Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதலாம் அதிகாரம்

‘இறந்துவிட்டபோதிலும் . . . இன்னமும் பேசுகிறார்’

‘இறந்துவிட்டபோதிலும் . . . இன்னமும் பேசுகிறார்’

1. ஆதாம் ஏவாளின் குடும்பத்தாரை ஏதேன் தோட்டத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தது எது, ஆபேலின் தீராத ஆசை என்ன?

மலைச்சரிவுகளில் அமைதியாக மேய்ந்துகொண்டிருக்கும் ஆட்டு மந்தையை ஆபேல் பார்க்கிறார். பின்பு, தூரத்தில்... ஆட்டு மந்தைக்கும் அப்பால்... மங்கலாக வெளிச்சம் தென்படுகிற இடத்தின்மீது தன் கண்களைப் பதிக்கிறார். அங்கே சுடரொளி வீசும் வாள் விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அது, ஏதேன் தோட்டத்திற்குள் யாரையும் நுழைய விடாமல் தடுக்கிறது என்பதும் அவருக்குத் தெரியும். ஒருகாலத்தில் அவருடைய அப்பா அம்மா அங்குதான் ஆனந்தமாய் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அவர்களோ அவர்களுடைய பிள்ளைகளோ அதற்குள் நுழைய முடியாது. உங்கள் கற்பனையில் இந்தக் காட்சியைப் பாருங்கள்: மாலை மயங்கும் வேளை... தென்றல் காற்று ஆபேலின் தலைமுடியை வருடிச் செல்கிறது... அவர் தனது கண்களை விண்ணை நோக்கித் திருப்புகிறார், படைப்பாளரைப் பற்றிய சிந்தனையில் மூழ்குகிறார். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் என்றாவது சரிசெய்யப்படுமா? அது சரிசெய்யப்பட வேண்டும் என்பதுதான் ஆபேலின் தீராத ஆசை.

2-4. ஆபேல் இன்று நம்மிடம் எப்படிப் பேசுகிறார்?

2 ஆபேல் இன்று உங்களிடம் பேசுகிறார். உங்களால் அவருடைய குரலைக் கேட்க முடிகிறதா? அது எப்படி முடியும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆதாமின் இந்த இரண்டாம் மகன் இறந்து ஆறாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதே. அவரது எலும்புகளும்கூட மண்ணோடு மண்ணாக மக்கிப்போயிருக்குமே. “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என இறந்தவர்களைப் பற்றி பைபிள் சொல்வதும் நமக்குத் தெரியுமே. (பிர. 9:​5, 10) அதோடு, ஆபேல் பேசிய எந்தவொரு வார்த்தையும் பைபிளில் பதிவு செய்யப்படவில்லையே. அப்படியிருக்கும்போது, எப்படி அவரால் நம்மிடம் பேச முடியும்?

3 கடவுளுடைய சக்தியின் உதவியால் ஆபேலைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர் இறந்துவிட்டபோதிலும் விசுவாசத்தினால் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்.” (எபிரெயர் 11:​4-ஐ வாசியுங்கள்.) எப்படி அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதைக் கவனித்தீர்களா? விசுவாசத்தினால் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த உயர்ந்த குணத்தை வளர்த்துக்கொண்ட முதல் மனிதன் ஆபேல்தான். விசுவாசம் என்ற அந்தக் குணத்தை மிகச் சிறப்பான விதத்தில் வெளிக்காட்டினார்; அதனால்தான் அவருடைய முன்மாதிரி இன்றும் உயிருள்ள முன்மாதிரியாய் இருக்கிறது; நமக்கு நல்வழி காட்டுகிறது. ஆகவே, ஆபேலின் விசுவாசத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அதைப் பின்பற்றும்போது, அவரைப் பற்றிய பதிவு அவர் பேசுவது போலவே நம் காதில் தெளிவாக ஒலிக்கும்.

4 ஆபேலைப் பற்றி பைபிளில் சொற்ப தகவல்களே இருக்கிறபோதிலும், அவரைப் பற்றியும் அவருடைய விசுவாசத்தைப் பற்றியும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இப்போது பார்க்கலாம்.

