Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

யெகோவா இரக்கமானவர், மன்னிக்கிறவர்

யெகோவா இரக்கமானவர், மன்னிக்கிறவர்
  • பிறந்த வருஷம்: 1954

  • பிறந்த நாடு: கனடா

  • முன்பு: ஏமாற்றுப் பேர்வழி, சூதாட்டக்காரர்

என் கடந்த காலம்:

நான் மான்ட்ரீல் நகரத்தில இருக்கிற ஏழ்மையான பகுதியில வளர்ந்தேன். நான் பிறந்த ஆறு மாசத்திலயே என் அப்பா இறந்துட்டார். என் அம்மாதான் குடும்பத்தைப் பார்த்துக்கிட்டாங்க. என்கூட பிறந்தவங்க மொத்தம் 7 பேர், நான்தான் கடைகுட்டி.

சின்ன வயசிலயே நான் போதை மருந்துக்கு அடிமையாகிட்டேன். சூதாட்டம், அடிதடி, சண்டை, இதெல்லாந்தான் என் வாழ்க்கையா இருந்துச்சு. குற்றவாளிகளோடதான் நான் சகவாசம் வைச்சுக்கிட்டேன். எனக்கு 10 வயசு இருக்கும்போது விபச்சாரம் செய்றவங்களுக்கும், கந்துவட்டி விடுறவங்களுக்கும் எடுபிடி வேலை செஞ்சேன். பொய் சொல்றதுதான் என் தொழிலா இருந்துச்சு. ஜனங்களை ஏமாத்துறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, அது எனக்கு ஒரு போதை மருந்து மாதிரி.

எனக்கு 14 வயசு இருக்கும்போது ஏமாத்துறதுல கில்லாடி ஆகிட்டேன். தங்கம் முலாம் பூசின கடிகாரம், பிரேஸ்லெட், மோதிரம் எல்லாம் நிறைய வாங்கி, அதுல 14 கேரட் தங்கம்னு பொறிச்சுடுவேன். இதை எல்லாம் நான் தெருவிலயும் ஷாப்பிங் சென்டர்ல இருக்கிற வண்டி நிறுத்துற இடத்திலயும் வித்துடுவேன். குறுக்கு வழியில பணம் கொட்டறத நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன், எனக்கு தலைகால் புரியல. ஒரு நாளுக்கு 10,000 டாலர் வரைக்கும்கூட சம்பாதிச்சிருக்கேன்!

எனக்கு 15 வயசு இருக்கும்போது சீர்திருத்த பள்ளியில இருந்து வெளியே அனுப்பிட்டாங்க. தங்குறதுக்கு எந்த இடமும் இல்லை. தெரு ஓரத்துல தூங்குவேன், பார்க்-ல தூங்குவேன், தெரிஞ்சவங்க யாராவது கூப்பிட்டா அவங்க வீட்டில போய் தூங்குவேன்.

நான் மோசடி செஞ்சதுனால, அடிக்கடி போலீஸ் என்னை விசாரிப்பாங்க. நான் எந்த பொருளையும் திருடி வித்ததில்லை; அதனால ஜெயிலுக்கு போனதில்லை. ஆனா, நிறைய சமயம் மோசடி செஞ்சதுக்கும், ஏமாத்தினதுக்கும், அனுமதி இல்லாம பொருளை வித்ததுக்கும் பெரிய அபராதம் கட்டியிருக்கேன். நான் யாருக்கும் பயப்படமாட்டேன். அதனால கந்துவட்டி விடுறவங்களுக்கு காசு வசூல் பண்ணிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அது ரொம்ப ஆபத்தான தொழில், ஏன்னா நான் நிறைய தடவை துப்பாக்கியோட சுத்தியிருக்கேன். சிலசமயம் ஒரு கும்பலா சேர்ந்து சட்ட விரோதமான செயல்களைகூட செஞ்சிருக்கோம்.

