மத்தேயு எழுதியது 4:1-25

4  பின்பு, கடவுளுடைய சக்தி இயேசுவை வனாந்தரத்துக்கு வழிநடத்தியது; அங்கே பிசாசு அவரைச் சோதித்தான்.+  அவர் 40 நாட்கள் இரவும் பகலும் விரதம் இருந்த பின்பு, அவருக்குப் பசியெடுத்தது.  அப்போது, அந்தச் சோதனைக்காரன்+ அவரிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான்.  அதற்கு இயேசு, “‘உணவால்* மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.  பின்பு, பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்துக்குக்+ கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்க வைத்து,+  “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னான்.  அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.  மறுபடியும் பிசாசு அவரை மிக மிக உயரமான ஒரு மலைக்குக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி,+  “நீ ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான். 10  அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்,+ அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார். 11  அப்போது, பிசாசு அவரைவிட்டுப் போனான்;+ பின்பு, தேவதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை* செய்ய+ ஆரம்பித்தார்கள். 12  யோவான் கைது செய்யப்பட்டதை+ இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+ 13  அதன் பின்பு, நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய்+ அங்கே குடியிருந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளில் இருக்கிற கடலோர நகரம். 14  “செபுலோன் தேசமே, நப்தலி தேசமே! கடலுக்குப் போகும் வழியில் இருக்கிற இடங்களே! யோர்தானுக்கு மேற்கே இருக்கிற பகுதிகளே! மற்ற தேசத்தார் குடியிருக்கிற கலிலேயாவே! 15  இருட்டில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள், மரணத்தின் நிழல் படிந்த பகுதியில் வாழ்கிறவர்கள்மேல் வெளிச்சம்+ பிரகாசித்தது”+ என்று 16  ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 17  அந்தச் சமயத்திலிருந்து இயேசு, “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று பிரசங்கிக்க ஆரம்பித்தார்.+ 18  கலிலேயா கடலோரமாக அவர் நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும்+ அவருடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+ 19  இயேசு அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்”+ என்று சொன்னார். 20  அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.+ 21  அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்.+ அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களையும் அவர் கூப்பிட்டார்.+ 22  அவர்கள் உடனடியாகப் படகையும் தங்களுடைய அப்பாவையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள். 23  பின்பு அவர் கலிலேயா முழுவதும் போய்,+ அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார்;+ கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்; அதோடு, மக்களுக்கு இருந்த எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் குணமாக்கினார்.+ 24  அவரைப் பற்றிய பேச்சு சீரியா முழுவதும் பரவியது; பலவிதமான வியாதிகளாலும் வலிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நோயாளிகளையும்,+ பேய் பிடித்தவர்களையும்,+ காக்காய்வலிப்பால் கஷ்டப்பட்டவர்களையும்,+ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார். 25  அதனால், கலிலேயா, தெக்கப்போலி, எருசலேம், யூதேயா ஆகிய இடங்களிலிருந்தும் யோர்தானுக்குக் கிழக்கிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, அவருக்குப் பின்னால் போனார்கள்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

பிசாசு: கிரேக்கில், டியேபோலோஸ். இதன் அர்த்தம், “அவதூறு பேசுகிறவன்; இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்.” (யோவா 6:70; 2தீ 3:3) இதோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல், டியபால்லோ. இதன் அர்த்தம், “குற்றம்சாட்டுவது; புகார் செய்வது.” இது லூ 16:1-ல் “புகார்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

யெகோவாவின்: இந்த வசனம் உபா 8:3-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

எழுதப்பட்டிருக்கிறதே: பிசாசு சோதித்தபோது, எபிரெய வேதாகமத்திலிருந்து இயேசு மேற்கோள் காட்டினார்; அப்போது மூன்று தடவை இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்.—மத் 4:7, 10.

பரிசுத்த நகரத்துக்கு: இது எருசலேமைக் குறிக்கிறது; யெகோவாவின் ஆலயம் அங்கே இருந்ததால் அது பரிசுத்த நகரம் என்று அடிக்கடி அழைக்கப்பட்டது.—நெ 11:1; ஏசா 52:1.

ஆலயத்தின் உயரமான இடத்தில்: வே.வா., “ஆலயத்தின் கொத்தளத்தில்.” நே.மொ., “ஆலயத்தின் சிறகில்.” “ஆலயம்” என்பதற்கான கிரேக்க வார்த்தை ஆலயத்தின் முக்கியக் கட்டிடத்தையும் குறிக்கலாம், அந்த முழு வளாகத்தையும் குறிக்கலாம். அதனால், ஆலயத்தின் உயரமான இடம் என்பது ஆலய வளாகத்தைச் சூழ்ந்திருந்த மதிலின் மேல்பகுதியைக் குறிக்கலாம்.

