Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான்காம் அதிகாரம்

‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’

‘நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்’

1, 2. (அ) ரூத் மற்றும் நகோமியின் பயணத்தையும் அவர்கள் சுமந்த சோகத்தையும் விவரியுங்கள். (ஆ) ரூத் மற்றும் நகோமியின் பயணங்கள் எப்படி மாறுபட்டிருந்தன?

உயர்ந்த மோவாப் சமவெளி. காற்று பலமாக வீசும் பரந்துவிரிந்த நிலப்பரப்பு. வெறிச்சோடிய நீண்ட பாதை. தூரத்தில் இரு உருவங்கள் சிறு புள்ளிகளாய்த் தெரிகின்றன. ரூத் தனது மாமியார் நகோமியோடு போய்க்கொண்டிருக்கிறாள். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... இருள் சூழ்ந்து வருவதை ரூத் கவனிக்கிறாள். உறங்கும் நேரம் நெருங்கிவிட்டதோ என்பதுபோல் நகோமியை ஏறிட்டுப் பார்க்கிறாள். அவள் நகோமியை நெஞ்சார நேசிக்கிறாள், உயிரைக் கொடுத்தாவது அவளைக் கவனித்துக்கொள்வாள்.

2 அந்த இருவருடைய இதயத்தையும் துக்கம் பாறாங்கல்போல் அழுத்திக்கொண்டிருக்கிறது. நகோமி தன் கணவனை இழந்து பல காலங்களாகத் தவித்துக்கொண்டிருக்கிறாள்; இப்போது, தன் புதல்வர்களான கிலியோனையும் மக்லோனையும் பறிகொடுத்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாள். ரூத்தும் துயரத்தில் துவண்டிருக்கிறாள். மக்லோன் அவளது கணவன். இப்போது, அவளும் நகோமியும் இஸ்ரவேலில் உள்ள பெத்லகேம் நகரத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போவதென்னவோ ஒரே ஊருக்குத்தான்... ஆனால் அவர்களுடைய பயணங்கள் மாறுபட்ட பயணங்கள். நகோமி தன்னுடைய தாயகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறாள். ரூத்தோ தன்னுடைய ஊரையும் உறவையும்... சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்... தேவர்களையும் தேவிகளையும்... விட்டுவிட்டு முன்பின் தெரியாத ஓர் இடத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.​—ரூத் 1:​3-6-ஐ வாசியுங்கள்.

3. எந்தக் கேள்விகளுக்கான விடைகள் ரூத்தின் விசுவாசத்தைப் பின்பற்ற நமக்கு உதவும்?

3 இப்பேர்ப்பட்ட மாற்றம் செய்ய அந்த இளம் பெண்ணை எது தூண்டியது? புது வாழ்க்கை தொடங்குவதற்கும் நகோமியைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக்கொள்வதற்கும் ரூத்துக்கு எப்படிப் பலம் கிடைத்தது? இவற்றுக்கு விடை தேடுகையில்... மோவாபியப் பெண் ரூத்தின் விசுவாசத்தை எந்தெந்த விதங்களில் பின்பற்றலாம் எனத் தெரிந்துகொள்வோம். ( “தலைசிறந்த சிறு படைப்பு” என்ற பெட்டியையும் காண்க.) முதலில், பெத்லகேமுக்குப் போகும் நீண்ட பாதைக்கு நகோமியும் ரூத்தும் வந்த காரணத்தை ஆராய்வோம்.

ஒரு குடும்பத்தை உலுக்கிய சோகங்கள்

4, 5. (அ) நகோமியின் குடும்பம் ஏன் மோவாபுக்குச் சென்றது? (ஆ) மோவாபில் நகோமிக்கு என்ன சவால்கள் வந்தன?

4 சவக்கடலுக்குக் கிழக்கே அமைந்திருக்கும் மோவாப் என்ற ஒரு சிறிய தேசத்தில் ரூத் வளர்ந்து வந்தாள். அதன் பெரும்பகுதி பீடபூமி... ஆங்காங்கே காடுகள் காணப்படும்... குறுக்கே செங்குத்தான பள்ளத்தாக்குகள் இருக்கும். இஸ்ரவேல் தேசத்தைப் பஞ்சம் புரட்டிப்போட்ட சமயத்தில்கூட, ‘மோவாப் தேசத்தை’ பசுமை போர்த்தியிருந்தது. அதனால்தான், மக்லோனையும் அவருடைய குடும்பத்தையும் ரூத் சந்திக்க நேர்ந்தது.​—ரூத் 1:1.

