மாற்கு எழுதியது 1:1-45

1  கடவுளுடைய மகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியின் ஆரம்பம்:  ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில், “(இதோ! என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன், அவர் உன் பாதையைத் தயார்படுத்துவார்.)+  ‘யெகோவாவுக்கு* வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்!” என்று எழுதப்பட்டிருக்கிறது.  அதன்படியே யோவான் ஸ்நானகர்,* பாவ மன்னிப்புக்காக மனம் திருந்த வேண்டுமென்றும், அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றும் வனாந்தரத்தில் பிரசங்கித்துவந்தார்.+  அதனால், யூதேயாவிலும் எருசலேமிலும் குடியிருந்த மக்கள் எல்லாரும் அவரிடம் போனார்கள்; தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம்* பெற்றார்கள்.+  யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார், தோல் வாரை இடுப்பில் கட்டியிருந்தார்;+ வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிட்டுவந்தார்.+  அவர் மக்களிடம், “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்பு வரப்போகிறார்; அவருடைய செருப்புகளின் வார்களைக் குனிந்து அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை.+  நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தேன், ஆனால் அவர் கடவுளுடைய சக்தியால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்”+ என்று பிரசங்கித்துவந்தார்.  அந்த நாட்களில், கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து இயேசு வந்து, யோர்தான் ஆற்றில் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றார்.+ 10  இயேசு தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறப்பதையும் கடவுளுடைய சக்தி புறாவைப் போல் தன்மேல் இறங்குவதையும் பார்த்தார்.+ 11  அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 12  உடனே, வனாந்தரத்துக்குப் போகும்படி கடவுளுடைய சக்தி அவரைத் தூண்டியது. 13  அவர் 40 நாட்கள் வனாந்தரத்தில் இருந்தபோது சாத்தான் அவரைச் சோதித்தான்.+ அங்கே காட்டு மிருகங்கள் இருந்தன. ஆனால், தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடை* செய்தார்கள்.+ 14  யோவான் கைது செய்யப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவுக்குப்+ போய் கடவுளைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்.+ 15  “குறித்த காலம் வந்துவிட்டது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது; மக்களே, மனம் திருந்துங்கள்,+ நல்ல செய்தியில் விசுவாசம் வையுங்கள்” என்று சொன்னார். 16  அவர் கலிலேயா கடலோரமாக நடந்துபோனபோது, சீமோனையும் சீமோனுடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் தங்கள் வலைகளை வீசிக்கொண்டிருந்தார்கள்.+ ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+ 17  இயேசு அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்”+ என்று சொன்னார். 18  அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.+ 19  அவர் கொஞ்சத் தூரம் போன பின்பு, செபெதேயுவின் மகன்களான யாக்கோபையும் யோவானையும் பார்த்தார்; அவர்கள் தங்களுடைய படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்.+ 20  உடனே அவர்களையும் கூப்பிட்டார்; அப்போது, அவர்கள் தங்களுடைய அப்பா செபெதேயுவைக் கூலியாட்களோடு படகில் விட்டுவிட்டு, அவர் பின்னால் போனார்கள். 21  அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். ஓய்வுநாள் வந்ததும் அவர் ஜெபக்கூடத்துக்குப் போய்க் கற்பிக்க ஆரம்பித்தார்.+ 22  அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்; ஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராகக் கற்பித்தார்.+ 23  அப்போது அந்த ஜெபக்கூடத்தில், பேய் பிடித்த ஒருவன் இருந்தான். 24  அவன் அவரைப் பார்த்து, “நாசரேத்தூர் இயேசுவே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?