Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையே வெறுத்துவிட்டதா?

வாழ்க்கையே வெறுத்துவிட்டதா?

எல்லாம் நல்லபடியாகப் போனால் ஆஹா... வாழ்க்கை தேனாகத் தித்திக்கும்! ஆனால், பிரச்சினைகள் இடிபோல் தாக்கினால்? வாழ்க்கையே வேண்டாம் என்று தோன்றும்.

நம்முடைய நிம்மதியைத் தட்டிப்பறிக்கும் பிரச்சினைகளில் ஒன்று இயற்கைப் பேரழிவுகள். அமெரிக்காவில், சாலி * என்ற பெண்ணுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் ஒரு சூறாவளி வாரிக்கொண்டு போய்விட்டது. மனம் உடைந்துபோன அந்தச் சமயத்தைப் பற்றி அவள் சொல்கிறாள்... “‘எல்லாம் முடிஞ்சுபோச்சு, இதுக்கு மேல என்ன நடக்கணும்?’ அப்படின்னு தோணுச்சு. நிறைய சமயம், ‘போதும்டா இந்த வாழ்க்கை’னு நினைச்சேன்.”

பிரியமான ஒருவருடைய இழப்பு இன்னொரு பெரிய இடி என்று சொல்லலாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜானிஸ் என்ற பெண்ணின் வார்த்தைகளில் அந்த வலி தெரிகிறது... “என்னோட ரெண்டு பசங்களயும் அடுத்தடுத்து பறிகொடுத்தப்போ, என் வாழ்க்கை சுக்குநூறா உடைஞ்சு நொறுங்கிடுச்சு. அதுக்கு அப்புறம் வேண்டாவெறுப்போடத்தான் காலத்த தள்ள வேண்டியிருந்துச்சு. ‘கடவுளே, என்னால தாங்கிக்கவே முடியல! என் உயிர எடுத்துடுங்க. எனக்கு வாழவே பிடிக்கல’னு வேண்டிக்கிட்டேன்.”

கணவனோ மனைவியோ துரோகம் செய்வது இன்னொரு பெரிய கொடுமை! டானியல் என்பவருக்கு அந்தக் கொடுமை நடந்தபோது அவர் அப்படியே இடிந்துபோய்விட்டார். “‘நான் உங்களுக்கு துரோகம் செஞ்சிட்டேன்’னு என் மனைவி சொன்னப்போ, ஒரு கத்திய எடுத்து என் நெஞ்ச குத்திக் கிழிச்ச மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்புறம்கூட அடிக்கடி அந்த வலியில துடிச்சேன், அதுவும் எத்தனையோ மாசத்துக்கு!” என்று அவர் மனம்திறந்து சொல்கிறார்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளில்கூட நாம் எப்படிக் கலங்காமல் வாழ்க்கையைத் துணிந்து சந்திக்கலாம் என்று உள்ளே படித்துப் பாருங்கள்.

முதலில், பேரழிவு என்ற இடியை எப்படித் தாங்கிக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

^ இந்தக் கட்டுரைகளில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.