Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தீராத நோயினால் தவிக்கும்போது

தீராத நோயினால் தவிக்கும்போது

“என்னோட நுரையீரல்-லயும் பெருங்குடல்-லயும் புற்றுநோய் இருக்குன்னு டாக்டர் சொன்னப்போ இடி இறங்குன மாதிரி இருந்துச்சு. ஏதோ என்னோட சாவு தேதிய குறிச்சிட்ட மாதிரி தோணுச்சு. வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், ‘சரி, ஆனது ஆயிடுச்சு, இனி எப்படி சமாளிக்கறதுன்னு பார்க்கலாம்’னு யோசிச்சேன்.”—லிண்டா, வயது 71.

“நரம்புக் கோளாறுனால என் முகத்தோட இடது பக்கத்துல பயங்கரமா வலி எடுக்கும். அதனாலேயே சிலசமயம் எனக்கு மனச்சோர்வு வந்துடும். நிறைய சமயம், எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி தோணும். தற்கொலை செஞ்சுக்கலாமான்னுகூட யோசிச்சிருக்கேன்.”—எலிஸ், வயது 49.

உயிருக்கு ஆபத்தான ஏதோவொரு வியாதியால் நீங்களோ உங்களுக்குப் பிரியமான ஒருவரோ தவிக்கிறீர்களா? அப்படியென்றால், அது எவ்வளவு கொடுமையான அனுபவம் என்று உங்களுக்குத் தெரியும். வியாதி ஒருபக்கம் என்றால், மனம் தவிக்கும் தவிப்பு இன்னொரு பக்கம்! டாக்டரைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கும்போதே உங்களுக்குக் குலைநடுங்கலாம், பொருத்தமான சிகிச்சையைக் கண்டுபிடிப்பதோ அதற்குப் பணம் திரட்டுவதோ பெரும் பாடாக இருக்கலாம், அல்லது மருந்து மாத்திரைகளுடைய பக்கவிளைவுகள் உங்களைப் படுத்தி எடுக்கலாம். உண்மையில், உடம்புக்கு ஏதாவது பெரிய பிரச்சினை வந்துவிட்டால், கவலை நம்மைத் திணறடித்துவிடும்.

இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? கடவுளிடம் ஜெபம் செய்வதும், பைபிளில் இருக்கும் ஆறுதலான வசனங்களைப் படிப்பதும் ரொம்பவே தெம்பு கொடுப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். குடும்பத்தாரும் நண்பர்களும் காட்டுகிற அன்பும் ஆதரவும்கூட உதவியாக இருக்கும்.

மற்றவர்களுக்குக் கைகொடுத்த ஆலோசனைகள்

58 வயது ராபர்ட் தரும் ஆலோசனை இதுதான்: “யெகோவா தேவன்மேல நம்பிக்கை வையுங்க, எல்லாத்தயும் தாங்கிக்க அவரு உங்களுக்கு உதவி செய்வாரு. அவர்கிட்ட ஜெபம் பண்ணுங்க. உங்க மனசுல இருக்கறத எல்லாம் கொட்டிடுங்க. அவருடைய சக்திக்காக கேளுங்க. உங்க குடும்பத்துல இருக்கறவங்களுக்கு முன்னால நம்பிக்கையாவும் தைரியமாவும் இருக்க அவர்கிட்ட உதவி கேளுங்க. பதட்டப்படாம பிரச்சினைய சமாளிக்கிறதுக்கும் பலம் கேளுங்க.

குடும்பத்துல இருக்கறவங்க நமக்கு பக்கபலமா இருந்தா, பாதி பிரச்சினை தீர்ந்த மாதிரிதான். ‘அவங்க நமக்காக இருக்காங்க’னு நினைக்கறப்பவே தெம்பா இருக்கும். தினமும் ஒண்ணு ரெண்டு பேர் எனக்கு ஃபோன் பண்ணி, ‘எப்படி இருக்கீங்க?’னு கேட்பாங்க. வேறவேற இடங்கள்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸும் என்னை கூப்பிட்டு ஆறுதலா பேசுவாங்க. இவங்க சொல்ற வார்த்தைகள்தான் எனக்கு உற்சாக டானிக். மனச விட்டுடாம இருக்க அதுதான் எனக்கு உதவியா இருக்கு.”

உடம்பு முடியாமல் இருக்கும் ஒரு நண்பரைப் போய்ப் பார்ப்பதாக இருந்தால், லிண்டா சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்: “உடம்பு முடியாம இருக்கறவங்க முடிஞ்ச வரைக்கும் இயல்பா வாழணும்னு நினைப்பாங்க. அவங்களோட உடல்நிலைய பத்தியே பேசிட்டு இருக்க அவங்களுக்கு பிடிக்காது. அதனால, எப்பவும்போல வேறவேற விஷயங்கள பத்தி அவங்ககிட்ட பேசுங்க.”

கடவுள் தருகிற பலம்... வசனங்கள் தருகிற ஆறுதல்... பாசமான உறவுகள் தருகிற ஆதரவு... இதெல்லாம் இருந்தால், தீராத வியாதியோடு போராட வேண்டியிருந்தாலும், வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம் என்று நம்புவோம்!