Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பதினாறாம் அதிகாரம்

ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்

ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்

1-3. (அ) தனது கணவருடைய சிம்மாசனத்தை நெருங்கியபோது எஸ்தர் எப்படி உணர்ந்தாள்? (ஆ) எஸ்தரைப் பார்த்தவுடன் அரசர் எப்படிப் பிரதிபலித்தார்?

அரியணையை நோக்கி எஸ்தர் ஒவ்வொரு அடியாய் அடியெடுத்து வைக்கிறாள்... அவளுடைய இதயம் வேகமாய்த் துடிக்கிறது. இப்போது உங்கள் கற்பனையில் இதைப் பாருங்கள்... சூசான் அரண்மனையில், பெர்சிய அரசரின் கம்பீரமான கொலுமண்டபத்தில், அமைதி நிலவுகிறது. எஸ்தர் தனது பூப்போன்ற பாதங்களின் ஓசையை... தனது ராஜ வஸ்திரத்தின் சரசரப்பை... காதில் கேட்கும் அளவுக்கு அங்கே அப்படியொரு நிசப்தம். ஆடம்பரமிக்க அரசவை... அலங்காரத் தூண்கள்... கலைநயத்துடன் செதுக்கப்பட்ட உட்கூரை... அதுவும் தொலைதூர லெபனானிலிருந்து இறக்குமதி செய்த தேவதாரு மரங்களால் இழைக்கப்பட்ட உட்கூரை. இவையெல்லாம் தனது சிந்தையைச் சிதறடிக்க அவள் அனுமதிப்பதில்லை. சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அந்த மனிதன் மீதே... தனக்கு வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் அந்த மனிதன் மீதே... தன் கவனத்தை ஊன்றியிருக்கிறாள்.

2 எஸ்தர் தன்னை நெருங்கி வருவதை ராஜா கூர்ந்து கவனிக்கிறார், பொற்செங்கோலை அவளிடம் நீட்டுகிறார். இது ஏதோ சாதாரண விஷயமாகத் தோன்றலாம்; ஆனால் எஸ்தரைப் பொறுத்தவரை, இது அவளுக்குக் கிடைக்கும் உயிர்ப்பிச்சை! அரசரின் அழைப்பின்றி அவரைச் சந்திக்க வந்த குற்றத்தை அவர் மன்னித்துவிட்டதற்கு அடையாளம். எஸ்தர் அந்தச் சிம்மாசனத்தை நெருங்குகிறாள், அந்தச் செங்கோலின் முனையை நன்றியுடன் தொடுகிறாள்.​—எஸ்தர் 5:​1, 2.

அரசர் காட்டிய இரக்கத்தை எஸ்தர் நன்றியோடு ஏற்றுக்கொண்டாள்

3 அகாஸ்வேரு அரசரின் தோற்றமே அவருடைய மகா செல்வத்தையும் அதிகாரத்தையும் பறைசாற்றுகிறது. அந்தக் காலத்தில் வாழ்ந்த பெர்சிய மன்னர்களின் ராஜ உடை கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையது. இருந்தாலும், தன் கணவனின் கண்களில் கனிவு சொட்டுவதை எஸ்தரால் காண முடிகிறது. அவருடைய ஒரு பார்வையே ஓராயிரம் அன்பு மொழிகளை அவளுக்குப் பரிமாறுகிறது. “எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும்” என்று சொல்கிறார்.​—எஸ்தர் 5:3.

4. எஸ்தருக்கு முன்னால் இருந்த சவால்கள் என்ன?

4 எஸ்தர் ஏற்கெனவே தன்னிகரற்ற தைரியத்தையும் விசுவாசத்தையும் காட்டியிருந்தாள். தன் மக்களைப் பூண்டோடு அழிக்கத் தீட்டப்பட்ட சதியை முறியடிக்கவே இப்போது அரசர் முன்னிலையில் நின்றுகொண்டிருக்கிறாள். இதுவரை அவளுக்கு வெற்றிதான், ஆனால் இமாலய சவால்கள் அவளுக்கு முன்னால் நிற்கின்றன. அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகன் ஒரு பொல்லாத மனிதன் என்பதையும், எஸ்தருடைய இனத்தாரைப் பூண்டோடு அழிக்க மன்னரையே ஏமாற்றிய கயவன் என்பதையும் கர்வம்பிடித்த இந்தப் பேரரசனுக்கு அவள் புரியவைக்க வேண்டியிருக்கிறது. எப்படி அவனுக்குப் புரியவைப்பாள்? அவளது விசுவாசத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

‘பேச வேண்டிய காலத்தை’ ஞானமாய்த் தேர்ந்தெடுக்கிறாள்

5, 6. (அ) பிரசங்கி 3:​1, 7-ல் காணப்படும் நியமத்தை எஸ்தர் எப்படிப் பொருத்தினாள்? (ஆ) அவள் தன் கணவரைச் சந்தித்துப் பேசிய விதம் ஞானமானது என்று எப்படிச் சொல்லலாம்?

5 கொலுமண்டபத்திலேயே எல்லாப் பிரச்சினையையும் மன்னரிடம் எஸ்தர் கொட்டிவிடுவாளா? அப்படிச் செய்தால் அவரை அவமானப்படுத்தியதாய் ஆகிவிடுமே. அதோடு, அரசரின் ஆலோசகனாகிய ஆமானுக்கு அவளது குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாட சந்தர்ப்பம் கிடைத்துவிடுமே. ஆகையால், எஸ்தர் என்ன செய்கிறாள்? நூற்றாண்டுகளுக்கு முன்பு, சாலொமோன் ராஜா கடவுளது சக்தியால் இப்படி எழுதினார்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; . . . மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு.” (பிர. 3:​1, 7) வளர்ப்புத் தகப்பனும் விசுவாசமுள்ள மனிதருமான மொர்தெகாய் இந்த இளம் பெண்ணுக்கு இப்படிப்பட்ட நியமங்களைச் சிறுவயதுமுதல் கற்றுக்கொடுத்ததை நாம் கற்பனையில் காணலாம். காலநேரம் பார்த்துப் பேசுவதன் முக்கியத்துவத்தை எஸ்தர் புரிந்து வைத்திருந்தாள்.

6 “மன்னர் விரும்பினால், இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் வருகை தர வேண்டும்” என்று எஸ்தர் சொல்கிறாள். (எஸ்தர் 5:​4, பொ.மொ.) அரசர் ஒப்புதல் அளிக்கிறார், ஆமானை வரவழைக்கிறார். எஸ்தர் எவ்வளவு ஞானமாய்ப் பேசினாள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? தன்னுடைய கணவரின் கண்ணியத்தைக் காப்பாற்றுகிறாள், அதேசமயத்தில் தன்னுடைய மனதில் தேங்கி நிற்கும் கவலையை அவரிடம் கொட்டுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறாள்.​—நீதிமொழிகள் 10:​19-ஐ வாசியுங்கள்.

7, 8. எஸ்தருடைய முதல் விருந்து எப்படி இருந்தது, அரசரிடம் பேசுவதை அவள் ஏன் தள்ளிப்போட்டாள்?

7 அந்த விருந்தை எஸ்தர் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்கிறாள் என்பதில் சந்தேகமே இல்லை. கணவருக்குப் பிடித்தமான எல்லாப் பதார்த்தங்களையும் தயார் செய்கிறாள். அரசர் சந்தோஷமாய் இருப்பதற்காக அந்த விருந்தில் திராட்சமதுவையும் பரிமாறுகிறாள். (சங். 104:15) அகாஸ்வேரு அனுபவித்து மகிழ்கிறார்; எஸ்தரின் வேண்டுகோள் என்ன என மீண்டும் கேட்கத் தூண்டும் அளவுக்கு அந்த விருந்து அருமையாக அமைகிறது. பேசுவதற்கு இது ஏற்ற தருணமாக இருக்குமா?

8 இருக்காது என எஸ்தர் எண்ணுகிறாள். அடுத்த நாளும் இன்னொரு விருந்துக்கு வரச் சொல்லி அரசரையும் ஆமானையும் அழைக்கிறாள். (எஸ்தர் 5:​7, 8) ஏன் அவள் தள்ளிப்போடுகிறாள்? இதை நினைவில்கொள்ளுங்கள்... அரசரின் ஆணையால் எஸ்தருடைய இனத்தார் எல்லோரும் மரணத்தை சந்திக்கப்போகிறார்கள்! இத்தனை உயிர்கள் ஆபத்தில் இருப்பதால், எஸ்தர் தக்க தருணம் பார்த்துப் பேச வேண்டியிருக்கிறது. அதனால் அவள் காத்திருக்கிறாள், அவரைத் தன் இதய சிம்மாசனத்தில் அமர்த்தியிருப்பதைக் காட்ட இன்னொரு சந்தர்ப்பத்தை உருவாக்குகிறாள்.

9. பொறுமை எந்தளவு மதிப்புமிக்கது, இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு எஸ்தரின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

9 பொறுமை ஓர் அரிய பண்பு, அற்புத பண்பு. அவள் தவித்துக் கொண்டிருந்தாலும்... தன்னுடைய மனதில் இருப்பதைக் கொட்ட துடித்துக் கொண்டிருந்தாலும்... சரியான சமயம் வரும்வரை பொறுமையுடன் காத்திருக்கிறாள். அவளுடைய முன்மாதிரியிலிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் சில தவறுகளைச் சரிசெய்யாமல் இருப்பதை நாம் எல்லோருமே கவனிக்கலாம்; அவர்களிடம் அதைப் பற்றிச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில், எஸ்தரைப் போல் பொறுமையைக் காட்ட வேண்டியிருக்கலாம். நீதிமொழிகள் 25:15 இப்படிச் சொல்கிறது: “நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.” எஸ்தரைப் போல் ஏற்ற சமயம் வரும்வரை பொறுமையுடன் காத்திருந்தால்... சாந்தமாய்ப் பேசினால்... எலும்பை நொறுக்குவதுபோல் எதிர்ப்பை நொறுக்கிவிடலாம். எஸ்தரின் கடவுளான யெகோவா அவளது பொறுமையையும் ஞானத்தையும் ஆசீர்வதித்தாரா?

பொறுமை நீதிக்கு வழிவகுக்கிறது

10, 11. ஆமான் முதல் விருந்தைவிட்டுச் சென்றதும் எதனால் கோபமடைந்தான், என்ன செய்யச் சொல்லி அவனுடைய மனைவியும் நண்பர்களும் அவனைத் தூண்டினார்கள்?

10 பல அற்புத சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுவதற்கு அவளுடைய பொறுமை மேடை அமைத்துக் கொடுக்கிறது. முதல் விருந்து முடிந்ததும் ஆமான் உச்சி குளிர்ந்துபோகிறான்; ராஜாவும் ராணியும் தன்னை விசேஷமாக நடத்துவதை எண்ணி ‘சந்தோஷத்துடனும் மனமகிழ்ச்சியுடனும்’ புறப்பட்டுப் போகிறான். ஆனால், கோட்டை வாசலைக் கடந்து செல்லும்போது, அவனுடைய கண்கள் மொர்தெகாய்மீது விழுகின்றன; இப்போதும் அந்த யூதன் அவனுக்கு விசேஷ மரியாதை செலுத்துவதில்லை. மொர்தெகாய் ஆமானை மதிக்காததால் அல்ல, தன் மனசாட்சியின் காரணமாகவும் யெகோவா தேவனுடன் உள்ள பந்தத்தின் காரணமாகவுமே அவனுக்குத் தலைவணங்க மறுக்கிறார். அதனால் ஆமான் ‘அவன்மேல் உக்கிரம் நிறைந்தவனாகிறான்.’​—எஸ்தர் 5:9.

11 ஆமான் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைப் பற்றித் தன் மனைவியிடமும் நண்பர்களிடமும் சொல்கிறான். அதற்கு அவர்கள்... 72 அடிக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு தூக்குமரத்தைத் தயார் செய்யும்படியும், மொர்தெகாயை அதில் தொங்கவிட அரசரிடம் அனுமதி பெறும்படியும் சொல்கிறார்கள். அந்த யோசனை ஆமானுக்குப் பிடித்திருக்கிறது, உடனே காரியத்தில் இறங்குகிறான்.​—எஸ்தர் 5:​12-14.

12. அரசு பதிவுகளைச் சத்தமாய் வாசிக்கச் சொல்லி ஏன் அரசர் கேட்டுக்கொண்டார், அதிலிருந்து எதைத் தெரிந்துகொண்டார்?

12 இதற்கிடையே, அரசருக்கு அன்றைய ராத்திரி வழக்கத்திற்கு மாறான ராத்திரியாய் இருக்கிறது. ‘ராஜாவுக்கு நித்திரை வரவில்லை.’ அதனால், அரசு பதிவுகளை எடுத்து சத்தமாய் வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறார். அகாஸ்வேரு அரசரைத் தீர்த்துக்கட்ட தீட்டப்பட்ட சதியைப் பற்றிய பதிவு வாசிக்கப்படுகிறது. அப்போது, அதைப் பற்றிய எல்லா விவரங்களும்... சதி செய்தவர்கள் பிடிக்கப்பட்டது, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என எல்லா விவரங்களும்... அவரது மனத்திரையில் வந்து விழுகின்றன. உடனே, அந்தச் சதியை அம்பலப்படுத்திய மொர்தெகாயைப் பற்றி அரசர் யோசிக்கிறார். அவருக்கு என்ன சன்மானம் வழங்கப்பட்டது எனக் கேட்கிறார். ஒன்றுமே வழங்கப்படவில்லை என்ற பதில் கிடைக்கிறது.​—எஸ்தர் 6:​1-3-ஐ வாசியுங்கள்.

13, 14. (அ) எல்லாக் காரியங்களும் எப்படி ஆமானுக்கு எதிராக நடக்க ஆரம்பித்தன? (ஆ) ஆமானுடைய மனைவியும் நண்பர்களும் அவனிடம் என்ன சொன்னார்கள்?

13 கொதிப்படைந்து, தான் கவனக்குறைவாக விட்டுவிட்ட இந்தக் காரியத்தைச் செய்துமுடிக்க எந்த அரசு அதிகாரியாவது இருக்கிறாரா எனக் கேட்கிறார். சரியாக அந்த நேரம் பார்த்து அரசரின் அரண்மனைக்கு ஆமான் வருகிறான், அதுவும் வழக்கத்திற்கு முன்னதாகவே! ஏன்? மொர்தெகாய்க்கு மரண தண்டனை வழங்குவதற்கு அரசரிடம் அனுமதி பெற துடியாய்த் துடிக்கிறான். ஆனால் ஆமான் இதைப் பற்றி அரசரிடம் கேட்பதற்குமுன், அரசர் கௌரவிக்க விரும்புகிற மனிதருக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் அவனிடம் கேட்கிறார். தன்னைக் கௌரவிக்கத்தான் அரசர் இப்படிக் கேட்கிறார் என ஆமான் மனக்கோட்டை கட்டுகிறான். அதனால் அந்த மனிதரை மிகவும் பகட்டாய்க் கௌரவிக்கலாம் என்ற யோசனையை முன்வைக்கிறான்; அதாவது, அவருக்கு ராஜ உடை அணிவிக்க வேண்டும்... ஓர் உயர் அதிகாரி அவரை அரசரின் குதிரையில் அமர்த்தி ராஜ மரியாதையுடன் சூசான் முழுவதையும் பவனிவரச் செய்ய வேண்டும்... அதோடு குதிரைக்கு முன்னால் சென்று எல்லோரும் கேட்க அவருடைய புகழைப் பறைசாற்ற வேண்டும்... என்றெல்லாம் சொல்கிறான். கௌரவிக்கப்பட வேண்டிய அந்த மனிதர் மொர்தெகாய்தான் என்று அரசர் சொன்னதும் ஆமானின் முகம் எப்படி அஷ்டகோணலாக மாறியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். மொர்தெகாயின் புகழைப் பறைசாற்ற அரசர் யாரை நியமிக்கிறார்? ஆமானைத்தான்!​—எஸ்தர் 6:​4-10.

14 அரசர் ஆணையிட்ட வேலையை ஆமான் வேறு வழியில்லாமல் வெறுப்புடன் செய்கிறான், பின்பு நொந்துபோய் வேகமாக வீட்டுக்குப் போகிறான். இவையெல்லாம் கெட்ட சகுனம்... யூதனாகிய மொர்தெகாய்க்கு எதிராக அவன் நடத்துகிற போராட்டத்தில் தோல்வி அடையப்போவது உறுதி... என்றெல்லாம் அவனுடைய மனைவியும் நண்பர்களும் சொல்கிறார்கள்.​—எஸ்தர் 6:​12, 13.

15. (அ) எஸ்தருடைய பொறுமையால் உண்டான நன்மை என்ன? (ஆ) ‘காத்திருப்பது’ ஏன் ஞானமானது?

15 எஸ்தர் பொறுமையாக இருப்பதால், அரசரிடம் தன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அடுத்த நாள்வரை காத்திருப்பதால், ஆமான் தனக்குத்தானே குழிதோண்ட சந்தர்ப்பம் கிடைக்கிறது. அரசர் உறங்காமல் இருப்பதற்கு யெகோவா காரணமாக இருந்திருக்கலாம், அல்லவா? (நீதி. 21:1) ‘காத்திருக்க’ வேண்டுமெனக் கடவுளுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துவதில் ஆச்சரியமே இல்லை. (மீகா 7:​7-ஐ வாசியுங்கள்.) நாம் கடவுளுக்காகக் காத்திருக்கும்போது, நம் பிரச்சினைகளுக்கு அவர் தரும் தீர்வுகள் நாம் கண்டுபிடிக்கும் தீர்வுகளைவிட மிக மிக அருமையாக இருப்பதைக் காணலாம்.

