Skip to content

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

நாள்பட்ட வியாதியோடு போராட்டம்—பைபிள் உதவுமா?

பைபிள் தரும் பதில்

 ஆம், உதவும். வியாதிப்பட்டிருக்கிற தன் ஊழியர்கள்மீது கடவுள் அக்கறையோடு இருக்கிறார். விசுவாசமிக்க ஒரு ஊழியரைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவன் சுகமில்லாமல் படுத்துக் கிடக்கும்போது யெகோவா அவனைத் தாங்குவார்.” (சங்கீதம் 41:3) நாள்பட்ட வியாதியோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தால், அதைச் சமாளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று படிகள் உங்களுக்கு உதவலாம்:

  1.   சகித்திருக்க பலம் கேட்டு ஜெபம் செய்யுங்கள். அப்படிச் செய்தால், “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” உங்களுக்குக் கிடைக்கும், அதன் விளைவாக உங்கள் கவலை தணியும், தொடர்ந்து சகிக்க பலம் கிடைக்கும்.—பிலிப்பியர் 4:6, 7.

  2.   நம்பிக்கையான மனநிலையோடு இருங்கள். “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து. ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.” (நீதிமொழிகள் 17:22) நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள்; அப்படிச் செய்வது மனபாரத்தைக் குறைப்பதோடு, உங்களுடைய உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவலாம்.

  3.   எதிர்கால நம்பிக்கையைப் பலமாக்குங்கள். நாள்பட்ட வியாதியோடு நீங்கள் போராடிக்கொண்டிருந்தாலும், பலமான நம்பிக்கை இருந்தால், சந்தோஷமாக இருப்பீர்கள். (ரோமர் 12:12) சீக்கிரத்தில் ஒரு காலம் வரும், அப்போது “‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்” என்று பைபிள் முன்னறிவிக்கிறது. (ஏசாயா 33:24) அந்தச் சமயத்தில் கடவுள் எல்லா விதமான வியாதிகளையும் குணமாக்குவார்; நவீன மருத்துவத் துறையால் குணமாக்க முடியாத நாள்பட்ட வியாதிகள் எல்லாவற்றையும் குணமாக்கிவிடுவார். உதாரணமாக, வயதானவர்கள் திரும்ப இளமைக்குத் திரும்புவதைப் பற்றி பைபிள் இப்படி விவரிக்கிறது: “அவனுடைய உடல் இளமையில் இருந்ததைவிட ஆரோக்கியம் அடையும். அவன் மறுபடியும் இளமைத் துடிப்போடு வாழ்வான்.”—யோபு 33:25.

 உங்கள் கவனத்திற்கு: கடவுள் உதவி செய்வார் என்பதை யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் நம்பினாலும், நாள்பட்ட வியாதிகளுக்கு மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொள்கிறோம். (மாற்கு 2:17) ஆனாலும், குறிப்பிட்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரை செய்வதில்லை; இப்படிப்பட்ட விஷயங்களில் அவரவர் சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.