யோவான் எழுதியது 1:1-51

1  ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,+ அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,+ அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.+  அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார்.  எல்லாம் அவர் மூலமாகத்தான் உண்டானது,+ அவரில்லாமல் எதுவுமே உண்டாகவில்லை.  அவர் மூலம் வாழ்வு உண்டானது, அந்த வாழ்வு மனிதர்களுக்கு ஒளியாக இருந்தது.+  அந்த ஒளி, இருளில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது;+ இருள் அதை அடக்கி ஆளவில்லை.  கடவுளுடைய பிரதிநிதியாக அனுப்பப்பட்ட ஒரு மனிதர் வந்தார்; அவருடைய பெயர் யோவான்.+  அவர் ஒரு சாட்சியாக வந்தார்; எல்லா விதமான மக்களும் தன் மூலம் அந்த ஒளியில் நம்பிக்கை வைப்பதற்காக அந்த ஒளியைப் பற்றிச் சாட்சி கொடுக்க வந்தார்.+  அவர் அந்த ஒளி அல்ல,+ ஆனால் அந்த ஒளியைப் பற்றிச் சாட்சி கொடுக்க வந்தவர்.  எல்லா விதமான மனிதர்களுக்கும் ஒளி கொடுக்கிற அந்த உண்மையான ஒளி இந்த உலகத்துக்குச் சீக்கிரத்தில் வரவிருந்தார்.+ 10  அவர்* இந்த உலகத்தில் இருந்தார்.+ அவர் மூலமாக இந்த உலகம் உண்டானது,+ ஆனால் இந்த உலகம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவில்லை. 11  அவர் தன்னுடைய சொந்த தேசத்துக்கே வந்தார், ஆனால் அவருடைய சொந்த மக்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12  இருந்தாலும், அவரை ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் கடவுளுடைய பிள்ளைகளாகும் உரிமையைக் கொடுத்தார்.+ ஏனென்றால், அவருடைய பெயரில் அவர்கள் விசுவாசம் வைத்திருந்தார்கள்.+ 13  அவர்கள் இரத்தத்தாலோ இயற்கையான ஆசையாலோ ஆண்மகனின் விருப்பத்தாலோ பிறந்தவர்கள் அல்ல, கடவுளால் பிறந்தவர்கள்.+ 14  அந்த வார்த்தை ஒரு மனிதராகி*+ நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு*+ கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும்* சத்தியமும் நிறைந்தவராக இருந்தார். 15  (அவரைப் பற்றி யோவான் சாட்சி கொடுத்தார்; “‘எனக்குப் பின்னால் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார்; ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்’ என நான் சொன்னது இவரைப் பற்றித்தான்” என்று சத்தமாகச் சொன்னார்.)+ 16  அவர் அளவற்ற கருணை நிறைந்தவராக இருந்தார், அதனால் அவரிடமிருந்து நாம் எல்லாரும் அளவற்ற கருணைக்குமேல் அளவற்ற கருணையைப் பெற்றோம். 17  மோசேயின் மூலம் திருச்சட்டம் கொடுக்கப்பட்டது;+ ஆனால், இயேசு கிறிஸ்துவின் மூலம்+ அளவற்ற கருணையும்+ சத்தியமும் கிடைத்தன. 18  கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை.+ தகப்பனின் பக்கத்தில் இருப்பவரும்*+ தெய்வீகத்தன்மை உள்ளவருமான+ அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.+ 19  யூதர்கள் எருசலேமிலிருந்து ஆலய குருமார்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீ யார்?”+ என்று கேட்டபோது, 20  அவர் தயங்காமல், “நான் கிறிஸ்து அல்ல” என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். 21  அதற்கு அவர்கள், “அப்படியானால், நீ எலியாவா?”+ என்று கேட்டார்கள். அப்போது அவர், “இல்லை” என்று சொன்னார். “நீதான் வரவேண்டிய தீர்க்கதரிசியா?”+ என்று கேட்டார்கள். அதற்கும் அவர், “இல்லை!” என்று சொன்னார். 22  அதனால் அவர்கள், “அப்படியானால், நீ யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். உன்னைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்கள். 23  அதற்கு அவர், “‘யெகோவாவுக்கு* வழியைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வார் என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது என்னைப் பற்றித்தான்”+ என்றார். 24  அப்போது, பரிசேயர்களால் அனுப்பப்பட்ட அந்த ஆட்கள் அவரிடம், 25  “நீ கிறிஸ்துவும் அல்ல, எலியாவும் அல்ல, வரவேண்டிய தீர்க்கதரிசியும் அல்ல என்றால், எதற்காக ஞானஸ்நானம் கொடுக்கிறாய்?” என்று கேட்டார்கள். 26  அதற்கு யோவான், “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். உங்கள் மத்தியில் ஒருவர் இருக்கிறார், அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாது. 27  அவர் எனக்குப்பின் வரப்போகிறவர்; அவருடைய செருப்புகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை”+ என்று சொன்னார். 28  இவையெல்லாம் யோர்தானுக்கு அக்கரையில் பெத்தானியாவில் நடந்தன. அங்கேதான் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.+ 29  அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+ 30  ‘எனக்குப்பின் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார். ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்’+ என்று நான் சொன்னது இவரைப் பற்றித்தான். 31  எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை. ஆனால், இவர் யாரென்று இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்”+ என்று சொன்னார். 32  அதோடு, “கடவுளுடைய சக்தி புறாவைப் போல் பரலோகத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கியதைப் பார்த்தேன்.+ 33  எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை; ஆனால், தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு என்னை அனுப்பியவர், ‘கடவுளுடைய சக்தி இறங்கி யார்மேல் தங்குவதைப் பார்க்கிறாயோ+ அவர்தான் அந்தச் சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்’+ என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34  அதை நான் பார்த்தேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன்+ என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று சொன்னார். 35  அடுத்த நாள், மறுபடியும் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரோடு யோவான் நின்றுகொண்டிருந்தார். 36  அப்போது இயேசு நடந்துபோவதைப் பார்த்து, “இதோ! கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி”+ என்று சொன்னார். 37  அவர் அப்படிச் சொன்னதை அந்தச் சீஷர்கள் இரண்டு பேரும் கேட்டவுடன், இயேசுவின் பின்னால் போனார்கள். 38  அவர்கள் தன் பின்னால் வருவதை இயேசு திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “ரபீ (இதற்கு “போதகரே” என்று அர்த்தம்), நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 39  அதற்கு அவர், “நீங்களே வந்து பாருங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவர் தங்கியிருந்த இடத்தைப் போய்ப் பார்த்தார்கள், அன்று அவருடன் தங்கினார்கள். அப்போது, சுமார் பத்தாம் மணிநேரமாக* இருந்தது. 40  யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவின் பின்னால் போன இரண்டு பேரில் ஒருவர் அந்திரேயா,+ இவர் சீமோன் பேதுருவின் சகோதரர். 41  இவர் முதலில் போய்த் தன்னுடைய சொந்த சகோதரராகிய சீமோனைப் பார்த்து, “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்”+ என்று சொன்னார். (மேசியா என்பது “கிறிஸ்து” என்று மொழிபெயர்க்கப்படுகிறது). 42  பின்பு, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போனார். இயேசு அவரைப் பார்த்தபோது, “நீ யோவானுடைய மகன் சீமோன்;+ இனி கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (கேபா என்ற வார்த்தை “பேதுரு” என மொழிபெயர்க்கப்படுகிறது).+ 43  அடுத்த நாள், இயேசு கலிலேயாவுக்குப் போக விரும்பினார். அப்போது பிலிப்புவைப்+ பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார். 44  அந்திரேயாவையும் பேதுருவையும் போலவே இந்த பிலிப்புவும் பெத்சாயிதா நகரத்தைச் சேர்ந்தவர். 45  இவர் நாத்தான்வேலைச்+ சந்தித்து, “தீர்க்கதரிசிகளும், திருச்சட்டத்தில் மோசேயும் யாரைப் பற்றி எழுதினார்களோ அவரை நாங்கள் கண்டுகொண்டோம். யோசேப்பின்+ மகனும் நாசரேத்தைச் சேர்ந்தவருமான இயேசுதான் அவர்” என்று சொன்னார். 46  ஆனால் நாத்தான்வேல் அவரிடம், “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு பிலிப்பு, “நீயே வந்து பார்” என்று சொன்னார். 47  நாத்தான்வேல் தன்னை நோக்கி வருவதை இயேசு பார்த்து, “இதோ! கள்ளம்கபடமில்லாத உத்தம இஸ்ரவேலன்”+ என்று சொன்னார். 48  அதற்கு நாத்தான்வேல், “என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுவதற்கு முன்னால் நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உன்னைப் பார்த்தேன்” என்று சொன்னார். 49  அதற்கு நாத்தான்வேல், “ரபீ, நீங்கள்தான் கடவுளுடைய மகன், நீங்கள்தான் இஸ்ரவேலின் ராஜா”+ என்று சொன்னார். 50  அப்போது இயேசு அவரிடம், “அத்தி மரத்தின் கீழ் உன்னைப் பார்த்தேன் என்று சொன்னதால்தான் நம்புகிறாயா? இவற்றைவிட பெரிய காரியங்களை நீ பார்ப்பாய்” என்று சொன்னார். 51  பின்பு, அவரிடம், “வானம் திறந்திருப்பதையும் தேவதூதர்கள் மனிதகுமாரனிடம் இறங்குவதையும் அவரிடமிருந்து ஏறுவதையும்+ பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “அந்த வார்த்தை.”
நே.மொ., “ஒரு சதையாகி.”
அதாவது, “கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே மகனுக்கு.”
வே.வா., “கடவுளுடைய பிரியமும்.”
வே.வா., “தகப்பனின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவரும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, “மாலை சுமார் 4 மணியாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா