Skip to content

ஏன் ஜெபிக்க வேண்டும்? கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா?

ஏன் ஜெபிக்க வேண்டும்? கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா?

பைபிள் தரும் பதில்

 ஆம், நிச்சயமாக! ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிக்கிறார் என்பதை பைபிள் பதிவுகளும் நிஜ வாழ்க்கை அனுபவங்களும் காட்டுகின்றன. “தனக்குப் பயந்து நடக்கிறவர்களின் ஆசையை [கடவுள்] நிறைவேற்றுகிறார். உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்டு, அவர்களைக் காப்பாற்றுகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 145:19) ஆனால், உங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா மாட்டாரா என்பது பெரும்பாலும் உங்கள் கையில்தான் இருக்கிறது.

கடவுளுக்கு இதெல்லாம் முக்கியம்:

  •   கடவுளிடம் ஜெபம் செய்வது, இயேசுவிடமோ மரியாளிடமோ புனிதர்களிடமோ தேவதூதர்களிடமோ சிலைகளிடமோ அல்ல. யெகோவா மட்டும்தான் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’—சங்கீதம் 65:2.

  •   கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக, அதாவது பைபிளிலுள்ள அவருடைய சட்டதிட்டங்களுக்கு இசைவாக, ஜெபம் செய்வது.—1 யோவான் 5:14.

  •   இயேசுவுக்கு இருக்கிற அதிகாரத்தைப் புரிந்துகொண்டு, அவருடைய பெயரில் ஜெபம் செய்வது. “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 14:6.

  •   விசுவாசத்தோடு ஜெபம் செய்வது, தேவைப்பட்டால் விசுவாசத்தை அதிகமாக்கும்படி கேட்பது.—மத்தேயு 21:22; லூக்கா 17:5.

  •   மனத்தாழ்மையோடும் உண்மை மனதோடும் இருப்பது. “யெகோவா மிகவும் உயர்ந்தவராக இருந்தாலும், தாழ்மையானவர்களைக் கண்ணோக்கிப் பார்க்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 138:6.

  •   விடாமல் தொடர்ந்து ஜெபம் செய்வது. “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 11:9.

கடவுளுக்கு இதெல்லாம் முக்கியமல்ல:

  •   உங்கள் இனம் அல்லது தேசம். ‘கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.’—அப்போஸ்தலர் 10:34, 35.

  •   உங்கள் அங்க நிலை. உட்கார்ந்தபடி, குனிந்தபடி, மண்டிபோட்டபடி, அல்லது நின்றபடி நீங்கள் ஜெபம் செய்யலாம்.—1 நாளாகமம் 17:16; நெகேமியா 8:6; தானியேல் 6:10; மாற்கு 11:25.

  •   வாய்விட்டு ஜெபிக்கிறீர்களோ மனதுக்குள் ஜெபிக்கிறீர்களோ. மனதுக்குள் செய்யப்படுகிற ஜெபங்களுக்குகூட கடவுள் பதிலளிக்கிறார்.—நெகேமியா 2:1-6.

  •   உங்கள் பிரச்சினைகள் பெரியதோ சிறியதோ. ‘உங்கள் கவலைகளையெல்லாம் கடவுள்மேல் போட்டுவிடுங்கள்’ என்று அவரே ஊக்கப்படுத்துகிறார்.—1 பேதுரு 5:7.