Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதினேழாம் அதிகாரம்

‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’

‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’

1, 2. (அ) முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து மரியாளுக்குக் கிடைத்த வாழ்த்து என்ன? (ஆ) மரியாள் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்தாள் என எப்படிச் சொல்லலாம்?

வீட்டுக்கு வந்த விருந்தாளியை மரியாள் வியப்புடன் பார்க்கிறாள். ஆச்சரியத்தில் அவளுடைய கண்கள் அகல விரிகின்றன. மரியாளின் அப்பா அம்மாவை அல்ல, அவளைத்தான் அந்த விருந்தாளி தேடி வந்திருக்கிறார்! அவர் நாசரேத் ஊரைச் சேர்ந்தவர் அல்ல என்பதைப் பார்த்தவுடன் புரிந்துகொள்கிறாள்! அந்தக் குக்கிராமத்தில் வெளியூர்க்காரர்களைச் சட்டென்று கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இவர் எந்த ஊருக்குப் போனாலும் வித்தியாசமாகத்தான் தெரிவார். இவர் மரியாளைப் பார்த்து, “மகா தயவைப் பெற்றவளே, வாழ்க! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்று வாழ்த்துகிறார். இது அவளுக்குப் புதுமையான ஒரு வாழ்த்து!​—லூக்கா 1:​26-28-ஐ வாசியுங்கள்.

2 இப்படித்தான் பைபிள் நமக்கு மரியாளை அறிமுகம் செய்கிறது; அவள் ஹேலியின் மகள், கலிலேயாவிலுள்ள நாசரேத் ஊரைச் சேர்ந்தவள். இப்போது முக்கியமான முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறாள். யோசேப்பு என்ற தச்சருக்கு... பணக்காரருக்கு அல்ல ஒரு பக்திமானுக்கு... அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய எதிர்காலம் ஒரு தெளிவான வரைபடம்போல் அவள் கண்முன் நின்றிருக்கலாம்​—யோசேப்பின் துணைவியாய்... பிள்ளைகளை வளர்க்கும் தாயாய்... எளிய வாழ்க்கை வாழ்வது அவள் கண்முன் நின்றிருக்கலாம். இப்போது அந்த விருந்தாளி திடீரென ஒரு பெரிய பொறுப்பை அவளுக்குக் கொடுக்கிறார். அது கடவுளிடமிருந்து வந்த பொறுப்பு, அவளுடைய வாழ்க்கையை மாற்றப்போகிற ஒரு பொறுப்பு.

3, 4. மரியாளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்கு எதை நாம் ஓரங்கட்ட வேண்டும், எதை உற்று நோக்க வேண்டும்?

3 மரியாளைப் பற்றி பைபிளில் நிறையத் தகவல்கள் இல்லை என்பது அநேகருக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. அவளுடைய பின்னணியைப் பற்றி பைபிள் கொஞ்சம்தான் சொல்கிறது... சுபாவத்தைப் பற்றி அதைவிடக் கொஞ்சம்தான் சொல்கிறது... தோற்றத்தைப் பற்றியோ கொஞ்சநஞ்சம்கூட சொல்வதில்லை. சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் கையளவு என்றாலும் கருத்தாழமிக்கவை.

4 மரியாளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்கு அவளைக் குறித்து மதங்கள் கற்பிக்கிற கட்டுக்கதைகளை ஓரங்கட்டிவிடுவோம். சித்திரங்களில், சிற்பங்களில், செதுக்கோவியங்களில் காணப்படும் பலதரப்பட்ட பிம்பங்களை மறந்துவிடுவோம். “தெய்வத்தாய்,” “விண்ணரசி” என்றெல்லாம் பகட்டாக வர்ணிக்கிற சிக்கலான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் ஒதுக்கிவிடுவோம். அவளை பைபிள் எப்படிப் படம்பிடித்துக் காட்டுகிறது என்பதை உற்று நோக்குவோம். அப்படிச் செய்தால், இந்தத் தாழ்மையான பெண்ணின் விசுவாசத்தைப் பற்றியும் அதை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் பற்றியும் பொன்னான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

