Skip to content

வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் எதைக் குறிக்கிறது?

வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் எதைக் குறிக்கிறது?

பைபிள் தரும் பதில்

 வெளிப்படுத்துதல் 17-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் ஒரு அமைப்புக்கு அடையாளமாக இருக்கிறது. எல்லா தேசங்களையும் ஒன்றிணைப்பதும் அதைப் பிரதிநிதித்துவம் செய்வதும்தான் இந்த அமைப்பின் நோக்கம். இது முதலில் சர்வதேச சங்கம் என்ற பெயரில் இருந்தது. இப்போது ஐநா சபை என்று அழைக்கப்படுகிறது.

கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகத்தை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்?

  1.   அரசியலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகத்துக்கு “ஏழு தலைகள்” இருக்கின்றன. அந்தத் தலைகள் ‘ஏழு மலைகளையும்’ ‘ஏழு ராஜாக்களையும்,’ அதாவது அரசாங்கங்களையும், குறிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:9, 10) மலைகளையும் மூர்க்க மிருகங்களையும் அரசாங்கங்களுக்கு அடையாளமாக பைபிள் சொல்கிறது.​—எரேமியா 51:24, 25; தானியேல் 2:​44, 45; 7:​17, 23.

  2.   உலக அரசியல் அமைப்பின் ஒரு உருவம். வெளிப்படுத்துதல் 13-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற ஏழு தலைகள் இருக்கிற மிருகம் உலக அரசியல் அமைப்பைக் குறிக்கிறது. கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் இதைப் போலவே இருக்கிறது. இந்த இரண்டு மிருகங்களுக்கும் ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கடவுளை நிந்திக்கும் பெயர்களும் இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 13:1; 17:3) இந்த ஒற்றுமைகள் எல்லாம் எதேச்சையாக வந்திருக்க வாய்ப்பில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் உலக அரசியல் அமைப்பின் உருவமாக, அதாவது சாயலாக, இருக்கிறது என்று தெரிகிறது.​—வெளிப்படுத்துதல் 13:15.

  3.   மற்ற அரசாங்கங்களிடமிருந்து அதிகாரம் கிடைக்கிறது. கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் ஆட்சியில் இருக்கிற மற்ற அரசாங்கங்களிலிருந்தே ‘வரும்,’ அதாவது அவற்றிலிருந்துதான் தோன்றும்.​—வெளிப்படுத்துதல் 17:11, 17.

  4.   மதத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. உலகத்தில் இருக்கிற எல்லா பொய் மதங்களுக்கும் அடையாளமாக இருக்கிற மகா பாபிலோன், கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் உட்கார்ந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது, அந்த மிருகத்தின்மேல் பொய் மதங்களுக்குச் செல்வாக்கு இருக்கும் என்பதைக் காட்டுகிறது.​—வெளிப்படுத்துதல் 17:3-5.

  5.   கடவுளை அவமதிக்கிறது. அந்த மிருகத்தின் உடல் முழுவதும் “கடவுளை நிந்திக்கும் பெயர்கள்” இருக்கின்றன.​—வெளிப்படுத்துதல் 17:3.

  6.   கொஞ்ச காலத்துக்கு செயல்படாமல் இருக்கும். கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகம் கொஞ்ச காலத்துக்கு ‘அதலபாதாளத்தில்’ a இருக்கும், அதாவது செயலற்ற நிலையில் இருக்கும். அதற்குப் பிறகு அது திரும்பவும் வரும்.​—வெளிப்படுத்துதல் 17:8.

பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்

 கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனத்தை ஐநா சபையும் அதற்கு முன்பு இருந்த சர்வதேச சங்கமும் எப்படி நிறைவேற்றியிருக்கின்றன என்று பாருங்கள்.

  1.   அரசியலோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஐநா சபைக்கு ‘அதன் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் எல்லாமே சமமாக இருக்க வேண்டும்’ என்ற நோக்கம் இருக்கிறது. இதன்மூலம், உலக அரசியல் அமைப்பை அது ஆதரிக்கிறது. b

  2.   உலக அரசியல் அமைப்பின் ஒரு உருவம். 2011-ல் ஐநா சபை அதன் 193-ஆவது உறுப்பினர் நாட்டைச் சேர்த்துக்கொண்டது. இப்படிச் செய்வதன் மூலம் உலகத்தில் இருக்கிற ஏராளமான நாடுகளையும் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாக அது சொல்லிக்கொள்கிறது.

