மாற்கு எழுதியது 6:1-56

6  அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார்,+ சீஷர்களும் அவர் பின்னால் வந்தார்கள்.  ஓய்வுநாளில் ஜெபக்கூடத்தில் அவர் கற்பிக்க ஆரம்பித்தார்; அதைக் கேட்ட பெரும்பாலோர் பிரமித்துப்போனார்கள்; “இதையெல்லாம் இவன் எங்கிருந்து தெரிந்துகொண்டான்?+ இவ்வளவு ஞானம் இவனுக்கு எப்படிக் கிடைத்தது? இப்பேர்ப்பட்ட அற்புதங்களைச் செய்ய இவனால் எப்படி முடிகிறது?+  இவன் தச்சன்தானே?+ இவன் மரியாளின் மகன்தானே?+ யாக்கோபு,+ யோசே, யூதாஸ், சீமோன் என்பவர்களுடைய சகோதரன்தானே?+ இவனுடைய சகோதரிகளும் நம்முடைய ஊரில்தானே இருக்கிறார்கள்?” என்று சொல்லி அவர்மேல் விசுவாசம் வைக்க மறுத்தார்கள்.  அப்போது இயேசு அவர்களிடம், “ஒரு தீர்க்கதரிசிக்கு மற்ற இடங்களிலெல்லாம் மதிப்புக் கிடைக்கிறது, ஆனால் அவருடைய ஊரிலும் உறவிலும் வீட்டிலும் மதிப்புக் கிடைப்பதில்லை”+ என்று சொன்னார்.  அதனால், சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து குணமாக்கியதோடு சரி, வேறெந்த அற்புதத்தையும் அவர் அங்கே செய்யவில்லை.  அவர்கள் விசுவாசம் வைக்காததைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார். பின்பு, அந்த வட்டாரத்தில் ஒவ்வொரு கிராமமாகப் போய்க் கற்பித்தார்.+  அதன் பின்பு, பன்னிரண்டு பேரையும்* கூப்பிட்டு, அவர்களை இரண்டிரண்டு பேராக அனுப்ப ஆரம்பித்தார்;+ பேய்களைத் துரத்தும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.+  அப்போது, பயணத்துக்காக ஒரு தடியைத் தவிர ரொட்டி, உணவுப் பை, காசு* என எதையுமே எடுத்துக்கொண்டு போக வேண்டாம் என்று கட்டளை கொடுத்தார்.+  செருப்புகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இரண்டு உடைகளைக் கொண்டுபோக வேண்டாம்* என்றும்கூட சொன்னார். 10  அதோடு, “நீங்கள் எந்த ஊரிலாவது ஒரு வீட்டுக்குப் போனால், அந்த ஊரைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.+ 11  எந்த ஊர்க்காரர்களாவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது நீங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், அந்த ஊரைவிட்டுப் புறப்படும்போது உங்கள் பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்; இது அவர்களுக்கு ஒரு சாட்சியாக இருக்கும்”+ என்று சொன்னார். 12  அதனால், அவர்கள் புறப்பட்டுப் போய், மனம் திருந்தச் சொல்லி மக்களுக்குப் பிரசங்கித்தார்கள்.+ 13  பல ஆட்களிடமிருந்து பேய்களை விரட்டினார்கள்,+ பல நோயாளிகளுக்கு எண்ணெய் பூசி அவர்களைக் குணமாக்கினார்கள். 14  ஏரோது ராஜா இதைக் கேள்விப்பட்டான்; ஏனென்றால், இயேசுவின் பெயர் எல்லா இடங்களிலும் பிரபலமாகியிருந்தது. மக்களில் சிலர், “யோவான் ஸ்நானகர்தான்* உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்; அதனால்தான், இவரால் அற்புதங்களைச் செய்ய முடிகிறது”+ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். 15  இன்னும் சிலர், “இவர் எலியா” என்று சொன்னார்கள். வேறு சிலரோ, “அந்தக் காலத்திலிருந்த மற்ற தீர்க்கதரிசிகளைப் போல் இவரும் ஒரு தீர்க்கதரிசி”+ என்று சொன்னார்கள். 16  ஆனால் ஏரோது இதைக் கேள்விப்பட்டபோது, “இவர் யோவான்தான்! இவர் தலையை நான் வெட்டினேன்; இப்போது இவர் உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிறார்” என்று சொன்னான். 17  இந்த ஏரோது தன்னுடைய சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தன் மனைவியாக வைத்திருந்தான்.+ 18  “உங்கள் சகோதரனுடைய மனைவியை நீங்கள் வைத்திருப்பது சரியல்ல”+ என்று யோவான் நிறைய தடவை அவனிடம் சொல்லியிருந்தார்; அதனால் ஏரோதியாளைப் பிரியப்படுத்துவதற்காக, ஏரோது ஆள் அனுப்பி யோவானைப் பிடித்து, சங்கிலியால் கட்டி சிறையில் அடைத்திருந்தான். 19  யோவான்மேல் ஏரோதியாள் வன்மம் வைத்திருந்தாள், அவரைக் கொல்லத் துடித்தாள், ஆனால் முடியவில்லை. 