யெகோவாவை: இந்த வசனம் உபா 6:16-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

உலகத்தில்: கிரேக்கில், காஸ்மாஸ். இங்கே, அநீதியுள்ள மனித சமுதாயத்தைக் குறிக்கிறது.

ராஜ்யங்களையும்: மனித அரசாங்கங்களைப் பொதுப்படையாகக் குறிக்கிறது.

அவருக்குக் காட்டி: அநேகமாக, நிஜமானதுபோல் தெரிந்த ஒரு தரிசனத்தையே பேய்களின் தலைவனான பிசாசு இயேசுவுக்குக் காட்டினான்.

ஒரேவொரு தடவை . . . என்னை வணங்கினால்: “வணங்குவதற்காக” என்ற அர்த்தமுள்ள கிரேக்க வினைச்சொல் இங்கே பொது இறந்தகாலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது அப்போதைக்கு மட்டுமே நடக்கும் ஒரு செயலைக் குறிக்கிறது. ‘ஒரேவொரு தடவை வணங்கினால்’ என்று அது மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, இயேசு எப்போதுமே தன்னை வணங்க வேண்டுமென்று பிசாசு கேட்காததைக் காட்டுகிறது; ஒரேவொரு முறை தன்னை வணங்கும்படிதான் அவன் இயேசுவைக் கேட்டான்.

சாத்தானே: ‘சாத்தான்’ என்ற வார்த்தை, சாத்தன் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. இதன் அர்த்தம், “எதிர்ப்பவன்.”

யெகோவாவை: இந்த வசனம் உபா 6:13; 10:20-ஐ மேற்கோள் காட்டுகிறது. இதனுடைய மூல எபிரெயப் பதிவில், கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (தமிழில், ய்ஹ்வ்ஹ்) பயன்படுத்தப்பட்டுள்ளன.—இணைப்பு C-ஐப் பாருங்கள்.

இயேசு கேள்விப்பட்டு: இதற்கு முந்தின வசனத்தில் சொல்லப்பட்ட சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் இந்த வசனத்தில் சொல்லப்படும் சம்பவம் நடந்தது. இந்த இடைப்பட்ட காலப்பகுதியில்தான், யோவா 1:29-லிருந்து 4:3-வரை சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள் நடந்தன. கூடுதலான ஒரு விவரத்தை யோவான் பதிவு செய்திருக்கிறார்; அதாவது, இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குப் பயணம் செய்தபோது சமாரியா வழியாகப் போனதாகவும், அங்கே சீகாருக்குப் பக்கத்திலிருந்த கிணற்றுப் பக்கமாக ஒரு சமாரியப் பெண்ணைப் பார்த்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.—யோவா 4:4-43; இணைப்பு A7-ஐயும், “இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்” என்ற பட்டியலையும், வரைபடம் 2-ஐயும் பாருங்கள்.

கப்பர்நகூமுக்கு: “நாகூமின் கிராமம்” அல்லது “ஆறுதலின் கிராமம்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு எபிரெயப் பெயரிலிருந்து வந்திருக்கிறது. (நாகூ 1:1, அடிக்குறிப்பு) கப்பர்நகூம், இயேசுவுடைய பூமிக்குரிய ஊழியத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஒரு நகரமாக இருந்தது. அது கலிலேயா கடலின் வடமேற்குக் கரையில் அமைந்திருந்தது. மத் 9:1-ல் ‘அவருடைய சொந்த ஊர்’ என்று அழைக்கப்பட்டது.

செபுலோன், நப்தலி பகுதிகளில்: பாலஸ்தீனாவின் வட கோடியில், கலிலேயா கடலின் மேற்கிலும் வடக்கிலும் இருந்த பகுதிகளைக் குறிக்கிறது; கலிலேயா மாகாணத்தையும் இது உட்படுத்துகிறது. (யோசு 19:10-16, 32-39) நப்தலி பகுதி, கலிலேயா கடலின் மேற்குக் கரையோரம் முழுவதையும் ஒட்டியிருந்தது.

கடலுக்குப் போகும் வழியில்: கலிலேயா கடலை ஒட்டியபடியே மத்தியதரைக் கடல்வரை சென்ற பழங்காலச் சாலையை ஒருவேளை குறிக்கலாம்.

