Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பன்னிரெண்டாம் அதிகாரம்

கடவுளிடம் ஆறுதல் பெற்றார்

கடவுளிடம் ஆறுதல் பெற்றார்

1, 2. எலியாவின் வாழ்வில் மறக்க முடியாத அந்த நாளில் என்ன நடந்தது?

இருள் படையெடுத்து வரும் வேளை. மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி எலியா ஓடிக்கொண்டிருக்கிறார். பல மைல் தூரத்தில் நிற்கும் யெஸ்ரயேல் ஊரில்தான் அவருடைய ஓட்டம் நிற்கும், இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் துடிப்புமிக்க வாலிபர் அல்ல. இருந்தாலும், காலில் சக்கரம் கட்டிக்கொண்டதைப் போல் வேகமாய் ஓடுகிறார். ஏன், ஆகாப் ராஜாவின் ரதத்தில் பூட்டப்பட்ட குதிரைகள்கூட அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடிவதில்லையே! இதுவரை இல்லாத புதுவித சக்தி தனக்குள் பாய்வதை எலியா உணர்கிறார். காரணம்? “யெகோவாவின் கரம்” அவர்மீது இருக்கிறது.​—1 இராஜாக்கள் 18:​46-ஐ வாசியுங்கள். *

2 வெறிச்சோடிய சாலை அவருக்கு முன்னால் நீண்டிருக்கிறது. கண்களில் அடிக்கிற மழைத் துளிகளை அவரது இமைகள் தள்ளிவிடுவதை உங்கள் கற்பனையில் காண முடிகிறதா? அவரது கால்கள் முன்னோக்கி ஓட அவரது மனமோ பின்னோக்கி ஓடுகிறது. இது அவருடைய வாழ்வில் மறக்க முடியாத நாள். எலியாவின் கடவுள் யெகோவாவுக்கும் உண்மை வழிபாட்டுக்கும் வெற்றி கிடைத்த பொன்னாள்! புயல் வீச வீச... இருள் சூழ சூழ... எலியாவின் ஓட்டம் நீள நீள... கர்மேல் மலைச்சிகரம் அவருக்குப் பின்னால் வெகுதூரம் சென்றுவிடுகிறது. இங்குதான் எலியாவைப் பயன்படுத்தி பாகால் வழிபாட்டுக்கு யெகோவா அற்புதமாய்ப் பேரடி கொடுத்திருந்தார். நூற்றுக்கணக்கான பாகால் தீர்க்கதரிசிகளின் பொய்ப் பித்தலாட்டம் அம்பலமாக்கப்பட்டது; அவர்களுக்குத் தக்க தண்டனை​—ஆம், மரண தண்டனை​—வழங்கப்பட்டது. மூன்றரை வருடங்களாகத் தேசத்தை வாட்டிவந்த வறட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க யெகோவாவிடம் எலியா மன்றாடியிருந்தார். மழைத் துளி விழுந்தது!​—1 இரா. 18:​18-45.

3, 4. (அ) யெஸ்ரயேலுக்கு வரும் வழியில் எலியாவின் மனதில் ஏன் நம்பிக்கை பிரகாசமாய் ஒளிவீசியது? (ஆ) என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

3 முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள யெஸ்ரயேலை நோக்கி மழையில் ஓடுகையில் அவரது மனதில் நம்பிக்கை பிரகாசமாய் ஒளிவீசுகிறது. ‘இனி எந்தப் பிரச்சினையும் இல்லை... ஆகாப் எப்படியும் மாறித்தான் ஆகவேண்டும்... இன்றைக்கு நடந்த எல்லாவற்றையும் அவன் பார்த்திருக்கிறான்... அவனுக்கு வேறு வழியில்லை, பாகால் வழிபாட்டுக்குச் சமாதிகட்டிவிடுவான்... யேசபேல் ராணியை அடக்கிவிடுவான்... யெகோவாவின் ஊழியர்களைத் துன்புறுத்துவதையும் நிறுத்திவிடுவான்...’ என்றெல்லாம் அவர் நினைத்திருக்கலாம்.

