Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள்!

ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள்!
  • பிறந்த வருடம்ச: 1950

  • சொந்த நாடு: ஸ்பெயின்

  • முன்பு: கத்தோலிக்க கன்னியாஸ்திரீ

என் கடந்த காலம்:

நான் தென்மேற்கு ஸ்பெயினிலுள்ள கலிஸியா என்ற கிராமத்தில் பிறந்தேன். எங்களுக்குச் சொந்தமாக ஒரு சிறிய பண்ணை இருந்தது. எட்டு பிள்ளைகளில், நான் நான்காவது. எங்கள் வீடு எப்போதும் கலகலவென இருக்கும். குடும்பத்திலுள்ள ஒரு பிள்ளையாவது பாதரியாராகவோ கன்னியாஸ்திரீயாகவோ ஆவது அப்போது ஸ்பெயினில் வழக்கமாக இருந்தது. எங்கள் வீட்டில், நாங்கள் மூன்று பேர் அந்தத் தீர்மானத்தை எடுத்தோம்.

மாட்ரிட்டிலுள்ள ஒரு கன்னியாஸ்திரீ மடத்தில் என் அக்கா இருந்தார். எனக்கு 13 வயதாக இருந்தபோது நானும் அதில் போய் சேர்ந்தேன். அங்கே எல்லோரும் பட்டும்படாமல்தான் பழகினார்கள். எதற்கெடுத்தாலும் சட்டம், கட்டுப்பாடு, ஜெபங்கள் என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். தியானிப்பதற்காக விடியற்காலையில் நாங்கள் எல்லோரும் ஜெப கூடத்தில் கூடுவோம், நிறைய சமயம் நான் எதையுமே தியானிக்காமல் இருப்பேன். பிறகு, லத்தீன் மொழியில் பக்தி பாடல்களைப் பாடுவோம், பூசைகளும் லத்தீனிலேயே நடக்கும். எனக்கு எதுவுமே புரியாது. கடவுள் என்னிடமிருந்து ரொம்ப தூரத்தில் இருப்பதாக உணர்ந்தேன். அங்கே நாட்கள் மௌனமாகவே கரைந்தன. என் அக்காவைப் பார்த்தால் பேசக்கூட முடியாது; “தூய மரியே வாழ்க” என்றுதான் சொல்ல முடியும். உணவுக்குப் பின் அரைமணி நேரம் மட்டுமே மற்றவர்களோடு பேச, கன்னியாஸ்திரீகள் அனுமதி கொடுத்தார்கள். எங்கள் வீட்டில் சந்தோஷமாக இறக்கைக்கட்டி பறந்த நான், இங்கே தனிமையில் வாடினேன், அடிக்கடி கண்ணீர்விட்டு அழுதேன்.

கடவுளிடம் எந்தவொரு நெருக்கமும் இல்லாவிட்டாலும் 17 வயதில் நான் ஒரு கன்னியாஸ்திரீயாக ஆனேன். கன்னியாஸ்திரீயாக என்னிடம் எதிர்பார்த்ததை எல்லாம் நான் செய்தாலும் ‘கடவுள்தான் என்னை தேர்ந்தெடுத்தாரா?’ என்ற கேள்வி எனக்கு அடிக்கடி வந்தது. அப்படி யோசிக்கிறவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று அங்கிருந்த கன்னியாஸ்திரீகள் சொல்வார்கள்! இருந்தாலும், அந்தக் கேள்வி என் மனதைவிட்டு நீங்கவே இல்லை. ‘இயேசு ஒருநாளும் தன்னை தனிமைப்படுத்தவில்லையே! மற்றவர்களுக்கு உதவுவதிலும் கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுப்பதிலும்தானே நேரத்தை செலவிட்டார்’ என்று யோசிப்பேன். (மத்தேயு 4:23-25) எனக்கு 20 வயதாக இருந்தபோது கன்னியாஸ்திரீயாக இருப்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். நான் இப்படியே யோசித்துக்கொண்டிருந்ததால், அங்கிருந்து சீக்கிரம் போய்விடும்படி மதர் சுப்பீரியர் சொன்னார். அதனால், நான் அங்கிருந்து வெளியேறினேன். மற்றவர்களையும் நான் மாற்றிவிடுவேனோ என்று அவர் ஒருவேளை யோசித்திருக்கலாம்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்தபோது, அப்பா அம்மா என்னைப் புரிந்து நடந்துகொண்டார்கள். எங்கள் கிராமத்தில் எனக்கு எந்த வேலையும் கிடைக்காததால் ஜெர்மனிக்குக் குடிமாறிச் சென்றேன். அந்தச் சமயத்தில் என் தம்பியும் அங்கு இருந்தான். அங்கிருந்த ஸ்பானியர்களுடைய கம்யூனிஸ தொகுதியில் என் தம்பி ஒரு அங்கத்தினராக இருந்தான். தொழிலாளிகளின் உரிமைக்காகவும் பெண்களின் சம உரிமைக்காகவும் அவர்கள் பாடுபட்டது எனக்குப் பிடித்திருந்தது. அதனால், நானும் ஒரு கம்யூனிஸவாதியாக ஆனேன். பிறகு, அந்தத் தொகுதியில் இருந்த ஒருவரையே திருமணம் செய்துகொண்டேன். கம்யூனிஸ பிரசுரங்களை விநியோகித்தேன், போராட்டங்களில் ஈடுபட்டேன். ஏதோ ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாக நினைத்தேன்.

