Skip to content

இயேசுவின் பலி எப்படி ‘பலருக்கு மீட்புவிலையாக’ இருக்கிறது?

இயேசுவின் பலி எப்படி ‘பலருக்கு மீட்புவிலையாக’ இருக்கிறது?

பைபிள் தரும் பதில்

 இயேசுவின் பலி மூலமாகத்தான் மனிதகுலத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்து கடவுள் மீட்கிறார், அதாவது காப்பாற்றுகிறார். இயேசு சிந்திய இரத்தத்தை “மீட்புவிலை” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (எபேசியர் 1:7; 1 பேதுரு 1:18, 19) அதனால்தான் இயேசு, ‘பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுக்க’ வந்ததாகச் சொன்னார்.—மத்தேயு 20:28.

‘பலருக்கு மீட்புவிலை’ ஏன் தேவைப்பட்டது?

 முதல் மனிதனாகிய ஆதாம் பரிபூரணமாக, அதாவது பாவமே இல்லாதவனாக, படைக்கப்பட்டான். என்றென்றும் வாழ்வதற்கான வாய்ப்பு அவனுக்கு இருந்தது; ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனபோது அவன் அந்த வாய்ப்பை இழந்தான். (ஆதியாகமம் 3:17-19) அதனால், பாவம் என்ற குறைபாடு அவனுக்கு வந்தது. அந்தப் பாவத்தையும் அதன் விளைவுகளையும் அவன் தன் பிள்ளைகளுக்குக் கடத்தினான். (ரோமர் 5:12) அதனால்தான், ஆதாம் தன்னையும் தன் பிள்ளைகளையும் பாவம் மற்றும் மரணத்திடம் அடிமையாக ‘விற்றான்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (ரோமர் 7:14) இப்படி எல்லாருமே அபூரணர்களாக ஆனதால், ஆதாம் இழந்த பரிபூரணத்தைத் திரும்ப விலைக்கு வாங்க அவர்கள் யாராலுமே முடியவில்லை.—சங்கீதம் 49:7, 8.

 ஆதாமின் சந்ததியாருக்கு ஏற்பட்ட இந்த அவல நிலையைப் பார்த்தபோது கடவுள் மனதுருகினார். (யோவான் 3:16) ஆனாலும், தகுந்த காரணம் எதுவுமில்லாமல் அவர்களுடைய பாவங்களைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவதற்கோ அவற்றை மன்னிப்பதற்கோ அவருடைய நியாய தராதரம் அனுமதிக்கவில்லை. (சங்கீதம் 89:14; ரோமர் 3:23-26) கடவுள் மனிதகுலத்தை நேசிக்கிறார்; அதனால், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கு மட்டுமல்ல, அவற்றை முற்றிலுமாகத் துடைத்தழிப்பதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஏற்பாட்டைச் செய்தார். (ரோமர் 5:6-8) அந்தச் சட்டப்பூர்வ ஏற்பாடுதான் மீட்புவிலை.

மீட்புவிலை எப்படிச் செயல்படுகிறது?

 பைபிளிலுள்ள “மீட்புவிலை” என்ற வார்த்தையில் பின்வரும் மூன்று விஷயங்கள் உட்படுகின்றன:

  1.   இது கொடுக்கப்படுகிற ஒரு விலையாக இருக்கிறது.—எண்ணாகமம் 3:46, 47.

  2.   விடுதலையை, அதாவது மீட்பை, அளிக்கிறது.—யாத்திராகமம் 21:30.

  3.   இழந்த ஒன்றை மீட்பதற்குச் செலுத்தப்படுகிற சரிசமமான மதிப்பாக இருக்கிறது. a

 இயேசு கிறிஸ்துவின் மீட்புபலியில் இந்த மூன்று விஷயங்களும் எப்படிப் பொருந்துகின்றன என்று கவனியுங்கள்.

  1.   கொடுக்கப்படுகிற விலை. கிறிஸ்தவர்கள் ‘விலைக்கு வாங்கப்பட்டார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:20; 7:23) இயேசுவின் இரத்தம்தான் அந்த விலை; அந்த ‘இரத்தத்தால்தான் எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்களிலிருந்து ஆட்களைக் கடவுளுக்காக [அவர்] விலைகொடுத்து வாங்கினார்.’—வெளிப்படுத்துதல் 5:8, 9.

  2.   விடுதலை. இயேசு கொடுத்த ‘மீட்புவிலை நமக்கு விடுதலையை,’ ஆம் பாவத்திலிருந்து விடுதலையை, அளித்திருக்கிறது.—1 கொரிந்தியர் 1:30; கொலோசெயர் 1:14; எபிரெயர் 9:15.

  3.   சரிசமமானது. இயேசுவின் பலி, ஆதாம் இழந்த பரிபூரண உயிருக்குச் சரிசமமான மதிப்புடையதாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:21, 22, 45, 46) “ஒரே மனிதன் [ஆதாம்] கீழ்ப்படியாமல் போனதால் நிறைய பேர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒரே மனிதன் [இயேசு கிறிஸ்து] கீழ்ப்படிந்ததால் நிறைய பேர் நீதிமான்களாக்கப்படுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:19) ஒரேவொரு மனிதனுடைய மரணம் ஏராளமான பாவிகளுக்கு எப்படி மீட்புவிலையாய் ஆக முடியும் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது. சொல்லப்போனால், இயேசுவின் பலி ‘எல்லாருக்குமே,’ ஆம், அதிலிருந்து நன்மையடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கிற எல்லாருக்குமே, “சரிசமமான மீட்புவிலையாக” இருக்கிறது.—1 தீமோத்தேயு 2:5, 6.

a பைபிளில் உள்ள “மீட்புவிலை” என்பதற்கான எபிரெய வார்த்தைகள், கொடுக்கப்படுகிற ஒரு விலையை, அதாவது கொடுக்கப்படுகிற மதிப்புமிக்க ஏதோவொன்றை, குறிக்கிறது. உதாரணத்திற்கு, காஃபார் என்ற எபிரெய வினைச்சொல், “மூடுவது” என்ற அடிப்படை அர்த்தத்தைத் தருகிறது. (ஆதியாகமம் 6:14, புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கிலம்) பொதுவாக, இது பாவத்தை மூடிவிடுவதைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. (சங்கீதம் 85:2, தமிழ் O.V.) இந்த வார்த்தையோடு சம்பந்தப்பட்ட கோஃபர் என்ற பெயர்ச்சொல், அப்படி மூடுவதற்கு, அதாவது மீட்பதற்கு, கொடுக்கப்படுகிற விலையைக் குறிக்கிறது. (யாத்திராகமம் 21:30) இதுபோலவே, “மீட்புவிலை” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிற லீட்ரன் என்ற கிரேக்க வார்த்தை, “மீட்டுக்கொள்வதற்கான விலை” என்றுகூட மொழிபெயர்க்கப்படலாம். (மத்தேயு 20:28 த நியு டெஸ்டமென்ட் இன் மாடர்ன் ஸ்பீச், ஆர். எஃப். வேமௌத் எழுதியது) போர்க் கைதியை அல்லது ஒரு அடிமையை விடுவிப்பதற்குக் கொடுக்கிற பணயத் தொகையைக் குறிப்பிடுவதற்கு கிரேக்க எழுத்தாளர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.