‘எலியா ஓடி ஆகாபுக்கு முன்னால் யெஸ்ரயேலை அடைந்தார்’

4 நினைத்தபடி எல்லாம் நடப்பதுபோல் தோன்றும்போது மனதில் நம்பிக்கைச் சுடர் வீசுவது இயல்புதான். ஒருவழியாகப் பெரிய பிரச்சினைகள்கூட தீர்ந்துவிட்டது... இனி வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்... என்றெல்லாம் நாம் நினைக்கலாம். ஒருவேளை எலியாவும் இப்படி யோசித்திருந்தார் என்றால், அதில் ஆச்சரியமே இல்லை; ஏனென்றால், எலியாவும் ‘நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கிருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருக்கின்றன.’ (யாக். 5:17) ஆனால், எலியாவின் பிரச்சினைகள் ஓய்வதுபோல் தெரியவில்லை. சில மணிநேரத்திலேயே அவர் பயத்தில் உறைந்துபோகிறார், மனச்சோர்வில் மூழ்கிவிடுகிறார், ‘செத்துப்போனால் நன்றாயிருக்கும்’ என்று நினைக்கிறார். அவருக்கு என்ன ஆனது? விசுவாசத்தையும் தைரியத்தையும் புதுப்பிக்க எலியாவுக்கு யெகோவா எப்படி உதவுகிறார்? பார்ப்போம்.

எதிர்பாரா திருப்பம்

5. கர்மேல் மலையில் நடந்ததையெல்லாம் பார்த்த பின்பாவது யெகோவாமீது ஆகாப் மதிப்புக் காட்ட ஆரம்பித்தானா, நமக்கு எப்படித் தெரியும்?

5 யெஸ்ரயேலில் இருக்கிற தன் அரண்மனைக்கு ஆகாப் திரும்பும்போது புது மனிதனாய் மாறியிருக்கிறானா? பதிவு என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்: “எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.” (1 இரா. 19:1) அந்த நாளில் நடந்த எல்லாச் சம்பவங்களைப் பற்றியும் ஆகாப் அவளுக்கு சொல்கிறபோது யெகோவாவைப் பற்றி வாயே திறப்பதில்லை. எல்லாவற்றையும் மனித கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறான். ஆம், அந்த அற்புதங்களை ‘எலியா செய்ததாக’ சொல்கிறானே தவிர யெகோவா செய்ததாகச் சொல்வதில்லை. அவற்றையெல்லாம் பார்த்த பின்பும்கூட அவன் யெகோவாமீது மதிப்புக் காட்டுவதில்லை. பழிவாங்கும் வெறிகொண்ட அவனுடைய மனைவி இதைக் கேட்டு என்ன செய்கிறாள்?

6. எலியாவுக்கு யேசபேல் சொல்லியனுப்பிய செய்தி என்ன, அதன் அர்த்தமென்ன?

6 யேசபேல் கோபத்தில் கொந்தளிக்கிறாள்! கொதித்தெழுகிறாள்!! எலியாவிடம் ஆள் அனுப்பி: ‘ “நீ அவர்களது உயிரைப் பறித்தது போல், நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரைப் பறிக்காவிடில், தெய்வங்கள் எனக்குத் தண்டனை கொடுக்கட்டும்” என்று சொல்லச் சொல்கிறாள்.’ (1 இரா. 19:​2, பொ.மொ.) இது பயங்கரமான கொலை மிரட்டல். வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘பாகால் தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்கு நான் உன்னைப் பழிவாங்காமல் விடமாட்டேன். நாளைக்குள் ஒன்று நீ சாக வேண்டும், இல்லை நான் சாக வேண்டும்’ என்று சபதம் செய்கிறாள். காற்றும் மழையும் அடிக்கும் அந்த இரவில் ஒரு சாதாரண வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் எலியாவிடம் யேசபேலின் ஆள் வந்து இந்தக் கெட்ட செய்தியைச் சொல்கிறான். அப்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

சோர்வும் பயமும் கவ்வுகிறது

7. யேசபேலின் அச்சுறுத்தல் எலியாமீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது, அவர் என்ன செய்தார்?

7 பாகால் வழிபாடு ஒருவழியாக ஒழிந்துவிட்டது என்று எலியா தன் மனதில் கோட்டை கட்டியிருந்தால் அதெல்லாம் அந்த நொடியே தகர்ந்துபோயிருக்கும். யேசபேலிடம் எந்த மாற்றமும் இல்லை. உண்மை வழிபாட்டுக்குத் தோள் கொடுத்த எலியாவின் தோழர்கள் அநேகரை அவள் ஏற்கெனவே கொன்றுபோட்டிருந்தாள். அடுத்து தன்மீது கண் வைத்திருப்பதாக எலியாவுக்குத் தோன்றுகிறது. அவளுடைய மிரட்டலைக் கேட்கும்போது அவருக்கு எப்படி இருக்கிறது? ‘அவர் அச்சமடைந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. யேசபேல் கையால் தனக்கு வரப்போகும் கோர முடிவை எண்ணிப் பார்க்கிறாரா? அப்படிப்பட்ட யோசனையிலேயே மூழ்கியிருந்தால் அவருடைய தைரியமெல்லாம் கரைந்துதான் போயிருக்கும். அவர் எதைப் பற்றி யோசித்திருந்தாலும் சரி, ‘தன் உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடுகிறார்.’​—1 இரா. 18:4; 19:​3, பொ.மொ.