ஒரு தேவதூதனின் சந்திப்பு

5. (அ) காபிரியேல் தூதன் வாழ்த்தியபோது மரியாள் பிரதிபலித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) மரியாளிடமிருந்து நாம் என்ன முக்கிய பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

5 மரியாளைச் சந்திக்க வந்தவர் ஒரு மனிதரல்ல, தேவதூதன்! அவருடைய பெயர் காபிரியேல். “மகா தயவைப் பெற்றவளே” என்று அவர் அழைக்கும்போது, எதற்காக இந்த வாழ்த்துதலைக் கூறுகிறார் எனப் புரியாமல் மரியாள் ‘மிகுந்த கலக்கம் அடைகிறாள்.’ (லூக். 1:29) மரியாள் யாருடைய மகா தயவைப் பெற்றிருக்கிறாள்? யெகோவா தேவனின் மகா தயவைப் பெற்றிருப்பதாகவே தூதன் சொல்கிறார். அதைத்தான் அவள் உயர்வாகக் கருதினாள். மனிதனுடைய மகா தயவை எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், கடவுளுடைய தயவை ஏற்கெனவே பெற்றிருப்பதாக நினைத்து அகம்பாவம் கொள்ளவில்லை. நாமும் கடவுளுடைய தயவைப் பெற கடினமாய் முயற்சி செய்ய வேண்டும், அதை ஏற்கெனவே பெற்றிருப்பதாக நினைத்து அகம்பாவம் கொள்ளக் கூடாது. மரியாளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் முக்கிய பாடம் இதுவே. கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மையுள்ளவர்களையோ அன்புகூர்ந்து ஆதரவளிக்கிறார்.​—யாக். 4:6.

கடவுளுடைய தயவை ஏற்கெனவே பெற்றிருப்பதாக நினைத்து மரியாள் அகம்பாவம் கொள்ளவில்லை

6. மரியாளுக்குத் தேவதூதன் எப்படிப்பட்ட பாக்கியத்தைக் கொடுத்தார்?

6 இப்படிப்பட்ட மனத்தாழ்மை மரியாளுக்கு அவசியம், ஏனென்றால் கற்பனையே செய்ய முடியாத அரும்பெரும் பாக்கியத்தைத் தேவதூதன் அவளுக்குக் கொடுக்கிறார். அவள் பெற்றெடுக்கப்போகும் பிள்ளை மனிதர்களிலேயே மாமனிதராக விளங்கும் என்று காபிரியேல் சொல்கிறார். “அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா அவருக்குக் கொடுப்பார்; யாக்கோபின் குடும்பத்தின் மீது அவர் என்றென்றும் ராஜாவாக ஆளுவார்; அவருடைய அரசாட்சிக்கு முடிவே இருக்காது” என்றும் சொல்கிறார். (லூக். 1:​32, 33) சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியை, அதாவது அவருடைய சந்ததியில் வரும் ஒருவர் என்றென்றும் அரசாளுவார் என்ற வாக்குறுதியை, மரியாள் அறிந்திருக்கிறாள். (2 சா. 7:​12, 13) ஆகவே, அவளுடைய மகன்தான் பல நூற்றாண்டுகளாகக் கடவுளுடைய மக்கள் ஆவலாய் எதிர்பார்த்திருந்த மேசியாவாக இருப்பார்.

