Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

என் வாழ்க்கை என்னைச் சுற்றியே இருந்தது

என் வாழ்க்கை என்னைச் சுற்றியே இருந்தது
  • பிறந்த வருஷம்: 1951

  • பிறந்த நாடு: ஜெர்மனி

  • என்னைப் பற்றி: பெருமைபிடித்தவனாக இருந்தேன், சுதந்திரப் பறவையாக இருக்க விரும்பினேன்

என் கடந்தகால வாழ்க்கை:

நான் ஜெர்மனியில் இருந்த லீப்ஜிக் நகரத்தில் பிறந்தேன். நான் பிறந்து சில வருஷங்களுக்கு நாங்கள் குடும்பமாக அங்குதான் இருந்தோம். செக் மற்றும் போலந்து நாடுகளுடைய எல்லைகளுக்குப் பக்கத்தில்தான் இந்த ஊர் இருக்கிறது. எனக்கு 6 வயது இருந்தபோது, வேலைக்காக என் அப்பா வெளிநாட்டுக்குப் போக வேண்டியிருந்தது. அதனால், நாங்கள் எல்லாரும் குடும்பமாக பிரேசிலுக்குக் குடிமாறினோம். பிறகு, ஈக்வடாருக்குப் போனோம்.

எனக்கு 14 வயதானபோது, என் அப்பா அம்மா தென் அமெரிக்காவுக்குக் குடிமாறினார்கள். அதனால், நான் ஜெர்மனியில் ஹாஸ்டலில் தங்கி படித்தேன். அங்கு, என்னை நானே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ பழகிக்கொண்டேன். நான் செய்யும் விஷயங்கள் மற்றவர்களுக்குக் கஷ்டமாக இருக்குமா என்றெல்லாம் யோசிக்கவே மாட்டேன்.

என்னுடைய 17 வயதில், அப்பா அம்மா திரும்பவும் ஜெர்மனிக்கு வந்தார்கள். அப்போது, அவர்களோடு சேர்ந்து வாழ்ந்தேன். ஆனால், இவ்வளவு நாள் ஒரு சுதந்திரப் பறவையாக வாழ்ந்து பழகிவிட்டதால், அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு அவர்களோடு இருப்பது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அதனால் 18 வயதில் தனியாகப் போய் வாழ ஆரம்பித்துவிட்டேன்.

‘நாம எதுக்காக வாழ்றோம்’ என்ற கேள்விக்குப் பதில் தேட ஆரம்பித்தேன். அது என் மனதைப்போட்டு குடைந்துகொண்டே இருந்தது. நிறைய பேருடைய வாழ்க்கைமுறையையும் சில இயக்கங்களின் செயல்பாடுகளையும் பார்த்த பிறகு, நான் ஒரு முடிவுக்கு வந்தேன். மனிதர்கள் இந்த அழகான பூமியை அழித்துவிடுவதற்குள் அதைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இப்படிச் செய்வதுதான் ஒரு சிறந்த விஷயம் என்று எனக்குத் தோன்றியது.

ஒரு பைக் வாங்கிக்கொண்டு, ஜெர்மனியிலிருந்து ஆப்பிரிக்காவுக்குப் போனேன். ஆனால் சீக்கிரத்திலேயே என் பைக்கை சரிசெய்வதற்காக திரும்பி ஐரோப்பாவுக்கே போக வேண்டியிருந்தது. பிறகு ஒருநாள், போர்ச்சுகலில் இருந்த கடற்கரைக்குப் போயிருந்தேன். அப்போதுதான், ‘பைக்ல சுத்துனது எல்லாம் போதும், ஒரு படகு வாங்கி இனிமே கடல்ல சுத்தணும்’ என்று யோசித்தேன்.

அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகப் பயணம் செய்வதற்குச் சில இளைஞர்கள் திட்டம் போட்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டேன். அங்குதான் முதல் தடவையாக என் மனைவி லோரியைப் பார்த்தேன். முதலில் நாங்கள் கரீபியன் தீவுகளுக்குப் போனோம். பிறகு, பியூர்டோ ரிகோவில் கொஞ்ச நாட்கள் தங்கிவிட்டு, மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பி வந்தோம். ஒரு படகை வாங்கி, அதில் தங்கும் வசதிகளை செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால், எங்களுடைய திட்டத்தை முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை. மூன்று மாதங்களிலேயே நிறுத்திவிட்டோம். ஏனென்றால், கட்டாய ராணுவ சேவையின் காரணமாக ஜெர்மனி ராணுவத்தில் நான் சேர வேண்டியிருந்தது.

ஜெர்மனியின் கடற்படையில் 15 மாதங்கள் நான் சேவை செய்தேன். அந்தச் சமயத்தில் லோரியும் நானும் கல்யாணம் செய்துகொண்டோம். உலகத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக நிறைய விஷயங்களையும் தயார் செய்துகொண்டு இருந்தோம். ராணுவத்தில் சேர்வதற்கு கொஞ்சம் முன்பு, ஒரு படகை வாங்கினோம். ராணுவத்தில் சேவை செய்துகொண்டே அந்தப் படகையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தயார் செய்துகொண்டு இருந்தோம். அதிலேயே வாழ்ந்து உலகத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. அந்தச் சமயத்தில், அதாவது என்னுடைய ராணுவ சேவையை முடித்துவிட்டு படகை தயார் செய்துகொண்டிருந்த சமயத்தில், யெகோவாவின் சாட்சிகள் எங்களைப் சந்தித்தார்கள். நாங்கள் அவர்களோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம்.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது:

ஆரம்பத்தில், நான் பெரிதாக எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்று தோன்றியது. ஏனென்றால், நான் முறைப்படி கல்யாணம் பண்ணியிருந்தேன். புகைப்பிடிப்பதையும் விட்டிருந்தேன். (எபேசியர் 5:5) உலகத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையும் தவறு இல்லை என்று தோன்றியது. ஏனென்றால், அங்கேயும் கடவுளுடைய படைப்புகளைத்தானே ரசிக்க போகிறோம் என்று நினைத்தேன்.

