Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | மரியாள்

வேதனையின் வாளை வெற்றிகரமாகச் சமாளித்தார்

வேதனையின் வாளை வெற்றிகரமாகச் சமாளித்தார்

மரியாளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்கிறது, வேதனையில் அவர் நிலைகுலைந்துபோகிறார். பல மணி நேரம் சித்திரவதைச் செய்யப்பட்டு இறந்துபோன தன் மகனின் அவலக் குரல் அவர் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. பட்டப்பகலில் அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. இப்போது பூமி அதிர்கிறது. (மத்தேயு 27:45, 51) இயேசுவின் மரணம், வேறு யாரையும்விட யெகோவாவைத்தான் அதிகமாகப் பாதித்திருக்கும். யெகோவா துடிதுடித்துப் போவதை அவர் உலகிற்குக் காட்டுவதாக மரியாள் நினைத்திருக்கலாம்.

இருள் சூழ்ந்த கொல்கொதா என்ற இடத்தில், மரியாள் தன் மகனை நினைத்து சோகத்தில் மூழ்கியிருக்கிறார். (யோவான் 19:17, 25) பழைய நினைவுகள் அவர் மனதில் அலைமோதியிருக்கலாம். 33 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவமும் அவர் ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். அப்போது, யோசேப்பும் மரியாளும் பச்சிளம் குழந்தையான இயேசுவை எருசலேமிலிருந்த ஆலயத்திற்குக் கொண்டுவந்தார்கள். அங்கே சிமியோன் என்பவர் கடவுளுடைய சக்தியால் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பற்றி சொன்னார். இயேசுவைப் பற்றிய பல பிரமிப்பூட்டும் விஷயங்களை அவர் சொன்னார். நீண்ட வாள் ஒன்று தன் உள்ளத்தில் ஊடுருவிச் செல்வதுபோல் மரியாள் ஒரு நாள் உணர்வார் என்பதாகவும் சொன்னார். (லூக்கா 2:25-35) அந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்போதுதான் மரியாளுக்குப் புரிகிறது.

மரியாளுடைய உள்ளத்தை வேதனை துளைத்தது

பெற்றப் பிள்ளையை மரணத்தில் பறிகொடுப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. மரணம் ஒரு பயங்கரமான எதிரி; அது நம் எல்லோருக்கும் வேதனையை உண்டாக்குகிறது. (ரோமர் 5:12; 1 கொரிந்தியர் 15:26) அந்த வேதைனையிலிருந்து நம்மால் மீள முடியுமா? முடியும்! இதைத்தான் மரியாளின் உதாரணம் காட்டுகிறது. இயேசுவின் ஊழிய காலம் தொடங்கி, அவருடைய மரணம்வரையிலும் அதற்குச் சற்றுப் பின்பும் மரியாள் எப்படி விசுவாசத்தைக் காட்டினார் என்பதையும் அது எப்படி தன் மகனின் மரணத்தைச் சமாளிக்க உதவியது என்பதையும் சிந்திக்கலாம்.

“அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்”

மூன்றரை வருடங்களுக்கு முன்பு என்ன நடந்ததென பார்ப்போம். சிறிய ஊரான நாசரேத்தில்கூட, யோவான் ஸ்நானகர் பற்றியும் மனந்திரும்பும்படி அவர் சொல்லி வந்ததைப் பற்றியும் மக்கள் பேசிக்கொண்டார்கள். சில மாற்றங்கள் நடக்கப்போவதை மரியாள் உணர்ந்தார். இயேசு சீக்கிரத்தில் தம் ஊழியத்தை ஆரம்பிக்கப்போகிறார் என்பதை அவர் இப்போது புரிந்துகொண்டார். (மத்தேயு 3:1, 13) இயேசு இனி தம் குடும்பத்தாரோடு இருக்கமாட்டார். இது மரியாளுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் கஷ்டமாக இருந்திருக்கும். ஏன் என்று யோசிக்கிறீர்களா?