“உலகம் உண்டான” சமயத்தில் வாழ்ந்தவர்

5. ஆபேல் வாழ்ந்த காலத்தை “உலகம் உண்டான” சமயமென இயேசு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? (அடிக்குறிப்பையும் காண்க.)

5 மனித சரித்திரம் உதயமான சில காலத்திலேயே ஆபேல் பிறந்தார். ஆபேல் வாழ்ந்த காலத்தை “உலகம் உண்டான” சமயம் என்று இயேசு பிற்பாடு சுட்டிக்காட்டினார். (லூக்கா 11:​50, 51-ஐ வாசியுங்கள்.) பாவத்திலிருந்து மீட்கப்படக்கூடிய மக்களைத்தான் இயேசு இங்கே உலகம் என்று குறிப்பிட்டார். உலகத்தில் வாழ்ந்தவர்களில் ஆபேல் நான்காவது மனிதர் என்றாலும், கடவுளுடைய பார்வையில் அவர்தான் மீட்கத்தக்க முதல் மனிதர் எனத் தெரிகிறது. * ஆபேலைச் சுற்றி நல்ல மனிதர்களே இல்லை.

6. ஆபேலின் பெற்றோர் எப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள்?

6 மனித குடும்பம் தோன்றி சில காலத்திலேயே சோகப் புயல் அடிக்க ஆரம்பித்தது. ஆபேலின் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் அழகானவர்களாய்... துடிப்பானவர்களாய்... இருந்தார்கள். ஆனால் வாழ்க்கையில் படுதோல்வி அடைந்துவிட்டார்கள், அது அவர்களுக்கும் தெரியும். ஒருகாலத்தில் பரிபூரணராய் இருந்தார்கள், என்றென்றும் வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் யெகோவா தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்; வேறெதையும்விட தங்களுடைய சொந்த ஆசைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்; வருங்கால சந்ததியாருடைய நலனைக்கூட எண்ணிப் பார்க்கவில்லை. அதனால், ஏதேன் தோட்டம் என்ற அழகிய வீட்டைவிட்டு... பூஞ்சோலையைவிட்டு... துரத்தப்பட்டார்கள். பரிபூரணத்தையும் முடிவில்லா வாழ்வையும் இழந்தார்கள்.​—ஆதி. 2:15–3:24.

7, 8. காயீன் பிறந்தபோது ஏவாள் என்ன சொன்னாள், எது அவள் மனதிற்கு வந்திருக்கலாம்?

7 ஏதேன் தோட்டத்திற்கு வெளியே துரத்தப்பட்டதால், ஆதாம் ஏவாளின் வாழ்க்கை பெரும் திண்டாட்டமாக இருந்தது. என்றாலும், முதல் குழந்தை பிறந்தபோது அவர்களுக்கு நம்பிக்கை துளிர்விட்டது; அந்தக் குழந்தைக்கு காயீன் என்று பெயர் சூட்டினார்கள்; அதன் அர்த்தம் “பெற்றெடுத்தது.” “யெகோவாவின் ஆசீர்வாதத்தால் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்” என ஏவாள் சொன்னாள். ஏதேன் தோட்டத்தில் யெகோவா தேவன் கொடுத்த வாக்குறுதி அவளுடைய மனதிற்கு வந்திருக்கலாம் என்பதை இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு பெண்ணுக்கு “வாரிசு” பிறக்கும், ஆதாமையும் ஏவாளையும் பாவக்குழியில் தள்ளிய பொல்லாதவனை அந்த “வாரிசு” ஒருநாள் அழிக்கும் என்பதே அந்த வாக்குறுதி. (ஆதி. 3:15; 4:1; NW) தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள பெண் தன்னைக் குறிக்கிறது என்றும், அந்த “வாரிசு” காயீனைக் குறிக்கிறது என்றும் ஏவாள் நினைத்துக்கொண்டாளா?

