Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காணமுடியாத கடவுளை பார்க்க முடியுமா?

காணமுடியாத கடவுளை பார்க்க முடியுமா?

“கடவுள் காணமுடியாத உருவத்தில் இருக்கிறார்.” (யோவான் 4:24) அப்படியிருக்கும்போது, சிலர் கடவுளைப் பார்த்திருப்பதாக பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:27) “காணமுடியாத” கடவுளை நம்மால் பார்க்க முடியுமா?—கொலோசெயர் 1:15.

நம்முடைய சூழ்நிலையை, பிறவியிலிருந்தே பார்வையிழந்த ஒருவருடைய சூழ்நிலைக்கு ஒப்பிடலாம். அவரால் பார்க்க முடியாது என்பதற்காக அவரைச் சுற்றி நடக்கும் எதையுமே அவரால் புரிந்துகொள்ள முடியாதா? அப்படி இல்லை! பார்வை இழந்த ஒருவரால் தன்னைச் சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள், என்னவெல்லாம் நடக்கிறது, என்னவெல்லாம் இருக்கிறது என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் பார்வை இழந்த ஒருவர் சொன்னார்: “பார்வை என்பது நம் கண்களில் இல்லை நம் மனதில்தான் இருக்கிறது.”

அதுபோலவே கடவுளை நம் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் நம் ‘மனக்கண்களால்’ அவரைப் பார்க்க முடியும். (எபேசியர் 1:18) அவரைப் பார்ப்பதற்கான மூன்று வழிகளை இப்போது சிந்திக்கலாம்.

“படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன”

பார்வை இழந்தவருக்கு கேட்கும் திறனும் தொடு உணர்வும் அசாதாரணமாக வேலை செய்யும். அதன் மூலம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும். அதேபோல், நம்முடைய புலன்களைப் பயன்படுத்தி சுற்றியுள்ள உலகத்தை உற்று கவனிக்கும்போது அதைப் படைத்த கடவுளை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும் அவரைப் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடியும். “காணமுடியாத அவருடைய பண்புகள் . . . உலகம் படைக்கப்பட்ட சமயத்திலிருந்தே படைப்புகள் மூலம் தெளிவாகக் காணப்படுகின்றன” என்று பைபிள் சொல்கிறது.—ரோமர் 1:20.

உதாரணத்திற்கு, இந்தப் பூமியை எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ வாழவேண்டும் என்பதற்காக அல்ல வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே இந்தப் பூமி படைக்கப்பட்டிருக்கிறது. தென்றல் காற்று வீசும்போது, சூரிய ஒளியில் குளிர்காயும்போது, ருசியான பழத்தைச் சாப்பிடும்போது, பறவைகளின் பாட்டை கேட்கும்போது நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. நம்மைப் படைத்தவர் எவ்வளவு அன்பானவர், கனிவானவர், தாராள குணமுள்ளவர் என்பதைப் புரிந்துகொள்ள இவையெல்லாம் நமக்கு உதவுகின்றன.

நம்மைப் படைத்தவரைப் பற்றி இந்தப் பிரபஞ்சமே சாட்சி சொல்கிறது. உதாரணத்திற்கு, கடவுளுக்கு எந்தளவு சக்தி இருக்கிறது என்பதற்கு இது அத்தாட்சி அளிக்கிறது. இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போவதாகவும் அதுவும் படுவேகமாக விரிவடைவதாகவும் ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. இதற்கெல்லாம் எங்கிருந்து சக்தி கிடைக்கிறது? நம்மைப் படைத்தவருக்கு ‘மகா பலம்’ அதாவது, அளவில்லா சக்தி இருப்பதாக பைபிள் சொல்கிறது. (ஏசாயா 40:26) கடவுளுடைய படைப்புகளைப் பார்க்கும்போது அவர் ‘சர்வ வல்லமையுள்ளவர்,’ “மிகுந்த வல்லமை உள்ளவர்” என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.—யோபு 37:23, ஈஸி டு ரீட் வர்ஷன்.

“அவரைப் பற்றி விளக்கியிருக்கிறார்”

பார்வை இழந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இப்படிச் சொல்கிறார்: “பிள்ளைங்ககிட்ட பேசினாதான் அவங்களுக்கு நிறைய விஷயங்களை கத்துக்கொடுக்க முடியும். அவங்கள கூட்டிக்கிட்டு வெளிய போகும்போது நாம பாக்குறதையும் கேக்குறதையும் அவங்களுக்கு சொல்லிட்டே இருக்கணும். நாமதான் அவங்களுக்கு ‘கண்ணா’ இருக்கணும்.” பைபிள் சொல்வதுபோல், “கடவுளை ஒருவனும் ஒருபோதும் பார்த்ததில்லை.” இருந்தாலும் “அவருடைய நெஞ்சத்திற்கு நெருக்கமான . . . அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கியிருக்கிறார்.” (யோவான் 1:18) கடவுளுடைய முதல் படைப்பான அவருடைய மகன் இயேசுதான் நம்முடைய “கண்ணாக” இருந்து கடவுளைப் பற்றி நமக்கு சொல்லித் தந்திருக்கிறார். ஏனென்றால், அவருக்குத்தான் படைத்தவரைப் பற்றி நன்கு தெரியும்.

கோடானகோடி ஆண்டுகளாக தம் அப்பாவோடு இருந்த இயேசு அவரைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

  • கடவுள் கடினமாக உழைப்பவர். “என் தகப்பன் இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார்.”—யோவான் 5:17.

