Skip to content

இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?

இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?

பைபிள் தரும் பதில்

 இயேசு தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்ததன் மூலம், கடவுள்பயமுள்ள மனிதர்களை இரட்சித்தார். (மத்தேயு 20:28) அதனால்தான், அவரை ‘உலகத்தின் மீட்பர்,’ அதாவது இரட்சகர், என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:14) “அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை; ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றும் பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 4:12.

 தன்மேல் விசுவாசம் வைக்கிற எல்லாருக்காகவும் இயேசு ‘மரணமடைந்தார்.’ (எபிரெயர் 2:9; யோவான் 3:16) ஆனாலும், “கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.” அதற்குப் பிறகு, இயேசு ஆவி உடலில் பரலோகத்துக்குப் போனார். (அப்போஸ்தலர் 3:15) அதனால், “தன் மூலம் கடவுளை அணுகுகிற ஆட்களை முழுமையாக மீட்பதற்கு [இயேசு] வல்லவராக இருக்கிறார். ஏனென்றால், அவர்களுக்காகப் பரிந்து பேச அவர் எப்போதும் உயிரோடு இருக்கிறார்.”—எபிரெயர் 7:25.

நமக்காக இயேசு ஏன் பரிந்து பேச வேண்டியிருக்கிறது?

 நாம் எல்லாரும் பாவம் செய்கிறவர்கள். (ரோமர் 3:23) கடவுளிடம் நாம் நெருங்கிப் போவதற்குப் பாவம் தடையாக இருக்கிறது. அதோடு, இந்தப் பாவத்தினால் நமக்கு மரணமும் வருகிறது. (ரோமர் 6:23) ஆனால், தன்னுடைய மீட்புப் பலியில் விசுவாசம் வைக்கிறவர்கள் சார்பாக இயேசு ஒரு “வழக்கறிஞராக” செயல்படுகிறார். (1 யோவான் 2:1, அடிக்குறிப்பு) அவர்களுடைய ஜெபத்தைக் கேட்கும்படியும் தன்னுடைய மீட்புப் பலியின் அடிப்படையில் அவர்களுடைய பாவத்தை மன்னிக்கும்படியும் கடவுளிடம் அவர் பரிந்து பேசுகிறார். (மத்தேயு 1:21; ரோமர் 8:34) அவர் பரிந்து பேசுகிற விஷயங்களைக் கடவுள் கேட்டு அதற்குப் பதில் கொடுக்கிறார். ஏனென்றால், அந்த விஷயங்கள் கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்கின்றன. இயேசு மூலமாக “இந்த உலகத்தை . . . மீட்பதற்கே” அவரைக் கடவுள் இந்தப் பூமிக்கு அனுப்பினார்.—யோவான் 3:17.

இரட்சிக்கப்படுவதற்கு இயேசுமேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா?

 நாம் இரட்சிக்கப்படுவதற்கு இயேசுமேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அது மட்டும் போதாது. (அப்போஸ்தலர் 16:30, 31) “உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பதுபோல், செயல்கள் இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:26) அப்படியென்றால், நாம் இரட்சிக்கப்படுவதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும்:

  •   இயேசுவைப் பற்றியும், அவருடைய தகப்பனான யெகோவாவைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.—யோவான் 17:3.

  •   அவர்கள்மேல் விசுவாசம் வைக்க வேண்டும்.—யோவான் 12:44; 14:1.

  •   அவர்கள் கொடுக்கிற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக நம்முடைய விசுவாசத்தைச் செயலில் காட்ட வேண்டும். (லூக்கா 6:46; 1 யோவான் 2:17) தன்னை “கர்த்தாவே” என்று கூப்பிடுகிற எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று இயேசு சொல்லவில்லை. பரலோகத்தில் இருக்கிற, தன் “தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான்” இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.—மத்தேயு 7:21.

  •   எவ்வளவு கஷ்டம் வந்தாலும் விசுவாசத்தைத் தொடர்ந்து செயலில் காட்ட வேண்டும். “முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்,” அதாவது இரட்சிக்கப்படுவார் என்று இயேசு ரொம்பத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.—மத்தேயு 24:13.