8 அப்படி நினைத்திருந்தால், அது தவறு. காயீன் வளர்ந்து வந்தபோது ஏவாளும் ஆதாமும் இப்படிப்பட்ட எண்ணத்தை அவனுக்கு ஊட்டியிருந்தால், அது மகா தவறு. ஏனென்றால், அது அவனுக்குத் தலைக்கனத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கும். பின்பு, ஏவாளுக்கு இரண்டாவது மகன் பிறந்தான்; ஆனால் காயீன் பிறந்தபோது சொன்னதுபோல, இவன் பிறந்தபோது ஏவாள் எதுவும் சொல்லவில்லை. இவனுக்கு ஆபேல் என்று பெற்றோர் பெயர் வைத்தார்கள்; அந்தப் பெயருக்கு, “வீணானது” என்ற அர்த்தமிருக்கலாம். (ஆதி. 4:2) ஆபேலுக்கு அப்படிப் பெயர் சூட்டியதை வைத்துப் பார்க்கும்போது, காயீனைவிட ஆபேலைத் தாழ்வாக நினைத்தார்கள் என்று அர்த்தமா? அவன்மீது எந்தவித எதிர்பார்ப்பும் வைக்கவில்லையா? நமக்குத் தெரியாது.

9. முதல் பெற்றோர் இன்றுள்ள பெற்றோருக்கு எப்படிப் பாடமாக இருக்கிறார்கள்?

9 அந்த முதல் பெற்றோர் இன்றுள்ள பெற்றோருக்கு ஒரு பாடமாக இருக்கிறார்கள். பெற்றோரே, உங்களுடைய சொல்லாலும் செயலாலும் பிள்ளைகளுக்குக் கர்வத்தையும் லட்சிய வெறியையும் தன்னலத்தையும் ஊட்டி வளர்க்கிறீர்களா? அல்லது, யெகோவா தேவனை நேசிக்கவும் அவருடன் நட்பு கொள்ளவும் கற்றுக் கொடுக்கிறீர்களா? முதல் பெற்றோர் தங்களுடைய பொறுப்பைச் செய்யத் தவறியது சோகத்திலும் சோகம். என்றாலும், அவர்களுடைய சந்ததியார் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பு இருந்தது.

ஆபேல் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார்​—எப்படி?

10, 11. காயீனும் ஆபேலும் என்ன வேலை செய்துவந்தார்கள், ஆபேல் எந்தக் குணத்தை வளர்த்துக்கொண்டார்?

10 அந்த இரண்டு பையன்களும் வளர்ந்துவரும்போது, குடும்பத்தின் வயிற்றுப்பாட்டுக்காக ஒரு வேலையை அவர்களுக்கு ஆதாம் கற்றுக்கொடுத்திருக்கலாம். காயீன் விவசாயி ஆகிறான், ஆபேல் மேய்ப்பன் ஆகிறார்.

11 அதேசமயத்தில், மிக முக்கியமான ஒன்றை ஆபேல் செய்கிறார்; ஆம், விசுவாசம் என்ற அருமையான குணத்தைக் காலப்போக்கில் வளர்த்துக்கொள்கிறார். அந்தக் குணத்தைப் பற்றித்தான் பவுல் பிற்பாடு எழுதினார். இதைச் சிந்தித்துப் பாருங்கள்: ஆபேல் வாழும் காலத்தில் எந்த மனிதரும் முன்னுதாரணமாய் இல்லை! அப்படியானால், யெகோவா தேவன்மீது எப்படி விசுவாசத்தை வளர்த்துக்கொள்கிறார்? அவருடைய விசுவாசத்திற்கு அஸ்திவாரமாக இருக்கிற மூன்று அம்சங்களை இப்போது சிந்திக்கலாம்.

12, 13. யெகோவாவின் படைப்புகளைக் கூர்ந்து கவனிப்பது விசுவாசத்தில் வளர ஆபேலுக்கு எப்படி உதவியிருக்கும்?