மற்ற தேசத்தார் குடியிருக்கிற கலிலேயாவே: இஸ்ரவேலுக்கும் சுற்றுப்புறத் தேசங்களுக்கும் இடையில் ஒரு எல்லைப் பகுதியாக கலிலேயா இருந்ததால், அதை ஏசாயா இப்படி விவரித்திருக்கலாம். கலிலேயா அமைந்திருந்த இடமும், அதன் வழியாகச் சென்ற சாலைகளும் மற்ற தேசத்தார் அடிக்கடி வந்துபோவதற்கு வசதியாக இருந்தன. இதனால், அங்கே படையெடுத்து வருவதும் குடியேறுவதும் மற்ற தேசத்தாருக்குச் சுலபமாக இருந்தன. முதல் நூற்றாண்டில், யூதர்களாக இல்லாத நிறைய பேர் அங்கே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்; அதனால், இந்த விவரிப்பு இன்னும் பொருத்தமாக இருந்தது.

பெரிய வெளிச்சத்தை: மேசியாவைப் பற்றி ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, கலிலேயாவில் இருந்த செபுலோன், நப்தலி பகுதிகளில்தான் இயேசு நிறைய ஊழியம் செய்தார். (மத் 4:13, 14) இப்படி, ஆன்மீக இருளில் இருப்பதாகக் கருதப்பட்ட மக்களுக்கு ஆன்மீக அறிவொளியை அவர் தந்தார்; அந்த மக்கள் யூதேயாவிலிருந்த சக யூதர்களால்கூட வெறுக்கப்பட்டார்கள்.—யோவா 7:52.

மரணத்தின் நிழல்: அநேகமாக, மரணம் மக்களை நெருங்கும்போது அடையாள அர்த்தத்தில் அவர்கள்மேல் நிழலிடுவதை இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. ஆனால் இயேசு, அந்த நிழலை நீக்கி, மரணத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் அறிவொளியைத் தந்தார்.

யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசியின் மூலம் சொன்னது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே: இந்த வார்த்தைகளையும் இதுபோன்ற வார்த்தைகளையும் மத்தேயு தன் சுவிசேஷத்தில் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். இயேசுதான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை யூதர்களுக்கு வலியுறுத்துவதற்காக அவர் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியிருக்கலாம்.—மத் 2:15, 23; 4:16; 8:17; 12:17; 13:35; 21:5; 26:56; 27:10.

ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே: மத் 1:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பிரசங்கித்துக்கொண்டிருந்தார்: ‘பிரசங்கிப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “ஒரு பொதுத் தூதுவராக எல்லாருக்கும் ஒரு செய்தியை அறிவிப்பது.” இந்த வார்த்தை, பிரசங்கிக்கும் விதத்தை வலியுறுத்துகிறது; அதாவது, ஒரு தொகுதிக்கு முன்பு பிரசங்கம் செய்வதைக் குறிக்காமல், வெளிப்படையாக எல்லாருக்கும் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது.

பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது: ஒரு புதிய அரசாங்கம் உலகத்தை ஆட்சி செய்யும் என்பதுதான் இயேசு பிரசங்கித்த முக்கிய செய்தியாக இருந்தது. (மத் 10:7; மாற் 1:15) இயேசுவின் ஞானஸ்நானத்துக்குச் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு செய்தியை யோவான் ஸ்நானகர் அறிவிக்க ஆரம்பித்திருந்தார் (மத் 3:1, 2); இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கம் ‘நெருங்கி வந்துவிட்டதாக’ இயேசு சொன்னதில் இன்னும் அதிக அர்த்தம் இருந்தது; ஏனென்றால், அந்த அரசாங்கத்தின் எதிர்கால ராஜாவாக நியமிக்கப்பட்டிருந்த அவர் அப்போது அங்கு இருந்தார். கடவுளுடைய அரசாங்கம் ‘நெருங்கி வந்துவிட்டதை,’ அதாவது சீக்கிரத்தில் வரவிருந்ததை, பற்றி இயேசுவின் மரணத்துக்குப் பிறகு அவருடைய சீஷர்கள் தொடர்ந்து அறிவித்ததாக எங்கும் சொல்லப்படவில்லை.

பிரசங்கிக்க: வெளிப்படையாக எல்லாருக்கும் அறிவிப்பதைக் குறிக்கிறது.—மத் 3:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

பேதுரு என்ற சீமோன்: பேதுருவுக்கு ஐந்து விதமான பெயர்களை பைபிள் குறிப்பிடுகிறது: (1) “சிமியோன்” (இது எபிரெயப் பெயரின் கிரேக்க வடிவம்); (2) “சீமோன்” என்ற கிரேக்கப் பெயர் (சிமியோன், சீமோன் ஆகிய இரண்டுமே, “கேட்பது; கவனித்துக் கேட்பது” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கின்றன); (3) “பேதுரு” என்ற கிரேக்கப் பெயர் (இதன் அர்த்தம், “பாறாங்கல்”; பைபிளில் இவருக்கு மட்டும்தான் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது); (4) “கேபா” என்ற செமிட்டிக் பெயர் (இது பேதுரு என்பதற்கு இணையான பெயர்; ஒருவேளை, யோபு 30:6; எரே 4:29 ஆகிய வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேஃபிம் [பாறைகள்] என்ற எபிரெய வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கலாம்); (5) “சீமோன் பேதுரு” (இது இரண்டு பெயர்கள் சேர்ந்த ஒரு பெயர்).—அப் 15:14; யோவா 1:42; மத் 16:16.

கலிலேயா கடலோரமாக: கலிலேயா கடல் என்பது வட இஸ்ரவேலின் உட்பகுதியில் இருந்த ஒரு நன்னீர் ஏரி. (‘கடல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை ‘ஏரியையும்’ குறிக்கலாம்.) இது கின்னரேத் கடல் (எண் 34:11), கெனேசரேத்து ஏரி (லூ 5:1), திபேரியா கடல் (யோவா 6:1) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 210 மீட்டருக்கு (700 அடிக்கு) கீழே அமைந்திருக்கிறது. வடக்கிலிருந்து தெற்குவரை இதன் நீளம் 21 கி.மீ. (13 மைல்), இதன் அகலம் 12 கி.மீ. (8 மைல்), இதன் அதிகபட்ச ஆழம் சுமார் 48 மீ. (157 அடி).—இணைப்பு A7-ஐயும், வரைபடம் 3B-ஐயும், “கலிலேயா கடலுக்குப் பக்கத்தில் நடப்பவை” என்ற பகுதியையும் பாருங்கள்.

பேதுரு என்ற சீமோனையும்: சீமோன் என்பதுதான் அவருடைய அசல் பெயர்; இயேசு அவருக்கு வைத்த பெயர் கேபா (கேஃபஸ்); இந்த செமிட்டிக் பெயரின் கிரேக்க வடிவம்தான் பேதுரு (பெட்ரோஸ்).—மாற் 3:16; யோவா 1:42; மத் 10:2-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

வலை வீசிக்கொண்டிருந்தார்கள்: மீனவர்கள் தண்ணீருக்குள் நடந்துபோய் அல்லது ஒரு சிறிய படகில் போய் வலையை வீசினார்கள்; நீர்ப்பரப்பின்மேல் ஒரு விரிப்புபோல் விழும் விதத்தில் தன்னுடைய வட்டமான வலையை வீச ஒரு திறமையான மீனவரால் முடிந்தது. அதன் விட்டம் ஒருவேளை 6-8 மீட்டராக (20-25 அடியாக) இருக்கலாம். அதன் ஓரத்தைச் சுற்றிலும் கனமான பொருள்கள் கட்டப்பட்டிருந்ததால், அது தண்ணீருக்குள் மூழ்கி, மீன்களை வாரிக்கொண்டது.

மீனவர்கள்: கலிலேயாவில் நிறைய பேர் மீன்பிடி தொழிலைச் செய்துவந்தார்கள். பேதுருவும் அவருடைய சகோதரரான அந்திரேயாவும் தனியாக மீன்பிடிக்கவில்லை; அநேகமாக, செபுதேயுவின் மகன்களான யாக்கோபோடும் யோவானோடும் சேர்ந்து மீன்பிடிக்கும் தொழிலைச் செய்துவந்தார்கள்.—மாற் 1:16-21; லூ 5:7, 10.

மனுஷர்களைப் பிடிப்பவர்களாக: இது, சீமோனும் அந்திரேயாவும் செய்துவந்த தொழிலின் அடிப்படையில் இயேசு பயன்படுத்திய சொல்வித்தை. கடவுளுடைய அரசாங்கத்துக்காக அவர்கள் ‘மனுஷர்களை உயிரோடு பிடிப்பார்கள்’ என்பதைக் காட்டினார். (லூ 5:10) அதோடு, இந்த விஷயங்களையும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கலாம்: மீன்பிடிக்கும் தொழிலைப் போலவே சீஷராக்கும் வேலையும் அதிக பாடுபட்டு உழைக்க வேண்டிய வேலை, விடாமுயற்சியோடு செய்ய வேண்டிய வேலை, ஆனால் அது எப்போதுமே பலன் தரும் என்று சொல்ல முடியாது.