  3.   மற்ற அரசாங்கங்களிடமிருந்து அதிகாரம் கிடைக்கிறது. ஐநா சபை அதன் உறுப்பினர் நாடுகளிலிருந்துதான் தோன்றியிருக்கிறது. அந்த நாடுகள் கொடுக்கிற பலத்தையும் அதிகாரத்தையும் வைத்துதான் அது செயல்படுகிறது.

  4.   மதத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. சர்வதேச சங்கத்துக்கும் சரி, ஐநா சபைக்கும் சரி, எப்போதுமே உலக மதங்களின் ஆதரவு இருந்திருக்கிறது. c

  5.   கடவுளை அவமதிக்கிறது. ஐநா சபை “உலகளவில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கட்டிக்காப்பதற்காக” ஏற்படுத்தப்பட்டது. d அதன் லட்சியம் நல்லதாகத் தெரிந்தாலும், உண்மையில் அது கடவுளை அவமதிக்கிறது. ஏனென்றால், கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடிகிற விஷயத்தைத் தன்னால் செய்ய முடியும் என்று அது சொல்லிக்கொள்கிறது.​—சங்கீதம் 46:9; தானியேல் 2:​44.

  6.   கொஞ்ச காலத்துக்கு செயல்படாமல் இருந்தது. சர்வதேச சங்கம் முதல் உலகப் போர் முடிந்த கொஞ்ச நாட்களிலேயே சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், உலகளவில் போர் நடக்கும் சூழல் உருவாவதை அதனால் தடுக்க முடியவில்லை. 1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானபோது அது இல்லாமல் போனது. 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஐநா சபை உருவாக்கப்பட்டது. இதன் நோக்கங்களும் வழிமுறைகளும் முக்கிய அமைப்புகளும் சர்வதேச சங்கத்தைப் போலவே இருந்தன.

a வைன்ஸ் எக்ஸ்பொசிட்டரி டிக்‍ஷனரி ஆஃப் ஓல்ட் அன்ட் நியு டெஸ்டமென்ட் வெர்ட்ஸ் சொல்வதுபோல், ‘அதலபாதாளம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “அளவிட முடியாத ஆழத்தை” குறிக்கிறது. இந்த வார்த்தையை “ஆழம் காண முடியாத குழி” என்று கிங் ஜேம்ஸ் வர்ஷன் மொழிபெயர்த்திருக்கிறது. அடைத்து வைக்கப்பட்ட இடத்தை அல்லது நிலைமையைக் குறிப்பதற்கும் சுத்தமாக செயல்படமுடியாத நிலையைக் குறிப்பதற்கும் பைபிளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

b ஐநா சபையின் சாசனத்தின் பிரிவு 2-ஐப் பாருங்கள்.

c உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இருக்கிற நிறைய புராட்டஸ்டன்ட் பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு ஆலோசனைக் குழு 1918-ல், சர்வதேச சங்கத்தை “பூமியில் கடவுளுடைய அரசாங்கத்துக்கு அடையாளமாக இருக்கிற ஒரு அரசியல் அமைப்பு” என்று சொன்னது. 1965-ல் புத்த மதம், கத்தோலிக்க மதம், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் மதம், இந்து மதம், இஸ்லாம் மதம், யூத மதம், புராட்டஸ்டன்ட் மதம் என இந்த எல்லா மதங்களுடைய பிரதிநிதிகளும் ஐநா சபைக்கு ஆதரவு கொடுப்பதற்கும் அதற்காக ஜெபம் செய்வதற்கும் சான் பிரான்ஸிஸ்கோவுக்கு ஒன்றுகூடி வந்தார்கள். அதுமட்டுமல்ல, ஐநா சபை “சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுகிற உன்னத அமைப்பாக என்றென்றைக்கும் இருக்கும்” என்று போப் ஜான் பால் II 1979-ல் நம்பிக்கையோடு சொன்னார்.

d ஐநா சபையின் சாசனத்தின் பிரிவு 1-ஐப் பாருங்கள்.