12 யெகோவாவின் படைப்புகள். உண்மைதான், நிலத்தை யெகோவா சபித்திருக்கிறார்; முட்களும் புதர்களும் மண்டிக் கிடப்பதால் விவசாயம் செய்வது பெரும்பாடாக இருக்கிறது. என்றாலும், ஆபேலின் குடும்பம் தொடர்ந்து உயிர் வாழத் தேவையான உணவுப்பொருள்களை இந்தப் பூமி அள்ளி வழங்குகிறது. அதோடு, இந்தப் பூமியிலுள்ள வேறெந்த படைப்பின் மீதும் சாபம் இல்லை. ஆம், மிருகங்கள், பறவைகள், மீன்கள் மீது எந்தச் சாபமும் இல்லை; மலைகள், ஏரிகள், ஆறுகள், கடல்கள் மீதும் இல்லை; வானம், மேகம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மீதும் இல்லை. கண்ணில் படுகிற அனைத்திலும் படைப்பாளரான யெகோவா தேவனின் மகா அன்பையும் ஞானத்தையும் நற்குணத்தையும் ஆபேல் காண்கிறார். (ரோமர் 1:​20-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் படைப்புகளையும் பண்புகளையும் நன்றியுடன் தியானித்துப் பார்க்கப் பார்க்க... ஆபேலின் விசுவாசம் பலமடைகிறது.

அன்பான படைப்பாளர்மீது விசுவாசம் வைப்பதற்கு ஆணித்தரமான ஆதாரத்தைப் படைப்பில் ஆபேல் கண்டார்

13 ஆன்மீக விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க ஆபேல் நிச்சயம் நேரம் செலவிட்டிருப்பார். அவர் ஆடு மேய்ப்பதைக் கற்பனையில் கொண்டுவாருங்கள். பொதுவாக மேய்ப்பர்கள் நிறையத் தூரம் நடக்க வேண்டியிருக்கும். ஆபேலும் தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் ஆறுகளையும் கடந்து செல்கிறார். பசும் புல்வெளி தேடி... தெள்ளிய நீரோடை தேடி... நிழல் தரும் இடம் தேடி... செல்கிறார். கடவுளுடைய படைப்புகள் அனைத்திலும் செம்மறி ஆடுகளுக்குத்தான் மனிதனின் பாதுகாப்பும் வழிகாட்டலும் உதவியும் ரொம்பவே தேவை. அப்படித்தான் அவை படைக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. ஆபேல் அந்த ஆடுகளைப் பார்க்கும்போது, ‘எனக்கும் வழிகாட்ட... என்னையும் பாதுகாக்க... மனிதனைவிட ஞானமும் வல்லமையும் உள்ள ஒருவர் தேவை’ என்று யோசித்திருப்பாரா? அதில் சந்தேகமே இல்லை. இதுபோல பல விஷயங்களைக் குறித்து நிச்சயம் ஜெபம் செய்திருப்பார். அதனால், அவருடைய விசுவாசம் மேன்மேலும் பலப்பட்டிருக்கும்.

14, 15. யெகோவாவின் வாக்குறுதிகளைப் பற்றித் தியானிக்க ஆபேலுக்கு என்ன விஷயங்கள் இருந்தன?

14 யெகோவாவின் வாக்குறுதிகள். ஏதேன் தோட்டத்தைவிட்டுத் துரத்தப்பட்டதற்கான காரணத்தை ஆதாமும் ஏவாளும் தங்களுடைய மகன்களுக்குக் கட்டாயம் சொல்லியிருப்பார்கள். எனவே, தியானிக்க ஆபேலுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

