யோவான் எழுதியது 6:1-71

6  இதற்குப் பின்பு திபேரியா கடலின், அதாவது கலிலேயா கடலின், அக்கரைக்கு இயேசு போனார்.+  நோயாளிகளை அவர் அற்புதமாகக் குணமாக்கியதைப் பார்த்து+ ஒரு பெரிய கூட்டம் அவருக்குப் பின்னாலேயே போனது.+  அதனால் இயேசு ஒரு மலைமேல் ஏறிப்போய், அங்கே தன்னுடைய சீஷர்களோடு உட்கார்ந்தார்.  யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ சீக்கிரத்தில் வரவிருந்தது.  இயேசு தன்னுடைய கண்களை ஏறெடுத்து, தன்னிடம் வந்துகொண்டிருந்த பெரிய கூட்டத்தைப் பார்த்து, “இந்த ஜனங்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகளை எங்கே வாங்கலாம்?”+ என்று பிலிப்புவிடம் கேட்டார்.  தான் என்ன செய்யப்போகிறார் என்று தெரிந்திருந்தும் பிலிப்புவைச் சோதிப்பதற்காக இப்படிக் கேட்டார்.  அதற்கு பிலிப்பு, “ஆளுக்குக் கொஞ்சம் கொடுக்க வேண்டுமென்றாலும், 200 தினாரியுவுக்கு* ரொட்டிகளை வாங்கினால்கூட போதாதே” என்று சொன்னார்.  அவருடைய சீஷர்களில் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரிடம்,  “இதோ, இங்கிருக்கிற ஒரு சிறுவனிடம் ஐந்து பார்லி ரொட்டிகளும் இரண்டு சிறிய மீன்களும் இருக்கின்றன. ஆனால், இத்தனை பேருக்கு அது எப்படிப் போதும்?”+ என்று கேட்டார். 10  அப்போது இயேசு, “இவர்களை உட்கார வையுங்கள்” என்று சொன்னார். அந்த இடத்தில் நிறைய புல் இருந்ததால் அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் சுமார் 5,000 ஆண்கள் இருந்தார்கள்.+ 11  இயேசு ரொட்டிகளை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அங்கே உட்கார்ந்திருந்தவர்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அந்தச் சிறிய மீன்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் வேண்டுமளவுக்குச் சாப்பிட்டார்கள். 12  எல்லாரும் வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அவர் தன்னுடைய சீஷர்களிடம், “எதுவும் வீணாகாதபடி, மீதியான ரொட்டித் துண்டுகளைச் சேகரியுங்கள்” என்று சொன்னார். 13  அதனால், மக்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த ஐந்து பார்லி ரொட்டிகளில் மீதியான துண்டுகளை 12 கூடைகள் நிறைய சேகரித்தார்கள். 14  அவர் செய்த அடையாளங்களை மக்கள் பார்த்தபோது, “இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி நிச்சயமாகவே இவர்தான்”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 15  அவர்கள் வந்து தன்னைப் பிடித்து ராஜாவாக்கப்போகிறார்கள் என்பதை இயேசு தெரிந்துகொண்டு, அந்த இடத்தைவிட்டு+ மறுபடியும் மலைக்குத் தனியாகப்+ போனார். 16  சாயங்காலம் ஆனபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போனார்கள்.+ 17  ஒரு படகில் ஏறி, அக்கரையில் இருக்கிற கப்பர்நகூமை நோக்கிப் போனார்கள். அதற்குள் இருட்டிவிட்டது, இயேசுவும் அதுவரை அவர்களிடம் வந்துசேரவில்லை.+ 18  அதோடு, காற்று பலமாக வீசியதால் கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது.+ 19  சுமார் மூன்று அல்லது நான்கு மைல்* தூரத்துக்கு அவர்கள் படகை ஓட்டிய பிறகு, இயேசு கடல்மேல் நடந்து, படகுக்குப் பக்கத்தில் வருவதைப் பார்த்துப் பயந்துபோனார்கள். 20  ஆனால் அவர், “நான்தான், பயப்படாதீர்கள்!”+ என்று சொன்னார். 21  அதனால், சந்தோஷமாக அவரைப் படகில் ஏற்றிக்கொண்டார்கள். படகு கொஞ்ச நேரத்திலேயே போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.+ 22  சில மக்கள் கடலின் அக்கரையிலேயே தங்கிவிட்டார்கள். அங்கிருந்த ஒரே சின்னப் படகில் சீஷர்கள் மட்டும் ஏறிப்போய்விட்டார்கள் என்பதும், இயேசு அந்தப் படகில் ஏறவில்லை என்பதும் அடுத்த நாள் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தது. 