Skip to content

தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டுவர பைபிள் எனக்கு உதவுமா?

தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டுவர பைபிள் எனக்கு உதவுமா?

பைபிள் தரும் பதில்

 கண்டிப்பாக உதவும்! “சோர்ந்துபோனவர்களை ஆறுதல்படுத்துகிற கடவுள்” கொடுத்திருக்கும் புத்தகம்தான் பைபிள். (2 கொரிந்தியர் 7:6) அது ஏதோவொரு மனநல புத்தகம் கிடையாதுதான். ஆனாலும், தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டுவர அது நிறைய பேருக்கு உதவியிருக்கிறது. பைபிள் தரும் ஆலோசனைகள் உங்களுக்கும் நிச்சயம் உதவும்!

 பைபிள் என்ன ஆலோசனைகளைத் தருகிறது?

  • மனம்விட்டுப் பேசுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

     அர்த்தம்: நிம்மதி இல்லாமல் நம் மனம் தவிக்கும்போது மற்றவர்களுடைய உதவி நமக்குத் தேவை.

     கவலைகளை உங்கள் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்தால் உங்கள் மனம் பாரமாகிவிடும். அதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். ஆனால், யாரிடமாவது மனம்விட்டுப் பேசும்போது பாரம் குறைய ஆரம்பிக்கலாம். சொல்லப்போனால், உங்கள் மனதில் நம்பிக்கையும் துளிர்விட ஆரம்பிக்கலாம்.

     இப்படிச் செய்து பாருங்கள்: உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவரிடம் அல்லது நம்பகமான ஒரு நண்பரிடம் இன்று பேசிப் பாருங்கள். a உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் நீங்கள் எழுதியும் வைக்கலாம்.

  • மருத்துவ உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.”—மத்தேயு 9:12.

     அர்த்தம்: உடல்நலம் சரியில்லாதபோது நாம் மருத்துவர்களைப் போய்ப் பார்க்க வேண்டும்.

     சிலசமயம், மனநிலை சரியில்லாததுதான் தற்கொலை எண்ணம் வருவதற்கான காரணமாக இருக்கிறது. நமக்கு உடம்பு சரியில்லாமல் போவது போலத்தான் மனதும் சரியில்லாமல் போய்விடுகிறது. இதை நினைத்து வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. மனநல பிரச்சினைகளுக்கு சிகிச்சை இருக்கிறது, அவற்றைச் சரிசெய்யவும் முடியும்.

     இப்படிச் செய்து பாருங்கள்: முடிந்தளவுக்குச் சீக்கிரமாக ஒரு நல்ல டாக்டரைப் போய்ப் பாருங்கள்.

  • கடவுள் உங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.

     பைபிள் ஆலோசனை: “குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட கடவுள் மறப்பதில்லை. . . . பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.”—லூக்கா 12:6, 7.

     அர்த்தம்: கடவுளுக்கு நீங்கள் மதிப்புள்ளவர்கள்.

     உங்களுக்கென்று யாருமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் படுகிற கஷ்டத்தையெல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார், உங்கள் வேதனைகளை அவர் புரிந்துகொள்கிறார். உங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை என்றாலும்கூட கடவுள் உங்கள்மேல் அன்பும் அக்கறையும் காட்டுகிறார். “கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும் நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்” என்று சங்கீதம் 51:17 சொல்கிறது. கடவுள் உங்களை ரொம்ப நேசிப்பதால், நீங்கள் வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறார்.

     இப்படிச் செய்து பாருங்கள்: கடவுள் உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது என்று பைபிளில் தேடிப் பாருங்கள். உதாரணத்துக்கு, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தில் 24-ஆம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள்.

  • கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

     அர்த்தம்: உங்கள் மனதில் இருக்கும் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் தன்னிடம் கொட்டும்படி கடவுள் சொல்கிறார்.

     மனதார தன்னிடம் உதவி கேட்கிறவர்களைக் கடவுள் ஆதரிப்பார். (சங்கீதம் 55:22) எப்படி? அவர் மன சமாதானத்தைக் கொடுப்பார், சூழ்நிலையை சமாளிப்பதற்கான பலத்தையும் கொடுப்பார்.—பிலிப்பியர் 4:6, 7, 13.

     இப்படிச் செய்து பாருங்கள்: இன்று கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள். யெகோவா என்ற அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள், உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் அவரிடம் சொல்லுங்கள். (சங்கீதம் 83:18) துவண்டுவிடாமல் இருப்பதற்கு அவரிடம் உதவி கேளுங்கள்.

  • எதிர்காலத்தைப் பற்றி பைபிள் தரும் நம்பிக்கையை யோசித்துப் பாருங்கள்.