ஆனால் உண்மையைச் சொன்னால், நானும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது! குறிப்பாக, என்னுடைய குணங்களை நான் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. நான் ரொம்ப பெருமை பிடித்தவனாக இருந்தேன். ‘என் காட்டில் நான்தான் ராஜா’ என்பதுபோல் வாழ்ந்துகொண்டிருந்தேன். என்னுடைய திறமைகளை, என்னுடைய சாதனைகளைப் பற்றி மட்டுமே யோசித்தேன். என் வாழ்க்கை என்னைச் சுற்றியே இருந்தது.

ஒருநாள், இயேசுவின் மலைப் பிரசங்கத்தைப் படித்தேன். (மத்தேயு, 5-7 அதிகாரங்கள்) சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவர் அதில் சொல்லியிருக்கிறார். அதைப் படித்தபோது, எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. உதாரணத்துக்கு, பசியாகவும் தாகமாகவும் இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத்தேயு 5:6) பசியோடும் தாகத்தோடும் இருக்கிற ஒருவரால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும் என்று யோசித்தேன். பிறகு, பைபிளைப் படிக்க படிக்க நமக்குள் ஆன்மீகப் பசி, அதாவது ஆன்மீகத் தேவை, என்ற ஒன்று இருப்பதை புரிந்துகொண்டேன். அப்படியொரு தேவை இருப்பதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு அதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன். அதைப் பற்றித்தான் இயேசு இப்படிச் சொல்கிறார்: “தங்களுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்தவர்கள் சந்தோஷமானவர்கள்.”—மத்தேயு 5:3, அடிக்குறிப்பு.

ஜெர்மனியில் நாங்கள் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தோம். பிறகு, நானும் லோரியும் பிரான்சுக்கு போனோம். அங்கிருந்து இத்தாலிக்கு குடிமாறினோம். நாங்கள் எங்கே போனாலும் அங்கே யெகோவாவின் சாட்சிகளை பார்த்தோம். அவர்கள் காட்டிய உண்மையான அன்பையும் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமையையும் பார்த்தது என் மனதை தொட்டது. யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் இருக்கிற ஒரே குடும்பம் என்பதைப் புரிந்துகொண்டேன். (யோவான் 13:34, 35) கொஞ்ச நாளில் நானும் லோரியும் ஞானஸ்நானம் எடுத்தோம்.

ஞானஸ்நானம் எடுத்த பிறகு தொடர்ந்து என்னுடைய குணங்களில் மாற்றங்கள் செய்துகொண்டே இருந்தேன். லோரியும் நானும் கடல் வழியாக அமெரிக்காவுக்கு போகலாம் என்று நினைத்தோம். அதனால், ஆப்பிரிக்கா கடலோர பகுதியை ஒட்டி பயணம் செய்து, அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி அமெரிக்காவுக்குப் போனோம். ஒரு சின்ன படகில் நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இருந்தோம். எங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு வெறும் தண்ணீர்தான்! பிரமாண்டமான படைப்பாளருக்குமுன் நான் ஒன்றுமே இல்லை என்று அப்போது தோன்றியது. நடுக்கடலில் நான் செய்வதற்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. அதனால், நிறைய பைபிள் படித்தேன். இயேசு பூமியில் இருந்தபோது செய்த விஷயங்களைப் பற்றிப் படித்தது என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அவரிடம் திறமைகள் இருந்தன. அவரிடம் எந்தக் குறையும் இல்லை. இருந்தாலும், அவர் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளவில்லை. அவருடைய வாழ்க்கை அவரைச் சுற்றி இருக்கவில்லை, அவருடைய அப்பா யெகோவாவைச் சுற்றித்தான் இருந்தது.

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன்

இயேசுவைப் பற்றி யோசித்துப் பார்த்தபோதுதான், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன். (மத்தேயு 6:33) வாழ்க்கையில் நான் செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயங்களுக்கு முதலிடம் கொடுத்துவிட்டு, அதற்கு நடுவில் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை நுழைக்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டேன்.

எனக்குக் கிடைத்த நன்மைகள்:

முன்பெல்லாம், ‘என் வாழ்க்கை என் கையில்தான்’ என்று வாழ்ந்ததால் நான் எடுக்கும் முடிவுகள் சரியானதுதானா என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருக்கும். ஆனால் இப்போது, என்னைச் சரியான வழியில் கொண்டுபோக ஞானமான ஒருவர் இருக்கிறார். (ஏசாயா 48:17, 18) அதுமட்டுமல்ல, நாம் எதற்காக வாழ்கிறோம் என்றும் புரிந்துகொண்டேன். அதாவது, கடவுளை வணங்குவதற்காகவும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காகவும்தான் நாம் வாழ்கிறோம்.

பைபிள் சொல்கிறபடி நடந்துகொண்டதால் எங்களுடைய கல்யாண வாழ்க்கையை சந்தோஷமானதாக ஆக்க முடிந்திருக்கிறது. எங்களுக்கு ஒரு அழகான மகள் இருக்கிறாள். அவளும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை ரொம்ப நேசிக்கிறாள்.

எங்களுடைய வாழ்க்கை எப்போதும் அமைதி கடலாக இருந்ததில்லை. ஆனாலும், யெகோவாவின் உதவியோடு அவருக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதிலும், அவரை எப்போதும் நம்ப வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.​—நீதிமொழிகள் 3:5, 6.