23  திபேரியாவிலிருந்து வந்த சில படகுகள், இயேசு நன்றி சொல்லி ஜெபம் செய்த பின்பு அவர்கள் ரொட்டி சாப்பிட்ட இடத்துக்குப் பக்கத்தில் வந்துசேர்ந்தன. 24  அந்தப் படகுகளில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் இல்லை என்று தெரிந்தவுடன் மக்கள் தங்களுடைய படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு கப்பர்நகூமுக்குப் போனார்கள். 25  கடலின் அக்கரையில் அவர்கள் அவரைப் பார்த்தபோது, “ரபீ,+ எப்போது இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். 26  அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அற்புதங்களைப் பார்த்ததால் அல்ல, ரொட்டிகளைச் சாப்பிட்டுத் திருப்தியானதால்தான் நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்.+ 27  அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத்+ தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள். மனிதகுமாரன் இதை உங்களுக்குக் கொடுப்பார்; இவரை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தகப்பனாகிய கடவுளே இவர்மேல் தன்னுடைய முத்திரையை குத்தியிருக்கிறார்”+ என்று அவர்களிடம் சொன்னார். 28  அதனால் அவர்கள், “கடவுள் எங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டார்கள். 29  அப்போது இயேசு, “கடவுள் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு, அவரால் அனுப்பப்பட்டவர்மேல் நீங்கள் விசுவாசம் வைக்க வேண்டும்”+ என்று சொன்னார். 30  அதற்கு அவர்கள், “அப்படியென்றால், உங்களை நம்புவதற்கு நாங்கள் பார்க்கும்படி என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறீர்கள்?+ என்ன செயலைச் செய்யப்போகிறீர்கள்? 31  வனாந்தரத்தில் எங்களுடைய முன்னோர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்களே,+ ‘அவர்கள் சாப்பிடுவதற்காகப் பரலோகத்திலிருந்து அவர் உணவு தந்தார்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்கள். 32  அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மோசே உங்களுக்குப் பரலோகத்திலிருந்து உணவைத் தரவில்லை, என்னுடைய தகப்பன்தான் பரலோகத்திலிருந்து உண்மையான உணவை உங்களுக்குத் தருகிறார். 33  கடவுள் தருகிற உணவு பரலோகத்திலிருந்து வந்து, உலகத்துக்கு வாழ்வு தருகிறது” என்று அவர்களிடம் சொன்னார். 34  அதற்கு அவர்கள், “எஜமானே, அந்த உணவையே எங்களுக்கு எப்போதும் கொடுங்கள்” என்று சொன்னார்கள். 35  அப்போது இயேசு, “வாழ்வு தரும் உணவு நான்தான். என்னிடம் வருகிறவனுக்குப் பசியே எடுக்காது, என்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்குத் தாகமே எடுக்காது.+ 36  ஆனால், நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைப் பார்த்தும் நம்பாமல் இருக்கிறீர்கள்.+ 37  தகப்பன் எனக்குத் தருகிற ஒவ்வொருவனும் என்னிடம் வருவான், அப்படி என்னிடம் வருகிறவனை நான் ஒருபோதும் துரத்திவிட மாட்டேன்.+ 38  ஏனென்றால், என்னுடைய விருப்பத்தின்படி* செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி* செய்வதற்காகத்தான்+ பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன்.+ 39  அவர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவர்கள் எல்லாரையும் நான் உயிரோடு எழுப்ப வேண்டும்+ என்பது என்னை அனுப்பியவருடைய விருப்பம்.* 40  அதோடு, மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதும்,+ கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்ப வேண்டும்+ என்பதும் என் தகப்பனின் விருப்பம்”* என்று சொன்னார். 