பைபிள் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு:

எனக்கு 17 வயசு இருக்கும்போதுதான் பைபிளை பத்தி முதல் தடவையா கேள்விப்பட்டேன். அப்போ என் காதலியோட வாழ்ந்துட்டு இருந்தேன். யெகோவாவின் சாட்சிகள் அவளுக்கு பைபிளை பத்தி சொல்லிக் கொடுத்தாங்க. தப்பான விஷயங்களை செய்யக்கூடாதுனு பைபிள் சொல்றதால, எனக்கு பைபிளே பிடிக்காம போயிடுச்சு. அதனால நான் அந்த பொண்ணை விட்டுட்டு, ஏற்கெனவே காதலிச்சுட்டு இருந்த இன்னொரு பொண்ணோட வாழ ஆரம்பிச்சேன்.

என்னோட ரெண்டாவது காதலியும் யெகோவாவின் சாட்சிகளோட பைபிள் படிக்க ஆரம்பிச்சா. அதுதான் என் வாழ்க்கையையே திருப்பி போட்டுடுச்சு. அவ பைபிளை படிச்சதுக்கு அப்புறம் நிறைய விஷயங்களை மாத்திக்கிட்டா. ரொம்ப பொறுமையா, அமைதியா ஆயிட்டா. அதை பார்க்கும்போது ஆச்சரியமா இருந்துச்சு. அதனால ஒருமுறை யெகோவாவின் சாட்சிகளோட கூட்டத்துக்கு நான் போனேன். அவங்க எல்லாரும் மரியாதையா, அன்பா நடந்துக்கிட்டாங்க. என்கூட இருந்தவங்களுக்கும் இவங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! என் குடும்பத்தில இருக்கிற யாருக்குமே என்னை பிடிக்கல, அவங்க என்மேல பாசம் காட்டல. சின்ன வயசுல இருந்தே நான் பாசத்துக்காக ரொம்ப ஏங்கினேன். அந்த பாசத்தை யெகோவாவின் சாட்சிகள் என்மேல காட்டினாங்க. அதனால, ‘எங்களோட பைபிள் படிக்கிறீங்களா’னு அவங்க கேட்டப்போ நான் உடனே ஒத்துக்கிட்டேன்.

பைபிள் படிச்சதுனாலதான் நான் இப்போ உயிரோட இருக்கேன். ஏன்னா நான் சூதாடுனதால 50,000 டாலருக்கு மேல கடன் இருந்துச்சு. அதை எப்படியாவது அடைக்கணும்னு சொல்லி, நான் என் கூட்டாளிகளோட சேர்ந்து திருடணும்னு நினைச்சேன். கடைசி நேரத்துல நான் வரலைனு ஒதுங்கிட்டேன். அது ரொம்ப நல்லதா போச்சு. திருடப்போன என் கூட்டாளிகள்ல ஒருத்தனை போலீஸ் கைது செஞ்சாங்க. இன்னொருத்தனை கொன்னுட்டாங்க.

பைபிளை படிக்க படிக்க, நான் இன்னும் எவ்வளவு மாத்திக்கணும்னு தெரிய வந்துச்சு. உதாரணத்துக்கு, “திருடர்கள், பேராசைக்காரர்கள், குடிகாரர்கள், சபித்துப் பேசுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்”னு 1 கொரிந்தியர் 6:10 சொல்லுது. இந்த வசனத்தை படிச்ச உடனே என் கண்ல இருந்து தண்ணி வர ஆரம்பிச்சுது. ஏன்னா நான் ரொம்ப கோவக்காரனா இருந்தேன், அடிதடி, சண்டை, பொய் சொல்றது, பித்தலாட்டம் பண்றது இதுதான் என் வாழ்க்கையா இருந்துச்சு. ஆனா, நான் எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு புது மனுஷனா வாழ வேண்டியிருந்துச்சு.—ரோமர் 12:2.