நாம் தைரியத்தை இழந்துவிடாதிருக்க வேண்டுமென்றால், நம்மைப் பயமுறுத்துகிற விஷயங்களையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது

8. (அ) எலியாவும் பேதுருவும் எப்படி ஒரேவிதமான பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) எலியாவிடமிருந்தும் பேதுருவிடமிருந்தும் நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

8 விசுவாசத்தின் முன்னோடிகளில் இப்படிப் பயந்து நடுங்கியது எலியா மட்டுமல்ல. பல்லாண்டுகளுக்குப் பின்பு வாழ்ந்த அப்போஸ்தலன் பேதுருவும் இப்படித்தான் பயந்தார். ஒருமுறை இயேசுவின் அழைப்பைக் கேட்டு கடலில் நடந்துவந்தபோது, ‘புயல்காற்றைக் கண்டு’ அவர் பயந்துபோனார்; தைரியத்தை இழந்து கடலில் மூழ்க ஆரம்பித்தார். (மத்தேயு 14:​30-ஐ வாசியுங்கள்.) எலியாவிடமிருந்தும் பேதுருவிடமிருந்தும் நாம் அருமையான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். தைரியத்தை இழந்துவிடாதிருக்க வேண்டுமென்றால், நம்மைப் பயமுறுத்துகிற விஷயங்களையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. நமக்கு நம்பிக்கையையும் பலத்தையும் தருகிறவர் மீதே நம் கவனத்தை ஊன்ற வைக்க வேண்டும்.

“நான் வாழ்ந்தது போதும்”

9. தப்பியோடிய எலியாவின் பயணத்தையும் மனநிலையையும் விவரியுங்கள்.

9 பயந்துபோன எலியா, தென்மேற்கு திசையில் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பெயெர்செபாவுக்குத் தப்பியோடுகிறார். இது யூதாவின் தெற்கு எல்லையில் இருக்கிற ஓர் ஊர். அங்கே தனது வேலைக்காரனை விட்டுவிட்டு அவர் மட்டும் தன்னந்தனியாக வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போகிறார். பதிவு சொல்கிறபடி, ‘ஒருநாள் முழுவதும் பயணம் செய்கிறார்.’ இப்போது அதை உங்களுடைய மனத்திரையில் பாருங்கள்: சூரியன் எழுந்திருக்கும்போதே எலியா புறப்பட்டுச் செல்கிறார். உணவுகூட எடுத்துக்கொள்ளாமல் வெறுங்கையுடன் நடக்கிறார். மனச்சோர்வுடனும் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் நடக்கிறார். கரடுமுரடான காட்டுப்பாதையில்... கொளுத்தும் வெயிலில்... சிரமப்பட்டு செல்கிறார். கனல்கக்கும் கதிரவன் மெதுமெதுவாக சிவந்து கீழ்வானில் இறங்க... எலியாவால் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடிவதில்லை. தளர்ந்துபோய், ஒரு சூரைச்செடியின் கீழே உட்காருகிறார். அந்தப் பொட்டல் காட்டில் இந்தச் சூரைச்செடி மட்டும்தான் எலியாவை இருகரம் நீட்டி வரவேற்கிறது.​—1 இரா. 19:​4, NW.

10, 11. (அ) யெகோவாவிடம் எலியா செய்த ஜெபத்தின் அர்த்தமென்ன? (ஆ) கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைப் பயன்படுத்தி, நொந்துபோன ஊழியர்கள் சிலருடைய உணர்ச்சிகளை விவரியுங்கள்.

10 விரக்தியின் உச்சத்தில் எலியா ஜெபம் செய்கிறார். தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சுகிறார். “என்னுடைய முன்னோர் என்ன நிலைமையில் இருக்கிறார்களோ அந்த நிலைமையில்தான் நானும் இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். தன்னுடைய முன்னோர் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்... அவர்களால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது... என்பது எலியாவுக்கு நன்றாகத் தெரியும். (பிர. 9:10) எனவே, அவர்களைப் போலவே தானும் லாயக்கற்றவன் என்று நினைக்கிறார். அதனால்தான், “நான் வாழ்ந்தது போதும்” என்று கதறி அழுகிறார்.