+ எங்களை ஒழித்துக்கட்டவா வந்தீர்கள்? நீங்கள் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்!”+ என்று கத்தினான். 25  ஆனால் இயேசு, “பேசாதே, இவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டினார். 26  அந்தப் பேய் அவனுக்கு வலிப்பு உண்டாக்கி, பயங்கரமாகக் கத்திக்கொண்டே அவனைவிட்டு வெளியே போனது. 27  அங்கே இருந்த எல்லாரும் மிகவும் ஆச்சரியப்பட்டு, “இது என்ன? புதுவிதமாகக் கற்பிக்கிறாரே! அதிகாரத்தோடு பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவையும் கீழ்ப்படிகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 28  உடனடியாக, அவரைப் பற்றிய செய்தி கலிலேயா பகுதியெங்கும் நாலாபக்கங்களிலும் பரவியது. 29  அப்போது, அவர்கள் ஜெபக்கூடத்திலிருந்து புறப்பட்டு யாக்கோபோடும் யோவானோடும் சேர்ந்து சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குப் போனார்கள்.+ 30  அங்கே சீமோனின் மாமியார்+ காய்ச்சலில் படுத்துக்கிடந்தாள். அதைப் பற்றி அவரிடம் உடனடியாகச் சொன்னார்கள். 31  அவர் அவளுக்குப் பக்கத்தில் போய் அவளுடைய கையைப் பிடித்துத் தூக்கினார், உடனே காய்ச்சல் போய்விட்டது. அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். 32  சாயங்காலத்தில், சூரியன் மறைந்த பின்பு, எல்லா நோயாளிகளையும் பேய் பிடித்தவர்களையும் மக்கள் அவரிடம் கொண்டுவர ஆரம்பித்தார்கள்.+ 33  அந்த வீட்டு வாசலில் ஊரே திரண்டு வந்தது. 34  பலவிதமான நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நிறைய பேரை அவர் குணமாக்கினார்,+ ஏராளமான பேய்களைத் துரத்தினார்; ஆனால், அவர்தான் கிறிஸ்து* என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர் அவற்றைப் பேசவிடவில்லை. 35  விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருந்தபோதே, அவர் எழுந்து வெளியே போய்த் தனிமையான ஓர் இடத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.+ 36  சீமோனும் அவரோடு இருந்தவர்களும் அவரைத் தேடிக்கொண்டு போனார்கள். 37  அவரைக் கண்டுபிடித்தபோது, “எல்லாரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். 38  ஆனால் அவர், “பக்கத்திலுள்ள வேறு ஊர்களுக்குப் போகலாம், வாருங்கள்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும்; இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்”+ என்று சொன்னார். 39  அதன்படியே, கலிலேயா முழுவதும் இருந்த ஜெபக்கூடங்களுக்குப் போய்ப் பிரசங்கித்தார், பேய்களையும் விரட்டினார்.+ 40  தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து மண்டிபோட்டு, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்”+ என்று சொல்லிக் கெஞ்சினான். 41  அப்போது, அவர் மனம் உருகி, தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு”+ என்று சொன்னார். 42  உடனே தொழுநோய் மறைந்து, அவன் சுத்தமானான். 43  அதன் பின்பு அவனுக்குக் கண்டிப்புடன் கட்டளைகள் கொடுத்து, 44  “இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதே, ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டு; நீ சுத்தமானதற்காக, மோசே கட்டளையிட்ட காணிக்கைகளைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொல்லி உடனடியாக அவனை அனுப்பினார். 45  ஆனால், அந்த மனிதன் அங்கிருந்து புறப்பட்டுப் போய், அந்த விஷயத்தை எல்லாருக்கும் பரப்ப ஆரம்பித்தான்; அதனால் இயேசு எந்த நகரத்துக்குள்ளும் வெளிப்படையாகப் போக முடியவில்லை, ஒதுக்குப்புறமான இடங்களிலேயே தங்கியிருந்தார். அப்படியிருந்தும், அவரைப் பார்க்க எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
ஸ்நானகர் என்றால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்.
அதாவது, “முழுக்கு ஞானஸ்நானம்.”
வே.வா., “அங்கீகரிக்கிறேன்; உன்மேல் பிரியமாக இருக்கிறேன்.”
வே.வா., “உதவிகள்.”
அல்லது, “அவர் யார்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

