Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை | கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?

கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?

கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?

உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க அடிப்படையான தேவைகளைப் பூர்த்திசெய்தால் மட்டும் போதாது, நமக்குள் இருக்கும் மற்றொரு தேவையையும் பூர்த்திசெய்ய வேண்டும் என்று மனநல நிபுணர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் மக்கள் ஒரு லட்சியத்தோடு, நோக்கத்தோடு வாழ வேண்டும் அல்லது தங்களைவிட உயர்ந்த ஒருவரைச் சார்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். சிலர் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய இயற்கை, கலை, இசை போன்ற விஷயங்களில் தங்களைக் கரைத்துக்கொள்கிறார்கள். இருந்தாலும், நிறைவான திருப்தி எட்டாக்கனியாகவே இருக்கிறது.

மனிதர்கள் இன்றும் என்றும் சந்தோஷமாக வாழவே கடவுள் விரும்புகிறார்

அந்தத் தேவை என்ன என்பதை பைபிளை வாசிக்கிறவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அதுதான் மனிதனுக்குள் இயற்கையாக இருக்கும் ஆன்மீக தேவை. கடவுள் முதல் மனித ஜோடியைப் படைத்து, அவர்களோடு அடிக்கடி பேசினார் என்று ஆதியாகமம் புத்தகத்தின் முதல் சில அதிகாரங்களில் வாசிக்கிறோம். இது கடவுளோடு ஒரு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவியது. (ஆதியாகமம் 3:8-10) தம்முடைய உதவியில்லாமல் சுயமாக வாழும் விதத்தில் கடவுள் மனிதர்களைப் படைக்கவில்லை; தம்மைச் சார்ந்து வாழும்படிதான் படைத்தார். இந்த ஆன்மீக தேவையைப் பற்றி பைபிளில் அடிக்கடி வாசிக்கிறோம்.

உதாரணத்திற்கு, “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:3) இதிலிருந்து ஒரு முக்கிய விஷயத்தைத் தெரிந்துகொள்கிறோம். மனிதர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய ஆன்மீக பசியைப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். எப்படி? இயேசு சொன்ன வார்த்தைகள் இதற்குப் பதிலளிக்கிறது: “மனிதன் ஆகாரத்தினால் மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உயிர்வாழ்வான்.” (மத்தேயு 4:4) ஆனால், யெகோவாவின் வாயிலிருந்து வரும் வார்த்தை, அதாவது பைபிளில் காணப்படும் அவருடைய எண்ணங்களும் அறிவுரைகளும் சந்தோஷமாக, திருப்தியாக வாழ நமக்கு எப்படி உதவும்? அதற்கு மூன்று அடிப்படை வழிகளைச் சிந்திக்கலாம்.

நல்ல வழிநடத்துதல் தேவை

சந்தோஷம், காதல், குடும்ப வாழ்க்கை, மனித உறவுகள், பிரச்சினைகளைச் சமாளித்தல், வாழ்க்கையின் அர்த்தம் போன்ற விஷயங்களைப் பற்றி ஆலோசனை வழங்க இன்று நிபுணர்கள் வரிசைக் கட்டி நிற்கிறார்கள். ஆனால், நம் படைப்பாளராகிய யெகோவா தேவனைவிட  யாரால் நமக்குச் சிறந்த, சமநிலையான ஆலோசனையைக் கொடுக்க முடியும்?

பைபிள் நம் வாழ்க்கைக்கு ஒரு கையேடு

இதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: கேமரா அல்லது கம்ப்யூட்டரை வாங்கினால் கூடவே ஒரு கையேட்டைக் கொடுப்பார்கள். அந்தப் பொருளைச் சிறந்த விதத்தில் பயன்படுத்த அது ரொம்பவே உதவியாக இருக்கும். அதேபோல் மனிதனைப் படைத்த படைப்பாளரும் ஒரு கையேட்டைக் கொடுத்திருக்கிறார். அதுதான் பைபிள்! மனிதர்களை ஏன் படைத்தார், சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் அதில் சொல்லியிருக்கிறார்.

ஒரு நல்ல கையேட்டைப் போலவே பைபிளும் நம் வாழ்க்கைக்கு நம்பகமான, பாதுகாப்பான ஆலோசனைகளை அளிக்கிறது. உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களில் இருந்தும் நம்மை எச்சரிக்கிறது. மனிதர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் கேட்க நன்றாக இருக்கலாம், பின்பற்ற சுலபமாகவும் இருக்கலாம். ஆனால், சிறந்த பலன்களைப் பெறவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் படைப்பாளரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுதானே நியாயமாக இருக்கும்!