11 ஆனால், கடவுளுடைய தீர்க்கதரிசி இந்தளவு நொந்துபோயிருப்பதைப் பார்த்து நாம் அதிர்ச்சியடைய வேண்டுமா? வேண்டியதில்லை. கடவுளுக்கு உண்மையாய் இருந்த அநேக ஆண்களும் பெண்களும், அதாவது ரெபெக்காள், யாக்கோபு, மோசே, யோபு போன்றவர்களும், விரக்தியடைந்து செத்துப்போக விரும்பியிருக்கிறார்கள்.​—ஆதி. 27:46; 37:35; எண். 11:​13-15; யோபு 14:13.

12. நீங்கள் எப்போதாவது மனச்சோர்வினால் அவதிப்பட்டால் எப்படி எலியாவின் உதாரணத்தைப் பின்பற்றலாம்?

12 இன்று நாம் ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்கிறோம்; அதனால், விசுவாசமுள்ள ஊழியர்கள் உட்பட, அநேகர் மனச்சோர்வில் வாடுவதில் ஆச்சரியமே இல்லை. (2 தீ. 3:1) நீங்களும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாடினால், எலியாவைப் போல் உங்கள் உள்ளக் குமுறல்களை யெகோவா தேவனிடம் ஊற்றிவிடுங்கள். அவர்தான் “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” ஆயிற்றே! (2 கொரிந்தியர் 1:​3, 4-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், அவர் எலியாவுக்கு ஆறுதல் தந்தாரா?

யெகோவா சக்தி அளிக்கிறார்

13, 14. (அ) கவலையால் தவித்த தமது தீர்க்கதரிசிக்குத் தேவதூதன் மூலம் யெகோவா எப்படிக் கரிசனை காட்டினார்? (ஆ) நம் வரம்புகள் உட்பட, நம் ஒவ்வொருவரையும் பற்றி யெகோவா அறிந்திருக்கிறார் என்பது ஏன் ஆறுதல் தருகிறது?

13 தன் உயிரை எடுத்துக்கொள்ளச் சொல்லி, சூரைச்செடியின் கீழ் படுத்துக்கொண்டு தனது அன்பு தீர்க்கதரிசி புலம்புவதை மேலிருந்து யெகோவா பார்க்கிறார். அப்போது அவருக்கு எப்படியிருந்திருக்கும்? சொல்லவே வேண்டியதில்லை. எலியா கண்ணயர்ந்ததும் யெகோவா ஒரு தேவதூதனை அவரிடம் அனுப்புகிறார். அந்தத் தேவதூதன் எலியாவை மெதுவாகத் தட்டியெழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்று சொல்கிறார். தேவதூதன் கொண்டுவந்த சூடான ரொட்டியை எலியா சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்கிறார். தேவதூதனுக்கு நன்றி சொல்கிறாரா? சாப்பிட்டார், குடித்தார், மீண்டும் தூங்கிவிட்டார் என்றுதான் பதிவு சொல்கிறது. பேசக்கூட முடியாத அளவுக்கு எலியா கவலையில் துவண்டுபோயிருக்கிறாரா? அது நமக்குத் தெரியாது, ஆனால் அந்தத் தேவதூதன் திரும்பவும் எலியாவை எழுப்புகிறார், ஒருவேளை விடியற்காலையில். “எழுந்து சாப்பிடு” என்று மறுபடியும் சொல்கிறார்; அதோடு, “இது உன் சக்திக்கு மிஞ்சிய பயணம்” என்று சொல்கிறார்; இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.​—1 இரா. 19:​5-7, NW.

14 எலியா போய்க்கொண்டிருந்த இடத்தைக் கடவுள் கொடுத்த ஞானத்தினால் தேவதூதன் அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல, எலியா பல மைல்தூரம் நடக்க வேண்டியிருக்கும், அதை அவர் தன் சொந்த பலத்தால் செய்ய முடியாது என்பதையும் அறிந்திருந்தார். நம்முடைய லட்சியங்களையும் வரம்புகளையும் நம்மைவிட மிக நன்றாக அறிந்திருக்கிற அருமையான கடவுளை வணங்குவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! (சங்கீதம் 103:​13, 14-ஐ வாசியுங்கள்.) சரி, எலியாவுக்கு அந்த உணவு எப்படிப் பயனளிக்கிறது?

15, 16. (அ) யெகோவா தந்த உணவு எதைச் செய்ய எலியாவுக்கு உதவியது? (ஆ) இன்று யெகோவா தமது ஊழியர்களுக்குத் தரும் ஆன்மீக உணவுக்கு ஏன் மதிப்புக் காட்ட வேண்டும்?