தைரியமாய்ப் பேசுகிறாள்

16, 17. (அ) எஸ்தர் ‘பேச வேண்டிய காலம்’ எப்போது வந்தது? (ஆ) மன்னரின் முன்னாள் மனைவி வஸ்திக்கும் எஸ்தருக்கும் என்ன வேறுபாடு?

16 அரசரின் பொறுமையை இதற்கு மேலும் சோதிக்க எஸ்தர் துணிவதில்லை; இரண்டாம் விருந்தில், எல்லாவற்றையும் அவரிடம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி? அரசரே அவளுக்கு வாய்ப்பு அளிக்கிறார், அவளுடைய வேண்டுகோள் என்ன என்று மீண்டும் கேட்கிறார். (எஸ்தர் 7:2) எஸ்தர் ‘பேச வேண்டிய காலம்’ வந்துவிட்டது.

17 அரசரிடம் பேசுவதற்கு முன்னால் எஸ்தர் தன் கடவுளிடம் மௌனமாய் ஜெபம் செய்வதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதன்பின், ‘உம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசே! உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கு இணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!’ என்று சொல்கிறாள். (எஸ்தர் 7:​3, பொ.மொ.) ராஜாவுக்கு நலமெனப் படுகிற எந்தத் தீர்மானத்திற்கும் தான் தலைவணங்குவதாகச் சொல்லி அவருக்கு அவள் உறுதியளிப்பதைக் கவனியுங்கள். வேண்டுமென்றே தன் கணவனை அவமானப்படுத்திய வஸ்திக்கும், அதாவது மன்னரின் முன்னாள் மனைவிக்கும், எஸ்தருக்கும் எவ்வளவு வேறுபாடு! (எஸ்தர் 1:​10-12) அதோடு, ஆமான்மீது அரசர் நம்பிக்கை வைப்பது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று சொல்லி அவரை எஸ்தர் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, தன் உயிருக்கு வரும் ஆபத்திலிருந்து பாதுகாக்கச் சொல்லித்தான் மன்றாடுகிறாள்.

18. பிரச்சினையை அரசருக்கு எப்படி எஸ்தர் அம்பலப்படுத்தினாள்?

18 அதைக் கேட்டு அரசர் பதறிப்போகிறார், திகைத்துப்போகிறார். அரசியைக் கொல்ல யாருக்குத் துணிச்சல் வரும்? மேலும் எஸ்தர் அவரிடம், “என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்; ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடுசெய்ய முடியாது” என்று சொல்கிறாள். (எஸ்தர் 7:​4, பொ.மொ.) பிரச்சினையை எஸ்தர் அம்பலப்படுத்தியபோதிலும், தானும் தன் இனத்தாரும் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால்கூட அமைதியாய் இருந்திருப்பதாகச் சொல்கிறாள். ஆனால், இப்படிப்பட்ட இனப் படுகொலையால் அரசருக்கே பேரிழப்பு ஏற்படும்போது எப்படி அவளால் பேசாமல் இருக்க முடியும்!

19. பக்குவமாய்ப் பேசும் கலையைப் பற்றி எஸ்தரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

19 பக்குவமாய்ப் பேசும் கலையைப் பற்றி எஸ்தருடைய முன்மாதிரி நமக்கு நிறையக் கற்பிக்கிறது. முக்கியமான ஒரு பிரச்சினையை அன்பானவரிடமோ அதிகாரத்தில் இருப்பவரிடமோ சுட்டிக்காட்டும்போது, பொறுமையாகவும் மரியாதையாகவும் எதார்த்தமாகவும் பேசுவது மிகவும் கைகொடுக்கும்.​—நீதி. 16:​21, 23, NW.

20, 21. (அ) ஆமானுடைய சதியை எப்படி எஸ்தர் அம்பலப்படுத்தினாள், அப்போது அரசர் எப்படிப் பிரதிபலித்தார்? (ஆ) ஆமான் ஒரு சதிகாரன், கோழை என்பது அம்பலமானபோது என்ன செய்தான்?