15 நிலம் சபிக்கப்பட்டிருக்கும் என யெகோவா சொல்லியிருந்தார்; அதன்படியே, முட்களும் புதர்களும் மண்டிக்கிடப்பதை ஆபேல் பார்க்கிறார். யெகோவா சொன்னது நிறைவேறியதைப் புரிந்துகொள்கிறார். கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் ஏவாள் வேதனைப்படுவாள் என யெகோவா முன்னுரைத்திருந்தார். ஏவாளுக்குக் குழந்தைகள் பிறக்கிறபோது இந்த வார்த்தைகளும் உண்மை என்பதை ஆபேல் உணர்ந்துகொள்கிறார். கணவரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏவாள் அளவுக்குமீறி ஏங்குவாள்... ஆதாமோ அவளை அடக்கி ஆளுவான்... என்பதையும் யெகோவா முன்னரே சொல்லியிருந்தார். இவையெல்லாம் தன் கண்முன்னாலேயே அரங்கேறுவதை ஆபேல் கவனிக்கிறார். யெகோவாவின் வார்த்தை முற்றிலும் நம்பகமானது என்பதை இந்த ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் தெரிந்துகொள்கிறார். எனவே, வாரிசு பற்றி கடவுள் தந்த வாக்குறுதி நிறைவேறும்... ஏதேனில் நடந்த தவறை அந்த வாரிசு ஒருநாள் சரிசெய்வார்... என்பதை விசுவாசிக்க ஆபேலுக்கு ஆணித்தரமான காரணங்கள் இருக்கின்றன.​—ஆதி. 3:​15-19.

16, 17. யெகோவாவுக்குச் சேவை செய்த கேருபீன்களிடமிருந்து ஆபேல் என்ன கற்றுக்கொண்டிருப்பார்?

16 யெகோவாவின் ஊழியர்கள். மனித குடும்பத்தில் நல்ல முன்மாதிரி என்று ஆபேலுக்கு யாருமே இல்லை. என்றாலும், புத்திக்கூர்மையுள்ள மனிதர் மட்டுமல்ல கேருபீன்களும் அந்தச் சமயத்தில் பூமியில் இருந்தார்கள். ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தியபின், அதன் நுழைவாயிலைக் காக்க கேருபீன்களை​—உயர்ந்த ஸ்தானம் வகிக்கும் தூதர்களை​—யெகோவா நிறுத்தினார்; இவ்வாறு, ஆதாம் ஏவாளோ அவர்களது சந்ததிகளோ அந்தப் பூஞ்சோலைக்குள் நுழைய முடியாதவாறு செய்துவிட்டார். சுடரொளி வீசும் வாள் ஒன்று எப்போதும் சுழன்று கொண்டிருக்கச் செய்தார்.​ஆதியாகமம் 3:​24-ஐ வாசியுங்கள்.

17 அந்த கேருபீன்களைப் பார்க்கும்போது, சிறுவன் ஆபேலுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். மனித உருவத்தில் இருக்கிற அவர்கள் பயங்கர பலசாலிகள் என்பது அவனுக்குப் புரிகிறது. அதோடு, எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருக்கிற... சுழன்று கொண்டிருக்கிற... அந்த வாளைப் பார்க்கும்போது அவனுக்கு பயமும் பிரமிப்பும் உண்டாகிறது. ஆபேல் வளர்ந்து வருகையில், புத்திக்கூர்மையும் வலிமையும் மிக்க அந்த கேருபீன்கள் சலிப்படைவதையோ தங்களுடைய பொறுப்பை விட்டுவிட்டுச் செல்வதையோ எப்போதாவது பார்க்கிறாரா? இல்லை. நாள்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக அவர்கள் அதே இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறார். இதன் மூலம்... யெகோவா தேவனுக்குச் சேவை செய்ய நீதியும் விசுவாசமும் உள்ள ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்கிறார். தன் குடும்பத்தாரிடம் இல்லாத உத்தமமும் கீழ்ப்படிதலும் அந்த கேருபீன்களிடம் இருப்பதைக் காண்கிறார். அந்தத் தூதர்களின் முன்மாதிரி அவரது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கேருபீன்கள் உத்தமத்தோடும் கீழ்ப்படிதலோடும் யெகோவாவுக்குச் சேவை செய்ததை ஆபேல் தன் வாழ்நாளெல்லாம் பார்த்தார்

18. நம் விசுவாசக் கட்டிடத்துக்கு எவை தூண்களாக இருக்கின்றன?

