Skip to content

மகா பாபிலோன் என்றால் என்ன?

மகா பாபிலோன் என்றால் என்ன?

பைபிள் தரும் பதில்

 வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற மகா பாபிலோன் உலகம் முழுவதும் இருக்கிற எல்லா பொய் மதங்களையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. இந்தப் பொய் மதங்களைக் கடவுள் ஏற்றுக்கொள்வதே இல்லை. a (வெளிப்படுத்துதல் 14:8; 17:5; 18:21) இந்த மதங்களுக்குள் நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும், ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. இந்த மதங்கள் எல்லாமே உண்மைக் கடவுளான யெகோவாவைத் தெரிந்துகொள்வதற்கும் அவரை வணங்குவதற்கும் மக்களுக்குத் தடையாக இருக்கின்றன.—உபாகமம் 4:35.

மகா பாபிலோன் யார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

  1.   மகா பாபிலோன் ஒரு அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பைபிள் இதை ‘ஒரு பெண்ணாகவும்’ ‘பேர்போன விபச்சாரியாகவும்’ சொல்கிறது. இந்தப் பெண்ணுக்கு ‘மகா பாபிலோன் . . . என்ற மர்மப் பெயரும்’ இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1, 3, 5) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற விஷயங்கள் எல்லாமே “அடையாளங்கள் மூலம்” சொல்லப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 1:1) அப்படியென்றால், இந்த மகா பாபிலோனும் நிஜமான ஒரு பெண்ணைக் குறிக்கவில்லை, ஒரு அடையாளமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வரலாம். அதுமட்டுமல்ல, இந்தப் பெண் ‘திரளான தண்ணீர்மேல் உட்கார்ந்திருப்பதாக’ சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் தண்ணீர் “இனங்களையும் சமுதாயங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களைக் குறிக்கிறது.” (வெளிப்படுத்துதல் 17:1, 15) ஆனால், உண்மையிலேயே ஒரு பெண்ணால் இப்படிச் செய்ய முடியாது.

  2.   மகா பாபிலோன் உலகளாவிய ஒரு அமைப்பைக் குறிக்கிறது. ‘பூமியின் ராஜாக்கள்மீது ஆட்சி செய்கிற மகா நகரம்’ என்று அவள் அழைக்கப்படுகிறாள். (வெளிப்படுத்துதல் 17:18) அப்படியென்றால், உலகளவில் அவளுக்குப் பலமான செல்வாக்கு இருக்கிறது.

  3.   மகா பாபிலோன் ஒரு அரசியல் அமைப்போ வர்த்தக அமைப்போ இல்லை, அது ஒரு மத அமைப்பு. பூர்வ பாபிலோன் நகரத்தில் “மாயமந்திரங்களையும் சூனியங்களையும்” செய்கிற ஏராளமான மதங்கள் இருந்தன. (ஏசாயா 47:1, 12, 13; எரேமியா 50:1, 2, 38) சொல்லப்போனால், உண்மையான கடவுளான யெகோவாவுக்கு எதிராகச் செயல்பட்ட பொய் மதங்கள் அங்கு இருந்தன. (ஆதியாகமம் 10:8, 9; 11:2-4, 8) பாபிலோனை ஆட்சி செய்தவர்கள் அகம்பாவத்தோடு தங்களையே பெரிய ஆட்களாக நினைத்துக்கொண்டார்கள். யெகோவாவையும் அவருடைய வணக்கத்தையும் சுத்தமாக மதிக்கவே இல்லை. (ஏசாயா 14:4, 13, 14; தானியேல் 5:2-4, 23) அதுமட்டுமல்ல, மகா பாபிலோன் ‘ஆவியுலகத் தொடர்பு பழக்கங்களுக்கு’ பேர்போனதாக இருந்தது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மகா பாபிலோன் ஒரு மத அமைப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது.—வெளிப்படுத்துதல் 18:23.