5 இஸ்ரவேலில் பஞ்சம் நிலவியதால், நகோமியின் கணவர் எலிமெலேக்கு தன்னுடைய மனைவிமக்களோடு மோவாப் தேசத்தில் அந்நியராய்க் குடியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. குடும்பத்திலிருந்த ஒவ்வொருவருடைய விசுவாசத்திற்கும் இது சவாலாக இருந்திருக்க வேண்டும்; ஏனென்றால், யெகோவா நிர்ணயித்த புனித இடத்தில் அவரைத் தவறாமல் வழிபட அவர்களால் முடியவில்லை. (உபா. 16:​16, 17) நகோமி எப்படியோ தன் விசுவாசத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டாள். ஆனாலும் அவளுடைய அன்புக் கணவர் இறந்தபோது இடிந்துபோனாள்.​—ரூத் 1:​2, 3.

6, 7. (அ) தன் மகன்கள் மோவாபியப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டது ஏன் நகோமிக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கலாம்? (ஆ) நகோமி தன் மருமகள்களை நடத்திய விதம் ஏன் பாராட்டத்தக்கது?

6 மகன்கள் இருவரும் மோவாபியப் பெண்களை மணமுடித்தபோது நகோமிக்கு இடிமேல் இடி விழுந்ததுபோல் இருந்திருக்கலாம். (ரூத் 1:4) மூதாதையான ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்குக்குப் பெண் தேடிய சமயத்தில், யெகோவாவை வணங்கிய தன் சொந்த ஜனத்திலிருந்துதான் பெண் எடுத்தார்... அதற்காகப் பெரும் முயற்சி செய்தார்... என்பதையெல்லாம் அவள் அறிந்திருந்தாள். (ஆதி. 24:​3, 4) அந்நிய தேசத்தாருடன் இஸ்ரவேலர் சம்பந்தம் பண்ணுவதைத் திருச்சட்டமும்கூட தடை செய்தது. ஏனென்றால், அது கடவுளுடைய மக்களைச் சிலை வழிபாட்டுக்கு இழுத்துச் சென்றுவிடும்.​—உபா. 7:​3, 4.

7 இருந்தாலும், மக்லோனும் கிலியோனும் மோவாபியப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். இது நகோமிக்குக் கவலையையோ ஏமாற்றத்தையோ ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனாலும் தன்னுடைய மருமகள்கள் ரூத் மீதும் ஒர்பாள் மீதும் பாசத்தையும் நேசத்தையும் கொட்டினாள். என்றைக்காவது அவர்களும் தன்னைப் போல் யெகோவாவை வழிபடுவார்கள் என அவள் கனவு கண்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, ரூத்தும் ஒர்பாளும் நகோமியிடம் பிரியமாய் இருந்தார்கள். சோகப்புயல் தாக்கியபோது அந்த உறவுதான் அவர்களைத் தாங்கி நிறுத்தியது. தாய்ப்பாக்கியம் கிடைப்பதற்கு முன்பே அந்த இளம் பெண்கள் இருவரும் விதவைகளாகும் துர்பாக்கியத்தைப் பெற்றார்கள்.​—ரூத் 1:5.

8. யெகோவாவிடம் ரூத்தை எது கவர்ந்திருக்கலாம்?

8 இப்படிப்பட்ட சோகத்தைத் தாங்கிக்கொள்ள ரூத்தின் மதம் அவளுக்கு உதவியதா? உதவியிருக்க வாய்ப்பே இல்லை. மோவாபியர் பல தெய்வங்களை வழிபட்டார்கள், முக்கியமாய் கேமோஷ் தெய்வத்தை வழிபட்டார்கள். (எண். 21:29) அந்தக் காலத்தில், குழந்தைகளை நரபலி கொடுப்பது போன்ற கொடுமையும் கொடூரமும் சர்வசாதாரணம்; இதற்கு மோவாபிய மதம் விதிவிலக்காய் இருந்திருக்காது. ஆனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா எல்லோரையும் அன்புடனும் இரக்கத்துடனும் நடத்துகிறார்... யாரையும் அச்சுறுத்துவதோ பயமுறுத்துவதோ இல்லை... என்பதைப் பற்றி மக்லோனோ நகோமியோ சொன்னபோது ரூத்துக்கு ரொம்ப வித்தியாசமாய் இருந்திருக்கும். (உபாகமம் 6:​5-ஐ வாசியுங்கள்.) ரூத் தன் வாழ்வில் பேரிழப்பைச் சந்தித்தபோது, நகோமியிடம் இன்னும் அதிக நெருக்கமாய் ஆகியிருப்பாள்; சர்வவல்ல தேவன் யெகோவாவைப் பற்றி... அவரது அற்புத செயல்களைப் பற்றி... அவர் தம் மக்களை அன்புடனும் கருணையுடனும் நடத்தியதைப் பற்றி... நகோமி சொன்னபோது காதுகொடுத்துக் கேட்டிருப்பாள்.