“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” —ஏசாயா 48:17, 18

நமக்குத் தேவையான உதவியும் வழிநடத்தலும் பைபிளில் இருக்கிறது

யெகோவா தேவன் நமக்கு அநேக ஆலோசனைகளை, வழிநடத்துதல்களை கொடுத்தாலும் அதைக் கடைப்பிடிக்கும்படி நம்மைக் கட்டாயப்படுத்துவது இல்லை. அவர் நம்மை நேசிப்பதால் இந்த வேண்டுகோளை விடுக்கிறார்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.” (ஏசாயா 48:17, 18) கடவுள் சொல்வதைக் கேட்டால்தான் சந்தோஷமாக வாழ முடியும். வேறு வார்த்தையில் சொன்னால், கடவுள் இல்லாமல் நம்மால் சந்தோஷமாக வாழவே முடியாது.

பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி தேவை

வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளால் அநேகர் குழம்பிப்போயிருக்கிறார்கள். அன்பான கடவுள் ஒருவர் இருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் என்று யோசிக்கிறார்கள். உதாரணத்திற்கு, ‘ஏன் உலகத்தில் இவ்வளவு அநியாயம்?’ ‘நல்ல ஜனங்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?’ ‘ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் ஏன் ஊனமாகப் பிறக்கிறார்கள்?’ என்றெல்லாம் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்குத் திருப்தியான, நம்பகமான பதில்களைத் தெரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், அவை நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். எனவே, பிரச்சினைகளுக்குக் கடவுளைக் காரணம் காட்டுவதற்குப் பதிலாக அவருடைய வார்த்தையாகிய பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

முதல் மனித ஜோடியை கடவுளுக்கு விரோதமாக சாத்தான் எப்படிச் செயல்பட வைத்தான் என்பதைப் பற்றி ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஒரு மரத்தின் கனியைப் சாப்பிடக்கூடாது என்ற யெகோவா தேவனின் கட்டளையை மீறும்படிச் செய்தான். ஒரு பாம்பைப் பயன்படுத்தி ஏவாளிடம் சாத்தான் இப்படிச் சொன்னான்: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.”—ஆதியாகமம் 2:16, 17; 3:4, 5.

இப்படிச் சொல்வதன்மூலம் கடவுள் ஒரு பொய்யர் என்றும் அவர் அநியாயமாக ஆட்சி செய்கிறார் என்றும் சாத்தான் குற்றம்சாட்டினான். தான் சொல்வதைக் கேட்டால் மனிதர்களுடைய வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்க வைத்தான். இந்தக் குற்றச்சாட்டிற்கு எப்படித் தீர்வுகாண்பது? சாத்தான் எழுப்பிய குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்று எல்லோரும் தெரிந்துகொள்ள கால அவகாசம் வேண்டும் என்று  யெகோவா தீர்மானித்தார். எனவே, தம்முடைய உதவி இல்லாமல் வாழ்ந்துகாட்ட சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்.

சாத்தான் எழுப்பிய குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் இல்லாமல் மனிதர்களால் சந்தோஷமாக வாழ முடியுமா? மனிதர்கள் தங்களையே வெற்றிகரமாக ஆட்சிசெய்ய முடியுமா? சரித்திர ஏட்டைப் புரட்டினால் மனித ஆட்சியில் மிஞ்சியதெல்லாம் கஷ்டம், அநியாயம், அட்டூழியம், வியாதி, மரணம், குற்றச்செயல், ஒழுக்கக்கேடு, போர், இனப்படுகொலையே. கடவுளுடைய உதவியில்லாமல் மனிதர்களால் தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய முடியாது என்பதற்கு இவைத் தெளிவான அத்தாட்சியளிக்கின்றன. மனிதர்களுடைய கஷ்டங்களுக்கெல்லாம் கடவுளைக் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, அதற்கான முக்கியக் காரணத்தை பைபிள் சொல்கிறது: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’—பிரசங்கி 8:9.

இதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம்; நம் மனதைக் குடையும் கேள்விகளுக்குப் பதிலையும் அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள நாம் கடவுளைத்தான் நாட வேண்டும். கடவுள் எப்படி உதவுவார்?