உடனடியாக . . . விட்டுவிட்டு: “உடனடியாக” என்பதற்கான கிரேக்க வார்த்தை யூத்தீயாஸ். இது இந்த வசனத்திலும் 20-வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுநேரமாகத் தன்னைப் பின்பற்றும்படி இயேசு கொடுத்த அழைப்பை, பேதுருவையும் அந்திரேயாவையும் போலவே யாக்கோபும் யோவானும் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

அவர் பின்னால் போனார்கள்: பேதுருவும் அந்திரேயாவும் ஏற்கெனவே இயேசுவின் சீஷர்களாக இருந்தார்கள். அவர்கள் சீஷர்களாகி ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருஷம்வரை ஆகியிருந்தது. (யோவா 1:35-42) இப்போது, மீன்பிடிக்கும் தொழிலை விட்டுவிட்டு முழுநேரமாகத் தன்னைப் பின்பற்றும்படி இயேசு அவர்களை அழைக்கிறார்.—லூ 5:1-11; மத் 4:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

சகோதரர்களாக இருந்த . . . யாக்கோபும் யோவானும்: யாக்கோபு எப்போதுமே அவருடைய சகோதரரான யோவானோடு சேர்த்து குறிப்பிடப்படுகிறார். அதுவும் பெரும்பாலான வசனங்களில் முதலில் குறிப்பிடப்படுகிறார். அவர் யோவானுக்கு மூத்தவராக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.—மத் 4:21; 10:2; 17:1; மாற் 1:29; 3:17; 5:37; 9:2; 10:35, 41; 13:3; 14:33; லூ 5:10; 6:14; 8:51; 9:28, 54; அப் 1:13.

செபெதேயு: ஒருவேளை, இயேசுவின் தாயான மரியாளின் சகோதரி சலோமேயை இவர் கல்யாணம் செய்திருந்ததால் இயேசுவின் பெரியப்பாவாக அல்லது சித்தப்பாவாக இருந்திருக்கலாம். அப்படியென்றால், யோவானும் யாக்கோபும் இயேசுவின் பெரியப்பா அல்லது சித்தப்பா பையன்களாக இருந்திருக்கலாம்.

உடனடியாக . . . விட்டுவிட்டு: “உடனடியாக” என்பதற்கான கிரேக்க வார்த்தை யூத்தீயாஸ். இது இந்த வசனத்திலும் 20-வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுநேரமாகத் தன்னைப் பின்பற்றும்படி இயேசு கொடுத்த அழைப்பை, பேதுருவையும் அந்திரேயாவையும் போலவே யாக்கோபும் யோவானும் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

கலிலேயா முழுவதும் போய்: கலிலேயாவில் இயேசு தன்னுடைய முதல் ஊழியப் பயணத்தை ஆரம்பிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் தேர்ந்தெடுத்திருந்த சீஷர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய நான்கு பேரும் அவரோடு இருக்கிறார்கள்.—மத் 4:18-22; இணைப்பு A7-ஐப் பாருங்கள்.

ஜெபக்கூடங்களில்: சொல் பட்டியலில் “ஜெபக்கூடம்” என்ற தலைப்பைப் பாருங்கள்.

கற்பித்தார் . . . பிரசங்கித்தார்: பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால், கற்பிப்பவர் செய்தியை அறிவிப்பது மட்டுமல்லாமல் அறிவுரை சொல்கிறார், விளக்குகிறார், பக்குவமாக எடுத்துச் சொல்கிறார், அத்தாட்சி அளிக்கிறார்.—மத் 3:2; 28:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

நல்ல செய்தியை: கிரேக்கில், யூயாஜீலியான். இங்குதான் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில பைபிள்கள் இதை “சுவிசேஷம்” என்று மொழிபெயர்த்துள்ளன. இதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு கிரேக்க வார்த்தையான யூயாஜீலிஸ்டெஸ், ‘நற்செய்தியாளர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், “நல்ல செய்தியை அறிவிப்பவர்.”—அப் 21:8; எபே 4:11, அடிக்குறிப்பு; 2தீ 4:5, அடிக்குறிப்பு.

அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்: ‘கற்றுக்கொடுப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தை அறிவுரை சொல்வது, விளக்குவது, பக்குவமாக எடுத்துக் காட்டுவது, அத்தாட்சி அளிப்பது போன்றவற்றைக் குறிக்கிறது. (மத் 3:1; 4:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.) இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது, தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு வேலை. அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதும், அவற்றைக் கடைப்பிடிப்பதும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதும் அதில் அடங்கும்.—யோவா 13:17; எபே 4:21; 1பே 2:21.

பிரசங்கித்துக்கொண்டிருந்தார்: ‘பிரசங்கிப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் அடிப்படை அர்த்தம், “ஒரு பொதுத் தூதுவராக எல்லாருக்கும் ஒரு செய்தியை அறிவிப்பது.” இந்த வார்த்தை, பிரசங்கிக்கும் விதத்தை வலியுறுத்துகிறது; அதாவது, ஒரு தொகுதிக்கு முன்பு பிரசங்கம் செய்வதைக் குறிக்காமல், வெளிப்படையாக எல்லாருக்கும் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது.