     பைபிள் ஆலோசனை: “அந்த நம்பிக்கை நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது.”—எபிரெயர் 6:19.

     அர்த்தம்: புயலில் சிக்கிய கப்பலைப் போல உணர்ச்சிகள் உங்களை அலைக்கழிக்கலாம். ஆனால் பைபிள் தரும் நம்பிக்கை, நிலைதடுமாறாதபடி உங்களைத் தாங்கிப் பிடிக்கும்.

     இந்த நம்பிக்கை வெறும் கற்பனைக் கோட்டை கிடையாது. இது கடவுளே கொடுத்திருக்கும் வாக்குறுதி. நம்முடைய வலியையும் வேதனையையும் அவர் சீக்கிரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்போகிறார்.—வெளிப்படுத்துதல் 21:4.

     இப்படிச் செய்து பாருங்கள்: பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! என்ற சிறு புத்தகத்தில் பாடம் 5-ஐப் படித்துப் பாருங்கள்.

  • உங்களுக்குப் பிடித்த எதையாவது செய்யுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து.”—நீதிமொழிகள் 17:22.

     அர்த்தம்: நமக்கு சந்தோஷத்தைத் தரும் எதையாவது செய்யும்போது நம் மனநிலை மாறலாம்.

     இப்படிச் செய்து பாருங்கள்: உங்களுக்குப் பொதுவாக என்ன செய்ய பிடிக்குமோ அதைச் செய்யுங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் இசையைக் கேட்கலாம், உங்கள் மனதுக்கு இதமாக இருக்கும் எதையாவது படிக்கலாம், அல்லது உங்களுக்கு விருப்பமான வேறு எதையாவது செய்யலாம். அதோடு, மற்றவர்களுக்கு உதவிகள் செய்வது, அது சின்னச் சின்ன உதவியாக இருந்தாலும்கூட, உங்களுக்கு நிறைய சந்தோஷத்தைக் கொடுக்கும்.—அப்போஸ்தலர் 20:35.

  • உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

     பைபிள் ஆலோசனை: “உடற்பயிற்சி . . . நன்மை தரும்.”—1 தீமோத்தேயு 4:8.

     அர்த்தம்: ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், நன்றாகத் தூங்க வேண்டும், சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்.

     இப்படிச் செய்து பாருங்கள்: வெளியே போய் 15 நிமிஷத்துக்காவது விறுவிறுப்பாக நடந்துவிட்டு வாருங்கள்.

  • நம் உணர்ச்சிகளும் சூழ்நிலைகளும் மாறும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

     பைபிள் ஆலோசனை: “நாளைக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியாது.”—யாக்கோபு 4:14.

     அர்த்தம்: ஒரு பிரச்சினை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, கைமீறிப்போய்விட்டதாக உங்களுக்குத் தோன்றினாலும் சரி, அது தற்காலிகமானதுதான்.

     இன்று உங்கள் வாழ்க்கை இருண்டுகிடப்பதுபோல் தோன்றலாம், ஆனால் நாளைக்கே வெளிச்சம் தெரியலாம். அதனால், பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கலாம் என்று யோசியுங்கள். (2 கொரிந்தியர் 4:8) உங்கள் பிரச்சினைகள் காலப்போக்கில் காணாமல்போய்விடலாம், ஆனால் உங்கள் உயிர் போய்விட்டால் அது திரும்பி வருமா?

     இப்படிச் செய்து பாருங்கள்: சோர்வின் உச்சக்கட்டத்துக்கே போனதால் சாக வேண்டுமென்று நினைத்தவர்களைப் பற்றி பைபிளில் படித்துப் பாருங்கள். கடைசியில் அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்றும் பாருங்கள். பெரும்பாலும், அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காத விதத்தில் அது தலைகீழாக மாறியது. இப்போது சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

 சாக வேண்டுமென்று நினைத்தவர்களைப் பற்றி பைபிள் சொல்கிறதா?

 ஆம், சொல்கிறது. ‘செத்தால் போதும்!’ என்று அவர்கள் நினைத்தார்கள். அப்படி நினைத்ததற்காகக் கடவுள் அவர்களைத் திட்டவில்லை, உதவிதான் செய்தார். உங்களுக்கும் அவர் உதவி செய்வார்.

எலியா

  •  அவர் யார்? எலியா ஒரு தீர்க்கதரிசி, ரொம்பத் தைரியமானவர். ஆனால், அவருக்கும் சோர்வு வந்தது. “நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன” என்று யாக்கோபு 5:17 சொல்கிறது.