துக்கமும் துயரமும் வாட்டியபோது ரூத் ஞானமாய் நகோமியிடம் நெருங்கியிருந்தாள்

9-11. (அ) நகோமியும் ரூத்தும் ஒர்பாளும் எடுத்த தீர்மானம் என்ன? (ஆ) நகோமி, ரூத், ஒர்பாள் ஆகியோருக்கு ஏற்பட்ட சோக சம்பவங்களிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

9 நகோமி தன் சொந்த தேசத்தின் நிலைமையைத் தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தாள். இஸ்ரவேலைவிட்டுப் பஞ்சம் பறந்துவிட்டது என்ற செய்தி ஒருநாள் அவள் காதை எட்டியது; இந்தச் செய்தியை வணிக வியாபாரி யாராவது கொண்டுவந்திருக்கலாம். யெகோவா அப்போது இஸ்ரவேல் மக்கள்மீது கருணை காட்டியிருந்தார். பெத்லகேம் (அதன் அர்த்தம் “உணவு இல்லம்”) மறுபடியும் அதன் பெயருக்கேற்ப விளங்கியது. அதனால், நகோமி தன் தாயகத்திற்குத் திரும்பிப்போகத் தீர்மானித்தாள்.​—ரூத் 1:6.

10 ரூத்தும் ஒர்பாளும் என்ன செய்தார்கள்? (ரூத் 1:7) அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சோகம் நகோமியுடன் இருந்த பந்தத்தை இன்னும் பலமாக்கியிருந்தது. அதிலும், நகோமி காட்டுகிற கனிவு... யெகோவா மீது அவளுக்கு இருக்கிற உறுதியான விசுவாசம்... ரூத்தை ரொம்பவே ஈர்த்திருந்தது. இந்த மூன்று விதவைகளும் ஒன்றுசேர்ந்து யூதாவை நோக்கிப் பயணித்தார்கள்.

11 நல்லோர் தீயோர் எல்லோருடைய வாழ்விலும் சோக மேகங்கள் வந்துபோகின்றன என்பதை ரூத் பதிவு நமக்கு நினைப்பூட்டுகிறது. (பிர. 9:​2, 11) தாங்க முடியாத இழப்பு நமக்கு ஏற்படும்போது மற்றவர்களிடம் ஆறுதலையும் ஆதரவையும் தேடிச் செல்வது அருமையான குணம் என்பதை இந்தப் பதிவு எடுத்துக்காட்டுகிறது. முக்கியமாக, நகோமியின் கடவுளான யெகோவாவிடம் தஞ்சம் புகுந்திருப்போரை நாடிச்செல்வது ஞானமான செயல் என்பதைக் காட்டுகிறது.​—நீதி. 17:17.

ரூத் காட்டிய பற்றுமாறா அன்பு

12, 13. ரூத்தையும் ஒர்பாளையும் தங்கள் தங்கள் தாய்வீட்டுக்குப் போகச்சொல்லி ஏன் நகோமி கேட்டுக்கொண்டாள், முதலில் அந்த இருவரும் எப்படிப் பிரதிபலித்தார்கள்?

12 இந்த மூன்று விதவைகளும் சில மைல் தூரம்தான் கடந்து வந்திருப்பார்கள்; நகோமியை வேறொரு கவலை வாட்டியது. தன்னுடன் வந்துகொண்டிருந்த அந்த இரண்டு இளம் பெண்களைப் பற்றி... தன் மீதும் தன் மகன்கள் மீதும் அவர்கள் காட்டிய அன்பைப் பற்றி... நினைத்துப் பார்த்தாள். தன்னால் அவர்களுடைய வாழ்க்கை இன்னும் பாரமாகிவிடுமோ என்ற எண்ணம் அவள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் ஒரேயடியாக தங்களுடைய தாய்நாட்டை விட்டுவிட்டு பெத்லகேமுக்கு வந்துவிட்டால், அவர்களுக்காக என்ன செய்ய முடியுமென யோசித்தாள்.