வனாந்தரம்
வனாந்தரம்

பைபிளில் “வனாந்தரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் (எபிரெயுவில், மித்பார்; கிரேக்கில், ஈரெமாஸ்), பொதுவாக மனிதர்கள் அதிகம் குடியிருக்காத தரிசு நிலப்பகுதிகளைக் குறிக்கின்றன. புற்களும் புதர்களும் கொண்ட புல்வெளிகளையும், மேய்ச்சல் நிலங்களையும்கூட அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அந்த வார்த்தைகள், தண்ணீரே இல்லாத பாலைவனங்களைக்கூடக் குறிக்கலாம். சுவிசேஷப் புத்தகங்களில் சொல்லப்படும் வனாந்தரம், பொதுவாக யூதேயாவின் வனாந்தரத்தைக் குறிக்கிறது. இந்த வனாந்தரத்தில்தான் யோவான் வாழ்ந்தார், ஊழியமும் செய்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.—மாற் 1:12.

யோவான் ஸ்நானகரின் உடையும் தோற்றமும்
யோவான் ஸ்நானகரின் உடையும் தோற்றமும்

யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார். சின்னச் சின்னப் பொருள்களை எடுத்துச்செல்வதற்கு வசதியாக இடுப்பில் தோல் வாரைக் கட்டியிருந்தார். தீர்க்கதரிசியான எலியாவும் இதேபோன்ற உடையைத்தான் போட்டிருந்தார். (2ரா 1:8) ஒட்டக ரோமத்தாலான துணி சொரசொரப்பாக இருந்தது. பொதுவாக, ஏழைகள்தான் அவற்றை உடுத்தினார்கள். ஆனால் பணக்காரர்கள், பட்டுத் துணியால் அல்லது நாரிழைத் துணியால் செய்யப்பட்ட விலை உயர்ந்த உடைகளை உடுத்தினார்கள். (மத் 11:7-9) பிறந்ததிலிருந்தே யோவான் ஒரு நசரேயராக இருந்ததால், ஒருவேளை தன்னுடைய தலைமுடியை வெட்டியிருக்கவே மாட்டார். அவர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததையும்... கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்ததையும்... அவருடைய உடையும் தோற்றமும் பளிச்சென்று காட்டியிருக்கும்.

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

பைபிளில் இந்த வார்த்தை, சின்னக் கொம்புகளைக் கொண்ட எல்லா வகையான வெட்டுக்கிளிகளையும் குறிக்கிறது. முக்கியமாக, ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கூட்டம் கூட்டமாகப் பறந்து போகிற வெட்டுக்கிளிகளைக் குறிக்கிறது. பாலைவன வெட்டுக்கிளிகளின் உடல் 75 சதவீதம் புரதச்சத்தினால் நிறைந்திருக்கிறது என எருசலேமில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. இன்று மத்தியக் கிழக்கு நாடுகளில் அவற்றைச் சாப்பிடுகிறவர்கள், அவற்றின் தலையையும் கால்களையும் சிறகுகளையும் அடிவயிற்றுப் பகுதியையும் நீக்கிவிடுகிறார்கள். மிச்சமுள்ள பகுதியை அப்படியே பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுகிறார்கள். இவற்றின் சுவை கூன் இறால் போலவோ, நண்டு போலவோ இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பூச்சிகள் புரதச்சத்து நிறைந்தவை.

