லூக்கா எழுதியது 3:1-38

3  ரோம அரசன்* திபேரியு ஆட்சி செய்த 15-ஆம் வருஷத்தில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், ஏரோது*+ கலிலேயாவின் மாகாண அதிபதியாகவும், அவனுடைய சகோதரனான பிலிப்பு என்பவன் இத்துரேயா மற்றும் திராகொனித்தி பகுதிகளுக்கு மாகாண அதிபதியாகவும், லிசானியா என்பவன் அபிலேனே பகுதிக்கு மாகாண அதிபதியாகவும்,  அன்னா என்பவர் முதன்மை குருமார்களில் ஒருவராகவும், காய்பா என்பவர் தலைமைக் குருவாகவும்+ இருந்தார்கள். அப்போது, சகரியாவின் மகன் யோவானுக்கு+ வனாந்தரத்தில்+ கடவுளுடைய வார்த்தை அருளப்பட்டது.  அதனால், அவர் யோர்தானைச் சுற்றியிருக்கிற எல்லா பகுதிகளுக்கும் போய், பாவ மன்னிப்புக்காக மனம் திருந்த வேண்டுமென்றும், அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றும் பிரசங்கித்துவந்தார்.+  இதைப் பற்றித்தான் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில், “‘யெகோவாவுக்கு* வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்.+  எல்லா பள்ளத்தாக்குகளும் நிரப்பப்பட வேண்டும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்பட வேண்டும், வளைந்த பாதைகள் நேராக்கப்பட வேண்டும், கரடுமுரடான பாதைகள் சமமாக்கப்பட வேண்டும்.  கடவுள் தரப்போகிற மீட்பை எல்லா மக்களும் பார்ப்பார்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வதைக் கேளுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது.  யோவான் தன்னிடம் ஞானஸ்நானம் பெற வந்த கூட்டத்தாரைப் பார்த்து, “விரியன் பாம்புக் குட்டிகளே, கடவுளுடைய கோபத்தின் நாளில் தப்பித்து ஓடச் சொல்லி உங்களை எச்சரித்தது யார்?+  நீங்கள் மனம் திருந்திவிட்டீர்கள் என்பதைச் செயலில் காட்டுங்கள்;* ‘ஆபிரகாம் எங்கள் தகப்பன்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளாதீர்கள். கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்துகூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க முடியுமென்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.  மரங்களின் வேருக்குப் பக்கத்தில் ஏற்கெனவே கோடாலி இருக்கிறது; நல்ல பழங்களைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படும்”+ என்று சொன்னார். 10  அந்த மக்கள் அவரிடம், “அப்படியானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். 11  அதற்கு அவர், “இரண்டு உடைகளை* வைத்திருப்பவன் எதுவுமே இல்லாதவனுக்கு ஒன்றைக் கொடுக்க வேண்டும்; அதேபோல், உணவு வைத்திருப்பவனும் இல்லாதவனுக்குக் கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார். 12  வரி வசூலிப்பவர்களும்கூட ஞானஸ்நானம் பெற யோவானிடம் வந்து,+ “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். 13  அதற்கு அவர், “நிர்ணயிக்கப்பட்ட வரியைவிட அதிகமாக வசூலிக்காதீர்கள்”+ என்று சொன்னார். 14  அதோடு, படைவீரர்கள் அவரிடம் வந்து, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “யாரையும் கொடுமைப்படுத்தியோ, யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தியோ எதையும் அபகரிக்காதீர்கள்,+ உங்களுக்குக் கொடுக்கப்படுவதை* வைத்துத் திருப்தியாக இருங்கள்” என்று சொன்னார். 15  அந்தச் சமயத்தில் மக்கள் எல்லாரும் கிறிஸ்துவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அதனால் தங்கள் இதயத்தில், “இவர்தான் கிறிஸ்துவாக இருப்பாரோ?”+ என்று யோவானைப் பற்றி யோசித்தார்கள். 16  அதனால் யோவான் அவர்கள் எல்லாரிடமும், “நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால், என்னைவிட வல்லவர் ஒருவர் வரப்போகிறார், அவருடைய செருப்புகளின் வார்களை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை.+ அவர் உங்களுக்குக் கடவுளுடைய சக்தியாலும் நெருப்பாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.