கற்பனையே செய்ய முடியாத அரும்பெரும் பாக்கியத்தை காபிரியேல் தூதன் மரியாளுக்குக் கொடுத்தார்

7. (அ) மரியாளின் கேள்வி அவளைப் பற்றி எதைத் தெரியப்படுத்துகிறது? (ஆ) மரியாளிடமிருந்து இன்று இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

7 அவளுடைய மகன் “உன்னதமானவரின் மகன் என்று அழைக்கப்படுவார்” என்றும் காபிரியேல் சொல்கிறார். ஒரு மானிடப் பெண்ணின் வயிற்றில் எப்படிக் கடவுளுடைய மகன் பிறக்க முடியும்? அதுவும் கன்னிப்பெண் மரியாளுக்கு எப்படிக் குழந்தை பிறக்க முடியும்? யோசேப்புக்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருக்கிறாளே தவிர அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால்தான், “இது எப்படி நடக்கும்? ஒரு ஆணோடு நான் வாழ்ந்துகொண்டில்லையே [அல்லது, “உறவுகொள்ளவில்லையே,” அடிக்குறிப்பு] என்று தேவதூதனிடம் மரியாள் வெளிப்படையாகக் கேட்கிறாள். (லூக். 1:34) தான் கற்புடன் இருப்பதைச் சொல்ல மரியாள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. சொல்லப்போனால், அவள் தன்னுடைய கற்பை உயர்வாய் மதிக்கிறாள். ஆனால், இன்று இளைஞர்கள் பலர் தங்களுடைய கற்பைத் துச்சமாகக் கருதுகிறார்கள். அதை உயர்வாய் மதிக்கிறவர்களைக் கேலி கிண்டல் செய்கிறார்கள். இந்த உலகம் ரொம்பவே மாறிவிட்டது. ஆனால், யெகோவா மாறவில்லை. (மல். 3:6) அன்று ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தோரை அவர் உயர்வாய் மதித்ததைப் போலவே இன்றும் மதிக்கிறார்.​—எபிரெயர் 13:​4-ஐ வாசியுங்கள்.

8. அபூரணப் பெண் மரியாளால் எப்படி ஒரு பரிபூரண குழந்தையைப் பெற்றெடுக்க முடிந்தது?

8 கடவுளுக்கு விசுவாசமுள்ள பெண்ணாக மரியாள் இருந்தாலும் எல்லோரையும் போலவே அவளும் ஒரு அபூரணப் பெண்தான். அப்படியிருக்கும்போது, ஒரு பரிபூரண மகனை, அதுவும் கடவுளுடைய மகனை அவளால் எப்படிப் பெற்றெடுக்க முடியும்? அதற்கு காபிரியேல் பதில் சொல்கிறார்: “கடவுளுடைய சக்தி உன்மீது வரும்; உன்னதமானவருடைய வல்லமை உன்மீது தங்கும். இதன் காரணமாக, உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும், கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.” (லூக். 1:35) பொதுவாக ஒரு பரம்பரை வியாதியைப்போல பாவத்தன்மை பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வந்துவிடுகிறது. ஆனால், யெகோவா மரியாளின் கருப்பையில் மாபெரும் அற்புதத்தைச் செய்கிறார்; பரலோகத்தில் இருந்த தன்னுடைய மகனின் உயிரை அவளுடைய கருப்பைக்குள் வைக்கிறார்; அதோடு, தம்முடைய சக்தி மரியாள்மீது ‘தங்கியிருக்கும்படி’ செய்கிறார். இதன் மூலம் பாவத்தின் கறை தம் மகன்மீது படியாதவாறு பார்த்துக்கொள்கிறார். தேவதூதன் சொன்னதை மரியாள் நம்புகிறாளா? அவள் என்ன சொல்கிறாள்?

காபிரியேலிடம் மரியாள் சொன்னவை

9. (அ) மரியாளைப் பற்றிய பதிவைச் சிலர் சந்தேகிப்பது ஏன் தவறு? (ஆ) மரியாளின் விசுவாசத்தை எந்த விதத்தில் காபிரியேல் பலப்படுத்தினார்?