காட்டுத் தேன்
காட்டுத் தேன்

காட்டுத் தேனீக்கள் கட்டுகிற ஒரு கூட்டின் படமும் (1), தேன் நிறைந்த ஒரு கூட்டின் படமும் (2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. யோவான் சாப்பிட்ட தேன், அந்தப் பகுதியில் வாழும் ஒரு வகையான காட்டுத் தேனீக்களின் (ஆப்பிஸ் மெல்லிஃபெரா சிரியாக்கா) கூட்டிலிருந்து கிடைத்திருக்கலாம். யூதேயா வனாந்தரத்தின் வெப்பமான, வறண்ட சீதோஷ்ண நிலையை அந்தத் தேனீக்கள் நன்றாகத் தாக்குப்பிடிக்கின்றன. ஆனால், அவை ஆக்ரோஷமாகத் தாக்கும் என்பதால் அவற்றை மனிதர்களால் வளர்க்க முடியாது. இருந்தாலும், இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள் ரொம்பக் காலத்துக்கு முன்பே, அதாவது கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, களிமண் உருளைகளில் தேனீக்களை வளர்த்தார்கள். இப்படிப்பட்ட நிறைய தேன்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு நகர்ப்புறப் பகுதியின் (இன்று டெல் ரெஹோவ் என்று அழைக்கப்படும் பகுதியின்) நடுவிலிருந்து அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுகளில் இருந்த தேன், வேறொரு இடத்திலிருந்து (இன்றைய துருக்கியிலிருந்து) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகையான தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

செருப்புகள்
செருப்புகள்

பைபிள் காலங்களில், செருப்புகள் தட்டையாக இருந்தன. தோல், மரம், அல்லது வேறு நார்ப்பொருள்களால் செய்யப்பட்டிருந்தன. காலோடு சேர்த்துக் கட்டிக்கொள்ள அவற்றுக்குத் தோல் வார்களும் இருந்தன. சில விதமான கொடுக்கல் வாங்கல்களிலும் சொல்லோவியங்களிலும் செருப்புகள் ஏதோ ஒன்றுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு, திருச்சட்டத்தின்படி ஒருவன் தன் சகோதரனின் மனைவி விதவையாகிவிட்ட பிறகு அவளைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தால், அவனுடைய செருப்பை அவள் கழற்றிப்போட வேண்டியிருந்தது; அதன் பிறகு, “செருப்பு கழற்றப்பட்டவன் குடும்பம்” என்ற கெட்ட பெயர் அவனுக்கு வந்தது. (உபா 25:9, 10) சொத்தை அல்லது மீட்டுக்கொள்ளும் உரிமையை இன்னொருவருக்குக் கொடுப்பதற்கு அடையாளமாகவும் ஒருவர் தன்னுடைய செருப்பைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்தார். (ரூ 4:7) இன்னொருவரின் செருப்பு வார்களை அவிழ்ப்பதோ இன்னொருவரின் செருப்புகளைச் சுமந்துகொண்டு போவதோ அடிமைகளால் செய்யப்பட்ட இழிவான வேலையாகக் கருதப்பட்டது. கிறிஸ்துவைவிட தான் தாழ்ந்தவர் என்பதைக் காட்ட யோவான் ஸ்நானகர் இந்த வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

யோர்தான் ஆறு
யோர்தான் ஆறு

யோர்தான் ஆற்றில்தான் இயேசுவுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தார். ஆனால், ஆற்றின் எந்தப் பகுதியில் அவர் ஞானஸ்நானம் கொடுத்தார் என்பது தெரியவில்லை.

யோர்தான் ஆற்றின் மேற்கிலுள்ள யூதேயாவின் வனாந்தரம்
யோர்தான் ஆற்றின் மேற்கிலுள்ள யூதேயாவின் வனாந்தரம்

இந்தப் பொட்டல் பகுதியில், யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பித்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.