18 படைப்புகள் மூலமாக... வாக்குறுதிகள் மூலமாக... உண்மை ஊழியர்களாகிய தேவதூதர்கள் மூலமாக... யெகோவா தம்மைப் பற்றி வெளிப்படுத்திய அனைத்தையும் ஆபேல் தியானித்துப் பார்த்ததால் அவருடைய விசுவாசம் ஆழமாக வேரூன்றி வளர்ந்தது. அப்படியானால், அவருடைய முன்மாதிரி இன்று நம்மிடம் பேசுகிறது அல்லவா? குடும்ப அங்கத்தினர்கள் நல்ல முன்மாதிரிகளாய் இல்லாவிட்டாலும், குறிப்பாக இளைஞர்கள் யெகோவாமீது உண்மையான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஆபேலின் உதாரணம் அளிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள அற்புத படைப்பு... நம் கையில் தவழும் முழு பைபிள்... நம் கண்முன் காணும் விசுவாசிகளின் முன்மாதிரி... என இத்தனை தூண்கள் இருக்கும்போது நம் விசுவாசக் கட்டிடம் எவ்வளவு உறுதியாக நிற்க வேண்டும்!

ஆபேலின் பலி​—ஏன் சிறந்த பலி?

19. காலப்போக்கில், எந்த உண்மையை ஆபேல் புரிந்துகொண்டார்?

19 ஆபேலுக்கு யெகோவாமீது விசுவாசம் வளர வளர... அவருக்கு எதையாவது கொடுத்து தன் விசுவாசத்தைச் செயலில் காட்ட வேண்டுமென்ற ஆசையும் வளர்கிறது. ஆனால், இந்த அகிலத்தையே படைத்த ஆண்டவருக்குச் சாதாரண மனிதன் என்ன கொடுக்க முடியும்? மனிதனிடமிருந்து எந்த அன்பளிப்போ உதவியோ கடவுளுக்குத் தேவையில்லை. காலப்போக்கில், ஆபேல் ஓர் உண்மையைப் புரிந்துகொள்கிறார்; தன்னிடமுள்ள மிகச் சிறந்ததைச் சரியான உள்ளெண்ணத்தோடு யெகோவாவுக்குக் கொடுத்தால் அவர் ஆனந்தம் அடைவார் என்ற உண்மையைப் புரிந்துகொள்கிறார்.

ஆபேல் தன் பலியை விசுவாசத்துடன் செலுத்தினார்; காயீன் அப்படிச் செய்யவில்லை

20, 21. காயீனும் ஆபேலும் யெகோவாவுக்கு என்ன காணிக்கைகளைக் கொடுத்தார்கள், அவற்றை அவர் ஏற்றுக்கொண்டாரா?

20 ஆபேல் தன்னுடைய மந்தையிலுள்ள சில ஆடுகளைக் கொடுக்கத் தீர்மானிக்கிறார். ஆடுகள் ஈன்ற முதல் குட்டிகளை... கொழுத்த குட்டிகளை... தேர்ந்தெடுக்கிறார். அவற்றின் சிறந்த பாகங்களை யெகோவாவுக்குக் கொடுக்கிறார். அவருடைய அண்ணன் காயீனும்கூட, கடவுளின் ஆசீர்வாதத்தையும் தயவையும் பெற விரும்பி தன்னுடைய விளைச்சலில் சிலவற்றைக் காணிக்கையாகக் கொடுக்கிறான். ஆனால், அவனுடைய உள்ளெண்ணம் சரியாக இல்லை. அவர்கள் இருவரும் காணிக்கை செலுத்திய பிறகு இந்த உண்மை அப்பட்டமாகத் தெரிந்துவிடுகிறது.

21 ஆதாமின் இரண்டு மகன்களும் ஒருவேளை பலிபீடம் கட்டி, தங்களுடைய காணிக்கைகளை நெருப்பில் சுட்டெரித்திருக்கலாம். கேருபீன்களின் கண்ணில்படும் தூரத்தில் காணிக்கைகளைச் செலுத்தியிருக்கலாம். அந்தச் சமயத்தில் யெகோவாவின் பிரதிநிதிகளாக இந்தப் பூமியில் இருந்தது அந்த கேருபீன்கள் மட்டும்தான். யெகோவா அந்தக் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டாரா? ‘ஆபேலையும் அவர் காணிக்கையையும் யெகோவா அங்கீகரித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 4:4) ஆனால், அதை எப்படி அங்கீகரித்தார் என்று பைபிள் சொல்வதில்லை.