சீரியா: அதாவது, “ரோம மாகாணமாகிய சீரியா.” கலிலேயாவின் வடக்கில் இருந்த மற்ற தேசத்தாரின் பகுதி. தமஸ்குவுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் இருந்தது.

காக்காய்வலிப்பால் கஷ்டப்பட்டவர்களையும்: இதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “நிலவினால் தாக்கப்பட்டவர்கள்; சந்திரரோகிகள்.” (சில பழங்கால மொழிபெயர்ப்புகளில், “பைத்தியம்பிடித்தவர்கள்” என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.) ஆனாலும், மத்தேயு இந்த வார்த்தையை மருத்துவ ரீதியில்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஏதோ மூடநம்பிக்கையினால் நிலவின் சில பிறைகளோடு இந்த நோயை அவர் சம்பந்தப்படுத்திப் பேசவில்லை. மத்தேயுவும் மாற்குவும் லூக்காவும் குறிப்பிட்டிருக்கிற நோய் அறிகுறிகள் கண்டிப்பாக காக்காய்வலிப்பு நோயோடு சம்பந்தப்பட்டவைதான்.

தெக்கப்போலி: சொல் பட்டியலையும் இணைப்பு B10-ஐயும் பாருங்கள்.

யோர்தானுக்குக் கிழக்கிலிருந்தும்: யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கிலிருந்த பகுதி பெரேயா என்றும் அழைக்கப்பட்டது. இதற்கான கிரேக்க வார்த்தை, பீரான்; இதன் அர்த்தம், “அக்கரை; மறுபக்கம்; அப்பால்.”

மீடியா

வனாந்தரம்
வனாந்தரம்

பைபிளில் “வனாந்தரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் (எபிரெயுவில், மித்பார்; கிரேக்கில், ஈரெமாஸ்), பொதுவாக மனிதர்கள் அதிகம் குடியிருக்காத தரிசு நிலப்பகுதிகளைக் குறிக்கின்றன. புற்களும் புதர்களும் கொண்ட புல்வெளிகளையும், மேய்ச்சல் நிலங்களையும்கூட அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அந்த வார்த்தைகள், தண்ணீரே இல்லாத பாலைவனங்களைக்கூடக் குறிக்கலாம். சுவிசேஷப் புத்தகங்களில் சொல்லப்படும் வனாந்தரம், பொதுவாக யூதேயாவின் வனாந்தரத்தைக் குறிக்கிறது. இந்த வனாந்தரத்தில்தான் யோவான் வாழ்ந்தார், ஊழியமும் செய்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.—மாற் 1:12.

யோர்தான் ஆற்றின் மேற்கிலுள்ள யூதேயாவின் வனாந்தரம்
யோர்தான் ஆற்றின் மேற்கிலுள்ள யூதேயாவின் வனாந்தரம்

இந்தப் பொட்டல் பகுதியில், யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பித்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.

ஆலயத்தின் உயரமான இடம்
ஆலயத்தின் உயரமான இடம்

சாத்தான் “ஆலயத்தின் உயரமான இடத்தில்” இயேசுவை உண்மையிலேயே நிற்க வைத்திருக்கலாம்; அங்கிருந்து குதிக்கும்படிதான் அவன் இயேசுவிடம் சொன்னதாகத் தெரிகிறது. ஆனால், சரியாக எந்த இடத்தில் இயேசு நின்றிருப்பார் என்று தெரியவில்லை. இங்கே ‘ஆலயம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை அந்த முழு வளாகத்தையும் குறித்திருக்கலாம். அதனால், இயேசு ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் (1) அல்லது ஆலய வளாகத்தின் வேறொரு மூலையில் நின்றிருக்கலாம். இதில் எந்த இடத்திலிருந்து குதித்திருந்தாலும் கண்டிப்பாக உயிர் போயிருக்கும், யெகோவா மட்டும் காப்பாற்றாமல் இருந்திருந்தால்!

கலிலேயா கடலின் வடக்குக் கரை, வடமேற்குக் காட்சி
கலிலேயா கடலின் வடக்குக் கரை, வடமேற்குக் காட்சி

1. கெனேசரேத் சமவெளி. இது முக்கோண வடிவில் இருந்த செழிப்பான நிலப்பகுதி. சுமார் 5 கி.மீ. (3 மைல்) நீளத்திலும் 2.5 கி.மீ. (1.5 மைல்) அகலத்திலும் இருந்தது. இந்தப் பகுதியின் கடலோரத்தில்தான் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகிய மீனவர்களைத் தன்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய இயேசு அழைத்தார்.—மத் 4:18-22.

2. இயேசு இங்குதான் மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தார் என்று பாரம்பரியம் சொல்கிறது.—மத் 5:1; லூ 6:17, 20.