20  ஏனென்றால், யோவான் நீதிமான் என்பதும் பரிசுத்தமானவர்+ என்பதும் ஏரோதுவுக்குத் தெரிந்திருந்ததால், அவருக்குப் பயந்து அவரைப் பாதுகாத்து வந்திருந்தான். யோவான் பேசுவதைக் கேட்டபோதெல்லாம் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் குழம்பிப்போயிருந்தான்; ஆனாலும், அவர் பேசுவதை எப்போதும் விருப்பத்தோடு கேட்டு வந்திருந்தான். 21  ஏரோது தன்னுடைய பிறந்தநாளில்+ உயர் அதிகாரிகளுக்கும் படைத் தளபதிகளுக்கும் கலிலேயாவிலிருந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் சாயங்கால விருந்து கொடுத்தபோது,+ ஏரோதியாளுக்குச் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. 22  அப்போது ஏரோதியாளின் மகள் அங்கே வந்து நடனமாடி, ஏரோதுவையும் அவனுடைய விருந்தாளிகளையும் சந்தோஷப்படுத்தினாள். ராஜா அந்தப் பெண்ணிடம், “என்ன வேண்டுமானாலும் கேள், நான் உனக்குத் தருகிறேன்” என்று சொன்னான். 23  “நீ என்ன கேட்டாலும் தருகிறேன், என்னுடைய ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருகிறேன்” என்றும்கூட சத்தியம் செய்து கொடுத்தான். 24  அதனால் அவள் வெளியே போய்த் தன்னுடைய அம்மாவிடம், “நான் என்ன கேட்கட்டும்?” என்றாள். அதற்கு அவள், “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என்று சொன்னாள். 25  உடனே அந்தப் பெண் வேகமாக ராஜாவிடம் போய், “யோவான் ஸ்நானகனின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடுங்கள்”+ என்று சொன்னாள். 26  அதைக் கேட்டு ராஜா மிகவும் துக்கமடைந்தான்; ஆனாலும், விருந்தாளிகள் முன்னால் ஆணையிட்டுக் கொடுத்திருந்ததால் அவள் கேட்டதை மறுக்க முடியவில்லை. 27  அதனால், உடனடியாகத் தன் மெய்க்காவலனை அனுப்பி அவருடைய தலையைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அதன்படியே அந்தக் காவலன் போய், சிறையிலிருந்த யோவானின் தலையை வெட்டி, 28  அதை ஒரு தட்டில் எடுத்துவந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்; அவள் அதைத் தன் அம்மாவிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். 29  யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, அங்கே போய் அவருடைய உடலை எடுத்து ஒரு கல்லறையில்* வைத்தார்கள். 30  பிற்பாடு, அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் வந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும், கற்பித்த எல்லாவற்றையும் பற்றிச் சொன்னார்கள்.+ 31  அப்போது அவர், “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்”+ என்று சொன்னார். ஏனென்றால், நிறைய பேர் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்ததால் சாப்பிடுவதற்குக்கூட அவர்களுக்கு நேரமே கிடைக்கவில்லை. 32  அதனால், அவர்கள் படகில் ஏறி தனிமையான ஓர் இடத்துக்குப் போனார்கள்.+ 33  ஆனால், அவர்கள் போவதை மக்கள் பார்த்துவிட்டார்கள்; நிறைய பேருக்கு விஷயம் தெரியவந்ததால், எல்லா நகரங்களிலிருந்தும் அவர்கள் கூட்டமாக ஓடி, அவர்களுக்கு முன்னால் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 34  அவர் படகிலிருந்து இறங்கியபோது, ஏராளமான மக்கள் அங்கே திரண்டு வந்திருந்ததைப் பார்த்தார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் இருந்ததால்+ அவர் மனம் உருகினார்.+ அதனால், அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.+ 35  ரொம்ப நேரமாகிவிட்டதால் சீஷர்கள் அவரிடம் வந்து, “இது ஒதுக்குப்புறமான இடம், ரொம்ப நேரமும் ஆகிவிட்டது.+ 36  அதனால் இவர்களை அனுப்பிவிடுங்கள், சுற்றியிருக்கிற ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் போய் இவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்”+ என்று சொன்னார்கள். 37  ஆனால் அவர், “நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “நாங்கள் போய் 200 தினாரியுவுக்கு* ரொட்டிகளை வாங்கி வந்து இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா?”