13 கடைசியில், நகோமி மனம் திறந்தாள்; “நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; இறந்துபோன என் மகன்களுக்கும் எனக்கும் நீங்கள் பற்றுமாறா அன்பைக் காட்டியதைப் போல, யெகோவா உங்களுக்குப் பற்றுமாறா அன்பைக் காட்டுவாராக” என்று சொன்னாள். அதோடு, அவர்கள் இருவரும் மறுமணம் செய்துகொண்டு நலமுடன் வாழ யெகோவா அருள்புரிவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தாள். பின்பு, “அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுதார்கள்.” இளகிய மனமும் தியாக உள்ளமும் படைத்த நகோமியிடம் ரூத்தும் ஒர்பாளும் இந்தளவு பாசம் வைத்திருந்ததில் ஆச்சரியமே இல்லை. “நாங்கள் உங்களுடனேயே வந்துவிடுகிறோம், உங்களுடைய மக்களிடமே வந்துவிடுகிறோம்” என்று அவர்கள் இருவரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.​—ரூத் 1:​8-10, NW.

14, 15. (அ) ஒர்பாள் யாரிடம் திரும்பிப் போனாள்? (ஆ) ரூத்தையும் திரும்பிப்போக வைப்பதற்கு நகோமி அவளிடம் என்ன சொன்னாள்?

14 ஆனால், நகோமி தன்னுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்தாள். இஸ்ரவேலுக்குப் போனபின் தன்னால் அவர்களுக்கு எதுவுமே செய்ய முடியாது என்பதற்கு வலிமையான காரணங்களை முன்வைத்தாள். தனக்குக் கணவனும் இல்லை... மருமகள்களுக்குப் புது வாழ்க்கை அமைத்துக் கொடுக்க மகன்களும் இல்லை... வருங்காலத்திலும் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை... என்று சொன்னாள். தன்னால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமே தன்னை வதைப்பதாகச் சொன்னாள். நகோமியின் வார்த்தைகள் ஒர்பாளை யோசிக்க வைத்தன. மோவாபில் அவளை அரவணைக்க ஒரு குடும்பம் இருக்கிறது, தாங்க ஒரு தாய் இருக்கிறாள், வரவேற்க ஒரு வீடும் இருக்கிறது. அதனால், மோவாபில் தங்கிவிடுவதே நல்லதென அவளுக்குப் பட்டது. கனத்த இதயத்தோடு நகோமிக்கு முத்தம் கொடுத்துவிட்டு விடைபெற்றாள்.​—ரூத் 1:​11-14.

15 ரூத்தைப் பற்றி என்ன? நகோமி சொன்ன காரணங்கள் இவளுக்கும்தான் பொருந்தும். ஆனாலும், இவள் ‘நகோமியை விடாமல் பற்றிக்கொண்டாள்.’ எப்படிச் சொல்லலாம்? மறுபடியும் நகோமி தன் வழியே போகையில், பின்னாலேயே ரூத் சென்றாள்; அதை நகோமி கவனித்து, “இதோ பார்! உன் ஓரகத்தி தன் இனத்தவரையும் தன் தெய்வங்களையும் நோக்கித் திரும்பிப் போய்விட்டாள். அவளைப் போல் நீயும் திரும்பிப்போ” என்று சொன்னாள். (ரூத் 1:​15, பொது மொழிபெயர்ப்பு) நகோமியின் வார்த்தைகள் ஒரு முக்கியமான குறிப்பைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒர்பாள் தன் மக்களிடம் மட்டுமல்ல ‘தன் தெய்வங்களிடமும்’ திரும்பிப் போய்விட்டாள். கேமோஷையும் மற்ற பொய்த் தெய்வங்களையும் வழிபடுவதிலேயே அவள் திருப்திப்பட்டுக்கொண்டதால் திரும்பிப் போய்விட்டாள். ரூத்தும் அப்படித்தானா?

16-18. (அ) ரூத் எப்படிப் பற்றுமாறா அன்பைக் காட்டினாள்? (ஆ) பற்றுமாறா அன்பைப் பற்றி ரூத்திடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (இந்த இரண்டு பெண்களின் படங்களையும் காண்க.)

16 வெறிச்சோடிய அந்தச் சாலையில் நகோமியைப் பார்த்தபோது, ரூத்தின் உள்ளத்தில் உறுதியும் தீர்மானமும் நிறைந்திருந்தது. நகோமி மீதும் நகோமியின் கடவுள் மீதும் அவளது இதயத்தில் அன்பு பொங்கியது. ‘நான் உங்களைப் பின்பற்றாமல் உங்களைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உங்களுடைய ஜனம் என்னுடைய ஜனம்; உங்களுடைய தேவன் என்னுடைய தேவன். நீங்கள் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உங்களைவிட்டு என்னைப் பிரித்தால், யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்’ என்று சொன்னாள்.​—ரூத் 1:​16, 17.

