறார்.—மத்தேயு 11:29.

 தானியேல் 4-ஆம் அதிகாரத்திலுள்ள மரம் எதற்கு அடையாளமாக இருக்கிறது? பைபிளில், மரங்கள் சில சமயம் அரசாட்சிக்கு அடையாளமாக இருக்கின்றன. (எசேக்கியேல் 17:22-24; 31:2-5) தானியேல் 4-ஆம் அதிகாரத்தின் பெரிய நிறைவேற்றத்தில், அந்தப் பிரமாண்டமான மரம் கடவுளுடைய அரசாட்சிக்கு அடையாளமாக இருக்கிறது.

 அந்த மரம் வெட்டப்பட்டது எதை அர்த்தப்படுத்துகிறது? அந்த மரம் வெட்டப்பட்டது, நேபுகாத்நேச்சாரின் அரசாட்சி தற்காலிகமாக முடிவுக்கு வந்ததை எப்படி அடையாளப்படுத்தியதோ அப்படியே பூமியில் கடவுளுடைய அரசாட்சி தற்காலிகமாக முடிவுக்கு வந்ததை அடையாளப்படுத்துகிறது. இது எப்போது நடந்தது? எருசலேம் நகரத்தை நேபுகாத்நேச்சார் அழித்தபோது நடந்தது; எருசலேமில்தான் இஸ்ரவேல் ராஜாக்கள் “யெகோவாவின் சிம்மாசனத்தில்” அமர்ந்து அவருடைய பிரதிநிதிகளாக ஆட்சி செய்துவந்தார்கள்.—1 நாளாகமம் 29:23.

 “ஏழு காலங்கள்” எதை அடையாளப்படுத்துகின்றன? கடவுளுடைய ஆட்சியின் எந்தத் தலையீடும் இல்லாமல் இந்தப் பூமியை ஆளுவதற்குக் கடவுள் மற்ற தேசங்களை அனுமதித்த காலப்பகுதியைத்தான் “ஏழு காலங்கள்” அடையாளப்படுத்துகின்றன. அந்த “ஏழு காலங்கள்” கி.மு. 607 அக்டோபர் மாதத்தில் ஆரம்பமானது; பைபிள் காலக்கணக்கின்படி அப்போதுதான் எருசலேம் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. a2 ராஜாக்கள் 25:1, 8-10.

 “ஏழு காலங்கள்” என்பது எவ்வளவு நீண்ட காலப்பகுதி? நேபுகாத்நேச்சாரின் விஷயத்தில் நடந்ததுபோல இது வெறுமனே ஏழு வருஷங்களாக இருக்க முடியாது. இயேசு சொன்ன பின்வரும் விஷயத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்ளலாம்: “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை [கடவுளுடைய அரசாட்சிக்கு அடையாளமாக இருக்கிற] எருசலேம் மற்ற தேசத்தாரால் மிதிக்கப்படும்.” (லூக்கா 21:24) “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள்,” அதாவது தன்னுடைய அரசாட்சி ‘மற்ற தேசத்தாரால் மிதிக்கப்படுவதற்கு’ கடவுள் அனுமதிக்கிற காலப்பகுதியும், தானியேல் 4-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ‘ஏழு காலங்களும்’ ஒன்றுதான். அப்படியானால், இயேசு பூமியில் இருந்த சமயத்திலும் அந்த “ஏழு காலங்கள்” தொடர்ந்தது என்று அர்த்தமாகிறது.

 தீர்க்கதரிசன அர்த்தமுள்ள அந்த “ஏழு காலங்கள்” எவ்வளவு நீண்ட காலப்பகுதி என்பதைக் கணக்கிட பைபிள் உதவுகிறது. மூன்றரை “காலங்கள்” 1,260 நாட்களுக்குச் சமம் என்று அது சொல்கிறது, அப்படியானால் “ஏழு காலங்கள்” 2,520 நாட்களுக்குச் சமமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:6, 14) தீர்க்கதரிசன விதிப்படி, “ஒரு நாளுக்கு ஒரு வருஷம்” என்று கணக்கிட்டால், 2,520 நாட்கள் என்பது 2,520 வருஷங்களைக் குறிக்கிறது. ஆக, “ஏழு காலங்கள்,” அதாவது 2,520 வருஷங்கள், அக்டோபர் 1914-ல் முடிவடையும்.—எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6.

a கி.மு. 607 என்ற வருஷம் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு விலாவாரியான விளக்கம், அக்டோபர் 1, 2011 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 26-31 வரையுள்ள “பூர்வ எருசலேம் எப்போது அழிக்கப்பட்டது?—பகுதி ஒன்று” என்ற கட்டுரையிலும், நவம்பர் 1, 2011 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 22-28 வரையுள்ள “பூர்வ எருசலேம் எப்போது அழிக்கப்பட்டது?—பகுதி இரண்டு” என்ற கட்டுரையிலும் உள்ளது.