+ என்று கேட்டார்கள். 38  அப்போது அவர், “உங்களிடம் எத்தனை ரொட்டிகள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்!” என்று சொன்னார். அவர்கள் பார்த்து வந்து, “ஐந்து ரொட்டிகளும், அதோடு இரண்டு மீன்களும் இருக்கின்றன”+ என்று சொன்னார்கள். 39  அதன் பின்பு, பசும்புல் தரையில் எல்லாரையும் சிறுசிறு கூட்டமாக உட்காரச் சொன்னார்.+ 40  அப்படியே, எல்லாரும் நூறுநூறு பேராகவும் ஐம்பதுஐம்பது பேராகவும் உட்கார்ந்தார்கள். 41  அப்போது, அவர் அந்த ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தைப் பார்த்து, ஜெபம் செய்து,*+ அந்த ரொட்டிகளைப் பிட்டு, அங்கே இருந்தவர்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீஷர்களிடம் கொடுத்தார்; அப்படியே அந்த இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்குபோட்டுக் கொடுத்தார். 42  எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள். 43  மீதியான ரொட்டித் துண்டுகளை 12 கூடைகள் நிறைய அவர்கள் சேகரித்தார்கள், மீதியிருந்த மீன்களையும் சேகரித்தார்கள்.+ 44  ரொட்டி சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை 5,000. 45  பின்பு, கூட்டத்தாரை அவர் அனுப்ப ஆரம்பித்தார்; அதோடு, உடனடியாகப் படகில் ஏறி தனக்கு முன்பே பெத்சாயிதாவை நோக்கி அக்கரைக்குப் போகும்படி சீஷர்களை அனுப்பினார்.+ 46  அவர்களை அனுப்பிய பின்பு, ஜெபம் செய்வதற்காக ஒரு மலைக்குப் போனார்.+ 47  சாயங்கால நேரத்தில், படகு நடுக்கடல்வரை போயிருந்தது, அவரோ அங்கேயே தனியாக இருந்தார்.+ 48  எதிர்க்காற்று வீசியதால் படகை ஓட்ட முடியாமல் சீஷர்கள் திணறினார்கள்; அவர் அதைப் பார்த்து, சுமார் நான்காம் ஜாமத்தில்,* கடல்மேல் நடந்து அவர்களை நோக்கி வந்தார்; ஆனால், அவர்களைக் கடந்துபோவதுபோல் போனார். 49  அவர் கடல்மேல் நடந்து வருவதை அவர்கள் பார்த்தபோது, “ஏதோ மாய உருவம்!” என்று நினைத்து அலறினார்கள். 50  எல்லாருமே அவரைப் பார்த்துக் கலக்கமடைந்தார்கள். உடனே அவர், “தைரியமாக இருங்கள், நான்தான், பயப்படாதீர்கள்”+ என்று சொன்னார். 51  பின்பு அவர்களுடைய படகில் ஏறினார், அப்போது காற்று அடங்கியது. அதைப் பார்த்து அவர்கள் மிகவும் பிரமித்துப்போனார்கள். 52  அற்புதமாய் ரொட்டிகளைக் கொடுத்தவரால் இந்த அற்புதத்தையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய இதயம் மந்தமாகவே இருந்தது. 53  பின்பு, அக்கரையிலுள்ள கெனேசரேத்துக்குப் போய், படகை நங்கூரமிட்டு நிறுத்தினார்கள்.+ 54  அவர்கள் படகிலிருந்து இறங்கியவுடனே மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். 55  அதனால், அந்தப் பகுதியில் இருக்கிற எல்லா இடங்களுக்கும் ஓடிப்போய், நோயாளிகளைப் படுக்கையோடு தூக்கிக்கொண்டு, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் கொண்டுவர ஆரம்பித்தார்கள். 56  நகரங்கள், நாட்டுப்புறங்கள் என அவர் எங்கே போனாலும் அங்கிருந்த சந்தைவெளிகளில் நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய மேலங்கியின் ஓரத்தையாவது தொட அனுமதிக்கும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டார்கள்.+ அப்படித் தொட்ட அத்தனை பேரும் குணமானார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “அப்போஸ்தலர்களையும்.”
நே.மொ., “இடுப்புவாரிலுள்ள பணப் பைகளில் செம்புக் காசு.”
வே.வா., “கூடுதலாக ஓர் உடையைப் போட்டுக்கொள்ள வேண்டாம்.”
ஸ்நானகர் என்றால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்.
வே.வா., “நினைவுக் கல்லறையில்.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “ஆசீர்வதித்து.”
அதாவது, “அதிகாலை சுமார் 3 மணியிலிருந்து சுமார் 6 மணிக்கு இடைப்பட்ட சமயத்தில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