22, 23. ஆபேலின் பலியை மட்டும் யெகோவா ஏன் ஏற்றுக்கொண்டார்?

22 ஆபேலின் பலியை மட்டும் ஏன் யெகோவா ஏற்றுக்கொண்டார்? வெறுமனே அந்தப் பலியை மட்டும்தான் பார்த்து யெகோவா அங்கீகரித்தாரா? ஜீவனுள்ள ஒரு பிராணியை அதன் உயிராகிய இரத்தத்துடன் ஆபேல் பலியாகச் செலுத்தினார் என்பது உண்மைதான். ஆனால், அந்தப் பலி எந்தளவு மதிப்புமிக்கது என்பதை அவர் உணர்ந்திருந்தாரா? பல நூற்றாண்டுகள் கழித்து, குறையில்லாத ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தும்படி யெகோவா கட்டளையிட்டார்; இதன் மூலம், தமது பரிபூரண மகனின் உயிர் பலிசெலுத்தப்படும் என்பதை... அதாவது ‘கடவுளால் அனுப்பப்படும் ஆட்டுக்குட்டியின்’ மாசற்ற இரத்தம் சிந்தப்படும் என்பதை... படமாகக் காட்டினார். (யோவா. 1:29; யாத். 12:​5-7) இந்தளவு நுட்ப விவரங்கள் ஆபேலுக்குத் தெரிந்திருக்க துளிகூட வாய்ப்பில்லை!

23 ஆனால், ஒன்று மட்டும் நமக்கு நன்றாகத் தெரியும்: ஆபேல் தன்னிடம் இருந்த மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுத்தார். யெகோவா அந்தப் பலியைப் பார்த்து மட்டுமல்ல அதைக் கொடுத்தவரையும் பார்த்துதான் அங்கீகரித்தார். யெகோவா மீதுள்ள அன்பினாலும் உண்மையான விசுவாசத்தினாலும் ஆபேல் பலி செலுத்தினார்.

24. (அ) காயீனின் காணிக்கை குறையுள்ளது என்று ஏன் சொல்ல முடியாது? (ஆ) காயீன் எப்படி இன்றுள்ள அநேகரைப் போல இருந்தான்?

24 ஆனால், காயீனின் விஷயத்தில் என்ன நடந்தது? ‘காயீனையும் அவன் காணிக்கையையும் யெகோவா அங்கீகரிக்கவில்லை.’ (ஆதி. 4:5) அதற்காக, காயீன் செலுத்திய காணிக்கையே குறையுள்ளது என்று சொல்ல முடியாது, ஏனென்றால் கடவுள் பிற்பாடு திருச்சட்டத்தைக் கொடுத்தபோது வயலில் விளைவதையும் காணிக்கையாகச் செலுத்தலாம் என்று சொன்னார். (லேவி. 6:​14, 15) ஆனால், ‘காயீனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:​12-ஐ வாசியுங்கள்.) இன்று வாழும் பெரும்பாலான மக்களைப் போலவே ஏதோ கடமைக்குக் காணிக்கை செலுத்திவிட்டால் போதுமென காயீன் நினைத்தான். யெகோவாமீது அவனுக்கு உண்மையான அன்போ விசுவாசமோ இல்லை. இது சீக்கிரத்தில் அவனுடைய செயல்களில் அப்பட்டமாகத் தெரிய வருகிறது.

25, 26. காயீனுக்கு யெகோவா என்ன எச்சரிப்பு கொடுத்தார், இருந்தாலும் அவன் என்ன செய்தான்?

