Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“எல்லாரும் என்னை வெறுத்தார்கள்”

“எல்லாரும் என்னை வெறுத்தார்கள்”
  • பிறந்த வருடம்: 1978

  • சொந்த நாடு: சிலி

  • முன்பு: பயங்கர கோபக்காரன்

என் கடந்த காலம்:

நான் வளர்ந்தது சிலியின் தலைநகரம் சாண்டியாகோவில். போதைப்பொருள், குற்றச்செயல், ரவுடி கும்பலெல்லாம் அங்கு தினசரி காட்சி. எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது என் அப்பா கொலை செய்யப்பட்டார். அதன்பின் என் அம்மா வேறொருவரோடு வாழ்ந்து வந்தார். அவர் ரொம்ப கொடூரக்காரர், நெஞ்சில் ஈரமே இல்லாமல் என்னையும் என் அம்மாவையும் தினமும் அடிப்பார். அப்போது மனதில் ஏற்பட்ட ரணம் இன்னும் ஆறவில்லை.

இப்படிப்பட்ட மோசமான சூழலில் வளர்ந்த நான் பயங்கர கோபக்காரனாக ஆனேன். ஹெவி-மெட்டல் இசையைக் கேட்டேன், குடித்து வெறித்தேன், சிலசமயம் போதைப்பொருளையும் எடுத்துக்கொண்டேன். எனக்கும் போதைப்பொருள் விற்பவர்களுக்கும் அடிக்கடி சண்டை வெடிக்கும். பலமுறை என்னை கொல்ல முயன்றார்கள். ஒருசமயம் எதிர் கோஷ்டி பயங்கரமான ரவுடியை வைத்து என்னை கொல்ல பார்த்தது. ஒரு கத்தி குத்தோடு உயிர் தப்பினேன். மற்றொரு சமயம், போதைப்பொருள் கோஷ்டியால் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டேன், என்னைக் தூக்கில் போடவும் முயற்சித்தார்கள்.

1996-ஆம் வருடம் கரோலீனா என்ற பெண்ணை காதலித்தேன். 1998-ல் நாங்கள் மணவாழ்வில் இணைந்தோம். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அப்போது எனக்குள் ஒருவிதமான பயம் பரவியது. என்னுடைய கட்டுக்கடங்கா கோபம் அடங்காமலேயே போய்விடுமோ, நானும் என் வளர்ப்புத் தந்தையைப் போல் குடும்பத்தைக் கொடுமைப்படுத்துவேனோ என்றெல்லாம் யோசித்தேன், நடுங்கினேன். அதனால் பக்கத்திலிருந்த ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டேன். ஆனால், ஒரு பிரயோஜனமும் இல்லை. சின்ன சின்ன விஷயத்திற்குக்கூட தாம்-தூம் என்று குதித்தேன், கோபம் தலைதெறிக்க கத்தினேன். கடைசியில், என் கோபத்திலிருந்து என் குடும்பத்தைப் பாதுகாக்க ஒரே வழி தற்கொலைதான் என்ற முடிவுக்கு வந்தேன். நல்ல காலம் உயிர் தப்பினேன்.

நான் பல வருடமாக நாத்திகனாக இருந்தேன். ஆனால், மெல்ல மெல்ல கடவுள் நம்பிக்கை எனக்குள் துளிர்விட ஆரம்பித்தது. நான் ஒரு இவான்ஜலிக்கல் சர்ச்சுக்குப் போக ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் என் மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்தாள். எனக்குச் சாட்சிகளைப் பார்த்தாலே எரிச்சல் வரும். கெட்ட கெட்ட வார்த்தைகளில் அவர்களைத் திட்டி தீர்த்தேன். இருந்தாலும், அவர்கள் சாந்தமாக நடந்தது எனக்கு ரொம்பவே அதிசயமாக இருந்தது.

ஒரு நாள் கரோலீனா, என்னுடைய பைபிளிலிருந்தே சங்கீதம் 83:17-ஐ வாசிக்கும்படி சொன்னாள். கடவுளுடைய பெயர் யெகோவா என்று அந்த வசனம் தெள்ளத் தெளிவாகக் காட்டியது. எனக்கு ஒரே ஆச்சரியம்! இத்தனை நாளாக என் சர்ச், கடவுளைப் பற்றி சொல்லித்தந்திருந்தாலும் அவருடைய பெயர் யெகோவா என்று ஒருமுறைகூட  சொன்னதில்லை. பின்பு 2000-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சாட்சிகளோடு நானும் பைபிள் படிக்க ஆரம்பித்தேன்.

பைபிள் என்னை மாற்றிய விதம்:

பைபிளிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். முக்கியமாக யெகோவா மிகவும் இரக்கமானவர், தாராளமாக மன்னிப்பவர் என்பதைக் கற்றுக்கொண்டது என் மனதுக்கு ஆறுதலாக, இதமாக இருந்தது. உதாரணத்திற்கு யாத்திராகமம் 34:6, 7 யெகோவாவைப் பற்றி இப்படிச் சொல்கிறது: “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.”

இருந்தாலும், கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஏற்றபடி வாழ்வது கஷ்டமாக இருந்தது. கோபத்தைக் கட்டுப்படுத்துவது முடியவே முடியாது என்று நினைத்தேன். இந்த விஷயத்தில் தவறியபோதெல்லாம் என் மனைவிதான் ஆறுதலின் மருந்தாக இருந்து என்னைத் தேற்றினாள். என் முயற்சிகளை யெகோவா பார்க்கிறார் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தினாள். யெகோவாவைப் பிரியப்படுத்துவதில் விடாமுயற்சியுடன் செயல்பட அவள் எனக்குப் பக்கபலமாக இருந்தாள், முக்கியமாக நான் சோர்ந்து போகும் சமயங்களில்.

எனக்கு பைபிள் படிப்பு நடத்திய அலஹான்ட்ரோ ஒரு நாள் கலாத்தியர் 5:22, 23-ஐ வாசிக்கும்படி சொன்னார். “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவை” கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்கள் என்று அந்த வசனம் சொல்கிறது. இந்தக் குணங்களை என் சொந்த பலத்தால் வளர்த்துக்கொள்ள முடியாது, கடவுளுடைய சக்தியின் உதவியால்தான் வளர்த்துக்கொள்ள முடியும் என்று விளக்கினார். இது என் கண்ணோட்டத்தையே மாற்றியது.

அதன்பின் யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்த ஒரு பெரிய மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கு இருந்த ஒழுங்கு, சுத்தம், அன்பைப் பார்த்து இதுதான் உண்மையான மதம் என்ற முடிவுக்கு வந்தேன். (யோவான் 13:34, 35) பிப்ரவரி 2001-ல் நான் ஞானஸ்நானம் எடுத்தேன்.

நான் பெற்ற பலன்கள்:

பயங்கர கோபக்காரனாக இருந்த என்னை பரம சாதுவாக யெகோவா மாற்றிவிட்டார். புதைக் குழியில் சிக்கி தத்தளித்த என்னை அவர் பத்திரமாகக் காப்பாற்றியதுபோல் உணர்ந்தேன். இப்போது, என் மனைவி மற்றும் இரு மகன்களோடு சேர்ந்து யெகோவாவை மன நிம்மதியோடு சேவிக்கிறேன்.

முன்பு எல்லாரும் என்னை வெறுத்தார்கள், அதற்கு நான் அவர்களைக் குற்றம் சொல்ல மாட்டேன். ஆனால், நான் செய்த மாற்றங்களைப் பார்த்து என் சொந்தபந்தங்களும் நண்பர்களும் அசந்து போய்விட்டார்கள். அவர்களில் நிறையப் பேர் இப்போது பைபிளைப் படிக்கிறார்கள். யெகோவாவைச் சேவிக்க அநேகருக்கு உதவும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆம், பைபிள் சத்தியம் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது! இது மறுக்க முடியாத உண்மை!! ▪(w13-E 10/01)