9 ஒரு கன்னிப்பெண்ணுக்கு எப்படிக் குழந்தை பிறக்குமெனக் கிறிஸ்தவ இறையியலாளர் சிலரும்கூட சந்தேகிக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் படித்திருந்தாலும் ஒரு சாதாரண உண்மையைப் புரிந்துகொள்வதில்லை. காபிரியேல் சொன்னபடி, ‘கடவுளால் நிறைவேற்ற முடியாதது எதுவுமே இல்லை.’ (லூக். 1:37) இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இளம் மரியாள் ஏற்றுக்கொண்டாள். ஏனென்றால், அவளுக்கு மிகுந்த விசுவாசம் இருந்தது, ஆனால் அது குருட்டு விசுவாசம் அல்ல. ஆழ்ந்து சிந்திக்கும் ஒரு நபரைப் போல, விசுவாசிக்க அவளுக்கும் அத்தாட்சி தேவைப்படுகிறது. இப்போது, கூடுதல் அத்தாட்சியை காபிரியேல் அவளுக்குக் கொடுக்கிறார். பல வருடங்கள் குழந்தை பாக்கியமின்றி இருந்த அவளுடைய உறவுக்காரப் பெண்... வயதான எலிசபெத்... கர்ப்பமடைய கடவுள் அற்புதமாக அருள் செய்திருப்பதாகச் சொல்கிறார்.

10. இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் மரியாளுக்கு எந்தவித பயமோ கஷ்டமோ இருந்திருக்காது என ஏன் முடிவுகட்டிவிடக் கூடாது?

10 இப்போது மரியாள் என்ன செய்வாள்? அவளுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, காபிரியேல் சொன்ன அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுவார் என்பதற்கு ஆதாரமும் இருக்கிறது. இந்தப் பொறுப்பை நினைத்து அவளுக்குப் பயமே இருந்திருக்காது என்றோ... அதை நிறைவேற்றுவது அவளுக்குக் கஷ்டமாக இருந்திருக்காது என்றோ... நாம் முடிவுகட்டிவிடக் கூடாது. ஒரு காரணம் என்னவென்றால், மரியாளுக்கு ஏற்கெனவே யோசேப்புடன் நிச்சயமாகியிருந்தது. அவள் கர்ப்பமாக இருப்பது அவருக்குத் தெரிந்தால் அவளைத் திருமணம் செய்துகொள்வாரா? மற்றொரு காரணம் என்னவென்றால், இந்தப் பொறுப்பு ஓர் இமாலய பொறுப்பாக அவளுக்குத் தோன்றியிருக்கலாம்! கடவுளுக்கு மிகவும் அருமையான ஒருவரின் உயிரை... கடவுளுடைய சொந்த மகனின் உயிரை... சுமக்க வேண்டுமே! பச்சிளங்குழந்தையாக இருக்கும்போது கண்ணும்கருத்துமாக வளர்க்க வேண்டுமே... இந்தப் பொல்லாத உலகில் அந்தக் குழந்தையைப் பொத்திப் பாதுகாக்க வேண்டுமே... உண்மையிலேயே மாபெரும் பொறுப்பு!

11, 12. (அ) சவாலான பொறுப்புகளைக் கடவுள் தந்தபோது, வலிமையும் விசுவாசமும் உள்ள ஆண்களும்கூட சில சமயங்களில் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) காபிரியேலிடம் மரியாள் சொன்ன பதிலிலிருந்து அவளைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

11 வலிமையும் விசுவாசமும் உள்ள ஆண்களும்கூட கடவுள் தந்த சவாலான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்குச் சில சமயங்களில் தயங்கியதாக பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, தன்னால் சரளமாகப் பேச முடியாது என்று சொல்லி கடவுளுடைய பிரதிநிதியாகச் செயல்படும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மோசே மறுத்தார். (யாத். 4:10) எரேமியாவும் தான் ‘சிறுபிள்ளையாக’ இருப்பதாகச் சொல்லி கடவுளுடைய வேலையை ஏற்றுக்கொள்ள தயங்கினார். (எரே. 1:6) யோனாவோ தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் ஓடிப்போனார்! (யோனா 1:3) ஆனால், மரியாள் என்ன செய்கிறாள்?