20 “இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே?” என்று அகாஸ்வேரு கேட்கிறார். இதைக் கற்பனை செய்து பாருங்கள்: எஸ்தர் தன் விரலால் சுட்டிக்காட்டி, “சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான்” என்று சொல்கிறாள். அடுத்து என்ன நடக்கும்? ஆமான் அப்படியே கதிகலங்கிப்போகிறான். மன்னரின் முகம் கோபத்தில் சிவக்கிறது. நம்பிக்கைக்குரியவனே தன் அன்பு மனைவியின் உயிருக்கு உலைவைக்கத் துணிந்துவிட்டானே... தன்னையே ஆணை பிறப்பிக்க வைத்து ஏமாற்றிவிட்டானே... என்றெல்லாம் யோசிக்க யோசிக்க அவரது உள்ளம் கொதிக்கிறது. ஒரு நிதானத்திற்கு வருவதற்காக, ராஜா விருட்டென எழுந்து தோட்டத்திற்குள் சென்றுவிடுகிறார்!​—எஸ்தர் 7:​5-7.

ஆமானின் பொல்லாத செயலை எஸ்தர் தைரியமாய்ச் சுட்டிக்காட்டினாள்

21 ஆமான் ஒரு சதிகாரன், கோழை என்பது அம்பலமானதால் அரசியின் கால்களில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடுகிறான். ராஜா திரும்பி வரும்போது, ஆமான் எஸ்தருடைய மஞ்சத்தில் விழுந்து அவளிடம் மன்றாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்; அரசருடைய மாளிகைக்குள்ளேயே அரசியைக் கற்பழிக்க முயன்றதாகக் கோபாவேசத்தோடு அவன்மீது குற்றம் சாட்டுகிறார். ஆமானுக்குச் சாவு மணி அடிக்கப்படுகிறது! காவலர் அவனுடைய முகத்தை மூடி வெளியே கொண்டு செல்கிறார்கள். அப்போது, மொர்தெகாய்க்காக ஆமான் செய்துவைத்திருக்கிற மாபெரும் தூக்குமரத்தைப் பற்றி அரசவை அதிகாரிகளில் ஒருவர் சொல்கிறார். ஆமானை உடனே அதில் தொங்கவிடச் சொல்லி அகாஸ்வேரு ஆணை பிறப்பிக்கிறார்.​—எஸ்தர் 7:​8-10.

22. ஒருபோதும் மனமுறிந்து போகாமலிருக்கவும் நம்பிக்கையிழந்து விடாதிருக்கவும் விசுவாசத்தை இழந்துவிடாதிருக்கவும் எஸ்தருடைய உதாரணம் எப்படி நமக்கு உதவுகிறது?

22 அநீதி நிறைந்த இந்த உலகில் ஒருபோதும் நீதி கிடைக்காது என நினைப்பது சுலபம். நீங்கள் எப்போதாவது அப்படி நினைத்திருக்கிறீர்களா? எஸ்தர் ஒருபோதும் மனமுறிந்து போய்விடவில்லை, நம்பிக்கையற்றவளாய் ஆகிவிடவில்லை, விசுவாசத்தை இழந்துவிடவுமில்லை. காலம் வந்தபோது, நீதிநியாயத்துக்காகத் தைரியமாய்ப் பேசினாள், பின்பு மற்றெல்லாவற்றையும் யெகோவாவின் கையில் விட்டுவிட்டு நம்பிக்கையுடன் காத்திருந்தாள். நாமும் அதையே செய்வோமாக! எஸ்தரின் காலத்திலும் சரி நம் காலத்திலும் சரி, யெகோவா மாறவில்லை. ஆமானுக்குச் செய்ததுபோல், பொல்லாத மனிதர்களை... வஞ்சகம் நிறைந்தவர்களை... தாங்கள் வெட்டிய குழியிலேயே விழவைக்க இன்றும் அவரால் முடியும்.​—சங்கீதம் 7:​11-16-ஐ வாசியுங்கள்.

தன்னலமற்ற செயல் ​—யெகோவாவுக்காக... அவரது மக்களுக்காக...

23. (அ) மொர்தெகாய்க்கும் எஸ்தருக்கும் அரசர் எவ்வாறு பலனளித்தார்? (ஆ) பென்யமீனைக் குறித்து மரணப்படுக்கையிலிருந்த யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (“ தீர்க்கதரிசனம் நிறைவேறியது” என்ற பெட்டியைக் காண்க.)