ஆனா பைபிளை தொடர்ந்து படிக்கும்போது யெகோவா ரொம்ப இரக்கம் காட்டுறவர், மன்னிக்கிறவர்னு கத்துக்கிட்டேன். (ஏசாயா 1:18) என் பழைய வாழ்க்கையை விட்டு வருவதற்கு எப்படியாவது உதவி செய்யுங்கனு சொல்லி யெகோவாகிட்ட கெஞ்சி கேட்டேன். யெகோவா உதவி செஞ்சதால கொஞ்சம் கொஞ்சமா நான் என் கெட்ட வாழ்க்கையை விட ஆரம்பிச்சேன். நான் செஞ்ச ஒரு முக்கியமான விஷயம், என் திருமணத்தை சட்டப்பூர்வமா பதிவு செஞ்சதுதான்.

பைபிள் படிச்சதுனாலதான் நான் உயிரோடு இருக்கேன்

எனக்கு 24 வயசு இருக்கும்போது, கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் இருந்தாங்க. நான் நேர்மையான ஒரு வேலையை தேட வேண்டியிருந்துச்சு. ஆனா, நான் நிறைய படிக்கலை, எனக்கு சிபாரிசு செய்றதுக்கும் யாருமே இல்லை. யெகோவாகிட்ட மனசுவிட்டு ஜெபம் பண்ணேன், வேலை தேட ஆரம்பிச்சேன். ‘என் வாழ்க்கையை மாத்திக்கணும்னு நினைக்கிறேன், நேர்மையா உழைப்பேன், விசுவாசமா இருப்பேன்’னு முதலாளிகள்கிட்ட சொன்னேன். ‘நான் பைபிள் படிக்கிறேன், திருந்தி நல்லவனா வாழணும்னு நினைக்கிறேன்’னுகூட சிலசமயம் சொன்னேன். யாருமே என்னை வேலைக்கு சேர்த்துக்கலை. மனசை தளரவிடாம இன்னொரு இடத்துக்கு வேலை தேடி போனேன். இன்டர்வியு எடுக்கிறவர்கிட்ட, என் கதையை சொன்னேன், அவர், “என்னனே தெரியலைப்பா உனக்கு வேலை கொடுக்கணும்னு தோணுது”னு சொன்னார். யெகோவா என் ஜெபத்துக்கு பதில் கொடுத்துட்டார். அதுக்கப்புறம், நானும் என் மனைவியும் ஞானஸ்நானம் எடுத்தோம், யெகோவாவின் சாட்சிகளா ஆனோம்.

எனக்கு கிடைத்த பலன்கள்:

பைபிள் சொல்றதை செய்யாம இருந்திருந்தா, ஒரு நல்ல கிறிஸ்தவனா வாழாம இருந்திருந்தா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். கடவுள் எனக்குனு ஒரு குடும்பத்தை கொடுத்திருக்கார். அவர் என் பாவத்தை எல்லாம் மன்னிச்சிட்டார்னு நான் நம்புறேன், அதனால என் மனசாட்சி ரொம்ப சுத்தமா இருக்கு.

நான் 14 வருஷமா மக்களுக்கு பைபிளை பத்தியும் கடவுளை பத்தியும் சொல்லிக்கொடுக்கிறதுல மாசா மாசம் சுமார் 70 மணிநேரம் செலவு பண்றேன். கடைசியா, என் மனைவியும் இந்த மாதிரி முழு நேரமா ஊழியம் செய்றதுல என்கூட சேர்ந்துட்டாங்க. 30 வருஷமா நான் யெகோவாவுக்கு சேவை செய்றேன், என்கூட வேலை பாக்குற 22 பேர் யெகோவாவை வணங்குறதுக்கு உதவி செஞ்சிருக்கேன். இப்பவும் நான் ஷாப்பிங் சென்டருக்கு போறேன்... யாரையும் ஏமாத்துறதுக்காக இல்ல. ஆனா, ஏமாத்துறவங்களே இல்லாத காலத்தை கடவுள் சீக்கிரமா கொண்டு வரப்போறார் என்ற நல்ல செய்தியை அவங்களுக்கு சொல்றதுக்காகத்தான் போறேன்.—சங்கீதம் 37:10, 11. ▪ (w15-E 05/01)