12 காபிரியேலிடம் அவள் சொல்கிற இந்த வார்த்தைகள்... மிகுந்த மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் காட்டுகிற இந்த வார்த்தைகள்... விசுவாசமுள்ள எல்லோருக்கும் எதிரொலிக்கின்றன: “இதோ! நான் யெகோவாவின் அடிமைப் பெண்! உங்கள் வார்த்தையின்படியே எனக்கு நடக்கட்டும்.” (லூக். 1:38) அடிமைப் பெண் என்றாலே வேலைக்காரர்களில் மிகவும் தாழ்வானவள்; அவளது முழு வாழ்க்கையும் அவளது எஜமானருடைய கையில் இருந்தது. மரியாளும் தன் எஜமானராகிய யெகோவாவுக்குத் தான் ஓர் அடிமையாக இருப்பதாகத்தான் உணர்ந்தாள். அவருடைய கரங்களில் தான் பாதுகாப்பாய் இருப்பதாக... அவருக்கு உண்மையாய் இருப்பவர்களை அவர் தற்காப்பதாக... உணர்ந்தாள். அதேசமயம், இந்தச் சவாலான பொறுப்பை நிறைவேற்ற முழு முயற்சி எடுக்கும்போது யெகோவா ஆசீர்வதிப்பார் என்றும் நம்பினாள்.​—சங். 31:23.

யெகோவாவின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பதாக மரியாள் உணர்ந்தாள்

13. கஷ்டமான வேலையை அல்லது செய்யவே முடியாத வேலையைக் கடவுள் நமக்குக் கொடுப்பதாகத் தோன்றினால், மரியாளின் உதாரணத்திலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?

13 கஷ்டமான வேலையை, ஏன், செய்யவே முடியாத வேலையை, யெகோவா நமக்குக் கொடுப்பதாகச் சில சமயம் தோன்றலாம். ஆனால், அவரை முழுமையாக நம்புவதற்கு அநேக அத்தாட்சிகளை அவரது வார்த்தையாகிய பைபிளில் தந்திருக்கிறார். (நீதி. 3:​5, 6) மரியாளைப்போல் நம்மை அவருடைய கையில் ஒப்படைப்போமா? அவரை முழுமையாக நம்புவோமா? அப்படிச் செய்தால், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; இது, நம் விசுவாசம் பலமடைய அவர் தரும் கூடுதல் அத்தாட்சியாக இருக்கும்.

எலிசபெத்துடன் சந்திப்பு

14, 15. (அ) எலிசபெத்தையும் சகரியாவையும் மரியாள் சந்தித்தபோது யெகோவா அவளுக்கு எப்படிப் பலனளித்தார்? (ஆ) லூக்கா 1:​46-55-ல் பதிவு செய்யப்பட்டுள்ள மரியாளின் வார்த்தைகள் அவளைப் பற்றி எதைத் தெரியப்படுத்துகின்றன?