+ 17  அவர் தன்னுடைய கையில் தூற்றுவாரியை* வைத்திருக்கிறார்; அதை வைத்துத் தன்னுடைய களத்துமேடு முழுவதையும் சுத்தப்படுத்தி, கோதுமையைத் தன்னுடைய களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணைக்க முடியாத நெருப்பில் சுட்டெரிப்பார்” என்று சொன்னார். 18  அவர் இன்னும் நிறைய அறிவுரைகளைக் கொடுத்து, மக்களுக்குத் தொடர்ந்து நல்ல செய்தியைச் சொல்லிவந்தார். 19  மாகாண அதிபதியான ஏரோதுவை யோவான் கண்டித்திருந்தார். ஏனென்றால், ஏரோது தன்னுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாளை வைத்திருந்தான்; அதோடு, இன்னும் நிறைய கெட்ட செயல்களைச் செய்துவந்திருந்தான். 20  இதெல்லாம் போதாதென்று, யோவானையும் சிறையில் அடைத்து வைத்தான்.+ 21  மக்கள் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், இயேசுவும் ஞானஸ்நானம் எடுத்தார்;+ அவர் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது வானம் திறக்கப்பட்டது;+ 22  கடவுளுடைய சக்தி புறா வடிவில் தோன்றி அவர்மேல் இறங்கியது. அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 23  இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;யோசேப்பு+ ஹேலியின் மகன்; 24  ஹேலி மாத்தாத்தின் மகன்;மாத்தாத் லேவியின் மகன்;லேவி மெல்கியின் மகன்;மெல்கி யன்னாவின் மகன்;யன்னா யோசேப்பின் மகன்; 25  யோசேப்பு மத்தத்தியாவின் மகன்;மத்தத்தியா ஆமோசின் மகன்;ஆமோஸ் நாகூமின் மகன்;நாகூம் எஸ்லியின் மகன்;எஸ்லி நங்காயின் மகன்; 26  நங்காய் மாகாத்தின் மகன்;மாகாத் மத்தத்தியாவின் மகன்;மத்தத்தியா சேமேயின் மகன்;சேமேய் யோசேக்கின் மகன்;யோசேக் யோதாவின் மகன்; 27  யோதா யோவன்னாவின் மகன்;யோவன்னா ரேசாவின் மகன்;ரேசா செருபாபேலின்+ மகன்;செருபாபேல் சலாத்தியேலின்+ மகன்;சலாத்தியேல் நேரியின் மகன்; 28  நேரி மெல்கியின் மகன்;மெல்கி அத்தியின் மகன்;அத்தி கோசாமின் மகன்;கோசாம் எல்மோதாமின் மகன்;எல்மோதாம் ஏரின் மகன்; 29  ஏர் இயேசுவின் மகன்;இயேசு எலியேசரின் மகன்;எலியேசர் யோரீமின் மகன்;யோரீம் மாத்தாத்தின் மகன்;மாத்தாத் லேவியின் மகன்; 30  லேவி சிமியோனின் மகன்;சிமியோன் யூதாசின் மகன்;யூதாஸ் யோசேப்பின் மகன்;யோசேப்பு யோனாமின் மகன்;யோனாம் எலியாக்கீமின் மகன்; 31  எலியாக்கீம் மெலெயாவின் மகன்;மெலெயா மயினானின் மகன்;மயினான் மாத்தாத்தாவின் மகன்;மாத்தாத்தா நாத்தானின் மகன்;நாத்தான்+ தாவீதின் மகன்; 32  தாவீது+ ஈசாயின் மகன்;ஈசாய்+ ஓபேத்தின் மகன்;ஓபேத்+ போவாசின் மகன்;போவாஸ்+ சல்மோனின் மகன்;சல்மோன்+ நகசோனின் மகன்; 33  நகசோன்+ அம்மினதாபின் மகன்;அம்மினதாப் ஆர்னியின் மகன்;ஆர்னி எஸ்ரோனின் மகன்;எஸ்ரோன் பாரேசின் மகன்;பாரேஸ்+ யூதாவின் மகன்; 34  யூதா+ யாக்கோபின் மகன்;யாக்கோபு+ ஈசாக்கின் மகன்;ஈசாக்கு+ ஆபிரகாமின் மகன்;ஆபிரகாம்+ தேராகுவின் மகன்;தேராகு+ நாகோரின் மகன்; 35  நாகோர்+ சேரூக்கின் மகன்;சேரூக்+ ரெகூவின் மகன்;ரெகூ+ பேலேகுவின் மகன்;பேலேகு+ ஏபேரின் மகன்;ஏபேர்+ சேலாவின் மகன்; 36  சேலா+ காயினானின் மகன்;காயினான் அர்பக்சாத்தின் மகன்;அர்பக்சாத்+ சேமின் மகன்;சேம்+ நோவாவின் மகன்;நோவா+ லாமேக்கின் மகன்; 37  லாமேக்கு+ மெத்தூசலாவின் மகன்;மெத்தூசலா+ ஏனோக்கின் மகன்;ஏனோக்கு யாரேத்தின் மகன்;யாரேத்+ மகலாலெயேலின் மகன்;மகலாலெயேல்+ காயினானின் மகன்; 38  காயினான்+ ஏனோசின் மகன்;ஏனோஸ்+ சேத்தின் மகன்;சேத்+ ஆதாமின் மகன்;ஆதாம்+ கடவுளின் மகன்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “சீஸர்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “ஏரோது அந்திப்பா.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “மனம் திருந்தியதற்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.”
வே.வா., “கூடுதலாக ஒரு உடையை.”
வே.வா., “கொடுக்கப்படும் சம்பளத்தை.”
தானியத்தைப் பதரிலிருந்து பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீண்ட கைப்பிடியுள்ள ஒரு கருவி.
வே.வா., “அங்கீகரிக்கிறேன்; உன்மேல் பிரியமாக இருக்கிறேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