25 யெகோவா தன்னை அங்கீகரிக்கவில்லை என்று தெரிந்ததும் காயீன் தன் தம்பியைப் போல நல்லவனாக மாற நினைக்கிறானா? இல்லை. தம்பிமீது அவன் மனதில் வெறுப்பும் கோபமும்தான் கொப்பளிக்கிறது. இதை யெகோவா கவனித்து, பொறுமையாக அவனுக்குப் புத்தி சொல்கிறார். அவன் தன்னுடைய போக்கிலேயே போனால் பெரிய பாவம் செய்துவிடுவான் என்று எச்சரிக்கிறார், மனம் மாறினால் அவனுக்கு “மேன்மை” உண்டாகும் என்றும் சொல்கிறார்.​—ஆதி. 4:​6, 7.

26 ஆனால், கடவுள் கொடுக்கிற எச்சரிப்பை காயீன் அசட்டை செய்கிறான். ஒருநாள் ஆபேலை வயல்வெளிக்கு அழைத்துச் செல்கிறான். நம்பி வந்த தம்பியை அடித்துக் கொல்கிறான். (ஆதி. 4:8) ஒரு கருத்தில் பார்த்தால், மதத் துன்புறுத்தலுக்கு ஆளான முதல் நபர்... முதல் உயிர்த்தியாகி... ஆபேல்தான் என்று சொல்லலாம். அவர் இறந்தாலும் யெகோவா அவரை மறந்துவிடவில்லை.

27. (அ) ஆபேல் மீண்டும் உயிர் பெற்று வருவார் என ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்? (ஆ) நாம் என்ன செய்தால் ஆபேலை ஒருநாள் பார்க்க முடியும்?

27 அடையாள அர்த்தத்தில் பார்த்தால், பழிவாங்கச் சொல்லி ஆபேலின் இரத்தம் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டது; அதாவது நீதி கேட்டுக் கூப்பிட்டது. கடவுளும் பொல்லாத காயீனைத் தண்டித்து, நீதி வழங்கினார். (ஆதி. 4:​9-12) இன்று, ஆபேலின் விசுவாசத்தைப் பற்றிய பதிவு நம்மிடம் பேசுகிறது. அவர் சுமார் நூறு வருடங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்திருப்பார். அந்தக் காலத்தில் நூறு வருடங்கள் என்பது சொற்ப காலம்தான். இருந்தாலும், பேர் சொல்லும் அளவுக்கு வாழ்ந்தார். பரலோகத் தகப்பனான யெகோவாவின் அன்பையும் அங்கீகாரத்தையும் சம்பாதித்துவிட்ட நம்பிக்கையோடு இறந்தார். (எபி. 11:4) அவர் யெகோவாவின் ஞாபகத்தில் இருக்கிறார்... பூஞ்சோலை பூமியில் மீண்டும் உயிர் பெற்று வருவார்... என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம். (யோவா. 5:​28, 29) ஆனால், அவரைப் பார்க்க நீங்கள் அங்கே இருப்பீர்களா? இப்போது ஆபேல் பேசுவதைக் கேட்கவும் அவருடைய உன்னத விசுவாசத்தைப் பின்பற்றவும் நீங்கள் தீர்மானமாய் இருந்தால் அங்கே இருப்பீர்கள்!

^ பாரா. 5 ‘உலகம் உண்டானது’ என்பதற்கான கிரேக்க சொற்றொடர் விதைகளைத் தூவுவதை அர்த்தப்படுத்துகிறது, இது இனப்பெருக்கத்தைக் குறிக்கிறது. அப்படியானால், முதன்முதலில் பிறந்த மனிதனை அந்தச் சொற்றொடர் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், “உலகம் உண்டான” சமயத்தைப் பற்றி இயேசு குறிப்பிட்டபோது முதன்முதலில் பிறந்த காயீனைப் பற்றிச் சொல்லாமல் ஏன் ஆபேலைப் பற்றிச் சொன்னார்? காயீன் எடுத்த தீர்மானங்களும் செய்த செயல்களும், அவன் வேண்டுமென்றே யெகோவா தேவனுக்கு விரோதமாய்க் கலகம் செய்ததைக் காட்டின. ஆகையால், காயீனும் அவனுடைய பெற்றோரைப் போலவே மீட்கப்பட மாட்டான், ஆம், உயிர்த்தெழுப்பப்பட மாட்டான்.