‘உங்களுடைய ஜனம் என்னுடைய ஜனம், உங்களுடைய தேவன் என்னுடைய தேவன்’

17 ரூத் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புமிக்கவை, அவள் மடிந்து மண்ணுக்குள் சென்று கிட்டத்தட்ட 3,000 வருடங்கள் கடந்த பின்பும் அவை நம் காதில் எதிரொலிக்கின்றன. அந்த வார்த்தைகள் பொன்னான ஒரு குணத்தை... பற்றுமாறா அன்பை... பூரணமாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன. நகோமிமீது ரூத் வைத்திருக்கிற அன்பு அசைக்க முடியாததாய் இருப்பதால், காந்தம்போல் உறுதியாய் இருப்பதால், நகோமி எங்கே சென்றாலும் ரூத்தின் உடலும் உள்ளமும் அவளைப் பின்தொடரும். சாவு மட்டும்தான் அவர்களைப் பிரிக்கும். நகோமியின் மக்களை ரூத் தன் மக்களாகவே ஏற்றுக்கொண்டாள். மோவாபோடு தனக்கிருந்த எல்லாத் தொடர்பையும் அறுத்துவிட்டு... மோவாபியத் தெய்வங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு... நகோமியுடன் போகத் தயாராயிருந்தாள். ஒர்பாளைப் போலின்றி, நகோமியின் கடவுளாகிய யெகோவாதான் தன்னுடைய கடவுளென மனப்பூர்வமாகச் சொன்னாள்.  *

18 இப்போது, அவர்கள் இருவர் மட்டுமே பெத்லகேம் நோக்கி நீண்ட பயணத்தைத் தொடருகிறார்கள். நடந்துசெல்ல அவர்களுக்கு ஒரு வாரம் எடுத்திருக்கலாம் என ஒரு கணக்கு காட்டுகிறது. அவர்கள் இருவரும் வேதனையைச் சுமந்தபடி செல்கையில்... ஒருவருக்கொருவர் உற்ற துணையாய் இருந்து ஆறுதல் அளித்திருப்பார்கள்.

19. ரூத் காட்டிய பற்றுமாறா அன்பை நம் குடும்பத்திலும் நட்பு வட்டத்திலும் சபையிலும் எப்படிக் காட்டலாம்?

19 இந்த உலகில் துன்ப துயரங்களுக்குத் தட்டுப்பாடே இல்லை. இந்தக் ‘கொடிய காலங்களில்’ எல்லாவித இழப்புகளையும் இன்னல்களையும் நாம் சந்திக்கிறோம். (2 தீ. 3:1) ஆகவே, ரூத் காட்டிய குணம் வேறெந்த காலத்தையும்விட இந்தக் காலத்தில்தான் ரொம்ப முக்கியம். பற்றுமாறா அன்பு... உடும்புபோல் உறுதியாகப் பற்றிக்கொள்ளும் பண்பு... தீமை நிறைந்த இந்த உலகத்தில் நன்மை செய்யத் தூண்டும் வலிமைமிக்க சக்தியாய் விளங்குகிறது. இந்தப் பண்பு நம் மண வாழ்விலும் குடும்ப உறவிலும் நட்பு வட்டத்திலும் கிறிஸ்தவச் சபையிலும் பளிச்சிட வேண்டும். (1 யோவான் 4:​7, 8, 20-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட அன்பை நாம் வளர்த்துக்கொள்ளும்போது, ரூத்தின் சிறந்த உதாரணத்தைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம்.

பெத்லகேமில் ரூத்தும் நகோமியும்

20-22. (அ) மோவாபில் நகோமியின் வாழ்க்கை அவளை எப்படிப் பாதித்திருந்தது? (ஆ) தன் கஷ்டங்களைப் பற்றி என்ன தவறான கண்ணோட்டம் நகோமிக்கு இருந்தது? (யாக்கோபு 1:​13-ஐயும் காண்க.)

20 பற்றுமாறா அன்பைப் பற்றி வாய்நிறைய பேசுவதற்கும் அதை வாழ்க்கையில் வெளிக்காட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரூத் தன்னுடைய மாமியார் நகோமியிடம் மட்டுமல்ல, தான் ஏற்றுக்கொண்ட கடவுளிடமும் பற்றுமாறா அன்பைக் காட்டும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறாள்.