     மகா பாபிலோன் ஒரு அரசியல் அமைப்பாக இருக்க முடியாது. ஏனென்றால், “பூமியின் ராஜாக்கள்” அவளுடைய அழிவைப் பார்த்து துக்கப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 17:1, 2; 18:9) அதேசமயத்தில், அவள் ஒரு வர்த்தக அமைப்பாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், “உலகத்தில் இருக்கிற வியாபாரிகளும்” அவளுக்காகத் துக்கப்பட்டு அழுவார்கள் என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 18:11, 15.

  4. பாபிலோன் ராஜாவான நபோனிடஸும் சின், இஷ்டார் மற்றும் ஷாமாஷ் என்ற மும்மூர்த்திகளின் சின்னங்களும் இருக்கிற ஒரு கல்வெட்டு

      மகா பாபிலோனைப் பற்றி சொல்லியிருக்கிற விஷயங்கள் எல்லாம் பொய் மதங்களுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. பொய் மதங்கள் உண்மைக் கடவுளான யெகோவாவிடம் நெருங்கி வர மக்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, பொய் கடவுள்களை வணங்குவதற்குத்தான் மக்களைத் தூண்டுகிறது. இதைக் கடவுளுக்கு செய்கிற ‘துரோகமாக’ பைபிள் சொல்கிறது. (லேவியராகமம் 20:6; யாத்திராகமம் 34:15, 16, அடிக்குறிப்பு) திரித்துவம், அழியாத ஆத்துமா போன்ற நம்பிக்கைகள்... சிலைகளை வழிபடுவது போன்ற பழக்கங்கள்... இவை எல்லாமே பூர்வ பாபிலோனில் இருந்தன. இன்றுவரை பொய் மதங்களில் இதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த மதங்கள் கடவுளை வணங்குவதாகச் சொல்லிக்கொண்டு உலகத்தோடும் நட்பு வைத்திருக்கின்றன. இப்படி கடவுளுக்கு உண்மையாக இல்லாமல் அவருக்குத் துரோகம் செய்வதை விபச்சாரத்துக்குச் சமமாக பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 4:4.

     மகா பாபிலோன் ‘ஊதா நிறத்திலும் கருஞ்சிவப்பு நிறத்திலும் உடை உடுத்தி, தங்கத்தாலும் ரத்தினங்களாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதாக’ பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 17:4) இதில் சொல்லியிருப்பது பொய் மதங்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. பொய் மதங்கள் செல்வச்செழிப்போடு இருக்கின்றன, அவற்றின் செல்வச்செழிப்பைப் பகட்டாகக் காட்டிக்கொள்கின்றன. அதோடு, “பூமியில் இருக்கிற அருவருப்புகளுக்கும்” அதாவது கடவுளை அவமதிக்கிற போதனைகள் செயல்கள் எல்லாவற்றுக்கும், முக்கியக் காரணமாக இருப்பது மகா பாபிலோன்தான். (வெளிப்படுத்துதல் 17:5) எல்லா “இனங்களையும் சமுதாயங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த” பொய் மத உறுப்பினர்கள் இந்த மகா பாபிலோனுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 17:15.

 “பூமியில் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்ட எல்லாருடைய” சாவுக்கும் மகா பாபிலோன்தான் பொறுப்பு. (வெளிப்படுத்துதல் 18:24) பொய் மதங்கள் காலங்காலமாக போர்களையும், தீவிரவாதத்தையும் தூண்டிவிட்டிருப்பது மட்டுமல்லாமல் அன்பான கடவுளான யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கவும் தவறியிருக்கின்றன. (1 யோவான் 4:8) அதனால், நிறைய பேருடைய இரத்தப்பழிக்கு ஆளாகியிருக்கின்றன. அப்படியென்றால், கடவுளுக்குப் பிரியமாக நடக்க விரும்புகிறவர்கள் பொய் மதத்திலிருந்து பிரிந்து அதைவிட்டு ‘வெளியே வருவது’ எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது.—வெளிப்படுத்துதல் 18:4; 2 கொரிந்தியர் 6:14-17.

aஉண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.