மரியாளின் கணவர் யோசேப்பு ஏற்கெனவே இறந்துவிட்டதுபோல் தெரிகிறது. அப்படியென்றால், மரணத்தில் அன்பானவர்களைப் பறிகொடுப்பது மரியாளுக்கு ஒன்றும் புதிதல்ல. * இப்போது இயேசு, “தச்சனுடைய மகன்” என்று மட்டுமல்ல “தச்சன்” என்றும் அழைக்கப்பட்டார். தம் அப்பாவின் மரணத்திற்குப் பின், தச்சு வேலையை இயேசு செய்து வந்தாரெனத் தெரிகிறது. தம் அம்மாவையும் கூடப்பிறந்தவர்களையும் (குறைந்தபட்சம் ஆறு பேரையும்) அவர்தான் கவனித்துக்கொண்டார். (மத்தேயு 13:55, 56; மாற்கு 6:3) தாம் செய்துவந்த வேலையைக் கவனித்துக்கொள்ள யாக்கோபுக்கு (இயேசுவின் பெரிய தம்பியாக இருந்திருக்கலாம்) இயேசு பயிற்சி கொடுத்திருப்பார். இருந்தாலும், மூத்த மகன் இயேசு வீட்டில் இல்லாதது அந்தக் குடும்பத்திற்கு ஒரு இழப்புதான். மரியாளுக்கு ஏற்கெனவே நிறைய பொறுப்புகள் இருந்தன. இப்போது, இந்தமாற்றத்தை நினைத்து அவர் பயந்தாரா? அது நமக்குத் தெரியாது! ஆனால், அதைவிட ஒரு முக்கியமான கேள்வி: நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசு, மேசியாவாக அதாவது கிறிஸ்து இயேசுவாக ஆனபோது மரியாளுக்கு எப்படி இருந்தது? ஒரு பைபிள் பதிவு இதற்குப் பதிலளிக்கிறது.—யோவான் 2:1-12.

இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்காக யோவான் ஸ்நானகரிடம் சென்றார். ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர் மேசியாவாக, அதாவது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக ஆனார். (லூக்கா 3:21, 22) பிறகு, தம்முடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்தார். மிக முக்கியமான வேலையை அவர் செய்துகொண்டிருந்த போதிலும் தம் குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக நேரம் செலவிட்டார். நாசரேத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலிருந்த கானா என்ற ஊருக்கு, தம் குடும்பத்தாரோடும் சீடர்களோடும் ஒரு திருமண விருந்திற்குச் சென்றார். விருந்தில் ஏதோ சலசலப்பு இருப்பதை மரியாள் புரிந்துகொண்டார். திராட்சமது தீர்ந்துவிட்டதால் திருமண வீட்டார் பரபரப்பாக இருந்ததைப் பார்த்தார். அந்தக் காலத்தில், இதுபோன்ற சம்பவங்கள் திருமண வீட்டாருக்குப் பெரிய அவமானத்தைக் கொண்டுவந்தது. மரியாளுக்கு அது கஷ்டமாக இருந்ததால், உதவிக்காக இயேசுவிடம் சென்றார்.

“பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சமது இல்லை” என்று இயேசுவிடம் சொன்னார். அவர் என்ன செய்ய வேண்டும் என்று மரியாள் எதிர்பார்த்தார்? தன் மகன் சாதாரணமானவர் அல்ல, அவரால் பல அற்புதங்களைச் செய்ய முடியும் என்று மரியாள் நினைத்திருக்கலாம்; அதை உடனே செய்வார் என்றும் நினைத்திருக்கலாம். அதனால் இயேசுவிடம் திராட்சமதுவிற்காக ஏதாவது செய்ய வேண்டுமென மரியாள் எதிர்பார்த்திருக்கலாம். அதற்கு இயேசு, “பெண்மணியே, நீங்கள் சொல்லி நான் செய்ய வேண்டுமா?” என்று பதிலளித்தார். அவருடைய வார்த்தைகள் மரியாதைக்குறைவாக இல்லாத போதிலும் அது மரியாளுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். மரியாளை இயேசு மென்மையாகக் கண்டித்தார். தம்முடைய ஊழியம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தம் பரலோக அப்பா யெகோவாவே தீர்மானிப்பார் என்பதை சொல்லாமல் சொன்னார்.