21 கடைசியில், எருசலேமுக்குத் தெற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெத்லகேம் கிராமத்தில் இந்த இரு பெண்களும் கால் பதிக்கிறார்கள். ஒருகாலத்தில் நகோமியும் அவளுடைய குடும்பமும் இந்த ஊரில் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்துவந்தார்கள் எனத் தெரிகிறது. ஏனென்றால், நகோமி வீடு திரும்பியது பற்றிய பேச்சுதான் ஊரெங்கும் அடிபடுகிறது. அங்கிருந்த பெண்கள் அவளை உற்றுப்பார்த்து, “நகோமியா இது?” என்று கேட்கிறார்கள். மோவாபில் வாழ்ந்த வாழ்க்கை அவளை அந்தளவுக்கு உருக்குலைத்திருக்கிறது, அவளுடைய முகம் களையிழந்திருக்கிறது; வருஷக்கணக்காகக் கஷ்டத்திற்குமேல் கஷ்டம் அனுபவித்ததையும் கண்ணீருக்குமேல் கண்ணீர் சிந்தியதையும் அவளுடைய தோற்றமே காட்டிக்கொடுக்கிறது.​—ரூத் 1:​19, NW.

22 தனக்கு வாழ்க்கை எந்தளவு கசந்துவிட்டது என்பதை உற்றார் உறவினரிடமும் அண்டை அயலாரிடமும் நகோமி தெரிவிக்கிறாள். சொல்லப்போனால், “என் இனிமை” என்ற அர்த்தமுடைய நகோமி என்ற பெயரையே மாற்றிக்கொள்ள வேண்டுமென நினைக்கிறாள். அதற்குப் பதிலாக, “கசப்பு” என்ற அர்த்தமுடைய மாராள் என்ற பெயரில் தன்னை அழைக்கும்படி சொல்கிறாள். பாவம் நகோமி! முன்பு வாழ்ந்த யோபுவைப் போலவே, யெகோவா தேவன்தான் தனக்குக் கஷ்டங்கள் கொடுத்துவிட்டதாக நினைக்கிறாள்.​—ரூத் 1:​20, 21; யோபு 2:10; 13:​24-26.

23. எதைப் பற்றி ரூத் யோசிக்க ஆரம்பித்தாள், ஏழைகளுக்காகத் திருச்சட்டத்தில் என்ன ஏற்பாடு இருந்தது? (அடிக்குறிப்பையும் காண்க.)

23 அந்த இரு பெண்களும் பெத்லகேமில் குடியேறி வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்; வயிற்றுப்பிழைப்புக்கு என்ன செய்யலாமென ரூத் யோசிக்க ஆரம்பிக்கிறாள். இஸ்ரவேலில் உள்ள ஏழைகளுக்கு யெகோவா செய்திருக்கிற அன்பான ஓர் ஏற்பாட்டைப் பற்றித் தெரிந்துகொள்கிறாள். அறுவடை காலத்தில், அறுப்பவர்களுக்குப் பின்னால் போய் அவர்கள் சிந்துகிற கதிர்களையும் வயல் ஓரங்களில் வளர்ந்துநிற்கும் கதிர்களையும் ஏழைகள் பொறுக்கிக்கொள்ளலாம் எனத் திருச்சட்டத்தில் யெகோவா குறிப்பிட்டிருக்கிறார். *​—லேவி. 19:​9, 10; உபா. 24:​19-21.

24, 25. போவாஸின் வயலுக்கு எதேச்சையாகப் போனபோது ரூத் என்ன செய்தாள், கதிர் பொறுக்கும் வேலை எப்படிப்பட்ட வேலை?

24 பார்லி அறுவடை நடந்துகொண்டிருக்கிறது; நம் நாட்காட்டியின்படி பார்த்தால், அது ஒருவேளை ஏப்ரல் மாதமாக இருக்கலாம். ரூத் வயல்வெளிக்குப் போகிறாள்; கதிர் பொறுக்க யாராவது தனக்கு அனுமதி தருவார்களா எனப் பார்க்கிறாள். எதேச்சையாக அவள் கண்ணில் போவாஸ் என்பவருடைய வயல் தென்படுகிறது. அவர் ஒரு செல்வந்தர், பல நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர்; நகோமியின் காலம்சென்ற கணவரான எலிமெலேக்கின் உறவினர். திருச்சட்டத்தின்படி, கதிர் பொறுக்க அவளுக்கு உரிமை இருந்தாலும் அவள் அதைக் காரணம்காட்டி திடுதிப்பென்று வயலுக்குள் இறங்குவதில்லை. அறுப்பவர்களை மேற்பார்வை செய்யும் ஓர் இளம் மனிதனை அணுகி அனுமதி கேட்கிறாள். அவர் அனுமதி தருகிறார், ரூத்தும் உடனடியாக வேலையைத் தொடங்குகிறாள்.​—ரூத் 1:22–2:​3, 7.

