Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

‘நாய்க்குட்டிகளை’ பற்றி இயேசு சொன்ன உவமை, அவமானப்படுத்தும் விதத்தில் இருந்ததா?

ஒரு நாய்க்குட்டியை வைத்திருக்கும் சிறு பிள்ளை, கிரேக்க அல்லது ரோமர்களின் சிறிய சிலை (கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாவது நூற்றாண்டு வரை)

ஒரு சமயம், சீரியாவின் ரோம மாகாணத்தில் அமைந்திருந்த இஸ்ரவேலின் எல்லைகளுக்கு வெளியே இயேசு இருந்தபோது, ஒரு கிரேக்க பெண் அவரிடம் உதவி கேட்டு வந்தாள். இயேசு ஒரு உவமையைப் பயன்படுத்தி அவளுக்குப் பதிலளித்தார். அந்த உவமையில், யூதராக இல்லாதவர்களை “நாய்க்குட்டிகளுக்கு” ஒப்பிட்டுப் பேசினார். மோசேயின் திருச்சட்டத்தின்படி, நாய்கள் அசுத்தமான மிருகங்களாகக் கருதப்பட்டன. (லேவியராகமம் 11:27) ஆனால், அந்தக் கிரேக்க பெண்ணையும் யூதராக இல்லாதவர்களையும் அவமானப்படுத்துவதற்காக இயேசு அந்த உவமையைப் பயன்படுத்தினாரா?

இல்லவே இல்லை! சீஷர்களிடம் சொன்ன விதமாக, அந்தச் சமயத்தில் யூதர்களுக்கு உதவுவதுதான் இயேசுவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதைப் புரிய வைப்பதற்காகத்தான், “பிள்ளைகளின் ரொட்டியை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்று அந்தக் கிரேக்க பெண்ணிடம் இயேசு சொன்னார். (மத்தேயு 15:21-26; மாற்கு 7:26) கிரேக்கர்களுக்கும் ரோமர்களுக்கும் நாய் எப்போதும் ஒரு செல்ல பிராணியாக இருந்திருக்கிறது; இது வீட்டின் சொந்தக்காரர்களோடு இருக்கும், பிள்ளைகளோடு விளையாடும். அதனால், ‘நாய்க்குட்டிகள்’ என்ற வார்த்தை கனிவு, அன்பு போன்ற குணங்களை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. அந்தக் கிரேக்க பெண் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டதும், “உண்மைதான், ஐயா; ஆனால், எஜமானுடைய மேஜையிலிருந்து விழுகிற துணுக்குகளை நாய்க்குட்டிகள் சாப்பிடுமே” என்று சொன்னாள். அந்தப் பெண்ணின் விசுவாசத்தைப் பாராட்டிவிட்டு, இயேசு அவளுடைய மகளை சுகப்படுத்தினார்.—மத்தேயு 15:27, 28. ▪

கடல் பயணத்தைத் தள்ளிப்போடும்படி பவுல் கொடுத்த ஆலோசனை சரியானதா?

மரத்தில் செதுக்கப்பட்ட ஒரு பெரிய சரக்குக் கப்பல் (கி.பி. முதல் நூற்றாண்டு)

இத்தாலிக்குப் போகிற கப்பலில் பவுல் பயணம் செய்துகொண்டிருந்தபோது, எதிர் காற்று அடித்தது. கப்பல் ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்தபோது, மீதிப் பயணத்தைத் தள்ளிப்போடும்படி பவுல் ஆலோசனை கொடுத்தார். (அப்போஸ்தலர் 27:9-12) எதன் அடிப்படையில் அவர் அப்படி ஆலோசனை கொடுத்தார்?

பனிக்காலத்தில், மத்தியதரைக் கடல் வழியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என்று பூர்வகால கப்பலோட்டிகளுக்கு நன்றாகத் தெரியும். நவம்பர் மத்திபத்திலிருந்து மார்ச் மத்திபம் வரை, கப்பல்கள் கடலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் செய்ய வேண்டிய கப்பல் பயணத்தைத் தள்ளிப்போடும்படிதான் பவுல் ஆலோசனை கொடுத்தார். எப்பிடோம் ஆஃப் மிலிட்டரி சய்ன்ஸ் என்ற புத்தகத்தில், மத்தியதரைக் கடல் வழியாக பயணம் செய்வதைப் பற்றி ரோம எழுத்தாளரான வெஜஷியெஸ் (கி.பி. நான்காம் நூற்றாண்டு) இப்படிச் சொன்னார்: “சில மாதங்களில், கப்பல் பயணம் சுலபமாக இருக்கும், சில மாதங்களில் கஷ்டமாக இருக்கும், இன்னும் சில மாதங்களில் பயணமே செய்ய முடியாது.” அதோடு, மே 27 முதல் செப்டம்பர் 14 வரை பயணம் செய்வது பாதுகாப்பானதாக இருக்கும் என்று அவர் சொன்னார். ஆனால், செப்டம்பர் 15 முதல் நவம்பர் 11 வரை பயணம் செய்வதும், மார்ச் 11 முதல் மே 26 வரை பயணம் செய்வதும் கஷ்டமானதாகவோ ஆபத்தானதாகவோ இருக்கும் என்று வெஜஷியெஸ் சொன்னார். பவுல் அடிக்கடி பயணம் செய்ததால், இந்த விஷயங்கள் அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இதைப் பற்றி கப்பல் தலைவருக்கும், கப்பல் உரிமையாளருக்கும்கூட தெரிந்திருக்கும். இருந்தாலும், அவர்கள் பவுலின் ஆலோசனையைக் கேட்கவில்லை. கடைசியில், அந்தக் கப்பல் சேதமடைந்தது.—அப்போஸ்தலர் 27:13-44. ▪