மரியாள் மனத்தாழ்மையுள்ள பெண்ணாக இருந்ததால், தன் மகன் சொன்னதை உடனே ஏற்றுக்கொண்டார். திருமண விருந்தில் வேலை செய்துகொண்டிருந்தவர்களைப் பார்த்து, “அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்” என்றார். இனி, தான் சொல்கிறபடி மகன் நடக்க வேண்டும் என்றல்ல, மகன் சொல்கிறபடியே தானும் மற்றவர்களும் நடக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். புதுமண ஜோடிமீது அம்மாவுக்கு இருந்த கரிசனை தமக்கும் இருந்ததை இயேசு காட்டினார். தண்ணீரை சுவையான திராட்சமதுவாக மாற்றுவதன் மூலம் முதல் அற்புதத்தைச் செய்தார். அதனால் என்ன நடந்தது? “அவரது சீடர்கள் அவர்மீது விசுவாசம் வைத்தார்கள்.” மரியாளும் இயேசுமீது விசுவாசம் வைத்தார். இயேசுவை மகனாக மட்டுமல்ல, தன் எஜமானராகவும் மீட்பராகவும் பார்த்தார். மரியாள் தமக்குப் பக்கபலமாக இருந்ததற்காக இயேசுவும் சந்தோஷப்பட்டிருப்பார்.

மரியாளுடைய விசுவாசத்திலிருந்து இன்று பெற்றோர் என்ன கற்றுக்கொள்ளலாம்? இயேசுவைப் போல ஒரு மகனை யாரும் பெற்றெடுத்து வளர்த்திருக்க முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது பெற்றோர் நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களை இன்னும் குழந்தைகளைப் போல நடத்துவது சரியாக இருக்காது. (1 கொரிந்தியர் 13:11) வளர்ந்த பிள்ளைகளிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? பிள்ளைகள் பைபிள் போதனைகளின்படி வாழ்வார்கள் என்று நம்புங்கள், அதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இப்படிச் செய்வது உங்கள் பிள்ளைகளுக்கு நன்மை அளிக்கும்.

‘அவருடைய சகோதரர்கள் அவர்மீது விசுவாசம் வைக்கவில்லை’

இயேசுவின் மூன்றரை வருட ஊழிய காலத்தில் மரியாள் என்ன செய்தார் என்பதைப் பற்றிய பதிவுகள் அதிகம் இல்லை. கணவரை இழந்த மனைவியாக தன் மற்ற பிள்ளைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மரியாளுக்கு இருந்திருக்கும். நாசரேத் முழுவதும் இயேசு ஊழியம் செய்தபோது, மரியாள் ஏன் அவரோடு போகவில்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (1 தீமோத்தேயு 5:8) இருந்தாலும், மேசியாவைப் பற்றி தன் இருதயத்திலிருந்த விஷயங்களை ஆழ்ந்து யோசித்தார். தன்னுடைய வழக்கத்தின்படியே ஜெபக்கூடத்திற்குத் தவறாமல் சென்றார்.—லூக்கா 2:19, 51; 4:16.