23 கடைசியில், மொர்தெகாய் யாரென அரசர் அறிந்துகொள்கிறார். ஆம், தன்னைக் கொலை செய்ய சதிகாரர்கள் போட்ட திட்டத்திலிருந்து காப்பாற்றியவர் மட்டுமல்ல, எஸ்தருடைய வளர்ப்புத் தகப்பன் என்பதையும் அறிந்துகொள்கிறார். ஆமானின் பதவியை மொர்தெகாய்க்குக் கொடுத்து அவரைப் பிரதம மந்திரி ஆக்குகிறார். ஆமானின் வீட்டையும் அவன் குவித்து வைத்திருந்த செல்வத்தையும் எஸ்தருக்குக் கொடுக்கிறார், அவள் மொர்தெகாயை அதற்குப் பொறுப்பாளராய் நியமிக்கிறாள்.​—எஸ்தர் 8:​1, 2.

24, 25. (அ) ஆமானின் சதி அம்பலமான பின்பும் ஏன் எஸ்தரால் கவலையின்றி இருக்க முடியவில்லை? (ஆ) எஸ்தர் எப்படி மீண்டும் ஒருமுறை தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தாள்?

24 இப்போது, எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் ஆபத்து நீங்கிவிட்டதால் அரசி இனி எந்தக் கவலையுமில்லாமல் இருந்துவிட முடியுமா? அவள் தன்னலமாய் இருந்தால் மட்டுமே கவலையில்லாமல் இருக்க முடியும். அந்தச் சமயத்தில், யூதர்கள் அனைவரையும் கொலை செய்ய ஆமான் போட்ட ஆணை சாம்ராஜ்யத்தின் மூலைமுடுக்கெல்லாம் எட்டுகிறது. ஆமான் இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நாளைத் தீர்மானிப்பதற்காக பூர் என்றழைக்கப்படும் சீட்டுப்போட்டுப் பார்த்திருந்தான். அது ஒருவகை மாயமந்திரமாக இருக்கலாம். (எஸ்தர் 9:​24-26) அந்த நாள் வர இன்னும் மாதங்கள் இருக்கின்றன, ஆனால் அது மிக வேகமாய் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இப்போதும் இந்த இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்த முடியுமா?

25 எஸ்தர் மீண்டும் தன்னலமின்றி தன் உயிரைப் பணயம் வைக்கிறாள், அரசரின் அழைப்பு இல்லாமலேயே மறுபடியும் அவர் முன்னால் செல்கிறாள். இந்த முறை தனது இனத்தாருக்காகக் கதறி அழுகிறாள்; இந்தப் படுபயங்கரமான ஆணையை ரத்து செய்யச் சொல்லி கணவரிடம் மன்றாடுகிறாள். ஆனால், பெர்சிய மன்னருடைய பெயரில் இயற்றப்பட்ட சட்டங்களை அவரால்கூட ரத்து செய்ய முடியாது. (தானி. 6:​12, 15) ஆகையால், ஒரு புதிய சட்டத்தை இயற்ற எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் அரசர் அதிகாரம் அளிக்கிறார். இப்போது, இரண்டாம் அறிவிப்பு செல்கிறது; தாக்குபவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை யூதர்களுக்கு வழங்கப்படுகிறது. சாம்ராஜ்யத்தின் சந்துபொந்தெல்லாம் தூதுவர்கள் குதிரையில் பாய்ந்துசென்று யூதர்களுக்கு இந்தச் சந்தோஷமான செய்தியை அறிவிக்கிறார்கள். பலரது இதயத்தில் புது நம்பிக்கை பிறக்கிறது. (எஸ்தர் 8:​3-16) பரந்துவிரிந்த அந்தச் சாம்ராஜ்யத்தில் பரவிக்கிடக்கும் யூதர்கள் ஆயுதம் ஏந்திக்கொண்டு போருக்குத் தயாராகிறார்கள்; இந்தப் புதிய ஆணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தால் இப்படி அவர்களால் ஒருபோதும் செய்ய முடியாது. இப்போது கேள்வி என்னவென்றால், ‘சேனைகளுடைய யெகோவா’ தமது மக்களுடன் இருக்கிறாரா?​—1 சா. 17:45.

பெர்சிய சாம்ராஜ்யத்திலிருந்த யூதர்களுக்கு எஸ்தரும் மொர்தெகாயும் ஆணை அனுப்பினார்கள்

26, 27. (அ) யெகோவா தமது மக்களுக்கு எப்பேர்ப்பட்ட வெற்றியைக் கொடுத்தார்? (ஆ) ஆமானின் மகன்கள் அழிக்கப்பட்டபோது எந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது?