3. கப்பர்நகூம். இந்த நகரத்தில்தான் இயேசு குடியிருந்தார். இந்த நகரத்திலோ இதற்குப் பக்கத்திலோதான் அவர் மத்தேயுவைச் சந்தித்தார்.—மத் 4:13; 9:1, 9.

கலிலேயா கடலில் வாழும் மீன்கள்
கலிலேயா கடலில் வாழும் மீன்கள்

பைபிளில் உள்ள நிறைய வசனங்கள் கலிலேயா கடலில் மீன் பிடிக்கப்பட்டதைப் பற்றியும், அங்கிருந்த மீன்களைப் பற்றியும், மீனவர்களைப் பற்றியும் சொல்கிறது. கலிலேயா கடலில் சுமார் 18 வகையான மீன்கள் வாழ்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட பத்து வகைகளைத்தான் மீனவர்கள் பிடித்தார்கள். அந்தப் பத்து வகையான மீன்களை வியாபார ரீதியில் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதில் ஒரு பிரிவுதான் பினி. இது “பார்பஸ் கெண்டை” என்றும் அழைக்கப்படுகிறது (படத்தில் காட்டப்பட்டிருப்பது பார்பஸ் லாங்கிசெப்ஸ்) (1). அதன் மூன்று இனங்களுக்கு வாயின் ஓரங்களில் முடிபோன்ற இழைகள் இருக்கின்றன; அதனால் செமிட்டிக் மொழியில் “முடி” என்ற அர்த்தத்தைத் தரும் பினீ என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. அது மெல்லுடலிகளையும் நத்தைகளையும் சின்ன மீன்களையும் சாப்பிட்டு உயிர்வாழ்கிறது. நீளமான தலையைக் கொண்ட “பார்பஸ் கெண்டை” 75 செ.மீ. (30 அங்.) நீளத்துக்கு வளருகிறது. அதன் எடை 7 கிலோவுக்கும் அதிகமாக இருக்கலாம். இரண்டாவது பிரிவின் பெயர் முஷ்ட் அல்லது “ஜிலேபி கெண்டை” (படத்தில் காட்டப்பட்டிருப்பது டிலாப்பியா கலிலியா) (2). அரபிய மொழியில் அதற்கு “சீப்பு” என்று அர்த்தம். அதன் ஐந்து இனங்களுக்கு சீப்புபோன்ற முதுகுத் துடுப்பு இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். ஒரு வகையான முஷ்ட் சுமார் 45 செ.மீ. (18 அங்.) வளருகிறது. அதன் எடை சுமார் 2 கிலோ இருக்கலாம். மூன்றாவது பிரிவின் பெயர் கின்னரேத் சாளை (படத்தில் காட்டப்பட்டிருப்பது அகான்தோபிராமா டெர்ரே சான்க்டே) (3). இந்த சாளை மீன் பார்ப்பதற்கு ஒரு சின்ன ஹெர்ரிங் மீன்போல் இருக்கிறது. பழங்காலத்திலிருந்தே இந்த மீன் பதப்படுத்தப்பட்டு வருகிறது.

வலை வீசுதல்
வலை வீசுதல்

கலிலேயா கடலில் மீன்பிடித்தவர்கள் இரண்டு விதமான எறிவலைகளைப் பயன்படுத்தினார்கள். சின்ன துவாரங்கள் உள்ள வலை, சின்ன மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பெரிய துவாரங்கள் உள்ள வலை, பெரிய மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இழுவலைக்கும் எறிவலைக்கும் வித்தியாசம் இருந்தது. ஏனென்றால், இழுவலையைத் தண்ணீரில் போடுவதற்குக் குறைந்தது ஒரு படகாவது தேவைப்பட்டது; அதோடு, ஒருசில மீனவர்களாவது தேவைப்பட்டார்கள். ஆனால், எறிவலையை ஒரே ஒருவரால்கூட வீச முடிந்தது. அவர் படகில் இருந்தபடி அல்லது கரையிலோ கரைக்குப் பக்கத்திலோ நின்றபடி அதை வீச முடிந்தது. எறிவலையின் விட்டம் 5 மீ. (15 அடி) அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. அதன் ஓரத்தைச் சுற்றிலும் கற்களோ ஈயத்தாலான குண்டுகளோ பொருத்தப்பட்டிருந்தன. வலை சரியாக வீசப்பட்டபோது, தண்ணீர்மேல் தட்டையாக விழுந்தது. அதன் கனமான ஓரப்பகுதிகள் முதலில் தண்ணீருக்குள் மூழ்கின. அதன்பின், மொத்த வலையும் கடலுக்கு அடியில் மூழ்க மூழ்க அதில் மீன்கள் சிக்கின. மீனவர் கடலுக்கு அடியில் நீந்திப்போய், அந்த வலையில் சிக்கிய மீன்களை எடுத்துக்கொள்ள முடிந்தது, அல்லது அந்த வலையைக் கவனமாகக் கரைக்கு இழுத்துவர முடிந்தது. வலையைச் சரியாகப் பயன்படுத்த அதிகத் திறமையும் கடினமான முயற்சியும் தேவைப்பட்டது.