41  “பரலோகத்திலிருந்து வந்த உணவு நான்தான்”+ என்று அவர் சொன்னதால் யூதர்கள் அவரைப் பற்றி முணுமுணுத்தார்கள். 42  “இவன் யோசேப்பின் மகன் இயேசுதானே? இவனுடைய அப்பாவும் அம்மாவும் நமக்குத் தெரிந்தவர்கள்தானே?+ அப்படியிருக்கும்போது, ‘நான் பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன்’ என்று இவன் எப்படிச் சொல்கிறான்?” எனப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 43  அப்போது இயேசு, “ஒருவருக்கொருவர் முணுமுணுப்பதை நிறுத்துங்கள். 44  என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால்* அவன் என்னிடம் வர முடியாது;+ கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்புவேன்.+ 45  ‘அவர்கள் எல்லாரும் யெகோவாவினால்* கற்பிக்கப்பட்டிருப்பார்கள்’+ என்று தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. தகப்பனிடமிருந்து கேட்டுக் கற்றுக்கொள்கிற ஒவ்வொருவனும் என்னிடம் வருகிறான். 46  அதற்காக, தகப்பனை எந்த மனுஷனாவது பார்த்திருக்கிறான் என்று அர்த்தமாகாது,+ தகப்பனாகிய கடவுளிடமிருந்து வந்தவர் மட்டும்தான் அவரைப் பார்த்திருக்கிறார்.+ 47  உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்னை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.+ 48  வாழ்வு தரும் உணவு நான்தான்.+ 49  உங்களுடைய முன்னோர்கள் வனாந்தரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்கள், ஆனால் இறந்துபோனார்கள்.+ 50  பரலோகத்திலிருந்து வந்திருக்கும் இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் சாகவே மாட்டார். 51  பரலோகத்திலிருந்து வந்திருக்கும் உயிருள்ள உணவு நான்தான்; இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் என்றென்றும் உயிர் வாழ்வார். சொல்லப்போனால், நான் கொடுக்கப்போகிற உணவு, உலகத்துக்கு வாழ்வு கிடைப்பதற்காக நான் தரப்போகிற என் சதைதான்”+ என்று சொன்னார். 52  அப்போது யூதர்கள், “இவன் எப்படித் தன்னுடைய சதையை நமக்குச் சாப்பிடக் கொடுக்க முடியும்?” என்று சொல்லி, ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். 53  அதனால் இயேசு அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனிதகுமாரனின் சதையைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தால் தவிர நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள்.*+ 54  என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும், நான் அவனைக் கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன்.+ 55  என் சதைதான் உண்மையான உணவு, என் இரத்தம்தான் உண்மையான பானம். 56  என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறான், நானும் அவனோடு ஒன்றுபட்டிருக்கிறேன்.+ 57  என்றென்றும் உயிரோடிருக்கிற தகப்பன் என்னை அனுப்பினார்; அவரால்தான் நான் உயிர் வாழ்கிறேன்; அதேபோல், என்னைச் சாப்பிடுகிறவனும் என்னால் உயிர் வாழ்வான்.+ 58  பரலோகத்திலிருந்து வந்திருக்கும் உணவு இதுதான். இந்த உணவு உங்களுடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவைப் போன்றது அல்ல, அதைச் சாப்பிட்டும் அவர்கள் இறந்துபோனார்கள். இந்த உணவைச் சாப்பிடுகிறவனோ என்றென்றும் உயிர் வாழ்வான்”+ என்று சொன்னார். 59  கப்பர்நகூமில் இருக்கிற ஜெபக்கூடத்தில் அவர் கற்பித்துக்கொண்டிருந்தபோது இந்த விஷயங்களைச் சொன்னார். 60  அவர் சொன்னதைக் கேட்டபோது, “இவர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது; யாரால் இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?” என்று அவருடைய சீஷர்களில் பலர் சொன்னார்கள். 