யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 4:1-11

4  இதற்குப் பின்பு நான் பார்த்தபோது, இதோ! பரலோகத்தின் கதவு திறந்திருந்தது. முதலில் நான் கேட்ட குரல் எக்காளம்போல் முழங்கியது. அது என்னிடம், “இங்கே ஏறி வா, நடக்கப்போகும் காரியங்களை நான் உனக்குக் காட்டுகிறேன்” என்று சொன்னது.  உடனடியாகக் கடவுளுடைய சக்தி என்மேல் வந்தது. இதோ! பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் இருந்தது; அந்தச் சிம்மாசனத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.+  அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம்* போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+  அந்தச் சிம்மாசனத்தைச் சுற்றி 24 சிம்மாசனங்கள் இருந்தன. அந்தச் சிம்மாசனங்களில் 24 மூப்பர்கள்+ உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு, தலையில் தங்கக் கிரீடங்களைச் சூடியிருந்தார்கள்.  அந்தச் சிம்மாசனத்திலிருந்து மின்னல்களும்+ குரல்களும் இடிமுழக்கங்களும்+ வந்தன. சிம்மாசனத்துக்கு முன்னால் ஏழு பெரிய விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. இவை கடவுளுடைய ஏழு சக்திகளைக் குறிக்கின்றன.+  அதோடு, சிம்மாசனத்துக்கு முன்னால் பளிங்கு போன்ற கண்ணாடிக் கடல்+ இருந்தது. சிம்மாசனத்தின் நடுவிலும்* சிம்மாசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்கள் இருந்தன.+ அந்த ஜீவன்களின் முன்பக்கமும் பின்பக்கமும் கண்களால் நிறைந்திருந்தன.  முதலாவது ஜீவன் சிங்கத்தைப் போலவும்,+ இரண்டாவது ஜீவன் இளம் காளையைப் போலவும்,+ மூன்றாவது ஜீவன்+ மனித முகத்தைப் போன்ற முகமுள்ளதாகவும் நான்காவது ஜீவன்+ பறக்கிற கழுகைப் போலவும்+ இருந்தது.  அந்த நான்கு ஜீவன்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. சிறகுகள் முழுவதிலும் அவற்றின் உள்பக்கத்திலும் கண்கள் இருந்தன.+ அவை, “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான+ சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா* பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்”+ என்று இரவு பகலாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தன.  சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவருக்கு, அதாவது என்றென்றும் வாழ்கிறவருக்கு,+ அந்த ஜீவன்கள் மகிமையும் மாண்பும் நன்றியும் செலுத்தியபோதெல்லாம், 10  இருபத்து நான்கு மூப்பர்களும்+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவருக்கு முன்னால் விழுந்து, என்றென்றும் வாழ்கிற அவரை வணங்கினார்கள். அதோடு, தங்கள் கிரீடங்களைக் கழற்றி சிம்மாசனத்துக்கு முன்னால் வைத்துவிட்டு, 11  “எங்கள் கடவுளாகிய யெகோவாவே,* நீங்கள் மகிமையும்+ மாண்பும்+ வல்லமையும்+ பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்,+ உங்களுடைய விருப்பத்தின்படியே* அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று சொன்னார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “விலைமதிப்புள்ள சிவப்புக் கல்.”
வே.வா., “நடுவில், சிம்மாசனம் இருந்த இடத்திலும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “சித்தத்தின்படியே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா