Skip to content

யோவான் ஸ்நானகர் யார்?

யோவான் ஸ்நானகர் யார்?

பைபிள் தரும் பதில்

 யோவான் ஸ்நானகர் கடவுளுடைய ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். (லூக்கா 1:76) அவர் கி.மு. 2-ம் நூற்றாண்டில் பிறந்தார், கி.பி. 32-ல் இறந்தார். மேசியா, அதாவது கிறிஸ்துவுக்கு, வழியைத் தயார்படுத்துவதற்காக கடவுள் அவரை நியமித்திருந்தார். இதை அவர் எப்படிச் செய்தார்? கடவுளுடைய செய்தியை அன்றைக்கு இருந்த யூதர்களிடம் பிரசங்கித்தார், இப்படி அவர்கள் மனம் திருந்தி கடவுளுடைய பக்கம் வருவதற்காக உதவி செய்தார்.—மாற்கு 1:1-4; லூக்கா 1:13, 16, 17.

 நாசரேத்தூர் இயேசுதான் கடவுள் வாக்குறுதி அளித்த மேசியா என்பதை நல்மனமுள்ள ஆட்கள் புரிந்துகொள்வதற்கு யோவான் சொன்ன செய்தி உதவி செய்தது. (மத்தேயு 11:10) தன்னுடைய செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் தங்களுடைய பாவங்களை விட்டு மனம் திருந்தி அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்கும்படி சொன்னார். (லூக்கா 3:3-6) அவர் நிறைய பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததால்தான் யோவான் ஸ்நானகர் என்ற பெயர் அவருக்கு வந்தது. அவர் கொடுத்ததிலேயே மிக முக்கியமான ஞானஸ்நானம், இயேசுவுக்கு அவர் கொடுத்த ஞானஸ்நானம்தான். aமாற்கு 1:9.

இந்தக் கட்டுரையில்

 யோவான் ஸ்நானகர் எப்படி விசேஷமானவராக இருந்தார்?

 அவர் செய்த வேலை முன்னறிவிக்கப்பட்டது: யெகோவாவுடைய தூதுவர் என்ன செய்வார் என்று முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருந்தது. (மல்கியா 3:1; மத்தேயு 3:1-3) யோவான் ஸ்நானகர் செய்த பிரசங்க வேலை அந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது. ‘யெகோவாவுக்கு ஏற்ற ஒரு ஜனத்தைத் தயார்படுத்துகிற’ ஒருவராக யோவான் இருந்தார். அதாவது, யெகோவா தேவனுடைய முக்கியமான பிரதிநிதியாக இருந்த இயேசு கிறிஸ்து சொன்ன செய்தியை அன்றைக்கு இருந்த யூதர்கள் ஏற்றுக்கொள்வதற்கான வழியை அவர் திறந்து வைத்தார்.—லூக்கா 1:17.

 சாதனைகள்: “யோவான் ஸ்நானகரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை; ஆனால், பரலோக அரசாங்கத்தில் தாழ்ந்தவராக இருக்கிறவர் அவரைவிட உயர்ந்தவராக இருக்கிறார்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 11:11) யோவான் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமல்ல முன்னறிவிக்கப்பட்ட ‘தூதுவராகவும்’ இருந்ததால், அவருக்கு முன்பிருந்த கடவுளுடைய ஊழியர்களை விட அவர் உயர்ந்தவராக இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கடவுளுடைய அரசாங்கத்தில் ராஜாவாக இருக்க மாட்டார் என்ற விஷயத்தையும் இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டியது. b ஏனென்றால், பரலோகத்துக்குப் போவதற்கான வழியை இயேசு திறப்பதற்கு முன்பே யோவான் இறந்துவிட்டார். (எபிரெயர் 10:19, 20) இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கத்தில் பூஞ்சோலை பூமியில் ஒரு குடிமகனாக என்றென்றைக்கும் வாழ்கிற வாய்ப்பு அவருக்கு இருக்கிறது.—சங்கீதம் 37:29; லூக்கா 23:43.

 யோவான் ஸ்நானகருடைய அப்பா-அம்மா யார்?

 சகரியாவும் எலிசபெத்தும்தான் யோவான் ஸ்நானகருடைய அப்பா-அம்மா. சகரியா ஒரு ஆலய குருவாக இருந்தார். யோவான் ஸ்நானகருடைய பிறப்பே ஒரு அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவருடைய அம்மா கருத்தரிக்க முடியாதவராக இருந்தாள். அவளும் சகரியாவும் “ரொம்ப வயதானவர்களாக இருந்தார்கள்.”—லூக்கா 1:5-7, 13.

 யோவான் ஸ்நானகருடைய மரணத்துக்கு யார் காரணம்?

 ஏரோது அந்திப்பா ராஜாதான் யோவானின் தலையை வெட்டும்படி கட்டளையிட்டார். அப்படிச் செய்யச் சொல்லி அவரைத் தூண்டியது அவருடைய மனைவி ஏரோதியாள். ஏரோது தன்னை யூதன் என்று சொல்லிக்கொண்டார். அதனால் யூதர்களுடைய சட்டப்படி அவர்களுடைய கல்யாணம் செல்லாது என்று யோவான் ஸ்நானகர் ஏரோதிடம் சொன்னார். இதனால் ஏரோதியாள் யோவானை வெறுத்தாள்.—மத்தேயு 14:1-12; மாற்கு 6:16-19.

 யோவான் ஸ்நானகர் இயேசுவை தனக்குப் போட்டியாக நினைத்தாரா?

 இல்லவே இல்லை. அப்படி ஒரு விஷயம் பைபிளில் எங்கேயும் இல்லை. (யோவான் 3:25-30) உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மேசியாவுக்கு வழியைத் தயார்படுத்துவதுதான் தன்னுடைய பொறுப்பு, அவருடன் போட்டி போடுவது இல்லை என்று யோவான் வெளிப்படையாக சொல்லியிருந்தார். அதனால்தான் யோவான், “இவர் யாரென்று இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்” என்று சொன்னார். அதோடு அவர் இயேசுவை பார்த்து, “இவர்தான் கடவுளுடைய மகன்” என்றும் சொன்னார். (யோவான் 1:26-34) இயேசு செய்த ஊழியத்துக்கு நல்ல பலன்கள் கிடைத்ததைக் கேட்டு யோவான் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

a இயேசு “பாவம் செய்யவில்லை.” (1 பேதுரு 2:21, 22) அதனால் அவர் எடுத்த ஞானஸ்நானம், பாவங்களுக்காக மனம் திருந்துவதை அல்ல, கடவுளுடைய விருப்பத்தை செய்வதற்காக அவர் தன்னையே மனமுவந்து கொடுத்தார் என்பதையே காட்டியது. இதில் அவர் நமக்காக தன்னுடைய உயிரை கொடுத்ததும் அடங்கும்.—எபிரெயர் 10:7-10.

bயார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.