14 எலிசபெத்தைப் பற்றி காபிரியேல் சொன்ன வார்த்தைகள் மரியாளுக்கு உற்சாகம் ஊட்டுகின்றன. இந்தச் சூழ்நிலையில், எலிசபெத்தைத் தவிர உலகத்தில் வேறெந்த பெண்ணால் மரியாளை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்? மரியாள் அவசர அவசரமாக யூதா மலைப்பிரதேசத்துக்குக் கிளம்பிச் செல்கிறாள்; அங்குதான் எலிசபெத்தும் ஆலய குருவான அவளது கணவர் சகரியாவும் வசிக்கிறார்கள். அங்கு போய்ச் சேர மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கின்றன. எலிசபெத்தின் வீட்டிற்குள் மரியாள் கால் வைக்கிறாள்; அப்போது, அவளுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிற மற்றொரு ஆணித்தரமான அத்தாட்சியைக் கொடுத்து யெகோவா அவளை ஆசீர்வதிக்கிறார். மரியாளின் வாழ்த்துதலைக் கேட்டதும் எலிசபெத்தின் வயிற்றிலிருக்கும் குழந்தை சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறது. எலிசபெத் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு, “என் எஜமானருடைய தாய்” என மரியாளை அழைக்கிறாள். மரியாளின் மகன் எஜமானராக... மேசியாவாக... ஆகப்போகிறார் என்பதை எலிசபெத்துக்குக் கடவுள் தெரியப்படுத்தியிருந்தார். அதோடு, மரியாளுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பாராட்டும்படி கடவுளுடைய சக்தி எலிசபெத்தைத் தூண்டுகிறது; “நம்பிக்கை வைத்த நீ சந்தோஷமடைவாய்” என்று அவள் சொல்கிறாள். (லூக். 1:​39-45) ஆம், மரியாளுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்!

மரியாளுக்கும் எலிசபெத்துக்கும் இடையே நிலவிய நட்பு இருவருக்கும் ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கியது

15 இப்போது, மரியாள் பேசுகிறாள். அவளது வார்த்தைகள் பைபிளில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. (லூக்கா 1:​46-55-ஐ வாசியுங்கள்.) அவளைப் பற்றிய பைபிள் பதிவுகளில் இந்தப் பதிவில்தான் அதிகமாய்ப் பேசியிருக்கிறாள். இதிலிருந்து அவளைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ளலாம். முதலாவதாக, மேசியாவின் தாயாகும் பாக்கியத்திற்காக யெகோவாவைப் போற்றிப் புகழ்கிறாள்; அவளுடைய நன்றியுணர்வு இதிலிருந்து தெரிகிறது. இரண்டாவதாக, ஆணவமுள்ளவர்களையும் அதிகாரமுள்ளவர்களையும் யெகோவா தாழ்த்தி, அவருக்குச் சேவை செய்ய விரும்புகிற தாழ்மையானவர்களையும் ஏழ்மையானவர்களையும் உயர்த்துகிறார் என்று சொல்கிறாள்; அவளுடைய ஆழமான விசுவாசம் இதிலிருந்து தெரிகிறது. மூன்றாவதாக, ஒரு கணக்கின்படி, எபிரெய வேதாகமத்திலிருந்து 20-க்கும் அதிகமான மேற்கோள்களைப் பயன்படுத்தியிருக்கிறாள்; * கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்திருந்தாள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

16, 17. (அ) மரியாளும் அவளது மகனும் நமக்கு எந்த விதத்தில் சிறந்த முன்மாதிரிகளாய் இருக்கிறார்கள்? (ஆ) எலிசபெத்தை மரியாள் சந்தித்தது நமக்கு எதை நினைப்பூட்டுகிறது?

16 வேதவசனங்களை மரியாள் ஆழ்ந்து யோசித்திருக்கிறாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், அவள் எப்போதும் மனத்தாழ்மையாக இருக்கிறாள், வேதவசனங்களிலிருந்து தான் புரிந்துகொண்டதைச் சொந்த வார்த்தைகளில் கூறாமல் அந்த வசனங்களிலுள்ள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துகிறாள். அவளுடைய வயிற்றில் வளர்ந்துவருகிற பிள்ளையும் பிற்காலத்தில் அப்படித்தான் பேசினார்; “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்று சொன்னார். (யோவா. 7:16) அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘இதேபோல் பைபிள்மீது ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் எனக்கு இருக்கிறதா? அல்லது, என்னுடைய சொந்த கருத்துகளையும் போதனைகளையும் சொல்ல விரும்புகிறேனா?’ இந்த விஷயத்தில் மரியாள் சிறந்த முன்மாதிரி!