  • நமக்கு என்ன தேவை என்று கடவுளுக்குத் தெரியும். “நீங்கள் கேட்பதற்கு முன்னரே உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை உங்கள் தகப்பனாகிய கடவுள் அறிந்திருக்கிறார்.”—மத்தேயு 6:8.

  •  கடவுள் தாராள குணமுள்ளவர். ‘உங்கள் பரலோகத் தகப்பன் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்கச் செய்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழை பெய்யச் செய்கிறார்.’—மத்தேயு 5:45.

  • நம் ஒவ்வொருவரையும் கடவுள் மதிக்கிறார். “குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை. உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆகவே, பயப்படாதீர்கள்: நீங்கள் அநேக சிட்டுக்குருவிகளைவிட மதிப்புமிக்கவர்கள்.”—மத்தேயு 10:29-31.

காணமுடியாத கடவுளுடைய குணங்களை வெளிக்காட்டியவர்

பார்வை இழந்தவர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கும், ஒரு சராசரி நபர் அதைப் புரிந்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு பார்வையுள்ள ஒருவர் நிழலான இடத்தை, சூரிய ஒளி படாத சற்று இருட்டாக இருக்கும் இடம் என்று சொல்வார். ஆனால் பார்வை இல்லாதவர், அந்த இடத்தை சூரியனின் வெப்பம் இல்லாத கொஞ்சம் குளிரான பகுதி என்று சொல்வார். பார்வை இல்லாதவருக்கு எப்படிச் சூரியனையும் நிழலையும் பார்க்க முடியாதோ அப்படியே நம்மால் கடவுளை நம்முடைய சொந்த முயற்சியால் புரிந்துகொள்ள முடியாது. எனவேதான் தம் குணங்களை அப்படியே வெளிக்காட்டிய தம் மகனை யெகோவா பூமிக்கு அனுப்பினார்.

அவர்தான் இயேசு. (பிலிப்பியர் 2:7) தம் அப்பா எப்படிப்பட்டவர் என்று இயேசு வெறும் வாயளவில் சொல்லவில்லை; தம் தகப்பனைப் போலவே நடந்துகாட்டினார். இயேசுவின் சீடரான பிலிப்பு அவரிடம், “எஜமானே, தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார். அதற்கு இயேசு, “என்னைப் பார்த்தவன் என் தகப்பனைப் பார்த்திருக்கிறான்” என்றார். (யோவான் 14:8, 9) இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து நம் அப்பா யெகோவாவை எப்படி “பார்க்கலாம்”?

இயேசு அன்பானவராக, தாழ்மையுள்ளவராக, எளிதில் அணுக முடிந்தவராக இருந்தார். (மத்தேயு 11:28-30) அவர் வெளிக்காட்டிய அருமையான குணங்களால் மக்கள் கூட்டம் எப்போதும் அவரைச் சூழ்ந்திருந்தது. அவர் மக்களுடைய வேதனையைப் புரிந்துகொண்டார், அவர்கள் சந்தோஷமாக இருந்ததைப் பார்த்து அவரும் சந்தோஷப்பட்டார். (லூக்கா 10:17, 21; யோவான் 11:32-35) இயேசுவைப் பற்றிய பைபிள் பதிவுகளை நீங்கள் படிக்கும்போதும் கேட்கும்போதும் அதை அப்படியே உங்கள் மனதில் ஓடவிடுங்கள். இயேசு மக்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்கும்போது கடவுளுடைய குணங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வீர்கள், அவருடைய நண்பர் ஆவதற்கு விரும்புவீர்கள்.

கடவுளைப் புரிந்துகொள்ள முடியும்

பார்வை இழந்தவர் தன்னைச் சுற்றி நடப்பவற்றை எப்படிப் புரிந்துகொள்கிறார் என்று ஒரு நூலாசிரியர் சொல்கிறார்: “அவர் பல்வேறு விதங்களில் கிடைக்கும் தகவல்களை, (தொட்டோ முகர்ந்தோ கேட்டோ வேறு விதங்களிலோ கிடைக்கும் தகவல்களை) ஒன்றோடொன்று தொடர்புப்படுத்திப் பார்த்து ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்கிறார்.” அதுபோலவே நாம் கடவுளுடைய படைப்புகளைக் கூர்ந்து கவனிக்கும்போது... கடவுளைப் பற்றி இயேசு சொன்னதை பைபிளிலிருந்து படிக்கும்போது... இயேசு தம் தகப்பனைப் போலவே நடந்துகொண்டதை கற்பனை செய்து பார்க்கும்போது... யெகோவாவை நம்மால் “பார்க்க” முடியும். ஆம், அவரை ஒரு நபராக நம்மால் பார்க்க முடியும்!

பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த யோபுவும் இதை உணர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் அவர் கடவுளைப் பற்றி ‘தெரியாமல்’ பேசிவிட்டார். (யோபு 42:3) பிறகு கடவுளுடைய படைப்புகளை கூர்ந்து கவனித்தபோது, “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” என்று சொன்னார்.—யோபு 42:5.

‘நீ யெகோவாவைத் தேடினால் உனக்குத் தென்படுவார்’

உங்களாலும் யெகோவாவைப் பார்க்க முடியும். “நீ அவரைத் [யெகோவாவை] தேடினால் உனக்குத் தென்படுவார்” என்று பைபிள் சொல்கிறது. (1 நாளாகமம் 28:9) காணமுடியாத கடவுளை தேடிக் கண்டுபிடிக்க யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவார்கள். ▪ (w14-E 07/01)