கடவுளின் உதவி தேவை

வியாதி, முதுமை, மரணம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபட மனிதர்கள் பல காலமாக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகத் தங்கள் சக்தி, வளம், நேரம் எல்லாவற்றையும் செலவு செய்திருக்கிறார்கள். நீண்ட ஆயுசு பெற மூலிகைகள், தங்கபஸ்பம், மாத்திரை மருந்துகள், உடற்பயிற்சி ஆகியவை உதவும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

கடவுள் மனிதர்களைப் படைத்ததற்கான நோக்கம், அவர்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அதை அவர் இன்னும் மறக்கவில்லை. (ஆதியாகமம் 1:27, 28; ஏசாயா 45:18) தாம் சொன்னதை நிச்சயம் செய்வதாக யெகோவா தேவனே உறுதியளித்திருக்கிறார். (ஏசாயா 55:10, 11) முதல் மனித ஜோடி இழந்த பூஞ்சோலை பூமியை மீண்டும் நிலைநாட்டுவதாக பைபிளில் வாக்களித்திருக்கிறார். ‘மக்களுடைய கண்ணீரையெல்லாம் யெகோவா தேவன் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்’ என்று பைபிளின் கடைசி புத்தகம் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) இதைக் கடவுள் எப்படிச் செய்வார்? இந்த அருமையான வாழ்க்கையை அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

கடவுளுடைய சித்தம் நிறைவேற ஜெபம் செய்யும்படி அவருடைய மகனான இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ‘பரமண்டல ஜெபம்’ என்று அழைக்கப்படும் இந்த ஜெபத்தைப் பலர் மனப்பாடமாகச் சொல்கிறார்கள். அந்த ஜெபத்தின் ஆரம்ப வரிகள்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்பட வேண்டும்.” (மத்தேயு 6:9, 10) தம் அரசாங்கத்தைக்கொண்டு யெகோவா தேவன் மனித ஆட்சியால் விளைந்த துன்பத் துயரங்களைத் துடைத்தழிப்பார்; அவருடைய வாக்குறுதியின்படியே நீதி குடிகொள்ளும் புதிய பூமியைக் கொண்டுவருவார். * (தானியேல் 2:44; 2 பேதுரு 3:13) இந்த அருமையான வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

 அதற்கான ஓர் எளிய வழியை இயேசு கிறிஸ்து சொன்னார்: ‘ஒரே உண்மையான கடவுளையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்துகொண்டே இருந்தால் முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.’ (யோவான் 17:3) கடவுளுடைய உதவியோடு பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாழ்க்கையை நம்மால் நிச்சயம் பெற முடியும். இப்படிப்பட்ட அருமையான ஆசீர்வாதத்தைத் தரப்போகிற கடவுள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியுமா?

கடவுளைத் தேட இதுவே சமயம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஏதன்ஸ் மக்களிடம் (இவர்கள் மெத்தப் படித்தவர்கள், புதுக் கருத்துகளை வரவேற்றவர்கள்) அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “[கடவுள்தான்] எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் கொடுக்கிறார். அவராலேயே நாம் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; உங்கள் கவிஞர்களில் சிலர்கூட, ‘நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.”—அப்போஸ்தலர் 17:25, 28.

ஏதன்ஸ் மக்களிடம் பவுல் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நமக்குச் சுவாசிக்க காற்று, உண்ண உணவு, குடிக்க நீர் என எல்லாவற்றையும் நம் படைப்பாளர் கொடுத்துவருகிறார். இவை இல்லாவிட்டால் நம் நிலைமை என்ன ஆகும்? நிச்சயம் நம்மால் உயிர் வாழவே முடியாது. ஆனால் கடவுள் ஏன் இதை எல்லோருக்கும் கொடுக்கிறார், அதுவும் அவர்மீது துளியும் அக்கறையில்லாத ஜனங்களுக்குக்கூட? பவுல் இதற்குப் பதிலளிக்கிறார், “உண்மையில் அவர் நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லாதபோதிலும், அவரை நாம் நாடித்தேட வேண்டும் என்பதற்காக, அதுவும் தட்டித் தடவியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, அப்படிச் செய்திருக்கிறார்.”—அப்போஸ்தலர் 17:27.

கடவுளைப் பற்றி, அதாவது அவருடைய நோக்கங்களையும் இன்றும் என்றும் சந்தோஷமாக வாழ அவர் தரும் அறிவுரைகளையும் பற்றி, அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளரை அல்லது உங்களுக்கு இதைக் கொடுத்தவரை அணுகுங்கள். உங்களுக்கு உதவ அவர்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள். ▪ (w13-E 12/01)

^ பாரா. 20 அந்த அரசாங்கம் எப்படி கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றும் என்பதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரங்கள் 8-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இதை www.pr418.com வெப்சைட்டிலிருந்து டவுன்லோடும் செய்யலாம்.