25 இப்போது உங்கள் மனக்காட்சியில் இதைப் பாருங்கள்: அறுவடை செய்கிறவர்களின் பின்னால் ரூத் போகிறாள். கூர்மையான அரிவாளால் அறுக்கும்போது கீழே சிந்துகிற கதிர்களையும் விடுபட்ட கதிர்களையும் எடுத்துக்கொள்கிறாள். அவற்றையெல்லாம் கட்டுகளாய்க் கட்டி, கதிரடித்து தானியத்தைப் பிரித்தெடுக்க ஓர் இடத்திற்குக் கொண்டு செல்கிறாள். அதெல்லாம் நிறைய நேரமெடுக்கும் வேலை... முதுகொடிய வைக்கும் வேலை... வெயில் வறுத்தெடுக்கும் வேலை. இருந்தாலும், ரூத் சளைக்காமல் செய்கிறாள். நெற்றி வியர்வையைத் துடைப்பதற்கும் மதிய உணவைச் சாப்பிடுவதற்கும்தான் வேலையை நிறுத்துகிறாள். ‘குடிசையில்,’ அதாவது வேலையாட்கள் ஓய்வெடுக்கும் பந்தலில், எளிமையான மதிய உணவைச் சாப்பிடுகிறாள்.

இருவருடைய வயிற்றுப்பிழைப்புக்காகவும் ரூத் கடினமாய் உழைத்தாள், தாழ்வான வேலை செய்தாள்

26, 27. போவாஸ் எப்படிப்பட்டவர், ரூத்தை எப்படி நடத்தினார்?

26 தன்னை யாராவது கவனிக்க வேண்டுமென ரூத் எதிர்பார்ப்பதுமில்லை, ஆசைப்படுவதுமில்லை; ஆனால் மற்றவர்கள் அவளைக் கவனிக்கிறார்கள். போவாஸ் அவளைக் கவனித்து, அவள் யாரென அந்த இளம் மேற்பார்வையாளனிடம் கேட்கிறார். விசுவாசத்திற்குப் பேர்போன போவாஸ் பொதுவாக வயலுக்கு வந்ததும், ‘யெகோவா உங்களோடு இருப்பாராக’ என்று சொல்லி வேலைக்காரர்களை வாழ்த்துவார், அவர்களும் அதேபோல் வாழ்த்துவார்கள்​—அவர்களில் சிலர் தினக்கூலிகளாகவோ அந்நியர்களாகவோ கூட இருக்கலாம். ஆன்மீகச் சிந்தையுள்ள அந்தப் பெரிய மனிதர், ஒரு தகப்பனைப் போல ரூத்மீது அக்கறை காட்டுகிறார்.​—ரூத் 2:​4-7.

27 போவாஸ் அவளை “மகளே” என அழைத்து, கதிர் பொறுக்க எப்போதும் தன்னுடைய வயலுக்கே வரச் சொல்கிறார்; வேலைக்காரர்கள் யாராவது அவளுக்குத் தொல்லை கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத் தன்னுடைய இளம் வேலைக்காரிகளின் அருகிலேயே நின்று வேலை செய்யும்படியும் அறிவுரை கூறுகிறார். மதிய வேளையில் சாப்பிட அவளுக்குப் போதிய உணவு இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்கிறார். (ரூத் 2:​8, 9, 14-ஐ வாசியுங்கள்.) எல்லாவற்றுக்கும் மேலாக, அவளைப் பாராட்டுகிறார், ஊக்கப்படுத்துகிறார். எப்படி?

28, 29. (அ) ரூத் எப்படிப்பட்ட பெயர் எடுத்திருந்தாள்? (ஆ) ரூத்தைப் போல் நீங்களும் எப்படி யெகோவாவை அடைக்கலமாய்க் கொண்டிருக்கலாம்?

28 அந்நியப் பெண்ணாகிய தன்னிடம் இவ்வளவு பரிவுடன் நடப்பதற்குக் காரணம் என்னவென போவாஸிடம் ரூத் கேட்கும்போது, அவள் தன் மாமியாரான நகோமிக்குச் செய்த அனைத்தையும் கேள்விப்பட்டதாக போவாஸ் கூறுகிறார். அன்பு மருமகள் ரூத்தைப் பற்றி பெத்லகேம் பெண்களிடம் நகோமி புகழ்ந்து பேசியிருக்கலாம், அது போவாஸ் காதுக்கு எட்டியிருக்கலாம். அதோடு, ரூத் யெகோவாவை வணங்கி வருவதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான், ‘உன் செய்கைக்குத்தக்க பலனை யெகோவா உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய சிறகுகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக’ என்று சொல்கிறார்.​—ரூத் 2:12.