வலை வீசுதல்
வலை வீசுதல்

கலிலேயா கடலில் மீன்பிடித்தவர்கள் இரண்டு விதமான எறிவலைகளைப் பயன்படுத்தினார்கள். சின்ன துவாரங்கள் உள்ள வலை, சின்ன மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பெரிய துவாரங்கள் உள்ள வலை, பெரிய மீன்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இழுவலைக்கும் எறிவலைக்கும் வித்தியாசம் இருந்தது. ஏனென்றால், இழுவலையைத் தண்ணீரில் போடுவதற்குக் குறைந்தது ஒரு படகாவது தேவைப்பட்டது; அதோடு, ஒருசில மீனவர்களாவது தேவைப்பட்டார்கள். ஆனால், எறிவலையை ஒரே ஒருவரால்கூட வீச முடிந்தது. அவர் படகில் இருந்தபடி அல்லது கரையிலோ கரைக்குப் பக்கத்திலோ நின்றபடி அதை வீச முடிந்தது. எறிவலையின் விட்டம் 5 மீ. (15 அடி) அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. அதன் ஓரத்தைச் சுற்றிலும் கற்களோ ஈயத்தாலான குண்டுகளோ பொருத்தப்பட்டிருந்தன. வலை சரியாக வீசப்பட்டபோது, தண்ணீர்மேல் தட்டையாக விழுந்தது. அதன் கனமான ஓரப்பகுதிகள் முதலில் தண்ணீருக்குள் மூழ்கின. அதன்பின், மொத்த வலையும் கடலுக்கு அடியில் மூழ்க மூழ்க அதில் மீன்கள் சிக்கின. மீனவர் கடலுக்கு அடியில் நீந்திப்போய், அந்த வலையில் சிக்கிய மீன்களை எடுத்துக்கொள்ள முடிந்தது, அல்லது அந்த வலையைக் கவனமாகக் கரைக்கு இழுத்துவர முடிந்தது. வலையைச் சரியாகப் பயன்படுத்த அதிகத் திறமையும் கடினமான முயற்சியும் தேவைப்பட்டது.

கலிலேயா கடலில் வாழும் மீன்கள்
கலிலேயா கடலில் வாழும் மீன்கள்

பைபிளில் உள்ள நிறைய வசனங்கள் கலிலேயா கடலில் மீன் பிடிக்கப்பட்டதைப் பற்றியும், அங்கிருந்த மீன்களைப் பற்றியும், மீனவர்களைப் பற்றியும் சொல்கிறது. கலிலேயா கடலில் சுமார் 18 வகையான மீன்கள் வாழ்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட பத்து வகைகளைத்தான் மீனவர்கள் பிடித்தார்கள். அந்தப் பத்து வகையான மீன்களை வியாபார ரீதியில் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதில் ஒரு பிரிவுதான் பினி. இது “பார்பஸ் கெண்டை” என்றும் அழைக்கப்படுகிறது (படத்தில் காட்டப்பட்டிருப்பது பார்பஸ் லாங்கிசெப்ஸ்) (1). அதன் மூன்று இனங்களுக்கு வாயின் ஓரங்களில் முடிபோன்ற இழைகள் இருக்கின்றன; அதனால் செமிட்டிக் மொழியில் “முடி” என்ற அர்த்தத்தைத் தரும் பினீ என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது. அது மெல்லுடலிகளையும் நத்தைகளையும் சின்ன மீன்களையும் சாப்பிட்டு உயிர்வாழ்கிறது. நீளமான தலையைக் கொண்ட “பார்பஸ் கெண்டை” 75 செ.மீ. (30 அங்.) நீளத்துக்கு வளருகிறது. அதன் எடை 7 கிலோவுக்கும் அதிகமாக இருக்கலாம். இரண்டாவது பிரிவின் பெயர் முஷ்ட் அல்லது “ஜிலேபி கெண்டை” (படத்தில் காட்டப்பட்டிருப்பது டிலாப்பியா கலிலியா) (2). அரபிய மொழியில் அதற்கு “சீப்பு” என்று அர்த்தம். அதன் ஐந்து இனங்களுக்கு சீப்புபோன்ற முதுகுத் துடுப்பு இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். ஒரு வகையான முஷ்ட் சுமார் 45 செ.மீ. (18 அங்.) வளருகிறது. அதன் எடை சுமார் 2 கிலோ இருக்கலாம். மூன்றாவது பிரிவின் பெயர் கின்னரேத் சாளை (படத்தில் காட்டப்பட்டிருப்பது அகான்தோபிராமா டெர்ரே சான்க்டே) (3). இந்த சாளை மீன் பார்ப்பதற்கு ஒரு சின்ன ஹெர்ரிங் மீன்போல் இருக்கிறது. பழங்காலத்திலிருந்தே இந்த மீன் பதப்படுத்தப்பட்டு வருகிறது.