Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரியமானவரைப் பறிகொடுக்கும்போது

பிரியமானவரைப் பறிகொடுக்கும்போது

“என் அண்ணன் திடீர்னு இறந்தப்போ, அவர காப்பாத்த எதுவும் செய்ய முடியலயேனு மனசு தவிச்சுது. எத்தனையோ மாசத்துக்கு அப்புறம்கூட, அவரோட ஞாபகம் அடிக்கடி வந்துட்டே இருந்துச்சு. அப்போ, என்னோட நெஞ்சுக்குள்ள ஒரு கத்திய வெச்சு குத்துற மாதிரி இருக்கும். சிலசமயம், அநியாயமா என் அண்ணன் இறந்துட்டாருன்னு தோணும். அதனால கோபமா வரும். இன்னொரு பக்கம், ‘அண்ணன் உயிரோட இருந்தப்பவே அவரோட நிறைய நேரம் செலவழிக்காம போயிட்டேனே’னு மனசு அடிச்சுக்கும்.”—வனெசா, ஆஸ்திரேலியா.

பிரியமான ஒருவரை நீங்களும் இழந்து தவிக்கிறீர்களா? அப்படியென்றால், உங்களுடைய மனதுக்குள் பல உணர்ச்சிகள் முட்டி மோதலாம். ஒருபக்கம் துக்கம், தனிமை, தவிப்பு... இன்னொரு பக்கம் கோபம், குற்றவுணர்ச்சி, பயம்... என மனதில் ஒரு பெரிய போராட்டமே நடக்கலாம். ‘இதுக்குமேலயும் நான் வாழணுமா?’ என்றுகூட நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், கவலைப்படாதீர்கள்! இப்படித் துக்கத்தில் தவிப்பது இயல்புதான். பிரியமானவர்மேல் நீங்கள் எந்தளவு பாசத்தையும் நேசத்தையும் வைத்திருந்தீர்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஆனாலும், உங்கள் வலி குறைய ஏதாவது வழி இருக்கிறதா?

மற்றவர்களுக்குக் கைகொடுத்த ஆலோசனைகள்

வலியிலிருந்து விடுபட வழியே இல்லாததுபோல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இந்த ஆலோசனைகளின்படி நடந்தால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்:

மீண்டுவர காலம் எடுத்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் துக்கத்தை வெளிக்காட்டுகிறார்கள். துக்கத்திலிருந்து மீண்டுவரும் காலமும் நபருக்கு நபர் வித்தியாசப்படுகிறது. ஆனாலும், கண்ணீர்விட்டு அழுவது வேதனையைக் குறைக்கலாம். முன்பு நாம் பார்த்த வனெசா இதற்கு ஒரு சாட்சி. “நான் தேம்பித் தேம்பி அழுவேன்; அப்போ, மனசுல இருக்கற வலி குறைஞ்ச மாதிரி இருக்கும்” என்று அவர் சொல்கிறார். தங்கையைத் திடீரென்று பறிகொடுத்த சஃபீயாவும் அதேபோலச் சொல்கிறார்... “நடந்தத நினைச்சாலே மனசு ரொம்ப வலிக்குது. சீழ்பிடிச்ச காயத்த சுத்தம் பண்றப்போ எப்படி வலி உயிர் போகுமோ அப்படி இருக்கு. ஆனா, காயம் ஆறணும்னா வலிய தாங்கித்தானே ஆகணும்.”

மன பாரத்தை இறக்கி வையுங்கள்

சிலசமயங்களில் நீங்கள் தனியாக இருக்க விரும்பலாம். ஆனால், துக்கத்தை நீங்கள் தன்னந்தனியாகச் சுமக்க நினைத்தால், பாரம் அதிகமாகிவிடும். அப்பாவைப் பறிகொடுத்த 17 வயது ஜாரெட் என்ன சொல்கிறான் பாருங்கள்: “என் மனசுல இருந்தத எல்லாம் மத்தவங்ககிட்ட சொல்லிட்டேன். அவங்களுக்கு புரியற மாதிரி நான் சொன்னனான்னு தெரியல, ஆனா அதுக்கு அப்புறம் மனசு லேசாயிடுச்சு.” மனம்திறந்து பேசுவதில் இன்னொரு நன்மையும் இருப்பதாக முதல் கட்டுரையில் நாம் பார்த்த ஜானிஸ் சொல்கிறார்... “மனசுவிட்டு பேசுனப்போ ஒரு பெரிய பாரத்த இறக்கி வெச்ச மாதிரி இருந்துச்சு. மத்தவங்க என்னை புரிஞ்சுக்குறாங்கன்னும், நான் தனியா போராட வேண்டியது இல்லன்னும் நினைச்சப்போ நிம்மதியா இருந்துச்சு.”

மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

“ஆரம்ப கட்டத்துலயே நண்பர்களோட உதவியையும் சொந்தபந்தங்களோட உதவியையும் ஏத்துக்கிறவங்களால துக்கத்துல இருந்து சீக்கிரமா மீண்டு வர முடியுது” என்று சொல்கிறார் ஒரு டாக்டர். அதனால், உங்களுக்கு என்ன உதவி தேவை என்று உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள். உங்களுக்கு உதவி செய்ய கண்டிப்பாக அவர்களுக்கு ஆசை இருக்கும், ஆனால் எப்படிச் செய்வது என்றுதான் தெரியாமல் இருக்கும்.—நீதிமொழிகள் 17:17.

கடவுளிடம் நெருக்கமாகுங்கள்

டீனா என்ற பெண் சொல்கிறார்... “என்னோட வீட்டுக்காரர் புற்றுநோயால திடீர்னு இறந்துட்டாரு. மனசுவிட்டு பேச எனக்குன்னு இருந்த ஒருத்தரும் போயிட்டாரு. அதனால, கடவுள்கிட்ட எல்லாத்தயும் சொல்ல ஆரம்பிச்சேன். ஒவ்வொரு நாளையும் ஓட்டுறதுக்கு அவர்கிட்ட உதவி கேட்டேன். அவரு எனக்கு செஞ்ச உதவிகள் ஒண்ணு ரெண்டு இல்ல, எத்தனையோ இருக்கு.” 22 வயதில் தன் அம்மாவைப் பறிகொடுத்த டார்ஷா என்ற பெண் சொல்கிறார்... “தினமும் பைபிள படிச்சேன், அதுதான் எனக்கு ஆறுதல் தந்துச்சு. நம்பிக்கையான விஷயங்கள பத்தி நினைச்சு பார்க்க உதவி செஞ்சுது.”

பிரியமானவர் உயிரோடு வரப்போவதை மனக்கண்களில் பாருங்கள்

டீனா தொடர்கிறார்... “என் கணவர் மறுபடியும் உயிரோட வருவார்னு தெரிஞ்சாலும் ஆரம்பத்துல மனசு ஆறவே இல்ல. ‘இப்ப என் கணவர் என்கூட இல்லையே, இப்ப என் பிள்ளைங்களுக்கு அப்பா இல்லையே’னு நினைச்சேன். ஆனா, அவரு இறந்து நாலு வருஷம் ஆயிடுச்சு. அவரு மறுபடியும் உயிரோட வருவாருங்கற ஒரே நம்பிக்கையிலதான் இப்ப நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவரு மறுபடியும் என் கண்முன்னால வந்து நிக்கறப்போ எப்படி இருக்கும்னு நினைச்சுநினைச்சு பார்ப்பேன். உடனே, மனசெல்லாம் நிறைஞ்சுடும், ரொம்ப நிம்மதியா இருக்கும்.”

ஒரே ராத்திரியில் நிம்மதி திரும்பிவிடும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும், வனெசாவின் அனுபவம் உங்களுக்கு நம்பிக்கை தரும். “இந்த வலியும் வேதனையும் உங்களவிட்டு போகவே போகாதுன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுடும்” என்று அவர் சொல்கிறார்.

உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது என்பது உண்மைதான்; ஆனாலும், நீங்கள் தொடர்ந்து உயிர்வாழ்வதில் அர்த்தம் இருக்கிறது. கடவுளுடைய அரவணைப்போடு, நேச நெஞ்சங்களின் பாச மழையில் நீங்கள் நனையலாம், அர்த்தமுள்ள வாழ்க்கையும் வாழலாம். அதோடு, இறந்துபோனவர்களைக் கடவுள் சீக்கிரத்தில் உயிரோடு கொண்டுவரப்போகிறார்! உங்களுக்குப் பிரியமானவரை மறுபடியும் நீங்கள் கட்டித்தழுவுவதைப் பார்க்க அவர் ஆசையோடு காத்திருக்கிறார். அந்தக் காலம் வரும்போது, உங்கள் மனக்காயத்தின் தழும்புகூட மறைந்துவிடும்!