ஆனால், கம்யூனிஸவாதிகள்மேல் எனக்கிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. ஏனென்றால், அவர்கள் சொன்னதை செய்யவில்லை. முக்கியமாக 1971-ல், அந்தத் தொகுதியின் இளைஞர்கள் ஸ்பானிஷ் தூதரகத்தை எரித்துச் சாம்பலாக்கினதைப் பார்த்தபோது கம்யூனிஸவாதிகள்மேல் எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லாமல் போனது. ஸ்பெயினிலுள்ள சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அவர்கள் போராடினாலும், அவர்களுடைய கோபத்தை அப்படி வெளிக்காட்டியிருக்கக் கூடாது என்று நினைத்தேன்.

என்னுடைய மூத்த மகன் பிறந்த சமயத்தில், நான் இனிமேல் கம்யூனிஸ கூட்டங்களுக்குப் போகப் போவதில்லை என்று என் கணவரிடம் சொன்னேன். என் நண்பர்கள் யாரும் என்னையும் என் குழந்தையையும் வந்து பார்க்காததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். தனிமையில் வாடினேன். ‘இதுதான் வாழ்க்கையா’ என்று யோசிக்க ஆரம்பித்தேன். சமுதாயத்திற்காகப் பாடுபடுவதில் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்று என்னையே கேட்டுக்கொண்டேன்!

பைபிள் என்னை மாற்றிய விதம்:

1976-ல், ஒரு ஸ்பானிய தம்பதி என் வீட்டிற்கு வந்துபோது பைபிள் சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் என்னை மறுபடியும் சந்தித்தபோது கஷ்டங்கள், ஏற்றத்தாழ்வு, அநீதி பற்றியெல்லாம் கேள்விக்குமேல் கேள்வி கேட்டேன். அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள்! அது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!! உடனே, பைபிள் படிப்பு படிக்க ஒத்துக்கொண்டேன்.

ஆரம்பத்தில், ஏதோ விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காக மட்டுமே படித்தேன். ஆனால், நானும் என் கணவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தபோது என்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். அப்போது, எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் எங்களை வீட்டிலிருந்து ராஜ்ய மன்றத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். கூட்டம் நடக்கும்போது எங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டார்கள். அதனால், அவர்களை எனக்கு ரொம்ப பிடித்துப்போனது.

ஆனால், மதத்தைப் பற்றி சில கேள்விகள் எனக்குள் இன்னும் இருந்தன. ஒருசமயம் ஸ்பெயினிலுள்ள என் வீட்டிற்குப் போனேன். பாதிரியாராக இருந்த என் சித்தப்பா, யெகோவாவின் சாட்சிகளோடு நான் பைபிள் படிக்கக் கூடாது என்று சொல்லி என் மனதை மாற்ற நினைத்தார். இருந்தாலும், அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் எனக்கு ரொம்பவே உதவினார்கள். ஜெர்மனியிலிருந்த சாட்சிகளைப் போலவே இவர்களும் என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து பதிலளித்தார்கள். ஜெர்மனிக்குப் போன பின் மறுபடியும் பைபிள் படிப்பைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்தேன். என் கணவர் தொடர்ந்து படிக்காவிட்டாலும் என்னுடைய தீர்மானத்தில் நான் உறுதியாக இருந்தேன். 1978-ல், யெகோவாவின் சாட்சியாக ஞானஸ்நானம் எடுத்தேன்.

நான் பெற்ற பலன்கள்:

பைபிளை ஆழமாகப் படித்தது என் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுத்ததோடு எனக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறது. உதாரணத்திற்கு 1 பேதுரு 3:1-4, “கணவருக்குக் கட்டுப்பட்டு” நடக்கவும் அவருக்கு “ஆழ்ந்த மரியாதையை” காட்டவும் ‘சாந்த குணத்தை’ வளர்த்துக்கொள்ளவும் மனைவிகளுக்கு ஆலோசனை கொடுக்கிறது. இப்படிப்பட்ட பைபிள் ஆலோசனைகள், நல்ல மனைவியாகவும் அம்மாவாகவும் இருக்க எனக்கு உதவியிருக்கிறது.

கடந்த 35 வருடங்களாக நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன். உலகெங்கும் உள்ள சாட்சிகளோடு சேர்ந்து கடவுளைச் சேவிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய ஐந்து பிள்ளைகளில் நான்கு பிள்ளைகள் யெகோவாவைச் சேவிப்பது எனக்கு இன்னும் அதிக சந்தோஷத்தைத் தருகிறது! ▪ (w14-E 04/01)