Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொது ஊழியத்தில் நானும் என் மனைவி டபித்தாவும்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்பவில்லை
  • பிறந்த வருஷம்: 1974

  • பிறந்த நாடு: ஜெர்மானிய ஜனநாயக குடியரசு

  • என்னைப் பற்றி: நாத்திகர்

என் கடந்த கால வாழ்க்கை

நான் சாக்ஸனியில் இருக்கிற ஒரு கிராமத்தில் பிறந்தேன். ஜெர்மானிய ஜனநாயக குடியரசு (GDR) என்று முன்பு அழைக்கப்பட்ட மாநிலத்தில் இது இருந்தது. எங்கள் குடும்பத்தில், நாங்கள் எல்லாரும் அன்பாகவும் பாசமாகவும் இருந்தோம். என்னுடைய பெற்றோர் எனக்குச் சிறந்த ஒழுக்க நெறிகளைச் சொல்லிக்கொடுத்தார்கள். ஜெர்மானிய ஜனநாயக குடியரசு ஒரு கம்யூனிஸ்ட் மாநிலமாக இருந்ததால், சாக்ஸனியில் வாழ்ந்த மக்களுக்கு மதம் முக்கியமாக இருக்கவில்லை. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நானும் நம்பவில்லை. என் 18 வயது வரை, நாத்திகமும் பொதுவுடைமைக் கொள்கையும் என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

மக்கள் எல்லாரும் சரிசமமானவர்கள் என்ற கருத்தை பொதுவுடைமைக் கொள்கை ஆதரித்ததால், அந்தக் கொள்கை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அதோடு, பொருள் வசதிகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சரிசமமாக பங்கிட்டு கொடுத்தால், ஏற்றத்தாழ்வையும் வறுமையையும் ஒழித்துக்கட்ட முடியும் என்று நினைத்தேன். அதனால், கம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பு ஒன்றில் சேர்ந்தேன்; அதற்காகக் கடினமாக உழைத்தேன். எனக்கு 14 வயது இருந்தபோது, தேவையில்லாத பேப்பரை மறுசுழற்சி செய்வது சம்பந்தமான ஒரு சுற்றுச்சூழல் திட்டப்பணியில் நிறைய நேரம் செலவு செய்தேன். ஆவ் என்ற ஊரில் இருந்த அதிகாரிகள் என் வேலையைப் பாராட்டி, சிறந்த குடிமகன் என்ற விருதைக் கொடுத்தார்கள். என் சிறு வயதிலேயே, ஜெர்மானிய ஜனநாயக குடியரசில் இருந்த பெரிய அரசியல்வாதிகள் சிலரோடு எனக்குப் பழக்கம் இருந்தது. நான் சரியான குறிக்கோள்களைத்தான் அடைய விரும்புகிறேன் என்றும், என் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும் நம்பினேன்.

1989-ல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதோடு, கிழக்கு ஐரோப்பாவின் கம்யூனிஸ்ட் கூட்டணிகளும் உடைந்தன. அடுத்தடுத்து சில அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்ததால் என் நம்பிக்கையே சுக்குநூறானது! ஜெர்மானிய ஜனநாயக குடியரசிலும் அநீதி நடந்தது. உதாரணத்துக்கு, பொதுவுடைமைக் கொள்கையை ஆதரிக்காத மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள்போல் நடத்தப்பட்டார்கள். அது எப்படி, கம்யூனிஸ்ட்டுகளாக இருந்த நாங்கள், மக்கள் எல்லாரும் சரிசமமானவர்கள் என்றுதானே நம்பினோம்? அப்படியென்றால், பொதுவுடைமைக் கொள்கை என்பது வெறும் பேச்சுதானா? இந்தக் கேள்விகளெல்லாம் என் மனதை வாட்டி வதைத்தன!

அதனால், இசை மற்றும் ஓவியத்தின் மீது என் கவனத்தைத் திருப்பினேன். இசைக் கல்லூரியில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது; பிறகு, பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான வாய்ப்பும் இருந்தது. அதனால், இசை கலைஞராகவும் ஓவிய கலைஞராகவும் ஆக வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. சிறு வயதிலிருந்து நான் கடைப்பிடித்துவந்த ஒழுக்க நெறிகளையும் விட்டுவிட்டேன். ஜாலியாக இருக்க வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது; ஒரே சமயத்தில் பல பெண்களோடு ‘டேட்டிங்’ செய்தேன். ஆனால், இசையோ ஓவியமோ சுதந்திரமான வாழ்க்கையோ எனக்குச் சந்தோஷத்தைத் தரவில்லை. நான் வரைந்த ஓவியங்கள்கூட திகிலை உண்டாக்கின. எதிர்காலம் எப்படி இருக்கும், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தேன்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சாயங்காலம், என் கல்லூரியில் இருந்த மாணவர்கள், எதிர்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். நானும் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மேன்டி * ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தாள். அன்று சாயங்காலம், அவள் எனக்கு நல்ல ஆலோசனைகள் கொடுத்தாள். “நீ வாழ்க்கைய பத்தியும், எதிர்காலத்த பத்தியும் தெரிஞ்சிக்கணும்னா பைபிள ஆழமா படிக்கணும்” என்று சொன்னாள்.

