Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 7

பூமியை கடவுள் ஆட்சி செய்வாரா?

பூமியை கடவுள் ஆட்சி செய்வாரா?

1. பூமியை கடவுள் ஆட்சி செய்வாரா?

இயேசுவை ஏன் நல்ல ராஜா என்று சொல்கிறோம்? —மாற்கு 1:40-42.

இன்று இருக்கிற மனித ஆட்சியை அழித்துவிட்டு, கடவுள் அவருடைய அரசாங்கத்தை ஏற்படுத்துவார். அந்த அரசாங்கம் பரலோகத்திலிருந்து பூமியை ஆட்சி செய்யும். கடவுள் ஆட்சி செய்யும்போது பரலோகத்திலும் சரி பூமியிலும் சரி, எல்லாமே அவருடைய விருப்பப்படிதான் நடக்கும். நல்ல ஆட்சி வர வேண்டும் என்ற நம்முடைய ஆசையும் அப்போதுதான் நிறைவேறும். அந்த ஆட்சி வரும்போது உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களும் ஒற்றுமையாக இருப்பார்கள்.​—தானியேல் 2:44-ஐயும் மத்தேயு 6:9, 10; 24:14-ஐயும் வாசியுங்கள்.

யெகோவா, இயேசு கிறிஸ்துவை அந்த அரசாங்கத்தின் ராஜாவாக்கினார்.​—வெளிப்படுத்துதல் 11:15-ஐ வாசியுங்கள்.

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? என்ற வீடியோவைப் பாருங்கள்.

2. இயேசுதான் சிறந்த ராஜா என்று ஏன் சொல்கிறோம்?

இயேசு ரொம்ப அன்பானவர், நீதியானவர், நியாயமானவர். (மத்தேயு 11:​28-30) அவர் பரலோகத்தில் இருந்து பூமியை ஆட்சி செய்யப்போகிறார். அதனால், நம் எல்லாருடைய கஷ்டத்தையும் தீர்க்கிற சக்தி அவருக்கு இருக்கிறது. இயேசுவை யெகோவா உயிரோடு எழுப்பியதற்கு பிறகு அவர் பரலோகத்திற்கு சென்றார், ராஜாவாக ஆகும் வரை அவர் காத்துக்கொண்டு இருந்தார். (எபிரெயர் 10:12, 13) கடைசியில், ஆட்சி செய்கிற அதிகாரத்தை யெகோவா அவருக்கு கொடுத்தார்.​—தானியேல் 7:13, 14-ஐ வாசியுங்கள்.

3. இயேசுவோடு சேர்ந்து யாரெல்லாம் ஆட்சி செய்வார்கள்?

கடவுள் யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள்தான் இயேசுவோடு ஆட்சி செய்வார்கள். அவர்களை ‘பரிசுத்தவான்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (தானியேல் 7:27) இயேசுவுக்கு உண்மையாக இருந்த அப்போஸ்தலர்களைத்தான் முதல் முதலில் கடவுள் தேர்ந்தெடுத்தார். அதற்குப் பிறகு, இன்று வரை சில ஆண்களையும் பெண்களையும் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். இவர்களையும் இயேசுவைப் போலவே பரலோகத்திற்கு உயிரோடு எழுப்புவார்.​—யோவான் 14:1-3-ஐயும் 1 கொரிந்தியர் 15:42-44-ஐயும் வாசியுங்கள்.

எத்தனை பேர் பரலோகத்திற்கு போவார்கள்? மொத்தம் 1,44,000 பேர் பரலோகத்துக்கு போவார்கள். அவர்களை “சிறுமந்தை” என்று இயேசு சொன்னார். (லூக்கா 12:32) அவர்கள் இயேசுவோடு சேர்ந்து இந்தப் பூமியை ஆட்சி செய்வார்கள்.​—வெளிப்படுத்துதல் 14:1-ஐ வாசியுங்கள்.

4. இயேசு ஆட்சி செய்ய ஆரம்பித்ததும் என்ன நடந்தது?

1914-ல் பரலோகத்தில் இயேசு ராஜாவானார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அப்போது சாத்தானையும் அவனுடைய கூட்டத்தையும் அவர் பூமிக்கு தள்ளிவிட்டார். அதனால், சாத்தான் பயங்கர கோபத்தோடு உலகம் முழுவதும் நிறைய பிரச்சினைகளை கொண்டுவந்தான். (வெளிப்படுத்துதல் 12:7-10, 12) அதற்குப் பிறகுதான் ஜனங்களுக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வர ஆரம்பித்தது. இன்று உலகம் முழுவதும் போர், பஞ்சம், பயங்கர வியாதி, பூமி அதிர்ச்சி அதிகமாக இருக்கின்றன. இயேசு இந்த முழு பூமியையும் சீக்கிரத்தில் ஆட்சி செய்யப்போகிறார் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.​—லூக்கா 21:7, 10, 11, 31-ஐ வாசியுங்கள்.

5. கடவுளுடைய ஆட்சி எதையெல்லாம் சாதித்திருக்கிறது?

யெகோவாவின் சாட்சிகள் சொல்கிற செய்தியைக் கேட்டு நாடு, இனம், மொழி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒரே குடும்பம் போல் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இன்று கடவுளுடைய ஆட்சியின் பெரிய சாதனை இது! இந்த லட்சக்கணக்கான மக்கள் இயேசுவை ராஜாவாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கெட்டவர்களை இந்தப் பூமியிலிருந்து அழிக்கும்போது இயேசு இவர்களை பாதுகாப்பார். அதனால், கடவுளுடைய ஆட்சியில் வாழ ஆசைப்படுகிறவர்கள் இயேசு சொன்னபடி நடக்க வேண்டும்.​—வெளிப்படுத்துதல் 7:9, 14, 16, 17-ஐ வாசியுங்கள்.

இயேசுவின் 1,000 வருட ஆட்சியில் யெகோவாவின் விருப்பப்படி பூமி ஏதேன் தோட்டத்தைப் போல மாறும். 1,000 வருடங்களுக்குப் பிறகு, இயேசு யெகோவாவிடம் ஆட்சியை கொடுத்துவிடுவார். (1 கொரிந்தியர் 15:24-26) கடவுளுடைய ஆட்சியைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டதை யாரிடமெல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?​—சங்கீதம் 37:10, 11, 29-ஐ வாசியுங்கள்.

 

^ பாரா. 6 1914-ஐ பற்றி பைபிள் சொன்ன தீர்க்கதரிசனங்களை தெரிந்துகொள்ள, பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? புத்தகத்தில் பக்கங்கள் 217-220-ஐ பாருங்கள்.