15 ‘அவர் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனார்’ என்று பைபிள் சொல்கிறது. (1 இரா. 19:8) சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மோசேயையும், கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்ந்த இயேசுவையும் போல எலியாவும் 40 நாட்கள் இரவும் பகலும் விரதம் இருக்கிறார். (யாத். 34:28; லூக். 4:​1, 2) தேவதூதன் தந்த அந்த ஒரு வேளை உணவு அவருடைய எல்லாப் பிரச்சினையையும் தீர்க்கவில்லை, ஆனால் அவருக்கு அற்புதமான விதத்தில் சக்தி அளிக்கிறது. பாதை இல்லாத அந்தக் கரடுமுரடான வனாந்தரத்தில் நாள்கணக்காக... வாரக்கணக்காக... கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக... வயதான எலியா கஷ்டப்பட்டு நடந்துபோவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

16 இன்றுகூட யெகோவா தமது ஊழியர்களுக்குப் பலம் அளிக்கிறார்; நம் உடலுக்கு ஊட்டமளிக்கும் உணவை அற்புதமாய்த் தருவதன் மூலம் அல்ல, அவரோடு உள்ள உறவுக்கு ஊட்டமளிக்கும் ஆன்மீக உணவைத் தருவதன் மூலம் பலப்படுத்துகிறார். (மத். 4:4) கடவுளுடைய வார்த்தையான பைபிளையும் அதன் அடிப்படையில் கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ள பிரசுரங்களையும் வாசித்து கடவுளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும்போது நமக்கு ஆன்மீகப் பலம் கிடைக்கிறது. இப்படிப்பட்ட ஆன்மீக ஊட்டச்சத்து நம்முடைய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதில்லை, ஆனால் நம்முடைய சக்திக்கு மீறிய பிரச்சினைகளைச் சகிக்க பலத்தைத் தருகிறது. அதோடு, எதிர்காலத்தில் ‘முடிவில்லா வாழ்வை’ பெறவும் வழிவகுக்கிறது.​—யோவா. 17:3.

17. எலியா எங்கே போனார், அந்த இடம் ஏன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது?

17 எலியா கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்; ஒருவழியாக ஓரேப் மலையை அடைகிறார். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம்; பல வருடங்களுக்கு முன்னால், எரியும் முட்செடியிலிருந்து ஒரு தேவதூதன் மூலம் மோசேயிடம் யெகோவா பேசியது இங்கேதான். அதன்பின், இஸ்ரவேல் மக்களோடு அவர் திருச்சட்ட ஒப்பந்தத்தைச் செய்ததும் இங்கேதான். இப்போது, இந்த மலையிலுள்ள ஒரு குகையில் எலியா தஞ்சமடைகிறார்.

யெகோவா ஆறுதலும் பலமும் தருகிறார்

18, 19. (அ) எலியாவிடம் கடவுளுடைய தூதன் என்ன கேள்வி கேட்டார், அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்? (ஆ) மனச்சோர்வடைந்ததற்கு என்ன மூன்று காரணங்களை எலியா சொன்னார்?

18 ஓரேப் மலையில் கடவுளுடைய “வார்த்தை” எலியாவுக்குக் கேட்கிறது; “எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?” என்று யெகோவா கேட்கிறார்; இந்தக் கேள்வியை ஒருவேளை ஒரு தேவதூதன் மூலம் அவர் கேட்டிருக்கலாம். இதை அவர் கனிவோடுதான் கேட்டிருக்க வேண்டும்; ஏனென்றால், தன் மனக்குமுறல்களைக் கொட்டச் சொல்லி யெகோவா தன்னிடம் கேட்பதுபோல் எலியா நினைக்கிறார். உடனே தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டுகிறார். “சேனைகளின் கடவுளான யெகோவாவுக்கு மிகுந்த பக்திவைராக்கியமாய் இருந்து வருகிறேன்; இஸ்ரவேலர் உங்களுடைய ஒப்பந்தத்தைத் தள்ளிவிட்டார்கள்; உங்களுடைய பலிபீடங்களை இடித்துவிட்டார்கள், உங்களுடைய தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றுவிட்டார்கள்; இப்போது, நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்; என்னையும் கொல்லப் பார்க்கிறார்கள்” என்று சொல்கிறார். (1 இரா. 19:​9, 10, NW) எலியா தான் மனச்சோர்வடைந்ததற்குக் குறைந்தது மூன்று காரணங்களைச் சொல்கிறார்.