ஏரோது அந்திப்பா தயாரித்த காசு
ஏரோது அந்திப்பா தயாரித்த காசு

இயேசு ஊழியம் செய்த காலத்தில் தயாரிக்கப்பட்ட கலப்பு வெண்கலக் காசின் இரண்டு பக்கங்களையும்தான் இந்தப் போட்டோக்களில் பார்க்கிறோம். இந்தக் காசைத் தயாரிக்கும்படி உத்தரவிட்டது ஏரோது அந்திப்பா. இவர் கால்பங்கு தேசத்தை, அதாவது கலிலேயா மற்றும் பெரேயாவை, ஆட்சி செய்த மாகாண அதிபதியாக இருந்தார். இயேசு எருசலேமுக்குப் போகும் வழியில் ஏரோதுவின் ஆட்சிப்பகுதியாகிய பெரேயாவைக் கடந்துபோனதாகத் தெரிகிறது; அப்போதுதான், இயேசுவைக் கொலை செய்ய ஏரோது திட்டம் போட்டிருந்ததைப் பற்றி பரிசேயர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தச் சமயத்தில், ஏரோதுவை “அந்தக் குள்ளநரி” என்று இயேசு சொன்னார். (லூ 13:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) ஏரோதுவின் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் யூதர்களாக இருந்தார்கள். அதனால், யூதர்களைக் கோபப்படுத்தாத சின்னங்களாகிய பனை ஓலை (1), கிரீடம் (2) போன்றவை அவர் தயாரித்த காசுகளில் பதிக்கப்பட்டிருந்தன.

ரோம அரசன் திபேரியு
ரோம அரசன் திபேரியு

திபேரியு கி.மு. 42-ல் பிறந்தான். கி.பி. 14-ல் அவன் ரோமப் பேரரசின் இரண்டாவது அரசனாக ஆனான். கி.பி. 37, மார்ச் மாதம்வரை அவன் வாழ்ந்தான். இயேசு ஊழியம் செய்த காலப்பகுதி முழுவதும் அவன்தான் அரசனாக இருந்தான். அதனால், ‘அரசனுடையதை அரசனுக்கு . . . கொடுங்கள்’ என்று வரி கட்டுவது சம்பந்தமாக இயேசு சொன்னபோது திபேரியுதான் அரசனாக ஆட்சி செய்துகொண்டிருந்தான்.—மாற் 12:14-17; மத் 22:17-21; லூ 20:22-25.

வனாந்தரம்
வனாந்தரம்

பைபிளில் “வனாந்தரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைகள் (எபிரெயுவில், மித்பார்; கிரேக்கில், ஈரெமாஸ்), பொதுவாக மனிதர்கள் அதிகம் குடியிருக்காத தரிசு நிலப்பகுதிகளைக் குறிக்கின்றன. புற்களும் புதர்களும் கொண்ட புல்வெளிகளையும், மேய்ச்சல் நிலங்களையும்கூட அவை பெரும்பாலும் குறிக்கின்றன. அந்த வார்த்தைகள், தண்ணீரே இல்லாத பாலைவனங்களைக்கூடக் குறிக்கலாம். சுவிசேஷப் புத்தகங்களில் சொல்லப்படும் வனாந்தரம், பொதுவாக யூதேயாவின் வனாந்தரத்தைக் குறிக்கிறது. இந்த வனாந்தரத்தில்தான் யோவான் வாழ்ந்தார், ஊழியமும் செய்தார். இங்குதான் இயேசுவைப் பிசாசு சோதித்தான்.—மாற் 1:12.