அப்படியென்றால், ஜெபக்கூடத்தில் இயேசு போதித்தபோது, மரியாளும் அதை நிச்சயம் கேட்டிருப்பார்! மேசியாவைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட தீர்க்கத்தரிசனம், இன்று தம் மூலம் நிறைவேறுகிறது என்று இயேசு சொன்னபோது மரியாள் சந்தோஷத்தில் பூரித்திருப்பார்! ஆனால், நாசரேத்தில் இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததை நினைத்து மரியாள் நிச்சயம் வேதனைப்பட்டிருப்பார். அவர்கள் இயேசுவை கொலை செய்யக்கூட துணிந்தார்கள்!—லூக்கா 4:17-30.

தன் மற்ற மகன்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததைப் பார்த்து மரியாள் துக்கப்பட்டிருப்பார். ‘இயேசுவுடைய சகோதரர்கள் அவர்மீது விசுவாசம் வைக்கவில்லை’ என்று யோவான் 7:5 சொல்கிறது. இயேசுவுக்கு இரண்டு தங்கைகளாவது இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதைப் பற்றி பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. * வேறு மத நம்பிக்கை இருப்பவர்களோடு வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பதை மரியாள் புரிந்திருப்பார். தன்னுடைய மத நம்பிக்கையில் உறுதியோடு இருக்க மரியாள் நிச்சயம் பாடுபட்டிருப்பார். அதேசமயம், தன் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கும் தன் நம்பிக்கையை எடுத்துச்சொல்ல கடினமாக முயற்சி செய்திருப்பார்.

ஒரு சந்தர்ப்பத்தில், இயேசுவின் தம்பிகளும் சொந்தக்காரர்களும் அவருக்கு “பைத்தியம் பிடித்துவிட்டது” என்று சொல்லி, அவரைப் “பிடித்துக்கொண்டுவர” போனார்கள். (மாற்கு 3:21, 31) ஆனால், மரியாள் அப்படி நினைக்கவில்லை. இருந்தாலும், தன் மகன்கள் இயேசுவை விசுவாசிப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று நினைத்து அவர்களோடு போனார். அவர்கள் இயேசுவை விசுவாசித்தார்களா? பல அற்புதங்களைச் செய்தாலும் பல அருமையான பைபிள் விஷயங்களைப் போதித்தாலும் இயேசுவை அவர்கள் விசுவாசிக்கவில்லை. ‘இவர்கள் எப்போதுதான் இயேசுமீது விசுவாசம் வைப்பார்களோ’ என்று நினைத்து மரியாள் சோர்ந்துபோனாரா?

உங்கள் குடும்பத்தில் வித்தியாசமான மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால், மரியாளின் விசுவாசம் உங்களுக்கு உதவும். தன் குடும்பத்தார் இயேசுவை விசுவாசிக்கவே மாட்டார்கள் என்று அவர் நினைக்கவில்லை. மாறாக, தான் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பதற்குத் தன் விசுவாசம்தான் காரணம் என்பதை மகன்கள் புரிந்துகொள்ளும்படி நடந்துகொண்டார். அதேசமயத்தில், இயேசுவுக்கு ஆதரவாகவும் இருந்தார். தன்னோடு இயேசு இல்லாததை நினைத்து வருத்தப்பட்டாரா? அவர் கூடவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தாரா? ஒருவேளை அவர் அப்படி யோசித்திருந்தாலும் தன் உணர்ச்சிகளையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டார். இயேசுவுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பதை ஒரு பாக்கியமாக நினைத்தார். உங்கள் பிள்ளைகள் கடவுளுக்கு முதலிடம் கொடுக்க நீங்களும் உதவுவீர்களா?

“நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் செல்லும்”

மரியாளின் விசுவாசத்திற்குப் பலன் கிடைத்ததா? தம்மை விசுவாசிப்பவர்களை யெகோவா ஆசீர்வதித்ததைப் போல மரியாளையும் ஆசீர்வதித்தார். (எபிரெயர் 11:6) இயேசுவின் போதனையைக் கேட்டபோதும் அவர் போதிப்பதைப் பற்றி மற்றவர்கள் சொல்லும்போதும் மரியாளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!

