Skip to content

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“இப்போதெல்லாம் நான் கொடூரமாக நடந்துகொள்வதில்லை”

“இப்போதெல்லாம் நான் கொடூரமாக நடந்துகொள்வதில்லை”
  • பிறந்த வருஷம்: 1973

  • பிறந்த நாடு: உகாண்டா

  • என்னைப் பற்றி: கொடூரமானவனாக இருந்தேன், ஒழுக்கமில்லாமல் நடந்தேன், குடிகாரனாக இருந்தேன்

என் கடந்தகால வாழ்க்கை

 நான் உகாண்டாவில் இருக்கிற கோம்பா மாவட்டத்தில் பிறந்தேன். எங்கள் ஊரில் இருந்த எல்லாரும் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தார்கள். அங்கே மின்சாரம்கூட கிடையாது; ராத்திரியில் மண்ணெண்ணெய் விளக்குகளைத்தான் பயன்படுத்துவோம்.

 என்னுடைய அப்பாவும் அம்மாவும் விவசாயிகள். அவர்கள் ருவாண்டாவில் இருந்து உகாண்டாவுக்கு குடிமாறி வந்திருந்தார்கள். எங்களிடம் காபி மற்றும் வாழை தோட்டம் இருந்தது. வாழைப்பழத்தில் இருந்து ரொம்ப பிரபலமான ஒரு மதுபானத்தை தயாரித்தார்கள். அதன் பெயர் வராகி. அதோடு, கோழி, ஆடு, பன்றி, மாடு போன்றவற்றையும் வளர்த்தார்கள். என்னுடைய கலாச்சாரமும் வளர்ந்த விதமும் எனக்கு சொல்லிக்கொடுத்தது இதுதான்: மனைவி என்பவள் கணவனுக்கு எல்லா சமயத்திலும் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும்; தன்னுடைய கருத்தை தெரிவிக்கவே கூடாது.

 எனக்கு 23 வயதானபோது, நான் ருவாண்டாவுக்கு குடிமாறி போனேன். அங்கே, என்னுடைய வயதில் இருந்த பிள்ளைகளோடு சேர்ந்து கிளப்புகளுக்கு போவேன். ஒரு கிளப்புக்கு அடிக்கடி போனதால், அங்கே இருந்தவர்கள் நான் இலவசமாகவே வருவதற்கு அனுமதி கொடுத்தார்கள். நிறைய சண்டைக் காட்சிகள் வருகிற படங்களை பார்ப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்; அவற்றில் கொடூரமான காட்சிகள் இருக்கும்! என்னை சுற்றியிருந்த விஷயங்களும், நான் பார்த்த பொழுதுபோக்கும் என்னை ஒரு கொடூரமான ஆளாக ஆக்கியது. நான் பயங்கரமான குடிகாரனாக மாறிவிட்டேன். ஒழுக்கங்கெட்ட விஷயங்களையும் செய்ய ஆரம்பித்தேன்.

 2000-ல், நான் ஸ்கொலாஸ்டிக் கபாக்வீரா என்ற ஒரு இளம் பெண்ணோடு வாழ ஆரம்பித்தேன். எங்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். நான் சின்ன வயதில் பார்த்ததை வைத்து அவளிடம் சில விஷயங்களை எதிர்பார்த்தேன். நான் வீட்டுக்கு வரும்போதும் சரி, என்னிடம் ஏதாவது கேட்கும்போதும் சரி, அவள் மண்டி போட்டுத்தான் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அதுமட்டுமல்ல, எங்களிடம் இருந்த சொத்துகள் எல்லாம் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்றும், அதை என்ன வேண்டுமானாலும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டேன். நான் பெரும்பாலும் ராத்திரியில் வீட்டைவிட்டு வெளியே போய்விட்டு, கிட்டத்தட்ட விடியற்காலை மூன்று மணிக்கு வருவேன். அதுவும், பயங்கர போதையில்! கதவை திறக்க ஸ்கொலாஸ்டிக் கொஞ்சம் லேட் ஆக்கினால், அவளை போட்டு உதைப்பேன்.