26 குறிக்கப்பட்ட அந்த நாள் வரும்போது கடவுளுடைய மக்கள் தயாராய் இருக்கிறார்கள். பெர்சிய அதிகாரிகள் பலரும்கூட அவர்களுடைய பக்கம் நிற்கிறார்கள்; ஏனென்றால், யூதரான மொர்தெகாய் புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்ற செய்தி எட்டுத் திக்கும் பரவியிருக்கிறது. யெகோவா தமது மக்களுக்கு மாபெரும் வெற்றியைத் தருகிறார். எதிரிகள் திரும்ப பழிவாங்காமல் இருப்பதற்காக அவர்களை அடியோடு ஒழித்துக்கட்ட யெகோவா தமது மக்களுக்குத் துணைபுரிகிறார். *​—எஸ்தர் 9:​1-6.

27 அந்தப் பொல்லாத ஆமானின் பத்து மகன்களும் உயிருடன் இருக்கும்வரை அவனுடைய வீட்டை மொர்தெகாய் பத்திரமாய் நிர்வகிக்க முடியாது. அதனால் அவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். (எஸ்தர் 9:​7-10) அப்போது, ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது; அதாவது, அமலேக்கியர் தமது மக்களுக்குப் பயங்கர எதிரிகளாய் இருந்ததால் அவர்கள் பூண்டோடு அழிக்கப்படுவார்கள் என்று கடவுள் சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. (உபா. 25:​17-19) கண்டனம் செய்யப்பட்ட அந்த அமலேக்கியரில் கடைசி கடைசியாக எஞ்சியிருந்தவர்கள் இந்த ஆமானின் மகன்களாய் இருந்திருக்கலாம்.

28, 29. (அ) எஸ்தரும் அவரது மக்களும் போரில் ஈடுபடுவது ஏன் யெகோவாவின் சித்தமாய் இருந்தது? (ஆ) எஸ்தரின் முன்னுதாரணம் இன்று நமக்கு ஏன் ஆசீர்வாதமாய் இருக்கிறது?

28 எஸ்தர் தன்னுடைய இளம் தோள்களில் பெரும் பாரங்களைச் சுமக்க வேண்டியிருந்தது, அதாவது போர் மற்றும் மரண தண்டனை சம்பந்தமான அரசாணைகளைப் பிறப்பிக்க வேண்டியிருந்தது. அது அவ்வளவு எளிதாக இருந்திருக்காது. ஆனால், யெகோவாவின் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது அவரது சித்தமாய் இருந்தது; வாக்குப்பண்ணப்பட்ட மேசியா... ஆம், முழு மனிதகுலத்துக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கப்போகும் மனிதர்... இஸ்ரவேலருடைய வம்சாவளியில் வர வேண்டியிருந்தது! (ஆதி. 22:18) மேசியாவாகிய இயேசு பூமிக்கு வந்தபோது, தம் சீடர்கள் போரில் ஈடுபடக் கூடாதென்ற கட்டளையைக் கொடுத்தார்; இது கடவுளுடைய ஊழியர்களுக்கு இன்று ஆனந்தம் அளிக்கிறது.​—மத். 26:52.

29 என்றாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் ஆன்மீகப் போரில் ஈடுபடுகிறோம்; ஏனென்றால், யெகோவா தேவன்மீது நாம் வைத்திருக்கிற விசுவாசத்தைக் குலைத்துப்போட சாத்தான் எப்போதையும்விட இன்று அதிக வெறியாய் இருக்கிறான். (2 கொரிந்தியர் 10:​3, 4-ஐ வாசியுங்கள்.) எஸ்தரின் முன்னுதாரணம் நமக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! அவளைப் போல, ஞானமாகவும் பொறுமையாகவும் பக்குவமாகவும் பேசுவதன் மூலம்... தைரியமாய்ச் செயல்படுவதன் மூலம்... கடவுளுடைய மக்களுக்குத் தன்னலமற்ற ஆதரவு தருவதன் மூலம்... நம் விசுவாசத்தைக் காட்டுவோமாக!

^ பாரா. 26 யூதர்கள் தங்களுடைய எதிரிகளை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்காக அடுத்த நாளும் போரிட அரசர் அனுமதி தருகிறார். (எஸ்தர் 9:​12-14) இன்றும்கூட, ஆண்டுதோறும் ஆதார் மாதத்தில் யூதர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்; நம் காலண்டர்படி, இந்த நாள் பிப்ரவரி கடைசியில் அல்லது மார்ச் ஆரம்பத்தில் வருகிறது. இந்தப் பண்டிகை பூரிம் என அழைக்கப்படுகிறது; இஸ்ரவேலரை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற வெறியுடன் ஆமான் போட்ட சீட்டின் பெயரில் இப்படி அழைக்கப்படுகிறது.