Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சபையில் இருக்கிற இளம் பிள்ளைகளோடு சேர்ந்து இருப்பது எனக்கு பிடிக்கும்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

எல்லாவற்றையும்விட பேஸ்பாலைத்தான் அதிகமாக நேசித்தேன்

எல்லாவற்றையும்விட பேஸ்பாலைத்தான் அதிகமாக நேசித்தேன்
  • பிறந்த வருஷம்:1928

  • பிறந்த நாடு:கோஸ்டா ரிகா

  • என்னைப் பற்றி:பேஸ்பால் விளையாட்டிலும் சூதாட்டத்திலும் மூழ்கிப்போயிருந்தேன்

என் கடந்த கால வாழ்க்கை

பெர்டோ லிமன் என்ற துறைமுக நகரத்திலும் அதை சுற்றியிருந்த இடங்களிலும் நான் வளர்ந்தேன். பெர்டோ லிமன் கோஸ்டா ரிகாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கிறது. அப்பா-அம்மாவுக்கு நாங்கள் மொத்தம் எட்டு பிள்ளைகள், அதில் நான் ஏழாவது. எனக்கு எட்டு வயது இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். அம்மா தனியாளாக எங்களை வளர்த்தார்.

சின்ன வயதிலிருந்தே எனக்கு பேஸ்பால் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். பிறகு, அதுவே என் வாழ்க்கையாக மாறிவிட்டது. டீனேஜ் வயதில் இருக்கும்போது நான் அமைச்சூர் லீக் அணியில் (amateur league team) சேர்ந்தேன். பெரிய அணிகளில் விளையாட வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒருவர் நான் விளையாடுவதைக் கவனித்தார். அப்போது எனக்கு 20 வயது. நிகாராகுவாவில் இருக்கும் ஒரு பெரிய அணியில் சேர என்னை ஊக்கப்படுத்தினார். ஆனால், அந்தச் சமயத்தில் என் அம்மாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால் அங்கு போக வேண்டாம் என்று முடிவு செய்தேன். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் வேறொரு நபர் கோஸ்டா ரிகாவின் தேசிய பேஸ்பால் அணியின் சார்பாக விளையாட என்னை அழைத்தார். இந்த முறை கிடைத்த வாய்ப்பை நான் நழுவவிடவில்லை. அமைச்சூர் லீக் அணியிலிருந்த சிலர்தான் அந்த அணியின் வீரர்களாக இருந்தார்கள். 1949-லிருந்து 1952 வரை அந்த தேசிய அணியில் இருந்தேன். அதோடு கியூபா, மெக்சிகோ, நிகாராகுவா போன்ற இடங்களுக்குப் போய் அடுத்தடுத்து பல போட்டிகளில் விளையாடினேன். என் அணியில் நான் பேஸ்மேனாக (baseman) இருந்தேன். அடுத்தடுத்து 17 போட்டிகளில் பிழைகளே இல்லாமல் விளையாடி தூள்கிளப்பினேன். என் பெயரைச் சொல்லி மக்கள் ஆரவாரம் செய்தது எனக்குப் பிடித்திருந்தது.

நான் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தேன். எனக்கு ஒரு காதலி இருந்தபோதும் மற்ற பெண்களோடும் தொடர்பு வைத்திருந்தேன். அதுமட்டுமல்ல, வெறிக்க வெறிக்க குடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒருநாள் நான் குடித்துவிட்டு சுயநினைவு இல்லாமல் கிடந்தேன். அடுத்த நாள் கண்விழித்துப் பார்த்தபோது நான் வீட்டில் இருந்தேன், எப்படி வீட்டுக்கு வந்தேன் என்றே தெரியவில்லை. சூதாட்டத்தையும் நான் விட்டுவைக்கவில்லை. டாமினோ என்ற விளையாட்டை காசு வைத்து விளையாடினேன், லாட்டரிகளையும் வாங்கினேன்.

நான் இந்த மாதிரி வாழ்ந்து வந்த சமயத்தில், அம்மா ஒரு யெகோவாவின் சாட்சி ஆனார். கடவுளைப் பற்றி நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நிறைய முயற்சி எடுத்தார். நான் விளையாட்டில் மூழ்கிப்போயிருந்ததால், அவர் எடுத்த முயற்சி வீண்போனது. பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது சிலசமயங்களில் சாப்பிடக்கூட மறந்துவிடுவேன். விளையாட்டே கதியென்று இருந்தேன். எல்லாவற்றையும்விட பேஸ்பாலைத்தான் அதிகமாக நேசித்தேன்.

ஒருசமயம், விளையாட்டில் பந்தைப் பிடிக்க முயற்சி செய்தபோது எனக்குப் படுகாயம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 29 வயது. குணமான பிறகு, பெரிய அணியில் சேர்ந்து விளையாடுவதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும், வீட்டுக்குப் பக்கத்திலேயே அமைச்சூர் லீக் அணியில் இருந்தவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது

1957-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டுக்கு நான் போயிருந்தேன். நான் பேஸ்பால் விளையாடின ஒரு அரங்கத்தில் அந்த மாநாடு நடந்தது. பேஸ்பால் ரசிகர்கள் அந்த அரங்கத்தில் ரவுடித்தனமாக நடந்துகொண்டது அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. ஆனால், யெகோவாவின் சாட்சிகள் அடக்கமாகவும் மரியாதையாகவும் நடந்துகொண்டார்கள். இவர்களுடைய நல்ல நடத்தையைப் பார்த்துதான் நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். அதோடு, கூட்டங்களுக்கும் போனேன்.

பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட நிறைய விஷயங்கள் என் மனதைத் தொட்டது. உதாரணத்துக்கு, கடைசி நாட்களில் தன்னுடைய சீஷர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் பிரசங்கிப்பார்கள் என்று இயேசு சொல்லியிருந்தார். இது என் மனதைக் கவர்ந்தது. (மத்தேயு 24:14) அதோடு, “இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, எந்த லாபமும் எதிர்பார்க்காமல் உண்மை கிறிஸ்தவர்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள். இதுவும் என் மனதைக் கவர்ந்தது.—மத்தேயு 10:8.

யெகோவாவின் சாட்சிகள் பைபிள் சொல்கிறபடி வாழ்கிறார்கள் என்பதை நான் பைபிள் படிப்பிலிருந்து புரிந்துகொண்டேன். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மக்களிடம் சொல்ல அவர்கள் எடுக்கும் கடினமான முயற்சியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொன்னதை யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வாழ்க்கையில் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். மாற்கு 10:21-ல் “என்னைப் பின்பற்றி வா” என்ற இயேசுவின் வார்த்தைகளைப் படித்தபோது, நானும் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆனால், ஒரு யெகோவாவின் சாட்சி ஆவதற்கு கொஞ்சக் காலம் எடுத்தது. ஏனென்றால், எனக்கு சூதாடும் பழக்கம் பல வருஷமாக இருந்தது. அதிர்ஷ்ட எண்ணைப் பார்த்து வாராவாரம் லாட்டரி சீட்டு வாங்கினேன். ஆனால், ‘அதிர்ஷ்ட தெய்வத்தை’ நம்புவதும் பேராசைப்படுவதும் கடவுளுக்குப் பிடிக்காது என்று பைபிளிலிருந்து கற்றுக்கொண்டேன். (ஏசாயா 65:11; கொலோசெயர் 3:5) அதனால், சூதாடும் பழக்கத்தை விட்டுவிட தீர்மானித்தேன். நான் லாட்டரி சீட்டு வாங்குவதை நிறுத்திய அதே வாரம் ஞாயிற்றுக்கிழமை, என் அதிர்ஷ்ட எண்ணுக்குப் பரிசு விழுந்தது. இதைப் பார்த்து நிறைய பேர் என்னை கேலி செய்தார்கள். லாட்டரி சீட்டு வாங்க என்னை கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், மறுபடியும் சூதாடக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன்.

பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ‘புதிய சுபாவத்தை’ வளர்த்துக்கொண்டு அதன்படி வாழ்வதில் எனக்கு இன்னொரு சவால் வந்தது. (எபேசியர் 4:24) அதுவும், யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் நான் ஞானஸ்நானம் எடுத்த அதே நாளில் அந்த சவால் வந்தது. அன்று சாயங்காலம், மாநாடு முடிந்து நான் ஓட்டலுக்கு திரும்பி வந்தபோது, என்னுடைய முன்னால் காதலி நான் தங்கியிருந்த அறைக்கு வெளியே எனக்காக காத்துக்கொண்டிருந்தாள். “சேம்மி, வா நாம ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாம்” என்று சொன்னாள். நான் உடனே “முடியாது” என்று சொல்லிவிட்டேன். பைபிள் சொல்வதுபோல் நான் ஒழுக்கமாக வாழ்கிறேன் என்று அவளிடம் சொன்னேன். “என்ன சொல்ற!” என்று அவள் அதிர்ச்சியாகக் கேட்டாள். (1 கொரிந்தியர் 6:18) ஒழுக்க விஷயத்தைப் பற்றி பைபிள் சொல்வதை அவள் தரக்குறைவாகப் பேசினாள். முன்பு போலவே வாழலாம் என்று சொல்லி என்னை வற்புறுத்தினாள். ஆனால், நான் என் அறைக்குள் போய் கதவைச் சாத்திவிட்டேன். 1958-ல் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனதிலிருந்து இன்றுவரையாக நான் எந்தத் தவறான வழியிலும் போகவில்லை. பைபிள் சொல்கிறபடியே வாழ்ந்து வருகிறேன். இதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்

பைபிளின்படி வாழ்வதால் எனக்கு வாழ்க்கையில் நிறைய நன்மைகள் கிடைத்திருக்கிறது. நல்ல நண்பர்கள்... அர்த்தமுள்ள வாழ்க்கை... உண்மையான சந்தோஷம்... என்று எனக்கு கிடைத்த நன்மைகளைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

எனக்கு இப்போதும் பேஸ்பால் விளையாடுவது பிடிக்கும். ஆனால், இப்போது பேஸ்பாலே என் வாழ்க்கையாக இல்லை. இந்த விளையாட்டின் மூலம் பேர், புகழ், பணம் எல்லாம் சம்பாதித்தேன். காலம் செல்லச் செல்ல இதெல்லாம் காற்றில் பறந்துபோனது. ஆனால், கடவுளோடும் அவருடைய மக்களோடும் நான் இப்போது அனுபவிக்கிற பந்தம் என்றென்றைக்கும் நிலைத்துநிற்கும் என்று எனக்குத் தெரியும். இது உண்மை என்று பைபிள் சொல்கிறது: “இந்த உலகமும் அதன் ஆசையும் ஒழிந்துபோகும்; கடவுளுடைய விருப்பத்தை செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) இப்போது, நான் எல்லாவற்றையும்விட யெகோவாவையும் அவருடைய மக்களையும்தான் அதிகமாக நேசிக்கிறேன்.