 ஒரு தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் அப்போது நான் சூப்பர்வைசராக வேலை செய்துகொண்டிருந்தேன். எனக்கு நல்ல சம்பளம். ஸ்கொலாஸ்டிக் பெந்தெகோஸ்தே சர்ச்சுக்கு போய்க்கொண்டிருந்தாள். அவள் என்னையும் சர்ச்சுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்துவாள். இப்படி சர்ச்சுக்கு போனாலாவது நான் மாறுவேனா என்று அவள் பார்த்தாள். ஆனால், எனக்கு அதில் சுத்தமாக ஆர்வமே இல்லை. அந்த சமயத்தில் இன்னொரு பெண்ணோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நான் இப்படி ஒழுக்கம் இல்லாமலும், ஈவு இரக்கம் இல்லாமலும் நடந்துகொண்டதால் ஸ்கொலாஸ்டிக் எங்களுடைய பிள்ளைகளை கூட்டிக்கொண்டு அவளுடைய அப்பா அம்மா வீட்டுக்கு போய்விட்டாள்.

 நான் வாழ்கிற விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று என்னைவிட மூத்த ஒரு நண்பர் எனக்கு எடுத்து சொன்னார். நான் ஸ்கொலாஸ்டிக்கோடு மறுபடியும் சேர்ந்து வாழ்வதுதான் சரி என்று அவர் சொன்னார். அதுமட்டுமல்ல, என்னுடைய அழகான பிள்ளைகள் அப்பா இல்லாமல் வளரக் கூடாது என்றும் சொன்னார். அதனால், 2005-ல் நான் குடிப்பதை நிறுத்தினேன். இன்னொரு பெண்ணோடு இருந்த தொடர்பையும் விட்டுவிட்டேன். பிறகு, ஸ்கொலாஸ்டிக்கிடம் மறுபடியும் போனேன். 2006-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். ஆனாலும், நான் இன்னமும் கொடூரமாகத்தான் நடந்துகொண்டிருந்தேன். மனைவியையும் கொடுமைப்படுத்தினேன்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது

 2008-ல் ஜோயல் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி எங்கள் வீட்டுக்கு வந்தார்; அவர் சொல்வதை நான் கேட்டேன். பல மாதங்களுக்கு அவரும் போனவென்சூர் என்ற இன்னொரு சாட்சியும் என்னை தவறாமல் வந்து பார்த்தார்கள். நாங்கள் பைபிளைப் பற்றி நிறைய பேசினோம். சொல்லப்போனால், காரசாரமாக பேசினோம். நான் நிறைய கேள்விகளை கேட்டேன். குறிப்பாக, வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து கேட்டேன். யெகோவாவின் சாட்சிகள் சொல்வதெல்லாம் தவறு என்று நிரூபிக்க முயற்சி செய்தேன். வெளிப்படுத்துதல் 7:9-ல் இருக்கிற “திரள் கூட்டமான மக்கள்” பூமியில்தான் வாழ்வார்கள் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், “அவர்கள் ‘[கடவுளுடைய] சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்,’ அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் நிற்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறதே, அப்படியிருக்கும்போது அவர்கள் எப்படி பூமியில் இருப்பார்கள்?” என்று கேட்டேன். ஜோயல் பொறுமையாக எனக்கு பதில் சொன்னார். அவர் ஏசாயா 66:1-ஐ எடுத்துக்காட்டி, பூமி கடவுளுடைய கால்மணையாக இருப்பதால் திரள் கூட்டமான மக்கள் கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்பாக, அதாவது பூமியில், நிற்கிறார்கள் என்று சொன்னார். பிறகு, சங்கீதம் 37:29-ல் நீதிமான்கள் பூமியில் என்றென்றைக்கும் வாழ்வார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை பார்த்தேன்.