61  தன்னுடைய சீஷர்கள் இதைப் பற்றி முணுமுணுப்பதை இயேசு உணர்ந்துகொண்டு, “நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 62  அப்படியென்றால், மனிதகுமாரன் தான் முன்பிருந்த இடத்துக்கு ஏறிப்போவதை+ நீங்கள் பார்த்தால் இன்னும் எந்தளவு அதிர்ச்சியாக இருக்கும்? 63  கடவுளுடைய சக்திதான் வாழ்வு தருகிறது;+ மனுஷனுடைய முயற்சியால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தைகள் கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டவை, வாழ்வு தருபவை.+ 64  ஆனாலும், உங்களில் சிலர் இதை நம்புவதில்லை” என்று சொன்னார். நம்பாதவர்கள் யார் என்றும், தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன் யார் என்றும் இயேசுவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்ததால்+ அவர்களிடம் அப்படிச் சொன்னார். 65  அதோடு அவர், “அதனால்தான், தகப்பனுடைய அனுமதி இல்லையென்றால் யாரும் என்னிடம் வர முடியாது+ என்று உங்களுக்குச் சொன்னேன்” என்றார். 66  அவர் இப்படியெல்லாம் பேசியதால், அவருடைய சீஷர்களில் பலர் அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் விட்டுவந்த காரியங்களைக் கவனிப்பதற்காகத் திரும்பிப் போய்விட்டார்கள்.+ 67  அதனால் இயேசு பன்னிரண்டு பேரிடம்,* “நீங்களும் என்னைவிட்டுப் போகப் போகிறீர்களா?” என்று கேட்டார். 68  அதற்கு சீமோன் பேதுரு, “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்?+ முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன.+ 69  நீங்கள்தான் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்+ என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அதை நம்புகிறோம்” என்று சொன்னார். 70  அப்போது இயேசு அவர்களிடம், “பன்னிரண்டு பேரான உங்களை நான் தேர்ந்தெடுத்தேன், இல்லையா?+ ஆனாலும், உங்களில் ஒருவன் அவதூறு பேசுகிறவனாக* இருக்கிறான்”+ என்று சொன்னார். 71  சீமோன் இஸ்காரியோத்து என்பவரின் மகனாகிய யூதாசைப் பற்றித்தான் அவர் இப்படிச் சொன்னார். ஏனென்றால், அவன் அந்தப் பன்னிரண்டு பேரில் ஒருவனாக இருந்தும் அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தான்.+

அடிக்குறிப்புகள்

இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “சுமார் 5 அல்லது 6 கி.மீ.” நே.மொ., “சுமார் 25 அல்லது 30 ஸ்டேடியா.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “சித்தம்.”
வே.வா., “சித்தம்.”
வே.வா., “இழுத்துக்கொள்ளாவிட்டால்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “உங்களுக்குள் வாழ்வு இருக்காது.”
அதாவது, “அப்போஸ்தலர்களிடம்.”
வே.வா., “இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனாக; பிசாசாக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா

கூடைகள்
கூடைகள்

பைபிளில், வித்தியாசப்பட்ட பல கூடைகளைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 ஆண்களுக்கு இயேசு அற்புதமாக உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட 12 கூடைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சின்ன பிரம்புக் கூடைகளைக் குறிக்கலாம். ஆனால், கிட்டத்தட்ட 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு தந்ததைப் பற்றிய பதிவில், மீதியான ரொட்டிகள் சேகரிக்கப்பட்ட ஏழு கூடைகளுக்கு வேறொரு கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற் 8:8, 9) அது பெரிய கூடைகளைக் குறிக்கிறது. அப் 9:25-லும் இதே கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வசனத்தில், பவுல் ஒரு “கூடையில்” உட்கார வைக்கப்பட்டு, தமஸ்கு நகர மதிலிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே இறக்கிவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.