Skip to content

உண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

உண்மை மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது?

பைபிள் தரும் பதில்

 உண்மை மதத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்கும் அதைக் கடைப்பிடிக்காதவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க பைபிள் ஒரு உதாரணத்தைக் கொடுக்கிறது; “அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள். முட்செடியிலிருந்து திராட்சைகளையும், முட்புதரிலிருந்து அத்திகளையும் பறிக்க முடியுமா?” என்று பைபிள் கேட்கிறது. (மத்தேயு 7:16) திராட்சைச் செடி எது, முட்செடி எது என்பதை அவற்றின் கனிகளை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்; அதுபோலவே, உண்மை மதம் எது, பொய் மதம் எது என்பதை அவற்றின் கனிகளை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். பின்வரும் குறிப்புகள் அதற்கு உதவும்.

  1.   உண்மை மதம், பைபிளை அடிப்படையாக வைத்து சத்தியத்தைக் கற்பிக்கிறது, மனித தத்துவங்களை வைத்து அல்ல. (யோவான் 4:24; 17:17) பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பற்றியும், ஆத்துமாவைப் பற்றியும் உள்ள சத்தியங்களை உண்மை மதம் கற்பிக்கிறது. (சங்கீதம் 37:29; ஏசாயா 35:5, 6; எசேக்கியேல் 18:4, தமிழ் O.V.) அதுமட்டுமல்ல, பொய் மதப் போதனைகளை அது வெட்டவெளிச்சமாக்குகிறது.—மத்தேயு 15:9; 23:27, 28.

  2.   உண்மை மதம், கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுகிறது; முக்கியமாக, கடவுளுடைய பெயர் யெகோவா என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. (சங்கீதம் 83:18; ஏசாயா 42:8; யோவான் 17:3, 6) கடவுளை யாரும் புரிந்துகொள்ளவே முடியாது என்றோ, நம் யாரையும் அவர் கண்டுகொள்வது கிடையாது என்றோ கற்றுக்கொடுப்பதில்லை; அதற்குப் பதிலாக, நம்முடன் நெருங்கிய நட்பை வைத்துக்கொள்ள அவர் விரும்புகிறார் என்றுதான் கற்றுக்கொடுக்கிறது.—யாக்கோபு 4:8.

  3.   உண்மை மதம், இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டும்தான் மீட்பு கிடைக்கும் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. (அப்போஸ்தலர் 4:10, 12) உண்மை மதத்தில் இருப்பவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற கடினமாக முயற்சி செய்கிறார்கள்.—யோவான் 13:15; 15:14.

  4.   உண்மை மதம், மனிதர்களுக்கான ஒரே நம்பிக்கை கடவுளுடைய அரசாங்கம்தான் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. அதன் அங்கத்தினர்கள் அந்த அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் சுறுசுறுப்பாகச் சொல்லிவருகிறார்கள்.—மத்தேயு 10:7; 24:14.

  5.   உண்மை மதம், சுயநலமற்ற அன்பைக் காட்டச் சொல்லி உற்சாகப்படுத்துகிறது. (யோவான் 13:35) எல்லா தேசத்தாருக்கும் மதிப்பு மரியாதை காட்டும்படி கற்பிக்கிறது; இனம், கலாச்சாரம், மொழி, பின்னணி என எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை. (அப்போஸ்தலர் 10:34, 35) உண்மை மதத்தின் அங்கத்தினர்கள் அன்பு காட்டத் தூண்டப்படுவதால், அவர்கள் போரில் கலந்துகொள்வதில்லை.—மீகா 4:3; 1 யோவான் 3:11, 12.

  6.   உண்மை மதம், சம்பளத்துக்கு போதகர்களை வைத்துக்கொள்வதில்லை. அதன் அங்கத்தினரில் யாருக்கும் பெரிய பெரிய மதப் பட்டப்பெயர்கள் கொடுக்கப்படுவதில்லை.—மத்தேயு 23:8-12; 1 பேதுரு 5:2, 3.

  7.   உண்மை மதம், அரசியல் விவகாரங்களில் முழுக்க முழுக்க நடுநிலைமை வகிக்கிறது. (யோவான் 17:16; 18:36) என்றாலும், அதன் அங்கத்தினர்கள் தாங்கள் வாழ்கிற நாட்டின் அரசாங்கத்திற்கு மதிப்பு மரியாதை காட்டுகிறார்கள்; “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற பைபிளின் கட்டளைக்கு இசைவாக நடக்கிறார்கள்.—மாற்கு 12:17; ரோமர் 13:1, 2.

  8.   உண்மை மதம், ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது; அது வெறும் சடங்கோ சம்பிரதாயமோ கிடையாது. அதன் அங்கத்தினர்கள் தங்களுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பைபிளுடைய உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். (எபேசியர் 5:3-5; 1 யோவான் 3:18) அப்படிக் கடைப்பிடிப்பதால், அவர்களுடைய சந்தோஷம் பறிபோய்விடுவதில்லை. ஏனென்றால், அவர்கள் ‘சந்தோஷமுள்ள கடவுளை’ வணங்குகிறார்கள், சந்தோஷமாக இருக்கிறார்கள்!1 தீமோத்தேயு 1:11.

  9.   உண்மை மதத்தைக் கொஞ்சம் பேர்தான் பின்பற்றுவார்கள். (மத்தேயு 7:13, 14) அவர்கள் அடிக்கடி மட்டம்தட்டிப் பேசப்படுகிறார்கள், கேலி செய்யப்படுகிறார்கள், கடவுளுடைய விருப்பத்தின்படி நடப்பதற்காகத் துன்புறுத்தப்படுகிறார்கள்.—மத்தேயு 5:10-12.

‘எனக்கு எந்த மதம் பிடிச்சிருக்கோ அதுதான் உண்மையான மதம்’ என்று சொல்ல முடியுமா?

 மக்கள் ‘தங்கள் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும் விஷயங்களைக் கேட்பதற்காக, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தங்களுக்கென்று [மத] போதகர்களைச் சேர்த்துக்கொள்ளும்’ காலம் வருமென்று பைபிள் சொல்லியிருக்கிறது. அதனால், நமக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு மதத்தைக் கடைப்பிடிக்க நினைப்பது ஆபத்தானது. (2 தீமோத்தேயு 4:3) ‘நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமாகவும், களங்கமில்லாமலும் இருக்கிற மதத்தை’ மக்கள் விரும்பவில்லை என்றாலும், அதைக் கடைப்பிடிக்கும்படியே பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—யாக்கோபு 1:27, அடிக்குறிப்பு; யோவான் 15:18, 19.