 கொஞ்ச நாட்களுக்கு பிறகு, நான் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டேன். போனவென்சூர் எனக்கும் ஸ்கொலாஸ்டிக்கும் படிப்பு நடத்தினார். படிக்க படிக்க என் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்தது. என் மனைவியை மதிக்க கற்றுக்கொண்டேன். அவள் என் முன்னால் மண்டி போட வேண்டும் என்று எதிர்பார்ப்பதையும் விட்டுவிட்டேன். எங்களுடைய சொத்துபத்துகளெல்லாம் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்ற எண்ணத்தையும் மாற்றிக்கொண்டேன். வன்முறையான படங்களை பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன். இந்த மாற்றங்களை செய்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை; சுயக்கட்டுப்பாடும் மனத்தாழ்மையும் தேவைப்பட்டது.

ஒரு நல்ல கணவராக இருப்பதற்கு பைபிள் எனக்கு உதவியது

 கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு, எங்களுடைய மூத்த மகனை உகாண்டாவில் இருந்த சொந்தக்காரர்களோடு வாழ்வதற்கு அனுப்பி வைத்திருந்தோம். அவனுடைய பெயர் கிறிஸ்டியன். உபாகமம் 6:4-7-ஐ படித்தபோது, பிள்ளைகளை கவனித்துக்கொள்கிற பொறுப்பு, முக்கியமாக கடவுளைப் பற்றி சொல்லிக்கொடுக்கிற பொறுப்பு, எனக்கும் என்னுடைய மனைவிக்கும்தான் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொண்டேன். அதனால், அவனை மறுபடியும் எங்கள் வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்தோம். அப்படி செய்ததை நினைத்து சந்தோஷப்படுகிறோம்.

எனக்கு கிடைத்த பலன்

 யெகோவா இரக்கமுள்ள கடவுள் என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் முன்பு செய்த தவறுகளையெல்லாம் அவர் கண்டிப்பாக மன்னித்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் பைபிளைப் படித்தபோது, ஸ்கொலாஸ்டிக்கும் என்னோடு சேர்ந்து படித்தாள். டிசம்பர் 4, 2010-ல் நாங்கள் எங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தோம். இப்போது, நாங்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். பைபிள் சொல்கிற மாதிரி சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை நடத்துகிறோம். வேலை முடிந்ததும் நான் நேராக வீட்டுக்குத்தான் வருகிறேன். இப்போதெல்லாம் நான் கொடூரமாக நடந்துகொள்வதில்லை. என் மனைவியை மரியாதையோடு நடத்துகிறேன். மதுபானமும் எடுத்துக்கொள்வதில்லை. இதையெல்லாம் நினைத்து ஸ்கொலாஸ்டிக் ரொம்ப சந்தோஷப்படுகிறாள். 2015-ல் நான் ஒரு மூப்பராக நியமிக்கப்பட்டேன். எங்களுடைய ஐந்து பிள்ளைகளில் மூன்று பேர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டார்கள்.

 நான் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படித்தபோது, அவர்கள் சொல்லிக்கொடுத்த எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பவில்லை. அவர்கள் என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பைபிளிலிருந்து பதில் சொன்னார்கள்; அதுதான் எனக்கு பிடித்திருந்தது. கடவுளுக்கு சேவை செய்கிறவர்கள் கடவுள் சொல்கிற எல்லா விஷயங்களுக்குமே கீழ்ப்படிய வேண்டும் என்றும், அவர்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ... அவர்களுக்கு எது பிடித்திருக்கிறதோ... அதற்கு மட்டும் கீழ்ப்படிந்துவிட்டு மற்ற விஷயங்களை விட்டுவிட கூடாது என்றும் நாங்கள் தெரிந்துகொண்டோம். இது ஸ்கொலாஸ்டிக்கும் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது. யெகோவா என்னை அவர் பக்கம் ஈர்த்திருப்பதற்காக நன்றியோடு இருக்கிறேன். இப்போது அவரை வணங்குகிற குடும்பத்தில் நானும் ஒருவன்! என்னுடைய வாழ்க்கையை நான் திரும்பி பார்க்கும்போது எனக்கு ஒரு உண்மை பளிச்சென்று தெரிகிறது. ஒருவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், மாற வேண்டுமென்ற ஆசை மட்டும் அவருக்கு இருந்தால் போதும், கடவுளுடைய உதவியால் அவரால் கண்டிப்பாக மாற முடியும்!