17 எலிசபெத்தோடு ஏறக்குறைய மூன்று மாதங்கள் மரியாள் தங்குகிறாள்; அந்த மூன்றுமாத காலத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பரிமாறியிருப்பார்கள்! (லூக். 1:56) எலிசபெத்தை மரியாள் சந்தித்ததைப் பற்றிய இந்த அருமையான பதிவு... நல்ல நட்பு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. யெகோவாவை நெஞ்சார நேசிப்பவர்களோடு நட்பு வைத்துக்கொண்டால் நாம் ஆன்மீக ரீதியில் நிச்சயம் முன்னேறுவோம், கடவுளுடன் இன்னும் நெருங்கி வருவோம். (நீதி. 13:20) இப்போது, மரியாள் தன்னுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டிய நேரம் வருகிறது. அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று யோசேப்புக்குத் தெரியவரும்போது என்ன சொல்வார்?

மரியாளும் யோசேப்பும்

18. யோசேப்பிடம் மரியாள் என்ன சொன்னாள், அதற்கு அவர் எப்படிப் பிரதிபலித்தார்?

18 தான் கர்ப்பமாக இருப்பது தானாகத் தெரியவரட்டும் என்று மரியாள் காத்திருப்பதில்லை. இந்த விஷயத்தை அவள் யோசேப்புக்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. கண்ணியமும் தேவபக்தியுமுள்ள யோசேப்பு அதைக் கேட்டு என்ன சொல்வாரோ என்ற யோசனை அவள் மனதில் ஓடியிருக்கலாம். இருந்தாலும், மரியாள் அவரைச் சந்திக்கிறாள், நடந்ததையெல்லாம் சொல்கிறாள். இந்தச் சூழ்நிலையில் யோசேப்பு இருதலைக்கொள்ளி எறும்புபோல தவித்திருப்பார். இந்த இளம் பெண் சொல்வதை நம்ப வேண்டும் என நினைத்திருப்பார், அதேசமயம் அவள் தனக்குத் துரோகம் செய்துவிட்டாளோ என்றும் நினைத்திருப்பார். அவருடைய மனதில் உண்மையில் என்னவெல்லாம் ஓடியது என பைபிள் சொல்வதில்லை. ஆனால், மரியாளை விவாகரத்து செய்யத் தீர்மானித்தார் என்று மட்டும் சொல்கிறது. அந்தக் காலத்தில், நிச்சயிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்யப்பட்டவர்கள் போல் கருதப்பட்டார்கள். என்றாலும், இந்த விஷயத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்தி அவளை அவமானப்படுத்தவோ அவளுக்குத் தண்டனை வாங்கித் தரவோ அவர் விரும்பவில்லை. அதனால், அவளை ரகசியமாக விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார். (மத். 1:​18, 19) இந்த இக்கட்டான சூழ்நிலையில், கனிவான அந்த மனிதர் படும் மனவேதனையைப் பார்த்து மரியாள் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பாள். இருந்தாலும், தான் சொன்னதை யோசேப்பு நம்பாததால் மனம் கசந்துவிடவில்லை.

19. சரியான தீர்மானம் எடுக்க யோசேப்புக்கு யெகோவா எப்படி உதவினார்?

19 சரியான தீர்மானம் எடுக்க யோசேப்புக்கு யெகோவா அன்போடு உதவுகிறார். மரியாள் அற்புதமாய்க் கர்ப்பமாகியிருப்பதை கடவுளுடைய தூதன் அவருக்குக் கனவில் தெரிவிக்கிறார். விஷயம் தெரிந்ததும் யோசேப்புக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்! ஆரம்பத்திலிருந்தே மரியாள் செய்துவருவதை இப்போது யோசேப்பு செய்கிறார்​—ஆம், யெகோவா கொடுக்கிற அறிவுரைக்கு இசைவாய் நடக்கிறார். மரியாளைத் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறார்; யெகோவாவின் மகனைக் கவனித்துக்கொள்ள வேண்டிய அரிய பொறுப்பை ஏற்கத் தயாராகிறார்.​—மத். 1:​20-24.