செருப்புகள்
செருப்புகள்

பைபிள் காலங்களில், செருப்புகள் தட்டையாக இருந்தன. தோல், மரம், அல்லது வேறு நார்ப்பொருள்களால் செய்யப்பட்டிருந்தன. காலோடு சேர்த்துக் கட்டிக்கொள்ள அவற்றுக்குத் தோல் வார்களும் இருந்தன. சில விதமான கொடுக்கல் வாங்கல்களிலும் சொல்லோவியங்களிலும் செருப்புகள் ஏதோ ஒன்றுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டன. உதாரணத்துக்கு, திருச்சட்டத்தின்படி ஒருவன் தன் சகோதரனின் மனைவி விதவையாகிவிட்ட பிறகு அவளைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தால், அவனுடைய செருப்பை அவள் கழற்றிப்போட வேண்டியிருந்தது; அதன் பிறகு, “செருப்பு கழற்றப்பட்டவன் குடும்பம்” என்ற கெட்ட பெயர் அவனுக்கு வந்தது. (உபா 25:9, 10) சொத்தை அல்லது மீட்டுக்கொள்ளும் உரிமையை இன்னொருவருக்குக் கொடுப்பதற்கு அடையாளமாகவும் ஒருவர் தன்னுடைய செருப்பைக் கழற்றி மற்றவரிடம் கொடுத்தார். (ரூ 4:7) இன்னொருவரின் செருப்பு வார்களை அவிழ்ப்பதோ இன்னொருவரின் செருப்புகளைச் சுமந்துகொண்டு போவதோ அடிமைகளால் செய்யப்பட்ட இழிவான வேலையாகக் கருதப்பட்டது. கிறிஸ்துவைவிட தான் தாழ்ந்தவர் என்பதைக் காட்ட யோவான் ஸ்நானகர் இந்த வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

போரடிக்கும் கருவிகள்
போரடிக்கும் கருவிகள்

இங்கே காட்டப்பட்டிருக்கிற போரடிக்கும் பலகைகளின் மாதிரிகள் இரண்டும் (1) தலைகீழாகத் திருப்பி வைக்கப்பட்டுள்ளன; பலகையின் அடிப்பக்கத்தில் பொருத்தப்படும் கூர்மையான கற்களைப் படத்தில் நீங்கள் பார்க்கலாம். (ஏசா 41:15) இரண்டாவது படத்தில் (2) காட்டப்பட்டுள்ளபடி, ஒரு விவசாயி களத்துமேட்டில் கதிர்க்கட்டுகளைப் பரப்பி வைத்து, போரடிக்கும் பலகைமேல் நின்றுகொண்டு, காளை போன்ற ஒரு விலங்கைக் கட்டி அதை இழுக்க வைப்பார். அந்த விலங்கின் குளம்புகளும், அந்தப் பலகையின் அடிப்பக்கத்திலுள்ள கூர்மையான கற்களும் கதிர்களைத் துண்டுதுண்டாக்கும். அப்போது தானியம் கதிர்களிலிருந்து பிரியும். பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய கவைக்கம்பை அல்லது தூற்றுவாரியை (3) பயன்படுத்தி, பதரும் தானியமும் கலந்த கலவையைக் காற்றில் அள்ளி வீசுவார். பதர் லேசாக இருப்பதால் அது காற்றில் அடித்துச்செல்லப்படும், ஆனால் தானிய மணிகள் தரையில் விழும். யெகோவாவின் எதிரிகள் எப்படி மிதித்து நொறுக்கப்படுவார்கள் என்பதை விவரிப்பதற்கு, களத்துமேட்டில் போரடிக்கும் உதாரணத்தை பைபிள் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. (எரே 51:33; மீ 4:12, 13) நல்லவர்கள் எப்படிக் கெட்டவர்களிலிருந்து பிரிக்கப்படுவார்கள் என்பதை விவரிப்பதற்கு, போரடிக்கும் உதாரணத்தை யோவான் ஸ்நானகர் பயன்படுத்தினார்.