தடியும் உணவுப் பையும்
தடியும் உணவுப் பையும்

பழங்காலத்தில் எபிரெயர்கள் தடிகளை அல்லது கம்புகளைப் பயன்படுத்துவது சகஜமாக இருந்தது. பல காரணங்களுக்காக அவர்கள் தடிகளைப் பயன்படுத்தினார்கள்; உதாரணமாக, பிடிமானத்துக்கு (யாத் 12:11; சக 8:4; எபி 11:21), தற்காப்புக்கு அல்லது பாதுகாப்புக்கு (2சா 23:21), போரடிப்பதற்கு (ஏசா 28:27) மற்றும் ஒலிவப்பழங்களை உதிர்ப்பதற்கு (உபா 24:20) அவற்றைப் பயன்படுத்தினார்கள். உணவுப் பை பொதுவாகத் தோலால் செய்யப்பட்டிருந்தது. பயணிகளும் மேய்ப்பர்களும் விவசாயிகளும் மற்றவர்களும் அதைத் தங்கள் தோளில் சுமந்துகொண்டு போனார்கள். உணவு, துணிமணி போன்றவற்றை எடுத்துக்கொண்டு போவதற்காக அந்தப் பைகள் பயன்படுத்தப்பட்டன. ஊழியம் செய்வதற்காக இயேசு தன் அப்போஸ்தலர்களை அனுப்பியபோது, பல அறிவுரைகளைக் கொடுத்தார். அப்போது, தடிகளையும் உணவுப் பைகளையும் பற்றிக் குறிப்பிட்டார். யெகோவா அவர்களுக்குத் தேவையானதைத் தருவார் என்பதால், தங்களிடம் இருப்பதை மட்டும் கொண்டு போக வேண்டும் என்றும், எதையும் கூடுதலாக வாங்கிக்கொண்டு போகக் கூடாது என்றும் அவர் சொன்னார்.—இயேசு கொடுத்த அறிவுரைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள லூ 9:3 மற்றும் 10:4-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

கூடைகள்
கூடைகள்

பைபிளில், வித்தியாசப்பட்ட பல கூடைகளைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட 12 கூடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்ன பிரம்புக் கூடைகளைக் குறிக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட ஏழு கூடைகளுக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற் 8:8, 9) அது பெரிய கூடைகளைக் குறிக்கிறது. அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.

சந்தை
சந்தை

இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.