20, 21. மணமானோரும் மணம்செய்யத் திட்டமிடுவோரும் மரியாளிடமிருந்தும் யோசேப்பிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

20 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த இளம் தம்பதியிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்​—மணம்புரிந்தோரும் சரி மணம்புரியத் திட்டமிடுவோரும் சரி. அன்புள்ள தாயாக இளம் மரியாள் தன் கடமைகளைச் செவ்வனே செய்வதை யோசேப்பு பார்க்கும்போது, யெகோவாவின் தூதன் தனக்கு ஆலோசனை கொடுத்ததற்காக ஆனந்தம் அடைந்திருப்பார். முக்கியமான தீர்மானங்களை எடுக்கும்போது யெகோவாவைச் சார்ந்திருப்பது எவ்வளவு அவசியம் என்பதை யோசேப்பு புரிந்திருப்பார். (சங். 37:5; நீதி. 18:13) குடும்பத் தலைவராக ஒவ்வொரு நாளும் தீர்மானங்களை எடுக்கையில் அவர் கவனமாகவும் கனிவாகவும் இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

21 மறுபட்சத்தில், யோசேப்பு தன்மீது ஆரம்பத்தில் சந்தேகப்பட்டபோதிலும் அவரை மணமுடிக்க மரியாள் முன்வந்ததிலிருந்து நமக்கு என்ன பாடம்? அவரை வருங்காலக் குடும்பத் தலைவராகக் கருதியதால் அவரே யோசித்துத் தீர்மானம் எடுப்பதற்காக மரியாள் காத்திருந்தாள். இப்படி, பொறுமையுடன் காத்திருப்பதன் அவசியத்தைக் கற்றுக்கொண்டாள்; இன்றைய கிறிஸ்தவப் பெண்களுக்கும் இது நல்ல பாடமாக இருக்கிறது. அதோடு, நேர்மையாகவும் மனந்திறந்தும் பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவங்கள் யோசேப்புக்கும் மரியாளுக்கும் கற்றுக்கொடுத்திருக்கும்.​—நீதிமொழிகள் 15:​22-ஐ வாசியுங்கள்.

22. யோசேப்பு-மரியாளின் மணவாழ்வுக்கு அஸ்திவாரமாக அமைந்தது எது, அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

22 இந்த இளம் தம்பதியினர் தங்கள் மண வாழ்வை மிகச் சிறந்த அஸ்திவாரத்தின் மீது கட்ட ஆரம்பித்தார்கள் என்பது உறுதி. எல்லாவற்றையும்விட யெகோவாவையே இருவரும் அதிகமாய் நேசித்தார்கள். பொறுப்புள்ள... அக்கறையுள்ள... பெற்றோராக இருந்து அவரைப் பிரியப்படுத்தவே விரும்பினார்கள். இதனால் அவர்கள் மகத்தான ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள், அதேசமயத்தில் மாபெரும் சவால்களையும் சந்தித்தார்கள். ஆம், மனிதர்களிலேயே மாமனிதராகத் திகழப்போகும் இயேசுவை அவர்கள் வளர்க்க வேண்டியிருந்தது.

^ பாரா. 15 இவற்றில், விசுவாசமுள்ள பெண்ணாகிய அன்னாள் சொன்ன வார்த்தைகளையும் மரியாள் மேற்கோள் காட்டியதாகத் தெரிகிறது; யெகோவா அன்னாளுக்கும் குழந்தை பாக்கியம் தந்திருந்தார்.​—அதிகாரம் 6-ல், “சிறப்புமிக்க இரண்டு ஜெபங்கள்” என்ற பெட்டியைக் காண்க.