Skip to content

யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை?

யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை?

 இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் காரணங்களுக்காக, யெகோவாவின் சாட்சிகள் போருக்குப் போவதில்லை:

  1.   கடவுளுக்குக் கீழ்ப்படிகிறோம். கடவுளுடைய ஊழியர்கள், “தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்” என்றும், ‘போர் செய்ய கற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்றும் பைபிள் சொல்கிறது.—ஏசாயா 2:4.

  2.   இயேசுவுக்குக் கீழ்ப்படிகிறோம். “உன் வாளை உறையில் போடு; வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்று அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 26:52) இதன் மூலம், தன்னைப் பின்பற்றுகிறவர்கள், போர் செய்வதற்காக போர்க் கருவிகளைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதை அவர் காட்டினார்.

     ‘இந்த உலகத்தின் பாகமாக இருக்க கூடாது’ என்று இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார். அரசியல் விவகாரங்களில் நடுநிலையோடு இருப்பதன் மூலம் நாங்கள் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம். (யோவான் 17:16) ராணுவத்தின் செயல்களுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல், ராணுவத்தில் சேர வேண்டும் என்று முடிவு செய்கிறவர்களை நாங்கள் தடுப்பதும் இல்லை.

  3.   மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறோம். “ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள்” என்று இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். (யோவான் 13:34, 35) இதன் மூலம், நாங்கள் எல்லாரும் உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக ஆகிறோம். எங்களில் யாரும் எங்கள் சகோதரருக்கோ சகோதரிக்கோ எதிராகப் போர் செய்வதில்லை.

  4.   ஆரம்பக் கால கிறிஸ்தவர்களின் உதாரணம். என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலீஜியன் அண்ட் வார் இப்படிச் சொல்கிறது: “இயேசுவைப் பின்பற்றிய ஆரம்பகால சீஷர்கள் போரிலும் ராணுவ சேவையிலும் ஈடுபட மறுத்தார்கள்.” இவற்றில் ஈடுபடுவது, “அன்பு காட்டும்படி இயேசு கற்றுக்கொடுத்த நெறிமுறைக்கும், எதிரிகளை நேசிக்கும்படி அவர் கொடுத்த கட்டளைக்கும் எதிரானது” என்பதை அறிந்து அப்படிச் செய்தார்கள். அதே போல, இயேசுவின் ஆரம்பக் கால சீஷர்களைப் பற்றி ஜெர்மானிய இறையியலாளரான பீட்டர் மீன்ஹோல்ட் இப்படிச் சொன்னார்: “ஒருவர் கிறிஸ்தவராகவும் அதேசமயம் படைவீரராகவும் இருக்க முடியாது.”

சமுதாயத்துக்கு எப்படி உதவி செய்கிறோம்

 யெகோவாவின் சாட்சிகள் சமுதாயத்துக்குப் பிரயோஜனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். எங்களுடைய நாட்டின் பாதுகாப்புக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இருப்பதில்லை. பைபிளில் இருக்கும் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால், நாங்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு மரியாதை காட்டுகிறோம்:

  •   “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு . . . கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”—ரோமர் 13:1.

  •   “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்.”—மத்தேயு 22:21.

 இப்படி, நாங்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறோம், வரி கட்டுகிறோம், பொது நலனுக்காக அரசாங்கம் எடுக்கிற முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கிறோம்.