  •  அவர் ஏன் சாக நினைத்தார்? ஒரு சமயத்தில் எலியா பயத்தில் துவண்டுபோனார், தன்னந்தனியாக இருப்பதாக நினைத்தார், தான் எதற்கும் லாயக்கில்லாதவர் என்றுகூட யோசித்தார். அதனால், “யெகோவாவே! என் உயிரை எடுத்துவிடுங்கள்” என்று கெஞ்சினார்.—1 ராஜாக்கள் 19:4.

  •  அவருக்கு எது உதவியது? எலியா தன் மனதில் இருப்பதையெல்லாம் கடவுளிடம் கொட்டினார். கடவுள் எப்படி அவருக்கு உதவினார்? எலியாமேல் கடவுள் அக்கறை காட்டினார். தனக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று காட்டினார். எலியாவின் சேவை தனக்குத் தேவை என்று உறுதியளித்தார். அதோடு, எலியாவுக்கு உதவியாக இருப்பதற்காக அக்கறையுள்ள, திறமையுள்ள ஒருவரைத் தந்தார்.

  •  எலியாவைப் பற்றிப் படித்துப் பாருங்கள்: 1 ராஜாக்கள் 19:2-18.

யோபு

  •   அவர் யார்? யோபு ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு பெரிய குடும்பமும் இருந்தது. கடவுளை ரொம்ப பக்தியோடு வணங்கிவந்தார்.

  •   அவர் ஏன் சாக நினைத்தார்? யோபுவின் வாழ்க்கை திடீரென்று சின்னபின்னமாகிவிட்டது. அவருடைய சொத்துபத்தெல்லாம் அழிந்துவிட்டது. ஒரு அசம்பாவிதத்தில் ஒரே நாளில் அவருடைய எல்லா பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். அதன் பிறகு அவருக்குக் கொடுமையான ஒரு வியாதி வந்தது. போதாக்குறைக்கு, அவருடைய நண்பர்கள் ஈவிரக்கம் இல்லாமல் அவருடைய மனதை நோகடித்தார்கள். அவருடைய பிரச்சினைக்கெல்லாம் காரணம் அவர்தான் என்று சொல்லி அபாண்டமாகப் பழிசுமத்தினார்கள். அதனால் யோபு, “எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது; உயிரோடு இருக்கவே பிடிக்கவில்லை” என்று சொன்னார்.—யோபு 7:16.

  •   அவருக்கு எது உதவியது? யோபு கடவுளிடம் ஜெபம் செய்தார், மற்றவர்களிடமும் மனம்விட்டுப் பேசினார். (யோபு 10:1-3) எலிகூ என்ற அவருடைய நண்பர் கரிசனையோடு பேசியது யோபுவுக்கு ஆறுதலாக இருந்தது, பிரச்சினையை வேறொரு கோணத்தில் பார்க்கவும் உதவியது. எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுள் கொடுத்த உதவியையும் அறிவுரையையும் யோபு ஏற்றுக்கொண்டார்.

  •   யோபுவைப் பற்றிப் படித்துப் பாருங்கள்: யோபு 1:1-3, 13-22; 2:7; 3:1-13; 36:1-7; 38:1-3; 42:1, 2, 10-13.

மோசே

  •   அவர் யார்? மோசே இஸ்ரவேலர்களின் தலைவராகவும் கடவுளுடைய தீர்க்கதரிசியாகவும் இருந்தார்.

  •   அவர் ஏன் சாக நினைத்தார்? மோசேக்குமுன் வேலை மலைபோல் குவிந்திருந்தது, ஜனங்கள்வேறு அவரைக் குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அதனால், அவருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. “தயவுசெய்து இப்போதே என்னைக் கொன்றுவிடுங்கள்” என்று கடவுளிடம் அவர் கதறினார்.—எண்ணாகமம் 11:11, 15.

  •   அவருக்கு எது உதவியது? மோசே தன் மனதில் இருந்ததையெல்லாம் கடவுளிடம் கொட்டினார். வேலைப் பளுவைக் குறைக்க அவருக்குக் கடவுள் உதவினார். அதனால், மோசேயின் மன பாரம் குறைந்துவிட்டது.

  •   மோசேயைப் பற்றிப் படித்துப் பாருங்கள்: எண்ணாகமம் 11:4-6, 10-17.

a தற்கொலை எண்ணம் ரொம்ப அதிகமானால்... மனம்விட்டுப் பேச யாரும் பக்கத்தில் இல்லாவிட்டால்... தற்கொலை தடுப்பு மையத்துக்கு அல்லது வேறு அவசர சேவை மையத்துக்கு உடனடியாக போன் செய்யுங்கள்.