யோசேப்பும் மரியாளும் இயேசுவுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் என்பதை இயேசு பயன்படுத்திய உதாரணங்கள் காட்டுகின்றன

இயேசு சொன்ன உதாரணங்கள், அவர் நாசரேத்தில் ஒரு சிறுவனாக வளர்ந்துவந்த கால கட்டத்தை மரியாளுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும்! ஒரு பெண் காசைத் தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருப்பது... விளக்கைக் கொளுத்தி விளக்குத் தண்டின் மீது வைப்பது... ரொட்டிக்காக மாவரைப்பது... போன்ற உதாரணங்களை இயேசு சொன்னபோது, மரியாள் அந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு சிறுவனாக இயேசு தன் பக்கத்தில் இருந்ததைப் பற்றி நினைத்திருக்கலாம். (லூக்கா 11:33; 15:8, 9; 17:35) ‘என் நுகம் மென்மையாகவும் என் சுமை லேசாகவும் இருக்கிறது’ என்று இயேசு சொன்னபோது, மிருகங்கள் தாங்கிக்கொள்ளும் விதத்தில் நுகத்தை மென்மையாக வடிவமைக்க இயேசுவுக்கு யோசேப்பு சொல்லிக்கொடுத்தது மரியாளின் ஞாபகத்திற்கு வந்திருக்கலாம். (மத்தேயு 11:30) மேசியாவாக ஆகப்போகும் தன் மகனை, வளர்ப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் யெகோவா தன்னைப் பயன்படுத்தியதை நினைத்து மரியாள் ஆத்ம திருப்தி அடைந்திருப்பார். எல்லோருக்கும் நன்கு தெரிந்த பொருள்களையும் காட்சிகளையும் வைத்து மிகச் சிறந்த பாடங்களை இயேசு சொல்லிக்கொடுத்தபோது, மரியாளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!

இருந்தாலும், மரியாள் மனத்தாழ்மையோடு நடந்துகொண்டார். மக்கள், மரியாளுக்கு மலர் மாலை சூட்ட வேண்டும் என்றோ அவரை வணங்க வேண்டும் என்றோ இயேசு நினைக்கவில்லை. இயேசு ஊழியம் செய்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் “உங்களைக் கர்ப்பத்தில் சுமந்து, பாலூட்டி வளர்த்த தாய் சந்தோஷமானவள்!” என்று சொன்னாள். அவரோ, “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிக்கிறவர்களே சந்தோஷமானவர்கள்!” என்றார். (லூக்கா 11:27, 28) மற்றொரு சமயம், கூட்டத்தில் இருந்த சிலர், “உங்கள் தாயும் உங்கள் சகோதரர்களும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள்” என்று இயேசுவிடம் சொன்னபோது, கடவுளுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்களே தம் தாயாகவும் சகோதரர்களாகவும் இருக்கிறார்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு மரியாள் புண்படவில்லை. தம் சொந்தக்காரர்களைவிட கடவுளுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் இயேசுவுக்கு முக்கியம் என்பதை அவர் புரிந்துகொண்டார்.—மாற்கு 3:32-35.

தன்னுடைய அன்பு மகன் கழுமரத்தில் துடிதுடித்து இறப்பதைப் பார்த்த மரியாளின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! இயேசு மரிப்பதை நேரில் கண்ட அப்போஸ்தலன் யோவான் இதைப் பதிவு செய்திருக்கிறார். அந்த வேதனையான சமயத்தில் “இயேசுவின் கழுமரத்திற்கு அருகே” மரியாள் நின்றுகொண்டிருந்தார். அவர் தன் மகனுக்கு கடைசிவரை உண்மையோடு இருந்தார். இயேசு ஒவ்வொரு முறை மூச்சை இழுக்கவும் ஒவ்வொரு வார்த்தையை வாய்திறந்து பேசவும் அவதிப்பட்டபோதிலும் தம் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அம்மாவிடம் பேசினார். அம்மாவைக் கவனித்துக்கொள்ளும்படி தம் பாசத்திற்குரிய யோவானிடம் சொன்னார். இயேசுவின் தம்பிகள் விசுவாசிகளாக இல்லாததால், அவர்கள் யாரிடமும் தம் தாயைக் கவனித்துக்கொள்ளும்படி சொல்லாமல், தமது உண்மை சீடரான யோவானிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்தார். விசுவாசத்திலுள்ள ஒருவர் தன் குடும்பத்தினரின் தேவைகளை, முக்கியமாக ஆன்மீக விஷயங்களைக் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதை இயேசு காட்டினார்.—யோவான் 19:25-27.