19 முதலாவதாக, இத்தனை காலம் தான் செய்துவந்த சேவையெல்லாம் வீணாகிவிட்டதாக எலியா நினைக்கிறார். கடவுளின் பரிசுத்தமான பெயருக்கும் அவருடைய வழிபாட்டுக்கும் முதலிடம் கொடுத்து ‘மிகுந்த பக்திவைராக்கியத்தோடு’ பல வருடங்களாகச் சேவை செய்திருந்தபோதிலும், நிலைமை இன்னும் மோசமாகிவருவதையே எலியா கவனிக்கிறார். மக்கள் இன்னும் விசுவாசமில்லாமல் நடக்கிறார்கள், கடவுளை எதிர்த்து கலகம் செய்கிறார்கள், அதேசமயத்தில் பொய் வணக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இரண்டாவதாக, எலியா தனிமையில் இருப்பதாக உணர்கிறார். அதனால்தான், “நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்” என்று சொல்கிறார்... யெகோவாவை வழிபடுகிறவர்களில் தான் ஒருவன் மட்டுமே இந்தத் தேசத்தில் மீந்திருப்பதாக நினைக்கிறார். மூன்றாவதாக, பயத்தில் வாடுகிறார். ஏனென்றால், அவருடன் இருந்த தீர்க்கதரிசிகள் பலர் ஏற்கெனவே கொல்லப்பட்டிருந்தார்கள், அடுத்தது தான்தான் என்று நினைக்கிறார். இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்வது எலியாவுக்குச் சுலபமாக இல்லைதான்; இருந்தாலும், பெருமையோ தர்மசங்கடமோ அடையாமல் எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்கிறார். ஆம், கடவுளிடம் மனம்விட்டு ஜெபம் செய்கிறார்; இவ்விஷயத்தில், விசுவாசமுள்ள ஊழியர்கள் எல்லோருக்கும் அவர் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார்.​—சங். 62:8.

20, 21. (அ) ஓரேப் மலையிலுள்ள குகை வாசலில் எலியாவுடைய கண்முன் நடந்ததை விவரியுங்கள். (ஆ) இயற்கைச் சக்திகளைக் காட்டியதன் மூலம் எலியாவுக்கு யெகோவா என்ன கற்பித்தார்?

20 எலியாவுக்கு ஏற்படும் பயத்தையும் கவலையையும் யெகோவா எப்படிப் போக்குகிறார்? எலியாவைக் குகையின் வாசலில் நிற்கும்படி அந்தத் தேவதூதன் சொல்கிறார். ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாவிட்டாலும் எலியா அவருடைய பேச்சைக் கேட்கிறார். திடீரெனக் காற்று பயங்கரமாய் அடிக்கிறது! மலைகளும் குன்றுகளும் இரண்டாகப் பிளக்குமளவுக்குப் பலமாக அடிக்கிறது! அதன் சத்தத்தில் காதே கிழிந்துவிடும்போல் இருக்கிறது. அந்தப் பலமான காற்றைத் தாங்க முடியாமல் தன் கண்களை மறைப்பதா, கனமான தன் அங்கி பறக்காமல் பிடிப்பதா என்று புரியாமல் எலியா திணறுவது உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா? அடுத்ததாக, பூகம்பத்தினால் தரை கிடுகிடுவென ஆட, எலியா நிற்க முடியாமல் தடுமாறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர் சுதாரிப்பதற்குள் ஒரு மாபெரும் தீப்பிழம்பு அவரைக் கடந்து செல்கிறது. அதன் வெப்பத்தைத் தாங்க முடியாமல் குகைக்குள்ளே எலியா புகுந்துகொள்கிறார்.​—1 இரா. 19:​11, 12.

எலியாவுக்கு ஆறுதலும் உற்சாகமும் அளிக்க யெகோவா தமது அளவில்லா சக்தியைப் பயன்படுத்தினார்

21 இந்தப் பிரம்மாண்டமான இயற்கைச் சக்திகள் எதிலும் யெகோவா இல்லை என்று பதிவு திரும்பத் திரும்பச் சொல்கிறது. யெகோவா ஒன்றும் புராணக் கதைகளில் வரும் இயற்கைக் கடவுள் அல்ல, உதாரணத்திற்கு மழைக்கான தெய்வமாக வழிபடப்பட்ட பாகாலைப் போன்றவர் அல்ல என்பது எலியாவுக்கு நன்றாகத் தெரியும். உண்மையில், பிரம்மாண்டமான இயற்கைச் சக்திகளைப் படைத்தவரே யெகோவாதான்; அவருடைய படைப்புகளைவிட அவர் மகா சக்தியுள்ளவர். அவர் குடிகொள்ள வானாதி வானங்கள்கூட போதாதே! (1 இரா. 8:27) அப்படியென்றால், யெகோவா ஏன் இயற்கைச் சக்திகளை எலியா கண்முன் காட்டினார்? எலியாவின் பயத்தைப் போக்குவதற்காகவே. மகா சக்திபடைத்த யெகோவாவே அவருடன் இருக்கும்போது ஆகாபுக்கும் யேசபேலுக்கும் துளிகூட அஞ்ச வேண்டியதில்லை!​—சங்கீதம் 118:​6-ஐ வாசியுங்கள்.