மேன்டி சொன்ன விஷயங்களையெல்லாம் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை என்றாலும், பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நான் ஆர்வமாக இருந்தேன். தானியேல் 2-வது அதிகாரத்தில் இருக்கிற விஷயங்களை அவள் விளக்கி சொன்னபோது, நான் வாயடைத்துப்போய்விட்டேன். அன்று முதல் இன்றுவரை, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அடுத்தடுத்து வரும் உலக வல்லரசுகளைப் பற்றியும் அரசாங்கங்களைப் பற்றியும் அந்தத் தீர்க்கதரிசனம் விளக்கியது. மக்களுடைய எதிர்காலத்தைப் பற்றி சொல்லும் மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களையும் மேன்டி எனக்குக் காட்டினாள். கடைசியில், என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்க ஆரம்பித்தது! ஆனால், இந்தத் தீர்க்கதரிசனங்களை யார் சொன்னது, எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவு துல்லியமாக யாரால் சொல்லியிருக்க முடியும், கடவுள் ஒருவர் இருக்கிறாரா?

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது

ஹார்ஸ்ட்-ஏன்ஜலிக்கா என்ற யெகோவாவின் சாட்சி தம்பதியை மேன்டி எனக்கு அறிமுகப்படுத்தினாள். பைபிளை நன்றாகப் புரிந்துகொள்ள அவர்கள் உதவினார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு மட்டுமே கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துகிறது என்பதையும், அவர்கள் மட்டுமே கடவுளுடைய பெயரை மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள் என்பதையும் நான் சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன். (சங்கீதம் 83:18; மத்தேயு 6:9) அதோடு, பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பை யெகோவா மனிதர்களுக்குக் கொடுக்கிறார் என்றும் தெரிந்துகொண்டேன். “யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்” என்று சங்கீதம் 37:9 சொல்கிறது. பைபிளில் இருக்கிற கடவுளுடைய சட்டங்களின்படி வாழும் எல்லாருக்கும் இந்த வாய்ப்பு இருக்கிறது என்ற விஷயம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

ஆனால், பைபிளில் சொல்லியிருக்கிறபடி வாழ்வது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு சிறந்த இசைக் கலைஞனாகவும் ஓவியனாகவும் இருந்தது எனக்குப் பெருமையாக இருந்ததால், முதலில், மனத்தாழ்மையாக இருப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை விடுவதும் எனக்குக் கஷ்டமாக இருந்தது. பைபிள் சொல்கிறபடி வாழ விரும்பும் எல்லாரிடமும் யெகோவா பொறுமையோடும், இரக்கத்தோடும், புரிந்துகொள்ளுதலோடும் இருப்பதற்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்!

என்னுடைய 18 வயது வரை, நாத்திகமும் பொதுவுடைமைக் கொள்கையும்தான் என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஆனால், அதற்குப் பிறகு பைபிள் என் வாழ்க்கையை மாற்றிவருகிறது. எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும், வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும், பைபிள் எனக்கு உதவியிருக்கிறது. 1993-ல், நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஞானஸ்நானம் எடுத்தேன். 2000-ல், டபித்தா என்ற ஒரு வைராக்கியமுள்ள யெகோவாவின் சாட்சியைக் கல்யாணம் செய்தேன். மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி கற்றுக்கொடுக்க நாங்கள் நிறைய நேரம் செலவு செய்கிறோம். நாங்கள் சந்திக்கும் நிறைய பேர், என்னைப் போலவே பொதுவுடைமைக் கொள்கையை நம்புகிறவர்களாகவும் நாத்திகர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுப்பது எனக்கு ரொம்ப திருப்தியாக இருக்கிறது.

எனக்குக் கிடைத்த நன்மைகள்

நான் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டது, ஆரம்பத்தில் என் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவர்களோடு பழக ஆரம்பித்த பிறகு என் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இன்று, அவர்களும் பைபிள் படிக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். இது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது!

பைபிளில், கணவன் மனைவிக்கு நிறைய ஆலோசனைகள் இருக்கின்றன. அந்த ஆலோசனைகளின்படி வாழ நாங்கள் கடினமாக முயற்சி செய்வதால், எங்கள் கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உண்மையோடு இருக்க வேண்டும் என்ற ஆலோசனை எங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்தியிருக்கிறது.—எபிரெயர் 13:4.

இப்போது, என் வாழ்க்கையைப் பற்றிய பயமோ, எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ எனக்கு இல்லை. உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் ஒரே குடும்பம்போல் இருக்கிறார்கள்; உண்மையான சமாதானத்தையும், ஒற்றுமையையும் அனுபவிக்கிறார்கள். இந்தக் குடும்பத்தின் பாகமாக இருப்பதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். எங்களுக்குள் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை, நாங்கள் எல்லாரும் சரிசமமானவர்கள்! மக்கள் எல்லாரும் இப்படிச் சரிசமமாக வாழ வேண்டும் என்றும், இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும்தான் நான் ஆசைப்பட்டிருக்கிறேன்! ▪

^ பாரா. 12 பெயர் மாற்றப்பட்டுள்ளது.