இயேசுவின் மரணத்தின்போது, உள்ளத்தில் ‘நீண்ட வாள் ஒன்று ஊடுருவிச் செல்வது’ போன்ற வேதனையை மரியாள் அனுபவித்தார். அந்தச் சமயத்தில் மரியாள் எந்தளவு வேதனைப்பட்டிருப்பார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அதேபோல், மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார் என்பதையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது! ஆம், இயேசு மறுபடியும் உயிரோடு வந்தார்!! தம் தம்பி யாக்கோபுக்கு இயேசு தனிமையில் காட்சியளித்ததும் மரியாளுக்கு அளவில்லாத சந்தோஷத்தைக் கொடுத்தது. (1 கொரிந்தியர் 15:7) யாக்கோபும் அவருடைய மற்ற தம்பிகளும் இயேசுதான் மேசியா என்று நம்புவதற்கு அந்தச் சம்பவம் உதவியது. அதன்பிறகு அவர்கள், தங்கள் அம்மாவோடு கிறிஸ்தவ கூட்டங்களில் ‘இடைவிடாமல் ஜெபம்’ செய்துகொண்டிருந்ததாக பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 1:14) பிறகு, யாக்கோபும் யூதாவும் பைபிள் புத்தகங்களை எழுதும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

மற்ற மகன்கள் உண்மை கிறிஸ்தவர்களாக ஆனதில் மரியாளுக்கு அதிக சந்தோஷம்

தன் மகன்களோடு மரியாள் ஜெபம் செய்துகொண்டிருந்தார் என்பதுதான் அவரைப் பற்றிய கடைசி பைபிள் பதிவு. நாம் பின்பற்றுவதற்கு மரியாள் ஒரு சிறந்த முன்மாதிரி! தன் விசுவாசத்தால் மரியாள் வேதனையின் வாளை வெற்றிகரமாகச் சமாளித்தார்; கடைசியில் ஓர் அற்புதமான பரிசையும் பெற்றார். இவருடைய விசுவாசத்தை பின்பற்றினால், இந்தப் பொல்லாத உலகம் என்னதான் நம்மை வேதனையில் நெருக்கினாலும் அதை வெற்றிகரமாகச் சமாளிப்போம், எதிர்ப்பார்ப்பதைவிட பல அருமையான பரிசுகளைப் பெறுவோம்!! ▪ (w14-E 05/01)

^ பாரா. 8 இயேசுவுக்குப் பன்னிரெண்டு வயதாக இருந்தபோது யோசேப்பைப் பற்றி பைபிள் கடைசியாகச் சொல்கிறது. அதன்பிறகு, மரியாளையும் அவருடைய பிள்ளைகளையும் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. “மரியாளின் மகன்” என்று இயேசு ஒருமுறை அழைக்கப்பட்டார், ஆனால் யோசேப்பைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.—மாற்கு 6:3.

^ பாரா. 16 யோசேப்பு, இயேசுவின் வளர்ப்பு அப்பாவாக இருந்ததால், இயேசுவுடன் பிறந்தவர்கள் அவருடைய ஒன்றுவிட்ட தம்பி தங்கைகளாக இருக்கிறார்கள்.—மத்தேயு 1:20.