Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 4

இயேசு கிறிஸ்து யார்

இயேசு கிறிஸ்து யார்

1. இயேசு எங்கிருந்து வந்தார்?

எல்லாரும் இயேசுவோடு நன்றாக பழகியதற்கு என்ன காரணம்?—மத்தேயு 11:29; மாற்கு 10:13-16.

பூமியில் பிறப்பதற்கு முன்பு இயேசு பரலோகத்தில் ஒரு சக்தியுள்ள நபராக, அதாவது தேவதூதராக இருந்தார். (யோவான் 8:23) யெகோவா முதல் முதலில் இயேசுவைத்தான் படைத்தார். மற்ற எல்லாவற்றையும் படைக்க அவரைப் பயன்படுத்தினார். இயேசுவை மட்டும்தான் யெகோவா நேரடியாக படைத்தார். அதனால்தான், அவரை கடவுளுடைய ‘ஒரே மகன்’ என்று பைபிள் சொல்கிறது. அதோடு, இயேசுவை “வார்த்தை” என்றும் பைபிள் சொல்கிறது. ஏனென்றால், கடவுள் என்ன சொன்னாரோ அதை இயேசு மற்றவர்களுக்கு சொன்னார். (யோவான் 1:14)​—நீதிமொழிகள் 8:22, 23, 30-ஐயும் கொலோசெயர் 1:15, 16-ஐயும் வாசியுங்கள்.

2. இயேசு ஏன் பூமிக்கு வந்தார்?

இயேசுவை பரலோகத்திலிருந்து பூமிக்கு கடவுள் அனுப்பினார். இயேசுவின் உயிரை மரியாள் என்ற கன்னிப் பெண்ணின் கருப்பைக்கு கடவுள் மாற்றினார். அதனால் ஒரு மனித அப்பாவினால் இயேசு பிறக்கவில்லை. (லூக்கா 1:30-35) அவர் பூமிக்கு வந்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. (1) கடவுளைப் பற்றி எல்லாருக்கும் சொல்லிக் கொடுப்பதற்காக வந்தார். (2) என்ன கஷ்டம் வந்தாலும் கடவுளுக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்ளலாம் என்பதை காட்டுவதற்காக வந்தார். (3) ஜனங்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அவருடைய உயிரையே “மீட்புவிலையாக” கொடுக்க வந்தார்.​—மத்தேயு 20:28-ஐ வாசியுங்கள்.

3. எதிலிருந்து மனிதர்கள் மீட்கப்பட வேண்டும்?

போர் கைதியை மீட்பதற்காக அல்லது ஏதோவொன்றைத் திரும்ப வாங்குவதற்காகச் செலுத்தப்படுகிற சரிசமமான தொகைதான் மீட்புவிலை. (யாத்திராகமம் 21:29, 30) மனிதர்கள் சாவிலிருந்து மீட்கப்பட வேண்டும், அதனால், மீட்புவிலை தேவைப்படுகிறது. மனிதர்கள் சாக வேண்டும் என்பது கடவுளுடைய ஆசையல்ல. அவர்கள் சாவில்லாமல் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. முதல் மனிதன் ஆதாமை எந்தக் குறையும் இல்லாமல் கடவுள் படைத்தார். கடவுளுக்கு கீழ்ப்படிந்திருந்தால் ஆதாம் இன்றுவரை உயிரோடு இருந்திருப்பான். ஆனால், செய்யக்கூடாது என்று கடவுள் சொன்ன ஒரு விஷயத்தை அவன் செய்துவிட்டான். அதாவது, பாவம் செய்துவிட்டான். அதனால், ஆதாம் செத்துப்போனான். (ஆதியாகமம் 2:16, 17; 5:5) மனிதர்கள் எல்லாருமே அவனுடைய பரம்பரையிலிருந்து வந்திருப்பதால் அவனுடைய பாவம் எல்லாருக்கும் வந்துவிட்டது. அதனால்தான், நாம் எல்லாருமே சாகிறோம்.​—ரோமர் 5:12; 6:23-ஐ வாசியுங்கள்.

அப்படியென்றால், மனிதர்களை சாவிலிருந்து யாரால் மீட்க முடியும்? நாம் எல்லாரும் நம்முடைய பாவங்களுக்கு தண்டனையாகத்தான் சாகிறோம். எனவே ஆதாமின் பரம்பரையில் வந்த எந்தவொரு மனிதனாலும் மற்றவர்களை சாவிலிருந்து மீட்க தன்னுடைய உயிரை மீட்புவிலையாக கொடுக்கமுடியாது.​—சங்கீதம் 49:7-9-ஐ வாசியுங்கள்.

4. இயேசு ஏன் இறந்தார்?

இயேசு எந்தக் குறையும் இல்லாமல் பிறந்தார், அவர் எந்த பாவமும் செய்யவில்லை. அதனால் அவருடைய பாவத்திற்காக இயேசு சாகவில்லை. நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவருடைய உயிரையே கொடுத்தார். கடவுள் நம்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அதனால்தான் நமக்காக சாகும்படி இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசுவும் நம்மீது ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். அதனால்தான் அவருடைய அப்பா சொன்னதைக் கேட்டு நமக்காக அவருடைய உயிரையே தியாகம் செய்தார். ​—யோவான் 3:16-ஐயும் ரோமர் 5:18, 19-ஐயும் வாசியுங்கள்

இயேசு ஏன் இறந்தார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.

5. இயேசு இப்போது என்ன செய்கிறார்?

இயேசு பூமியில் இருந்தபோது ஜனங்களுடைய வியாதியை குணப்படுத்தினார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார், கஷ்டத்தில் இருந்தவர்களுக்கு உதவி செய்தார். கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற மனிதர்களுக்கு எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்று காட்டுவதற்காகத்தான் அதையெல்லாம் செய்தார். (மத்தேயு 15:30, 31; யோவான் 5:28) இயேசு இறந்த பிறகு, கடவுள் அவருக்கு மறுபடியும் உயிர் கொடுத்தார். திரும்பவும் அவரை சக்தியுள்ள தேவதூதராக ஆக்கினார். (1 பேதுரு 3:18) பிறகு, யெகோவா அவரை இந்த முழு பூமிக்கும் ராஜாவாக ஆக்கும் வரை பரலோகத்தில் இயேசு காத்திருந்தார். (எபிரெயர் 10:12, 13) இப்போது, பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்கிறார். இந்த சந்தோஷமான செய்தியை யெகோவாவின் சாட்சிகள் எல்லாருக்கும் சொல்கிறார்கள்.​— தானியேல் 7:13, 14-ஐயும் மத்தேயு 24:14-ஐயும் வாசியுங்கள்.

ஒரு ராஜாவாக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கெட்டவர்கள் எல்லாரையும் சீக்கிரத்தில் இயேசு அழிக்கப்போகிறார். நமக்கு இருக்கிற எல்லா கஷ்டங்களையும் தீர்க்கப்போகிறார். அவருடைய பேச்சைக் கேட்டு நடக்கிற எல்லாரும் இதே பூமியில் சந்தோஷமாக இருக்கப் போகிறார்கள்.​—சங்கீதம் 37:9-11-ஐ வாசியுங்கள்.