22. (அ) எலியா லாயக்கற்றவர் அல்ல என்பதை “சாந்தமான, மெல்லிய குரல்” எப்படி அவருக்கு உறுதி அளித்தது? (ஆ) அந்த “சாந்தமான, மெல்லிய குரல்” யாருடையதாக இருந்திருக்கலாம்? (அடிக்குறிப்பைக் காண்க.)

22 தீப்பிழம்பு மறைந்தவுடன், எங்கும் ஒரே நிசப்தம்! பின்பு, ‘சாந்தமான, மெல்லிய குரலை’ எலியா கேட்கிறார். மனக்குமுறல்களைக் கொட்டச் சொல்லி மீண்டும் அந்தக் குரல் அவரிடம் தெரிவிக்கிறது; அவர் இரண்டாவது முறை தன் கவலைகளையெல்லாம் கொட்டுகிறார். * அது அவருக்கு இன்னும் ஆசுவாசமாய் இருந்திருக்கும். அதன் பின்பு அந்த “சாந்தமான, மெல்லிய குரல்” சொல்கிற விஷயம் அவருக்கு இன்னும் அதிக ஆறுதல் தருகிறது. எலியா நினைப்பதுபோல் அவர் லாயக்கற்றவர் அல்ல என்பதை யெகோவா அவருக்கு உறுதிப்படுத்துகிறார். எப்படி? இஸ்ரவேலில் பாகால் வழிபாட்டை ஒழிக்க வேண்டுமென்ற தமது நோக்கத்தைப் பற்றி எலியாவுக்கு விவரமாகத் தெரியப்படுத்துகிறார்; இதன் மூலம், எலியா செய்த வேலை எதுவும் வீண் இல்லை... தமது நோக்கம் வேகமாக நிறைவேறப்போகிறது... என்ற உறுதியை அளிக்கிறார். அதோடு, திட்டவட்டமான கட்டளைகள் சிலவற்றை யெகோவா கொடுத்து மீண்டும் அவரை அனுப்புகிறார்; இதன் மூலம், அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் எலியாவுக்கு இன்னமும் பங்கு இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துகிறார்.​—1 இரா. 19:​12-17, NW.

23. எலியா தனிமையில் இருப்பதாக உணர்ந்ததால் யெகோவா என்ன இரண்டு விஷயங்களைச் சொன்னார்?

23 சரி, எலியா தனிமையில் இருப்பதாக உணர்கிறாரே, அதற்கு யெகோவா என்ன தீர்வு அளிக்கிறார்? இரண்டு விஷயங்களைச் சொல்கிறார். முதலாவதாக, எலியாவுக்கு அடுத்த தீர்க்கதரிசியாகப் பிற்காலத்தில் சேவை செய்ய எலிசாவை நியமிக்கச் சொல்கிறார். இளம் எலிசா, பல வருடங்கள் எலியாவுக்கு உற்றத் தோழனாகவும் உதவியாளனாகவும் இருப்பார். எலியாவை ஆறுதல்படுத்த எப்பேர்ப்பட்ட நடைமுறையான உதவி! இரண்டாவதாக, மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு விஷயத்தை யெகோவா சொல்கிறார்; “பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று சொல்கிறார். (1 இரா. 19:18) ஆம், எலியா தனிமையில் இல்லை! பாகாலை வழிபட மறுக்கும் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரவேலில் இருக்கிறார்கள் என்ற செய்தி எலியாவின் மனதுக்கு எந்தளவு இதமளித்திருக்கும்! எலியாவின் சேவை அவர்களுக்குத் தொடர்ந்து தேவை. அந்தக் கொடிய காலத்தில், அவர் தன் உத்தமத்தைக் காத்துக்கொண்டு அவர்களுக்குத் தொடர்ந்து நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியிருக்கிறது. “சாந்தமான, மெல்லிய குரல்” சொன்ன விஷயத்தை, அதாவது யெகோவாவின் தூதன் சொன்ன விஷயத்தை, கேட்டு எலியாவின் மனம் எந்தளவு குளிர்ந்துபோயிருக்கும்!