மீன்வலையைப் பழுதுபார்த்தல்
மீன்வலையைப் பழுதுபார்த்தல்

மீன்வலைகள் விலை உயர்ந்தவையாக இருந்தன. அவற்றைப் பராமரிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஒவ்வொரு தடவையும் மீன்பிடித்துவிட்டு வந்த பிறகு மீனவர்கள் அவற்றைப் பழுதுபார்க்கவும், அலசவும், காயவைக்கவும் வேண்டியிருந்தது. அதற்கே அவர்களுடைய பெரும்பாலான நேரம் செலவானது. (லூ 5:2) மீன்வலைகளைப் பற்றி எழுதியபோது மத்தேயு மூன்று கிரேக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினார். டீக்டியான் என்ற பொதுப்படையான வார்த்தை, அநேகமாகப் பல விதமான வலைகளைக் குறிக்கலாம். (மத் 4:21) சாஜீனே என்ற வார்த்தை, படகிலிருந்து போடப்பட்ட பெரிய இழுவலையைக் குறித்தது. (மத் 13:47, 48) ஆம்ஃபைபிள்ஸ்ட்ரான் என்ற வார்த்தை சின்ன வலையைக் குறித்தது. அதன் அர்த்தம் “வீசப்பட்ட ஒன்று.” கரையில் அல்லது கரைக்குப் பக்கத்தில் இருந்த மீனவர்கள் அநேகமாக ஆழமில்லாத தண்ணீரில் இந்த வலையை வீசியிருக்கலாம்.—மத் 4:18.

முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகு
முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகு

இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள படகு, கலிலேயா கடற்கரைக்குப் பக்கத்தில் சேற்றில் புதைந்து காணப்பட்ட முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகளை அடிப்படையாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது; அதோடு, கடற்கரையோரத்தில் அமைந்திருந்த மிக்தால் என்ற ஊரைச் சேர்ந்த முதல் நூற்றாண்டு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மொசைக் ஓவியத்தையும் அடிப்படையாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட படகுக்குப் பாய்மரமும் கப்பற்பாயும் (கப்பற்பாய்களும்) இருந்திருக்கலாம். அதில் மொத்தம் ஐந்து படகோட்டிகள் இருந்திருக்கலாம். அவர்களில் நான்கு பேர் துடுப்புப் போட்டிருக்கலாம்; இன்னொருவர் படகின் பின்புறத்தில் இருந்த சின்ன தளத்தில் நின்றுகொண்டு படகை ஓட்டியிருக்கலாம். அந்தப் படகின் நீளம் சுமார் 8 மீ. (26.5 அடி). அதன் நடுப்பகுதியின் அகலம் சுமார் 2.5 மீ. (8 அடி), அதன் ஆழம் 1.25 மீ. (4 அடி). அந்தப் படகில் 13 அல்லது அதற்கும் அதிகமான ஆண்கள் பயணம் செய்திருக்கலாம்.

கலிலேயாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகள்
கலிலேயாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகின் எஞ்சிய பகுதிகள்

1985/1986-ல் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக கலிலேயா கடலின் நீர்மட்டம் குறைந்தது. அப்போது, சேற்றில் புதைந்திருந்த ஒரு பழங்காலப் படகின் முக்கியப் பகுதி வெளியில் தெரிந்தது. எஞ்சியிருக்கும் அந்தப் பகுதியின் நீளம் 8.2 மீ. (27 அடி), அகலம் 2.3 மீ. (7.5 அடி), அதிகபட்ச உயரம் 1.3 மீ. (4.3 அடி). கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சமயத்தில் அந்தப் படகு கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்தப் படகு இப்போது இஸ்ரேலில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்கு முன்பு தண்ணீரில் மிதந்து சென்றபோது எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த வீடியோ அனிமேஷன் காட்டுகிறது.

முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்
முதல் நூற்றாண்டு ஜெபக்கூடம்

கலிலேயா கடலின் வடகிழக்கே சுமார் 10 கி.மீ. (6 மைல்) தூரத்தில் இருக்கும் காம்லா என்ற இடத்தில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஜெபக்கூடம் இருக்கிறது. அதில் காணப்படும் சில அம்சங்களை இந்தப் படம் சித்தரிக்கிறது. இது, பழங்காலத்தில் ஒரு ஜெபக்கூடம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய உதவுகிறது.