29 இந்த வார்த்தைகள் ரூத்தின் உள்ளத்திற்கு எவ்வளவு உற்சாகத்தை ஊட்டியிருக்கும்! தாய்ப் பறவையின் சிறகுகளுக்குள் குஞ்சுகள் அடைக்கலம் தேடி வருவதுபோல், அவள் யெகோவாவின் சிறகுகளுக்குள் அடைக்கலம் தேடி வந்திருக்கிறாளே! போவாஸ் நம்பிக்கையூட்டும் விதமாய்ப் பேசியதற்காக நன்றி சொல்கிறாள். மாலைமயங்கும் வேளைவரை அவள் தொடர்ந்து வேலை பார்க்கிறாள்.​—ரூத் 2:​13, 17.

30, 31. வேலை செய்யும் விஷயத்தில், நன்றியுடன் நடந்துகொள்ளும் விஷயத்தில், பற்றுமாறா அன்பு காட்டும் விஷயத்தில் ரூத்திடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

30 பொருளாதார நெருக்கடிமிக்க காலத்தில் வாழும் நம் அனைவருக்கும் ரூத் காட்டிய விசுவாசம் சிறந்த உதாரணமாய் விளங்குகிறது. மற்றவர்கள் தனக்கு உதவ கடமைப்பட்டிருப்பது போல் அவள் நினைக்கவில்லை, அதனால் அவர்கள் செய்த எல்லா உதவியையும் உயர்வாய் மதித்தாள். அதோடு, தன் அன்புக்குரிய மாமியாரைக் கவனித்துக்கொள்வதற்காக நீண்ட நேரம் கடினமாய் உழைப்பதைக் குறித்து... அதுவும் தாழ்வான வேலை செய்வதைக் குறித்து... அவள் வெட்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, ஜாக்கிரதையாக வேலை செய்யும்படி... நல்ல ஆட்களுடன் சேர்ந்து வேலை செய்யும்படி... அறிவுரை கொடுக்கப்பட்டபோது அதை நன்றியுடன் ஏற்று நடந்தாள். மிக முக்கியமாக, தன் தகப்பனாகிய யெகோவா தேவனே தனக்கு உண்மையான அடைக்கலம் என்பதை அவள் ஒருபோதும் மறக்கவில்லை.

31 ரூத்தைப் போல நாமும் பற்றுமாறா அன்பு, மனத்தாழ்மை, சுறுசுறுப்பு, நன்றியுணர்வு போன்ற குணங்களைக் காட்டினால், நம்முடைய விசுவாசமும் மற்றவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும். ஆனால், ரூத் மற்றும் நகோமியின் அடிப்படைத் தேவைகளை யெகோவா எப்படிப் பூர்த்தி செய்தார்? அடுத்த அதிகாரம் இதற்குப் பதிலளிக்கும்.

^ பாரா. 17 பொதுவாகப் புறதேசத்தார் சொல்வதுபோல் “தேவன்” என்று மட்டும் சொல்லாமல் யெகோவா என்ற பெயரையும் ரூத் சொன்னது குறிப்பிடத்தக்கது. “இந்தப் புறதேசத்துப் பெண் உண்மைக் கடவுளைப் பின்பற்றினாள் என்பதை பைபிள் எழுத்தாளர் இவ்வாறு வலியுறுத்திக் காட்டுகிறார்” என த இன்டர்ப்ரெடர்ஸ் பைபிள் கூறுகிறது.

^ பாரா. 23 இது ஓர் அற்புதமான சட்டம்; இதுபோன்ற ஒன்றை ரூத் தன் சொந்த தேசத்தில் கேள்விப்பட்டிருக்கவே மாட்டாள். அந்தக் காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில், விதவைகள் மோசமாக நடத்தப்பட்டார்கள். ஒரு நூல் இவ்வாறு சொல்கிறது: “கணவன் இறந்தபின், பொதுவாக ஒரு விதவை தன்னுடைய மகன்களுடைய கையைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருந்தது. அவளுக்கு மகன்கள் யாரும் இல்லாவிட்டால், அவள் தன்னையே அடிமையாய் விற்க வேண்டியிருந்தது; அல்லது, விபச்சாரத்தில் ஈடுபடவோ சாவைத் தேடவோதான் வேண்டியிருந்தது.”