பைபிளை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும்போது, அது ஒருவிதத்தில் அந்த ‘சாந்தமான, மெல்லிய குரலை’ போல் இருக்கிறது

24, 25. (அ) யெகோவாவின் ‘சாந்தமான, மெல்லிய குரலை’ இன்று நாம் எப்படிக் கேட்கிறோம்? (ஆ) யெகோவா தந்த ஆறுதலை எலியா ஏற்றுக்கொண்டார் என எப்படி உறுதியாகச் சொல்லலாம்?

24 படைப்பில் பளிச்சிடும் இயற்கைச் சக்திகளின் பிரம்மாண்டத்தைப் பார்க்கும்போது எலியாவைப் போலவே நாமும் வாயடைத்துப்போவது வாஸ்தவம்தான். படைப்பாளரின் மகா வல்லமையைப் படைப்பு நமக்குத் தெள்ளத்தெளிவாய் எடுத்துக்காட்டுகிறதே! (ரோ. 1:20) தம்முடைய அளவில்லா வல்லமையைக் கொண்டு விசுவாசமுள்ள ஊழியர்களுக்கு உதவ இன்றும் யெகோவா மிகுந்த ஆவலாய் இருக்கிறார். (2 நா. 16:9) என்றாலும், தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமே முக்கியமாக நம்முடன் பேசுகிறார். (ஏசாயா 30:​21-ஐ வாசியுங்கள்.) பைபிளை நம் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும்போது, அது ஒருவிதத்தில் அந்த ‘சாந்தமான, மெல்லிய குரலை’ போல் இருக்கிறது. அதிலுள்ள பொன்னான தகவல்களின் வாயிலாக இன்று யெகோவா நம்மைத் திருத்துகிறார், நமக்கு ஊக்கமளிக்கிறார்; நம்மீது அன்பு இருப்பதாகவும் உறுதியளிக்கிறார்.

25 ஓரேப் மலையில் யெகோவா அளித்த ஆறுதலை எலியா ஏற்றுக்கொண்டாரா? அதில் சந்தேகமே வேண்டாம்! பொய் வழிபாட்டை எதிர்த்துப் போராடிய இந்த உண்மை தீர்க்கதரிசி மீண்டும் அதே வேகத்துடன்... அதே தைரியத்துடன்... செயல்வீரராய்க் களமிறங்குகிறார். ‘வேதவசனங்களின் மூலம் உண்டாகிற ஆறுதலை,’ கடவுளுடைய வார்த்தையிலுள்ள விஷயங்களை, ஏற்றுக்கொண்டால் எலியாவைப் போலவே நாமும் விசுவாசப் பாதையில் வீறுநடை போடுவோம்.​—ரோ. 15:4.

^ பாரா. 1 1 இராஜாக்கள் 18:46 (NW): “யெகோவாவின் கரம் எலியாவின் மீது இருந்ததால், எலியா தன் அங்கியை வரிந்துகட்டிக்கொண்டு ஓடி ஆகாபுக்கு முன்னால் யெஸ்ரயேலை அடைந்தார்.”

^ பாரா. 22 இங்கே சொல்லப்படுகிற “சாந்தமான, மெல்லிய குரல்” ஒரு தேவதூதனுடைய குரலாக இருந்திருக்கலாம்; 1 இராஜாக்கள் 19:​9-ல் (NW) உள்ள ‘யெகோவாவின் வார்த்தையை’ தெரிவித்தவரும் இவராகவே இருந்திருக்கலாம். 15-வது (NW) வசனம் இந்தத் தூதரை “யெகோவா” என்று குறிப்பிடுகிறது. வனாந்தரத்தில் இஸ்ரவேலரை வழிநடத்துவதற்காக யெகோவா ஒரு தேவதூதரைப் பயன்படுத்தினார் என்று நமக்குத் தெரியும்; “என் பெயரை அவர் தாங்கியிருக்கிறார்” என்று அவரைக் குறித்து கடவுள் சொன்னார். (யாத். 23:​21, NW) அந்தத் தேவதூதனும் இந்தத் தேவதூதனும் ஒன்றுதான் என்று நாம் அடித்துச்சொல்ல முடியாது. என்றாலும், இயேசு பூமிக்கு வருவதற்குமுன் யெகோவாவுடைய ‘வார்த்தையாக,’ அதாவது அவருடைய ஊழியர்களிடம் பேசும் விசேஷப் பிரதிநிதியாக, இருந்தார் என்பதை நாம் மனதில் வைக்கலாம்.​—யோவா. 1:1.